Thursday, 31 August 2017

எல்ஐசி அம்மாள்

என்னைப் பெற்றடுத்து
வளர்த்து மகிழ்ந்த
தாய் ராஜம்மாள்.

ஆனால் என்னை
உயர்த்திப் பார்த்து
உளமாற மகிழ்ந்த தாய்
*எல்.ஐ.சி அம்மாள்.*

இவளுக்கு
இன்று வயது 61..
ஆனால் என்றும்
இவள் 16 தான்.

வேகத்தில் இவள் ஒரு
பதினாறு வயது
*பருவ மங்கை.*

விவேகத்தில் இவள்
அனுபவம் நிறைந்த
அறுபத்தோறு வயது
*அழகு மங்கை.*

தோற்றத்தில் என்றும்
இவள்  பதினாறு.

அதனால் தான்
என்றுமே இவள்
தோற்றதேயில்லை.

அனுபவத்தில் இவள்
அறுபத்தி ஒன்று.

இவளுடன் போட்டிக்கு
இருபத்தி மூன்று.

ஆனாலும்
அதுபத்தி எப்போதும் இவள்
கவலைப்பட்டதேயில்லை.

என்றுமே இவள்
புலி வேகம்தான்.

எப்போதுமே இவள்
புலிப்பாய்ச்சல் தான்.

எனக்கு மட்டுமல்ல
இவள் தாய்.

ஒரு லட்சத்து
பதினைந்தாயிரம்
ஊழியர்களுக்கு
இவள் தாய்.

பதினோரு லட்சத்து
முப்பதாயிரம்
முகவர்களுக்கும்
இவளே தாய்.

பல நிறுவனங்களில்
பங்குகள் வாங்கி
அந்த நிறுவனங்களுக்கு
பாலூட்டி மகிழும் தாய்.

அரசாங்கத்திற்கும்.
நாட்டு நலத்திட்டங்களுக்கும்.
மக்கள்நலனுக்கான
மகத்தான திட்டங்களுக்கும்,
தனது உதிரத்தைக் கொடுத்து
உதவிவரும் தாய்.

பணத்தேவைக்காக
பரிதவித்து நின்ற
பல்வேறு மாநில அரசுகளுக்கு
பாகுபாடின்றி
பல நேரங்களில்
பணத்தை வாரிவழங்கிய
வாஞ்சையுள்ள
வள்ளல் இந்த தாய்.

மக்களின்
அடிப்படைத்தேவைகள்
உணவு, உடை, உறைவிடம்.

இந்த மூன்றிலும் என்
எல்ஐசித்தாயின் பணம்
பரவலாக படர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு இந்தியனின்
மூச்சிலும் பேச்சிலும்
முழுமையாய்
நிறைந்திருப்பவள் என் தாய்.

இருபத்தைந்து கோடிக்கும்
மேல் எண்ணிக்கையிலுள்ள
வாடிக்கையாளர்களின்
29 கோடி பாலிசிகள் மூலம்
திறம்படத் திரட்டிய
பணத்தை,
சேமிப்பை,
முதலீட்டை,
திறமையாகப் பாதுகாத்து
அவர்களின் பணத்தை
குறித்தநேரத்தில்
குறிப்பிட்டநபர்களுக்கு
குறிப்பிட்ட முறையில் வழங்கி
அவர்களை மகிழ்வித்து
தானும்  மகிழும்
பொறுப்பான தாய் இவள்.

25 லட்சம் கோடிக்கு மேல்
இருக்கிறது  இவளது
சொத்துக்களின் மதிப்பு.

சமூக அக்கறையோடு
படிப்பில் சிறந்த மாணவச்செல்வங்களின்
உயர் கல்விக்கு
உதவித்தொகை வழங்கும்
கருணைத்தாய் இவள்.

இவளுக்கு நிகர்
இப்பூவுலகில்
இவள் மட்டுமே.

இந்த அருமைத்தாயால்
இந்தியாவிற்கே பெருமை.

இந்தத்தாயின் அன்பில்
அரவணப்பில் ஆதரவில்
உயர்ந்தவன் என்பதால்
எனக்குப்பெருமை.

இந்த பெருமைத்தாய்
பிறருக்கு
ஒரு பொறாமைத்தாய்.

இந்த அருமைத்தாய்
அறுபத்தோரு
ஆண்டுகளுக்கு முன்
உதித்த உன்னத நாள்
இன்றுதான்.

என்றும் என் தாயவள்
பதினாறு  வயதுத்துள்ளலோடு
பாரினில் பகட்டோடு
பவனிவரவேண்டும்.

