Sunday, 24 December 2017

ஆதார் தடைத்திரை

நான் கொஞ்ச நாட்களுக்கு முன்
எனது ஆதார் எண்ணை
BSNL கை பேசி எண்களுடன்
இணைப்பதில் ஏற்பட்ட
சிக்கல்கள் பற்றி விரிவாக
சொல்லியிருந்தேன்.

புதிதாக கைரேகையையும்
கருவிழியையும்
மீண்டுமொருமுறை பதிவு
செய்திவிட்டு வீட்டிற்கு
வந்துவிட்டேன்.

இரண்டு நாட்களுக்கு
ஒருமுறை எனது விவரங்கள்
பதிவேற்றப்பட்டுவிட்டனவா
என்று ஆதார் தளத்தில்
பார்த்துக்கொண்டிருந்தேன்.

சாதகமான தகவல்
வரவில்லை.

ஒருநாள் என்னுடைய
கைபேசி எண்ணிற்கு
ஒரு குறுஞ்செய்தி
வந்தது..

பதிவேற்றுவதில்
நடைமுறைச் சிக்கல்
உள்ளபடியால்
இன்னும் சிலநாட்கள்
பொறுத்திருங்கள் என்று.

அப்போதுதான்  எனக்கு
ஒரு பொறி தட்டியது.

என்னுடைய கைபேசி யில்
mAadhaar என்ற செயலியை
நிறுவி அதன்மூலம்
என்னுடைய ஆதாரையும்
எனது மனைவியின்
ஆதாரையும் சேர்த்திருந்தேன்.

அப்போது ஒரு பாஸ்வேர்ட்
வைத்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டது.

அந்த ரகசியக்குறியீடு
மொபைலில் செயலியை
பயன்படுத்துவதற்காக இருக்கும்
என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அது நம்முடைய
பயோமெட்ரிக் தகவல்களான
கை ரேகைகளையும்
கருவிழி பதிவுகளையும்
வேறு யாரும் பார்க்காதிருக்க
வைக்கப்பட்டுள்ள ஒரு
பாதுகாப்பு ஏற்பாடு.

பொறி தட்டியவுடன்
கைபேசியில் mAadhaar
தட்டிப்பார்த்தேன்.

Biometric தகவல்களை
பிறர் பார்க்காதிருக்க
போடப்பட்டுள்ள
தடைத்திரையை
விலக்குவதற்கான்
ரகசியக் குறியீட்டை
பதிவு செய்ய
கேட்டுக்கொண்டது.

ரகசியக்குறியீடை
பதிவு செய்ததும் 10 நிமிடத்திற்கு
தடைத்திரை விலகி இருக்கும்
என  ஒரு தகவல் தந்தது.

இந்த 10 நிமிட காலத்தில்
யாரும் நமது தகவல்களை
சரிபார்த்துக்கொள்ளலாம்.

இப்போது தான்
எனது தகவல்களை
BSNL நிறுவனத்தால்
ஏன் ஒப்பிட்டுப்பார்க்க
முடியவில்லை
என்பதை உணர்ந்தேன்.

அதற்குப்பிறகு
ஆதார் தளத்திற்கு சென்று
பார்த்தால் Biometric
Lock/unlock என்ற வசதி
கொடுக்கப்பட்டுள்ளதை
பார்த்து அறிந்துகொண்டேன்.

இதற்கிடையில்
ஆதார் அமைப்பின் உதவிக்குழு
எனது புதிய பயோ மெட்ரிக்
பதிவுகளை பதிவேற்றம் செய்து
முடித்த தகவலை
குறுஞ்செய்தியாக அனுப்பியது.

பிறகு திருச்சி சிங்காரத்தோப்பு
BSNL அலுவலகம் சென்று
நண்பர் திரு வேல்முருகனிடம்
ஆதார் இணப்பிற்காக
இந்த தகவல்களை
பகிர்ந்து கொண்டேன்.

அவர் வைத்திருக்கும்
சோதனைக்கருவியில்
விரல் ரேகையை பதிவதற்கு
முன் என்னுடைய mAadhaar
செயலியில் ரகசியக்குறியீட்டு
எண் மூலம் தடையை நீக்கினேன்.

ரேகையை பதிந்ததும்
உடனே ஏற்றுக்கொண்டது.

நான்கு இணைப்பு எண்களை
இணைக்க வேண்டியிருந்த்து.

நான்காவது எண்ணை இணைக்கமுயலும்போது
பத்து நிமிடம் முடிந்து விட்டதால்
தானாகவே திரை விழுந்துவிட்டது.

