நான் கொல்லத்தில் இருந்த
1989 ம் ஆண்டு..
என் நண்பர் திரு கி. சந்திரசேகரன்
எங்களைப்பார்க்க குடும்பத்துடன்
வந்திருந்தார்.
மாலையில் பொழுது போக்க
கடற்கரைக்குச் சென்றோம்.
கடற்கரைப்பகுதிக்கருகில்
வசிக்கும் சிறுவன் ஒருவன்
அழுக்கு உடையில்.
அவன் பஜ்ஜியோ வடையோ
பட்டாணி சுண்டலோ விற்றால்
நாம் அவனிடம் சுகாதாரம் கருதி
வாங்க மாட்டோம்.
இதை நண்குணர்ந்த அந்த சிறுவன்
தோடு பிரிக்காத வேர்க்கடலையை
விற்றுவருகிறான்.
அவன் சுத்தமாக இல்லாவிட்டாலும்
அவன் விற்கும் வேர்க்கடலையை
நாம் தான் தோடை பிரித்து
சாப்பிடப்போகிறோம்.
எனவே அவனிடம் அதை
வாங்குவதால் அவனுக்கு
இந்தபொருள் எளிதாக
விற்பனையாகிறது,
நாங்கள் அவனிடம்
நான்கு பொட்டலங்கள்
வாங்கினோம்.
எங்களிடம் நூறு ரூபாய்
நோட்டாக இருந்தது.
சிறுவனிடம் மீதி கொடுக்க
சில்லறையாக இல்லை.
எங்களது மனதிற்குள்
அவனிடம் முதலிலேயே
பணத்தைக்கொடுத்தால்
எங்கே ஓடிவிடுவானோ
என்ற சந்தேகம் இருந்தது.
அதனால் வேர்க்கடலையை
வேண்டாம் என்று சொன்னோம்.
அந்தச் சிறுவனுக்கோ
வணிகத்தை இழக்க
மனமில்லை.
எங்களிடம் பணம் வாங்காமல்
எங்களிடம் வேர்க் கடலைப்
பொட்டலங்களைத்தந்ததுடன்
அவனது கூடையையும்
எங்கள் பொறுப்பில்
விட்டுவிட்டு ஓடினான்.
இரண்டொரு நிமிடங்களில்
எண்பது ரூபாய் சில்லறையடன்
திரும்பிவந்தான் சிறுவன்.
அதைஎங்களிடம் தந்துவிட்டு
நூறு ரூபாய் நோட்டை
எங்களிமிருந்து மகிழ்ச்சியுடன்
பெற்றுக்கொண்டான்.
அந்தச்சிறுவனை
எண்பதுரூபாய்க்கு
நாங்கள் நம்ப வில்லை.
ஆனால் அந்தச் சிறுவனோ
இருபது ரூபாய் மதிப்பிலான
கடலைப்பொட்டலங்களையும்
முன்னூறு ரூபாய் மதிப்பிலான
கடலைக்கூடையையும்
எங்களிடம் நம்பிக்கொடுத்தான்.
அவன் தான் மனதளவில்
பெரிய பணக்காரன்.
வணிகத்தை இழக்க விரும்பாமல்
தன்மீது சந்தேகம் ஏற்படாதமாதிரியும்
நடத்து வணிகத்தை முடித்த
நல்ல தொரு வணிகன்.
ஏழைகள் மானத்தோடு
வாழ நினைப்பவர்கள்
என்பதை நிரூபித்துக்காட்டிய
நேர்மையாளன்.
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு
ஆயிரக்கணக்கான கோடிகளை
ஏப்பம் விடும் கேடிகளைப்பற்றி
படிக்கும்போது இப்படிப்பட்ட
பசுமையான பழைய நினைவுகள்
வந்து போகின்றன.
No comments:
Post a Comment