இவளது
புகழும் பெருமையும்
உலகம்முழுக்க
உலாவரவேண்டும்.

என் தாய் மொழி
தமிழைப்போல்
இனிமையோடும்
இளமையோடும்
என்றென்றும் திகழ்ந்து
சிறக்கவேண்டும்.

இந்த பெருமைமிகு
தாயை இவளது
பிறந்தநாளான இன்று
வணங்கி மகிழ்கிறேன்.

Sunday, 20 August 2017

ரிப்பேரா..ரீபிளேஸ்மெண்டா

""ஏல..எசக்கி..
செம்பகத்தக்கா மவன்
நெல்லையப்பன்
ஊருக்கு வந்துருக்கதுனால
அக்கா கொஞ்சம் சந்தோசமா
இருக்காவொ.
வேற எதாவது விசேஷம்
உண்டால"" ன்னு
கேட்டுக்கிட்டே
சேக்காளி
சொடல வந்தான்.

"அவனுக்கென்னவே
கொறச்சல்.

பெங்களூர்ல நல்ல
வேலையில இருக்கான்.

கை நெறய சம்பளம்.

நீச்சல் கொளம்லாம் இருக்குற
பெரிய பல மாடி
வளவு வீடாம்.

வெல கூடுன காரு வேற
வச்சுருக்கானாம்.

என்னவோ ஆடி காருன்னு
பேரு சொன்னான்.

காரு  வெல
நாப்பது லச்சம்னு
பவுசு கொளிச்சான்.

அவன் அம்மையை பாக்க
அங்கயிருந்து கார்லயே
வந்துருக்கான்"ன்னு
நான் பதிலு சொன்னேன்.

"அப்படின்னா ஓங்கிட்ட
ஏமுல எதுக்கோ
யாரையோ ஏசுன மாதிரி
காட்டுக்கத்தல் கத்துனான்"" ன்னு
சொடல கேட்டான்.

"ஆமவே..காரை
நம்ம தெரு  முக்குல
திருப்பும் போது
வெளக்குக்கம்பத்துல
லேசா இடிச்சுட்டானாம்.

வீராவரத்துல இருக்க
கார் கம்பேனில
காரை ஒக்குட
கொண்டுபோனானாம்.

நெளுசலெல்லாம்
எடுக்கமுடியாது.

நெளிஞ்சுபோன
அந்த தகடு தாங்காது .

அந்த தகட்டை மொத்தமா தான்
மாத்தணும் னு சொல்லி பில்லு
இருபதாயிரம் ரூபாய்
தீட்டிடானாம்.

அதைப்பத்தி தாம்வே 
பொலம்பிக்கிட்டே
கார்கம்பெனிகாரன
ஏசிக்கிட்டு இருந்தான்.

இன்னொரு தகவலும்
இருக்குய்யா. அவனுக்கும்
அவன் பெஞ்சாதி
காந்திமதிக்கும்
நடந்த சண்டையில அவன்
பெஞ்சாதி எவ்வளவு
எறங்கிவந்தாலும் இவன்
ஒரேயடியா
கொப்புல ஏறுதானம்.

அவ கூட சமாதானம்லாம்
கெடையாது. ஒரேயடியா
அத்து விட்டுட்டு
வேற ஆளை கட்டிக்க
வேண்டியதுதான்னு
ஒத்தக்காலுல நிய்க்கானாம்." ன்னு
நான் சொடலகிட்ட சொன்னேன்.

சொடலையும்,
"செம்பகத்தக்காவும்
இதுனாலதாம்ல
ஒரே கவலயா இருக்காவொ.

ஏங்கிட்ட எப்படியாவது
நெல்லையப்பனையும்
அவம் பெஞ்சாதி யையும்
ஒத்துமையா சேத்துவைய்க்க
ஒத்தாசை பண்ணு தம்பின்னு
சொல்லியிருக்காவொ.

நானும் நெல்லையப்பங்கிட்ட 
நேரம் பாத்து  பேசணும்.

இப்போ அவன்
மூடு சரியில்லைங்கிறதுனால
நாளைக்கி பேசுதேன்."ன்னு
சொன்னான்.

மறுநாளு நானும்
சொடலையும்
வாய்க்காங்கரைக்கு
போயிட்டு வரும்போது
நெல்லையப்பனும்
அந்தப்பக்கமா வந்தான்.

ஓரளவு நல்லமூடுல
இருக்கமாதிரி தெரிஞ்சுச்சு.