மீண்டும் ஒருமுறை
ரகசியக்குறியீட்டு எண்மூலம்
தடைத்திரையை விலக்கியதும்
நான்காது இணைப்பு எண்ணையும்
இணைக்க முடிந்தது.

ஆதார் தளத்தில் இத்தனை
பாதுகாப்பு வளையங்கள்
வைத்திருப்பதை அறிந்து
மகிழ்ந்தேன்.

இப்போது நமது தகவல்களை
யார்யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள்
என்பதையும் அறிந்து கொள்ளும் வசதியையும்  ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விவரங்களை சரியாக
தெரிந்து வைத்திருக்காத்தால்
சிறு வசதிக்குறைவு எனக்கு
ஏற்பட்டது.

இந்த நேரத்தில் BSNL
நிறுவனத்திற்கு ஒரு பயனுள்ள
ஆலோசனை..

BSNL நிறுவனம் பயன்படுத்தும்
மென்பொருளில்
ரேகை பதிவு செய்ய வருபவர்கள்
ரகசியத்தை பாதுகாக்க 
தடைசெய்திருந்தால்
அதை அறிந்து தெரியப்படுத்தினால்
வாடிக்கையாளர் தடைத்திரையை
பத்து நிமிடங்கள்  விலக்கிவைத்து
இணப்பு எண்களை இணக்க
ஏதுவாக இருக்கும்.

எனது இந்த அனுபவத்தை
படித்துப்பார்க்கும் நண்பர்கள்
ஆதாரி்ல் உள்ள தங்களைப்பற்றிய
ரகசியத்தகவல்களுக்கு
பாதுகாப்பு வளைய வசதியை
பயன்படுத்திக்கொள்ளுமாறு
வேண்டிக்கொள்கிறேன்.

கைபேசியில்
mAadhar செயலியை
நிறுவி தங்களின்
ஆதார் அட்டையை
சேர்த்துக்கொள்ளும்படியும்
கேட்டுக்கொள்கிறேன்.

முதலில் இந்த செயலியை
கைபேசியில்  நிறுவும் போது 
அதன் அமசங்களை நன்கு படித்து
தெரிந்து கொண்டிருந்தால்
இந்த மோசமான அனுபவம்
ஏற்பட்டிருக்காது.

எனக்கு எல்லாம் தெரியும்
என்ற ஆணவத்திற்கு
கிடைத்த சம்மட்டி அடி
இந்த அனுபவம்.

ஆணவத்தை அகற்றுவோம்.
அனைத்தையும் அறிந்துகொள்வோம்.

Friday, 22 December 2017

உழைப்பின் முகவரி..ஆறுமுகம்

அன்புச்சகோதரர்
ஆறுமுகம்...

1970 களில் எல்ஐசி
காரைக்குடி கிளையில்
அலுவலகத்தை காலையில்
சுத்தப்படுத்தி தண்ணீர்
எடுத்து வைக்க
குறைந்த சம்பளத்தில்
அமர்த்தப்பட்ட ஒரு
பகுதி நேர ஊழியர்.

அந்த வேலையில்
வரும் ஊதியம்
அவரது குடும்பத்தை
பேணுவதற்கு பத்தாது.

கூடுதல் வருவாய்க்காக
பிற ஊழியர்களுக்கு
அவர்களின் வீட்டிலிருந்து
மதிய உணவு எடுத்து வருவது,
வீட்டிற்கு தேவைப்படும்
பொருட்களை
வாங்கிக்கொடுப்பது
என்று பல் வேறு
வகைகளிலும் உதவுவார்

எந்த உதவி என்றாலும்
முகம் கோணாமல்
மனமுவந்து செய்து
வந்தார்.

ஒவ்வொரு ஊழியரும்
அவரை தங்கள்
குடும்ப உறுப்பினர் போல்
நினைத்து நிதி உதவியும்
செய்வார்கள்.

இப்படி காலம்
ஓடிக்கொண்டிருந்தபோது
திரு சுப. வரதராஜன் சார்
அவர்கள் நிர்வாகப்பிரிவிற்கான
உதவிக்கிளை மேலாளர்.

திரு குத்தாலிங்கம் சார்
அவர்கள் கிளை மேலாளர்.

சென்னை கோட்டத்தில்
விற்பனை மேலாளராகவும்
பணியாற்றியிருக்கிறார்.

இருவரும்
கலந்தாலோசிக்கிறார்கள்.

ஆறுமுகத்திற்கு
உதவ முடிவு செய்கிறார்கள்.

அவர் பகுதிநேர ஊழியர்
என்பதால் முகவராவதற்கு
தடையில்லை
என கருதுகிறார்கள்.

உடனே முகவராக 
நியமனம் செய்து
ஒரு நல்ல வழி காட்டி
உதவுகிறார்கள்.

திரு குத்தாலிங்கம் சார்
முதல் நிலை அலுவலகர்கள்
சங்கங்களின் கூட்டமைப்பிற்கு
அகில இந்திய செயலாளராகவும்
இருந்தவர்.

ஒரு நாள் காலை வேளையில்
அவரது இல்லத்திற்கு
ஒரு தொலைபேசி
அழைப்பு வருகிறது.

சாரின் மனைவி போனை
எடுத்து சாரைக்
கூப்பிடுகிறார்கள்.

தொலைபேசி இணைப்பை
கொடுத்த தொலைபேசி  ஊழியர்
மதுரையிலிருந்து வரும்
தொலைதூர அழைப்பு
என்று சொன்னதை
கவனிக்கவில்லை.

சார் போன் கருவியை
வாங்கிக்கொள்கிறார்.

பேசுபவர் நான்
ராமசாமி பேசுகிறேன்
என்று சொல்கிறார்.

இது லோக்கல் கால்
என நினத்துக்கொண்டதாலும்
காரைக்குடி கிளையில்
ராமசாமி என்ற பெயரில்
பல முகவர்கள் உள்ளதாலும்
எந்த ராமசாமி என்று
கேட்கிறார்

அழைத்த கோட்ட மேலாளர்
கோட்ட மேலாளர் என்று
கூறியிருக்கலாம்.

அல்லது பிரபலமான தனது
மூன்றெழுத்து இனிஷியலை
கூறியிருக்கலாம்.

எந்த ராமசாமி என்ற கேள்வி
எதிர்முனையில் ஒலித்ததும்
தன்னை கிளை மேலாளர்
அவமதித்து விட்டார் என
தவறாக நினைக்கிறார்.

தனது ஆதங்கத்தை
கிளை மேலாளரிடம்
ஓங்கி ஒலித்திருக்கிறார்.

இந்த சம்பவம்
முடிந்து விட்டாலும்
கோட்ட மேலாளரின்
மனதிலிருந்து
மறையவில்லை.

கிளை மேலாளரை
மட்டந்தட்டவும்
பழிவாங்கவும்
வாய்ப்புக்காக
காத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் தான்
பகுதி நேர ஊழியர்
முகவராக நியமனம்
செய்யப்பட்ட தகவல்
அவரை சென்றடைகிறது.

பகுதி நேர ஊழியரை
முகவராக நியமனம்
செய்த செயல் தவறு என்றும்
அதற்கான விளக்கம் கேட்டும்
முகவர் பணிக்கு
தடை விதித்தும்
தாக்கீது வருகிறது.

கிளை மேலாளர்
பயப்படவுமில்லை
பதட்டப்படவுமில்லை.

நிரந்தர ஊழியருக்குத்தான்
முகவராக தடை உள்ளது எனவும்
பகுதி நேர ஊழியருக்கு
தடையேதுமில்லை எனவும்
பதில் எழுதி அனுப்பினார்.

இந்த சிக்கல் தீர்வுக்காக
மைய அலுவலகத்திற்கு
எடுத்து செல்லப்படுகிறது.

மைய அலுவலகம்
கிளைமேலாளரின் முடிவில்
தவறேதும் இல்லை என்று
பதில் அனுப்பியது.

இந்த சாதகமான பதிலை
பெற்ற திரு ஆறுமுகம்
நண்பர்கள் உதவியுடன்
நல்ல முறையில் வணிகம்
புரியத் தொடங்குகிறார்.

அப்போது தான் பிறந்த
என் புதல்வியின் பெயரில்
ஒரு குழந்தைகளுக்கான
திட்டத்தில் ரூபாய் 177
காலாண்டுத்தவணையில்
பாலிசி கொடுத்து உதவினேன்.

ஆறுமுகத்தின் முகவர்
அடையாள எண் 2623747.

நண்பர்களின் உதவியால்
நல்ல முறையில் வணிகம் புரிந்து
தலைவர் மன்ற உறுப்பினர்
நிலைக்கு உயர்கிறார்.
தமது குடும்ப நிலையை
வளமிக்கதாக்குகிறார்.

வழிகாட்டிய
திரு குத்தாலிங்கம் சார்
திரு வரதராஜன் சார்
வளர்ச்சி அலுவலர்
திரு சுப்பையா சார்
போன்றோரையும்
வளர்ச்சிப்பாதையில்
ஒளிகாட்டிய அலுவலக
நண்பர்களையும்
நெஞ்சிலிருத்தி
நாளும் போற்றி வருகிறார்.