அதனால சொடல பேச்ச
ஆரம்பிச்சான்.

கார் ஒக்குட்டதை பத்தி
வெவரம் கேட்டான்.

நெல்லையப்பனும் 
காரோட சின்ன நெளுசலை
லேசா தட்டி எடுத்து
சரி பண்ணியிருக்கலாம்.

ஆனா இந்த
கார்கம்பெனிக்காரனுவ
காசு பாக்கதுக்காக
அந்த தகடை தூக்கி
தூற எறிஞ்சிட்டு
புதுசா மாத்தணும்ங்கான்.

நெளுசலை சரிபண்ணாம
ஒரேயடியா மாத்தணும்னு
சொல்லுதது பெரிய
அநியாயம் ன்னு சொன்னான்.

சேக்காளி சொடல "மருமவன் நெல்லையப்பன் சொல்லுதது
முழுக்க முழுக்க சரிதான்" னு
சொன்னதும்
நெல்லையப்பனுக்கு அப்பிடியே
உச்சி குளுந்து போச்சு.

"சொடல மாமா சரியா
நியாயஞ்சொல்லுதாவொ" ன்னு
நெல்லையப்பன் சொன்னான்.

சொடல ஒடனே நெல்லையப்பன்கிட்ட
"மருமவன் சொல்லுதபடி
நெளுசல தட்டி எடுத்தாபோதுந்தான்.
மாத்தணுங்குறது கொஞ்சங்கூட
சரியில்லை.
இது நூத்துக்கு நூறு சரி.
இதைமாதிரி மருமவனும்
வீட்ல பெஞ்சாதியோட வந்திருக்க
மனஸ்தாபத்தை பேசியே
தீத்திரலாம். அதைவிட்டுட்டு
அத்துவிடணும் வேற புதுசா
மாத்தணும்ங்கிறது சரியில்ல
மருமவனே.

ஒங்க அப்பாவும்
அம்மாவும் போடாத சண்டையா?
நூறு சண்டைக்கு மேலேயே
வந்திருக்கும்.

அவொ என்ன  ஒண்ணா
செய்து வாழத்தான செஞ்சாவொ.

அத்து விட்டுட்டு
ஒங்க அய்யா என்ன
ரெண்டாவது கல்யாணமா
பண்ணுனாரு. இல்லயே.

புருஷன் பொண்டாட்டிக்குள்ள
சண்டை வருதது சகஜம் மருமவனே.

ஒருத்தருக்கொருத்தரு பேசித்தான்  தீர்த்துக்கணும்  " ன்னு
சொடல சொன்னதை கேட்டதும்
நெல்லையப்பன் அப்பிடியே
அசந்து ஒக்காந்துட்டான்.

கொஞ்ச நேரம் வாயவே
தெறக்கவேயில்ல.

ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு
"மாமா நாளைய்க்கே போயி
எம் பெஞ்சாதிட்ட சமாதானமாபேசி
அவள கூட்டிட்டு வாறேன்.

ஒரு வாரம் அம்மையோட
ரெண்டுபேரும் தங்கியிருந்துட்டு
அதுக்குப்பொறவு
அம்மையையும் கூட்டிக்கிட்டு
பெங்களூர் போறோம்"னு
நெல்லையப்பன் சொன்னதுதான்..

ஒடனே சொடலைக்கு
சந்தோஷம் தாங்கல.

செம்பகம் அக்காவை
பாத்து  இந்த தகவலை சொல்லப்போறேன்னு
பறந்துட்டான்.

சொடலை சொன்னது
நல்லாத்தான்
வேல செஞ்சிருக்கு.

சொடலயோட 
அனுபவமும்
முதிர்ச்சியும்
அப்பப்பா....

Friday, 18 August 2017

ஆனா மூனா...

"ஏல  எசக்கி...
இந்த ஆனா மூனா வை
பத்தி அன்னைக்கு
ஒரு சேதி
பேசுனமுல்லா..

அவொ இப்பம் எப்புடி
இருக்காவொளாம்?..

புது தகவல் எதாவது
உண்டால"

இப்பிடி கேட்டுக்கிட்டே
சேக்காளி சொடல
ஏங்கிட்ட வந்தான்.

அன்னைக்கு
அவொள பத்தி
பேசுனபொறவு
நம்ம  பேசுனத இஸ்மாயில்
பாய் கிட்ட சொன்னேன்.

அப்போ  இஸ்மாயில் பாய்
ஆனா மூனா
இப்போ ரொம்ப
தளந்திட்டாவொ..

அவொளால
நாம பேசுதத
சரியா கூட
கேக்கமுடியல.

சொல்ல வேண்டியதை
எளுதிதான்
காமிக்கவேண்டியது
இருக்கு.
ஆனா அந்த பழய
கம்பீரம் மட்டும்
இன்னய்க்கும் போவல.

அப்படியே இருக்கு ன்னு
சொன்னாவொ.

இந்த தகவல அப்பிடியே
சேக்காளி சொடல கிட்ட
சொன்னேன்.

"அப்புடியாவே..
எப்பிடிப்பட்ட மனுசன்
அவருன்னு ஒமக்கு
தெரியுமா?
ஒமக்குல்லாம்
அவரைப்பத்தியும்
தெரியாது.
அவரு  தெறமை
பத்தியும் தெரியாது.
நக்கல் மட்டும்
நல்லா பண்ணுவ" ன்னு
சொல்லிட்டு அவரைப்பத்தி
சொல்ல ஆராம்பிச்சாரு சொடல.

"1992 லயோ 93 லயோ
ஆஷா தீப் ன்னு ஒரு திட்டம்
அறிமுகமாச்சு.

அது ஒரு குறிப்பிட்ட
காலத்துக்கு மட்டுந்தான்
கெடைக்கும்னு சொன்னாவொ.
அப்போ  நாந்தாம்வே
திருச்செந்தூர்ல மேனேஜரு.

நான்
ஏஜண்டு மீட்டிங்குல்லாம்
நடத்தி  ஏஜெண்டுமார்க்கு
பாலிசி பத்தி நல்லா
விளக்கி கூறி
நெறய பாலிசி
விய்க்கணும்னு
சொன்னேன்.
ஒவ்வொரு
வயசுக்காரருக்கும்
ஒவ்வொரு அளவு
காப்புத்தொகைக்கும்
எவ்வளவு பிரிமியம்னு
கணக்குப்பாத்து
ஒரு பட்டியல்லாம்
தயாரிச்சு கொடுத்தேன்.

அந்த வெளக்க க்கூட்டத்துக்கு
ஆனா மூனா வரல.

ஒருநாளு அவரோட
சொந்தக்காரரு ஒருத்தரு
மெட்ராஸ் போயிட்டு
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்ல
திரும்பி வந்துருக்காரு.

அவரோட பெட்டியில
திருநெவேலி ஏஜண்டு
நரசிம்மன்னு ஒருத்தரும்
வந்திருக்காரு.

நரசிம்மன் புதிய திட்டத்தை
பத்தி நல்லபடி  வெளக்கி சொல்லியிருக்காரு.

ஆனா மூனாவின்
சொந்தக்காரருக்கு
அந்த திட்டம்
நல்லா புடிச்சுப்போச்சு.

ஊருக்குப்போயி தகவல்
சொல்லுதன்னு நம்ம ஆளு
நரசிம்மங்கிட்ட
சொல்லியிருக்காரு.

ஏஜெண்டு நரசிம்மன்
திருநெல்வேலியில
எறங்கிட்டாரு.

நம்ம ஆளு
ஊருக்கு வந்ததும்
ஆனா மூனாவைக்கூப்புட்டு
ஏன் மாமா  இவ்வளவு
அருமையான திட்டத்தை பத்தி
ஏங்கிட்ட ஏன் சொல்லலன்னு
கேட்டுருக்காரு.

ஒடனே நம்ம  ஆனா மூனா
எனக்கு போனை போட்டாரு.

என்னய்யா மேனேஜரு..
இந்த திட்டத்தை பத்தி எனக்கு
ஏன் சொல்லலன்னு
ஏங்கிட்ட கேட்டாரு.

நான் ஒடனே
ஒங்கள கூட்டத்துக்கு
வரச்சொன்னேன் .
நீங்க வரல.
இந்த திட்டத்தை பத்தி
வெவராமா ஒரு லெட்டரு,
சுளுவா தெரிஞ்சுக்க
வயசுக்கேத்த பிரிமியம்
பட்டியல் லாம்
தபால்ல அனுப்பிச்சு
எத்தனை நாளாச்சு
தெரியுமான்னு கேட்டேன்.

அதுக்கு ஆனா மூனா
நாம அனுப்புத கவரை
அமுக்கியும் தடவியும்
பாப்பாராம்.

அதுல  ஸ்டேப்ளர்  பின்
அடிக்கப்பட்டுருந்தா
கமிஷன் செக் இருக்குன்னு
நெனச்சு கவரை
ஒடைப்பாராம்.

மத்த கவரையெல்லாம்
ஒடைக்கவேமாட்டாராம்.

அதுனால நாங்க
அனுப்பியிருந்த கடிதத்தை
ஒடச்சு பாக்கலயாம்.

இந்த சேதியை
ஏங்கிட்ட சொல்லிட்டு
ஒடனே 25 வயசு காரருக்கு
2 லட்சம் "சம் அஸ்ஸூர்டு"க்கு
இயர்லி பிரிமியம்
எவ்வளவு வரும்னு 
சொல்லுங்கன்னு
போன்லயே கேட்டார்.

நானுஞ்சொன்னேன்.

அவரும் புரபோசல்ல
கையெழுத்து வேங்கிட்டு
முழுக் காசோட
ஆபீசுக்கு வந்தாரு.

இந்த திட்டம்
அருமையா இருக்கு..

வெளக்கிச் சொல்ல 
ஈசியாவும் இருக்குன்னு
ஏங்கிட்ட சொல்லிட்டு
அந்த மாசம்முழுசும்
இந்த திட்டத்துல தான்
கவனஞ்செலுத்துனாரு.

பாலிசி விற்பதற்கான
கடைசிநாளான 31 ஜனவரி
நெருங்க நெருங்க
அய்யா ரொம்ப
பிசியாயிட்டாரு.

பாக்கப்போற
எல்லாருகிட்டயும்
இந்த அற்புதமான திட்டம்
ஜனவரி 31 வரைதான்
விற்பனைக்கு கிடைக்கும்.

அதுக்கு பொறவு
யாருக்கும் கெடைய்க்காது.

ஜனவரி 31க்கு பொறவு
நம்ம ஜனாதிபதி
சங்கர்தயாள் சர்மா
எல்ஐசி சேர்மனை
கூப்பிட்டு எனக்கு
இந்த பாலிசி ஒண்ணு
கட்டாயம் வேணும்னு கேட்டா
சேர்மனால கூட
ஜனாதிபதிக்கு
பாலிசி வழங்கமுடியாது ன்னு
சொல்லி சொல்லியே
நெறைய பாலிசி வித்தாரு.

கேக்குறவங்களுக்கும்
இவரு சொன்ன முறை
பிடிச்சுப்போச்சு.

அவரு உண்மையத்தான்
சொன்னாரு.
எல்லோருக்கும்
புரியும்படி எளிமையான
சொன்னாரு.

அவருக்குத்தான்
இந்த பாலிசி வித்ததுல
ப்ராஞ்சுலயே மொத இடம்.

ஒரு சாதாரண தகவலை
அதோட முக்கியத்துவத்தை
ஒணர்த்த ஒபயோகித்த
ஒவமை எவ்வளவு
ஒசத்தின்னு பாருடே..

அதுலயிருந்து
செல ஏஜெண்டுகள்
"ஆனா மூனா"வை
சங்கர் தயாள் சர்மான்னே
கூப்புட ஆரம்பிச்சாட்டாவொ.

இந்த மாதிரி
எடுத்துச்சொல்ல
ஆனா மூனா தவுர
வேற யாருக்கும்
தோணுச்சால..

தோணவே தோணாது...

அதுனால தான்
நான் அடிச்சுச்சொல்லுதேன்.

ஆனா மூனான்னா
அனுபவம்...& ....முதிர்ச்சி."

இப்படி சொடல சொன்னதும்
ஆளைப் பாக்காமலே
ஆனா மூனா மேலே எனக்கு
தனி மரியாதை வந்துட்டு.

உங்களுக்கு....?

Tuesday, 15 August 2017

விடுதலைத்திருநாள் 2017

நம் தாய்த்திருநாடு..

வெள்ளையர்களிடமிருந்து
விடுதலை பெற்று
நம்மை நாமே ஆண்டுகொள்ள
அனுமதி கிடைத்த
திருநாள் இன்று.
எழுபது ஆண்டுகளில் தான்

எவ்வளவு வளர்ச்சி..
எத்தனை உயற்சி..

நாம் சந்தித்த
தடைகளை எல்லாம்
தகர்த்தெறிந்து
முன்னேற்றப்பாதையில்
முழுவேகத்தில்
நடைபோடுகிறோம்.

நமக்குள்
மொழியால்
மதத்தால்
இனத்தால்
சாதியால்
பணத்தால்
நிறத்தால்
பழக்கவழக்கத்தால்
பல வேறுபாடுகள் 
நிறைய இருந்தாலும்
பாரதத்தாயின் தவப்புதல்வன்
என்ற மந்திரவார்த்தை
நம் அனைவரையும்
ஒன்றிணைக்கின்றன.

இனி வரும்
ஆண்டுகளிலும்
சகோதரப் பாசத்துடனும்
சமய நல்லிணக்கத்தோடும்
சமத்துவ எண்ணத்துடனும்
சாதி வேறுபாடு ஏதுமின்றி
கைகோர்த்து பயணித்து
பாரதத்தை உயர்த்த
உறுதி பூணுவோம்.

வாழ்க தாய்த்திருநாடு.
உயர்க பாரதத்திருநாடு.

அனைவருக்கும்
சுதந்திரத்திருநாள்
நல் வாழ்த்துக்கள்.

பானா.ஈனா

வசூலுக்கு ஒரு லேசான வழி..


 
"ஏல எசக்கி..
என்னல  நீ நேத்து
செல்லையாவைப்பத்தி
பேசிட்டு இருக்கும்போதே
டிமிக்கி கொடுத்துட்டு
போயிட்ட" ன்னு
கேட்டுக்கிட்டே
சேக்காளி சொடல வந்தான்.

"ஆமாய்யா..வீட்டுக்காரி
திடீர்னு கூப்புட்டதால
ஓடிட்டேன்.
இப்பதாம்  வந்துட்டம்லா.
ஏசாதேரும்வே..

ஆமய்யா இந்த
செல்லையா கிட்டயிருந்து
திருப்பி வராத கடனை
சுளுவா வசூலிக்க
வேற எதாவது
லேசான வழி இருக்கா..

அந்த பேங்குக்கு புதுசா
மேனேஜரா
வந்திருக்கவொ
ஏம்  பெஞ்சாதியோட
தாய்மாமாய்யா..

அவருக்கு 
ஒதவணும்.

எதாவது நல்ல
யோசனை இருந்தா
யோசிச்சு சொல்லும்வே"
ன்னு சேக்காளிகிட்ட கேட்டேன்.

சொடலை சென்னான்.

" நல்லா கேட்டுக்கல
எசக்கி..

முந்தி நான் வேல செய்த
ஒரு ஊர்ல ஒரு டீச்சர்.

நல்ல வசதியான
குடும்பத்துல இருந்து
வந்தவொ.

அவொ அப்பா
கவர்மெண்டுல
வேல பாத்து
பென்ஷன் ஆன
நேர்மையான அதிகாரி.

டூச்சரோட வீட்டுக்காரரு
பக்கத்தூர்ல இருக்குற
பிரைவேட் கம்பனில
நல்ல வேலையில் தான்
இருக்காவொ.

எல்ஐசி யின்
வீட்டுவசதி கடன்
கம்பெனில கடன் வாங்கி
வீடு கட்டியிருக்காவொ.

எதோ ஒரு காரணத்தால ஆறுமாசப்பாக்கி
விழுந்திடுச்சு.

எல்ஐசி வீட்டு வசதி
ஆஃபீசிலிருந்து  அனுப்புற
லெட்டரையெல்லாம்
அவரு சட்டையே பண்ணல.

என்ன தான் நடக்கும்ங்குற
அசட்டுத் தைரியத்துல
சும்மா இருந்துட்டாரு.

ஒரு நாளு 
அந்த ஆபீசிலிருந்து
ரெண்டுபேரு என்னத்தேடி
எங்க ஆபீசுக்கு வந்து
அந்த ஆளைப்போய்பாக்க
ஒதவணும்னு கேட்டாவொ.

வந்தவங்ககிட்ட
பக்கத்து   ஊர்ல இருக்க
ஆபீஸ்ல போயி
கடன் வாங்குன  ஆளை
பாக்குறது அத்தினி
லேசு இல்ல.

அதனால
அவரோட வூட்டுக்கார
அம்மா வேலை பாக்க
ஸ்கூல் எனக்குத்தெரியும்.

அங்க போவோம்.

அந்த டீச்சரை பாத்து
வெஷயத்தை கொஞ்சம்
அவங்க காதுல
போட்டு வெப்போம்னு
ஐடியா கொடுத்தேன்.

ஸ்கூல்ல போயி
டீச்சரை பாத்து
சங்கதியை
சொன்னோம்.

டீச்சர் ஒண்ணுமே
சொல்லல..
பொலபொலண்ணு
கண்ணுல கண்ணீரு
வடிச்சாட்டாவொ.

அதைப்பாத்ததும்
எங்களுக்கு மனசு கேக்கல.

மேல்கொண்டு
எதுவும் கேக்காம
எங்க ஆபீசுக்கு
திரும்பி வந்துட்டோம்.

அடுத்த தடவை நிதானமா பாக்கலாம்யான்னு
சொல்லிட்டு
வீட்டுவசதி ஆபீஸ்காரவுக
ரெண்டுபேரும் ஒடனே
பாளயங்கோட்டைக்கு
திரும்பி போயிட்டாவொ.

அந்த டீச்சரு 
பள்ளிக்கூடம் விட்டு
வீட்டுக்கு போனதும்
மொதவேலயா
புருஷனக் கூப்புட்டு 
பள்ளிக்கூடத்துக்கு
கடன் கொடுத்தவொ
தேடிவந்ததால ஏம் மானம்
மரியாதையெல்லாம்
காத்துல பறந்துட்டு.

நீரு  என்ன செய்வேரோ
ஏது செய்வேறோ 
எனக்குத் தெரியாது.

நாளக்கி
நான் உசுரோட
இருக்கணும்னா,
வெள்ளனயே
கெளம்பிப்போயி
அந்த கடனோட பாக்கியை
அடைச்சுட்டுதான்
வீட்டுக்குள்ள வரணும் ன்னு
கண்ணீர்விட்டு
அழுதிருக்காவொ.

டீச்சரம்மாவோட
வீட்டுக்காரரும்
பயந்து போயி
அங்க இங்க
அலஞ்சு திரிஞ்சு
பணத்தை சரிபண்ணிட்டு
பாளையங்கோட்டைல
இருக்க ஆபீசுக்கு போய்
பாக்கியை அடைச்சிட்டு்
வந்த பொறவு தான்
அவரால  வீட்டுக்குள்ள
நொழைய முடிஞ்சுது.

அதுக்குப் பொறவு தான்
டீச்சர் பள்ளிக்கூடத்துக்கு
வேலைக்கு
போயிருக்காவொ."
ன்னு சொடல சொன்னான்.

ஒடனே நான்
"கண்ணியத்தை காக்கணும்னு
கண்ணீரைக்காமிச்சு,
பணம் என்ன பணம்....
பணத்தைவிட
ஏம் மானந்தாம்யா
பெருசு ங்கறமாதிரி
நடந்துகிட.ட அந்த
டீச்சரம்மாவ இப்பொ
நெனச்சாலும்
பெருமையா
இருக்குவே." ன்னு
சொன்னேன்.

அதைக்கேட்ட சொடல
அவொள மாதிரி
கொஞ்சம் ஆளுங்க
இருக்குததுனால
தாம்ல நாட்டுல
மழை பெய்யுது.

தெரிஞ்சுக்கல
எசக்கி"ன்னு
சொன்னான்.

இந்த சேதிய
ஒடனயே ஓடிப்போயி
பேங்குல வேலை பாக்க
ஏம் பெஞ்சாதியோட
தாய்மாமாட்ட சொல்லணும்.

அவருகிட்ட  ஒடனே போய்
செல்லையா பொண்டாட்டிட்ட
செல்லையாவோட
கடன் பாக்கி தகவல சொல்லச்சொல்லணும்.

அப்பிடியாவது பணம்
வசூலாகுதாண்ணு
பாப்போம்.

சொடலை குடுத்த இந்த
யோசனை
நல்லா வேல செய்யும்னு
நம்புவோம்.

சேக்காளி சொடல சொடலதான்

Monday, 14 August 2017

லோன்   வேற..கடன் வேற.. அப்படியா?


**********************************

"ஏல எசக்கி...
எங்கல  போய்த்தொலஞ்ச..
நீ இல்லாம  எனக்கு
பொழுதே போகல.."

இப்பிடி சொல்லிக்கிட்டே
சேக்காளி சொடல
என்னக்கூப்பிட்டான்.

"ஊருக்குப் போயிருந்தேன்டே"
ன்னு சொல்லிகிட்டே நானும்
அவங்கிட்ட போனேன்.

"இந்த பலவேசத்தோட
மூத்தமவன்  சுப்பையாவுக்கு
நல்ல பேரு இருக்கு.
அதேநேரம்ம் சின்னவன்
செல்லையாவுக்கு
நல்ல பேரு இல்லையே..
அது ஏமுல  இப்புடி" ன்னு
சேக்காளி சொடல
ஏங்கிட்ட  கேட்டான்.

நான் சொன்னேன்..

" பலவேசம் அவரு 
வாழ்ந்த காலத்துல
ரெண்டு பயலுவட்டுயும்
நீங்க  ரெண்டுபேரும்
யாருகிட்டயும்
கடன் வாங்காம
காலத்தை ஓட்டணும்.

எவனும்
நம்ம வீட்டு வாசல்ல
கடன் வசூலிக்கன்னு  வந்து
நிக்கக் கூடாது.
இத மட்டும் நீங்க உறுதியா
கேட்டுநடக்கணும் ன்னு
சத்தியம் வாங்கிட்டாராம்.

மூத்த மவன் சுப்பையா
அவன் ஐயாவுக்கு வாக்கு
கொடுத்தமாதிரி
யாருகிட்டயும்
கடன் வாங்கி
காலந்தள்ளுவது இல்லை.

ஆனா இந்த எளய பயா
ஊர்ல உள்ள
எல்லா பேங்குலயும்
கடன் வாங்கியிருக்கான்.

எல்லா எடத்துலயும்
பாக்கி வச்சிருக்கான்.

நெறய பேருகிட்ட
கை மாத்து கூட
வாங்கியிருக்கான்.

கைமாத்து
கொடுத்தவனுவல்லாம்
கைமாத்து வாங்குன ரூபாய
திருப்பி வரவேண்டாம்.

திருப்பித் தந்துட்டாமுன்னா
மேக்கொண்டு அதிகமாக
கைமாத்து கேப்பான்.
அதுனால
தராம இருந்தாலே
நல்லதுன்னுன்னு நெனய்க்கானுவொ.

இதுனாலதாம்யா
சுப்பையாவுக்கு நல்லபேரு. செல்லையாப்பயலுக்கு
கெட்ட பேரு"

ஒடனே சேக்காளி சொடலை
"அப்படினா செல்லையா அவனோட அய்யாவுக்கு
கொடுத்த சத்தியம்
என்ன ல ஆச்சுன்னு
யாரும் கேக்கலயா" ன்னு
கேட்டான்

அதுக்கு நான் வந்து...

"" நாங்  கேட்டனே..
இதே கேள்விய
நான் செல்லையாகிட்ட கேட்டனே.

அதுக்கு செல்லையா
எங்கய்யா யார்ட்டயும்
கடன் வாங்கக்கூடாதுன்னு
ஏங்கிட்ட சத்தியம்
வாங்குனாரு.
அதனால 
நான்  ஊர்க்கார பயலுவ
எவங்கிட்டயும் 
ஒரு  பைசா கூட
கடன் வாங்கல.

கவர்மெண்டு பேங்கு
போயி தாம்யா
லோன் வாங்குனேன்.

பக்கத்துல இருக்க
ஒரு சில பயலுவகிட்ட
கை மாத்தும்  வாங்குனேன்.

கைமாத்து கொடுத்தவனும் எந்தக்காலத்துலயும்
வீட்டுவாசலுக்கு 
வசூல் பண்ணன்னு
வரமாட்டான்.

கெவர்மெண்டு
பேங்கு மேனேஜரும்
வீட்டு வாசலிலுக்கு வந்து
பணத்தை கேக்கமாட்டாரு.

கடுதாசிதான் தபாலுல
அனுப்புவாரு..

அதுனால நான்
எங்க ஐயாவுக்கு
கொடுத்த சத்தியத்தை
கொஞ்சங்கூட மீறல"ன்னு
சொன்னான்.

இது எப்பிடி இருக்கு.

செல்லையாப்பயா
சொல்லுதமாதிரி
கைமாத்து வேற..
லோன் வேற..
கடன் வேற..யோ?

கடன் வாங்குனாதான் திருப்பிக்கொடுக்கணுமோ.?
லோன் வாங்குனா திருப்பி கொடுக்கவேண்டாமோ?"
ன்னு சொடலைகிட்ட
கேட்டேன்.

சோக்காளி சொடல
ஏங்கிட்ட சொன்னான்.

"எறுவு கெட்டபயா..
லோனுக்கும் கடனுக்கும்
இப்படி ஒரு கேடுகெட்ட
வெளக்கம் வேற
கொடுக்கானா
இந்த  ஃபிராடுக்கார
செல்லையா பயா.

பேசாம அவன்
வேல பாக்குற கம்பெனிக்கு
பேங்கு மேனஜர
லெட்டர் எழுத
சொல்லணும்.

அப்பத்தான்
இந்தப்பயா
சரியா வருவான்.
பேங்குக்கும்
பணம் வசூலாகும்"

சொடல யோசனைய
பேங்கு மேனேஜர்
கேப்பாரா?

செல்லையா மாதிரி
நெறய பேரு இருக்கானுவொ.