தற்போது
அலுவலகப்பணியிலிருந்து
ஓய்வு பெற்று விட்டாலும்
அலுவலக நண்பர்களுக்கு
உதவும் பணியை இன்றும்
செய்து கொண்டுதான்
இருக்கிறார்.

உழைப்பால் உயர்ந்த
உன்னதமானவர்களைப்பற்றி
படித்திருக்கிறேன்.

உழைப்பால்
திரு ஆறுமுகம் உயர்ந்ததை
நேரில் பார்த்து
உணர்ந்துள்ளேன்.

இவரைப்போல்
ஆயிரக்கணக்கான
ஆறுமுகம்கள்
எல்ஐசி முகவர்களாக
ஒளிர்ந்தும் மிளிர்ந்தும்
கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, 20 December 2017

வி.ஐ.பி பாலிசி

நான் கிளை மேலாளராக
திருநெல்வேலி முதற்கிளையில்
இருந்த காலத்தில் தான்
ஜீவன் ஸ்ரீ என்ற புதிய பாலிசி
அறிமுகப்படுத்தப்பட்டது.

குறைந்தபட்ச காப்புத்தொகை
ஐந்து லட்சம் ரூபாய் என
நிர்ணயிக்கப்பட்டது.

முகவர்கள்,
வளர்ச்சி அலுவலர்கள்,
கிளை மேலாளர்களின்
விற்பனைத் திறனை
வளர்த்துக்கொள்ள
பொன்னான வாய்ப்பாக
இந்த திட்டம் இருந்தது..

இந்த திட்டத்தில் நிறைய
பாலிகள் வழங்கி
சாதனை பல படைத்தோம்.

திசையன்விளை பகுதியில்
ஒரு குடும்பத்தில்
நான்கு சகோதரர்களுக்கு
ஆளுக்கு ஐம்பது லட்சம்
காப்புத்தொகைக்கு
பாலிசி வழங்கி
கோட்டத்திற்கே
பெருமை சேர்த்தோம்.

அந்த பாலிசி சேரத்த
முகவர் இந்த நான்கு
பாலிகளின் மூலம் மட்டுமே
MDRT யின் COT நிலைக்கு
தகுதி பெற்றார்.

பல முகவர்கள்
இந்த ஜீவன்ஸ்ரீ பாலிசியை
ஒரு விஐபி பாலிசி என்றே
வாடிக்கையாளர்களிடம்
அறிமுகப்படுத்தி வந்தனர்.

இதைப்போலவே இப்போது
அறிமுகம் செய்யப்பட்டுள்ள
குறைந்தபட்சம் ஒருகோடி ரூபாய்
காப்புத்தொகை என்ற அளவில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
ஜீவன் சிரோன்மணி யும்
ஒரு விஐபி திட்டம் தான்.

களப்பணியாளர்களின்
விற்பனைத்திறனை
வெளிக்கொணர
இந்த திட்டம்
ஒரு நல்லவாய்ப்பு.

ஆண்டுத்தவணையில்
மூன்று பாலிசிகள்
வழங்கினாலே MDRT
என்ற பெருமை முகவருக்கு
கிடைக்கக்கூடிய
வாய்ப்புக்களை
வாரி வழங்கும் திட்டம்.

மூச்சடக்கி முத்தெடுங்கள்..
வாய்ப்பாளரை
நம்பிக்கையுடன்
அணுகுங்கள்.

விஐபி க்களுக்கு
விஐபி திட்டத்தில்
பாலிசி வழங்கி
விஐபி முகவராக
விரும்புங்கள்.

விரும்பியதை
பெற்றிடுங்கள்.

களப்பணியாள்களை
வாழ்த்தி மகிழ்கிறேன்.

Friday, 15 December 2017

மாட்டிவிட்ட மைசூர்பா

ஓர் உண்மைச்சம்பவம்.
###################

நான் எல்ஐசியில்
இணைந்தபோது முதலில்
பணியைத்துவக்கிய ஊர்
ஆந்திரமாநிலம் சித்தூர்.

செப்டம்பர் 1974 முதல்
பெப்ருவரி 1980 முடிய.

அங்கு தமிழ் இதழ்கள்
"எர்ரையா" என்ற
திமுக காரரின் கடையில்
கிடைத்து வந்தன.

தமிழ் நண்பர்கள்
ஒவ்வொருவரும்
ஆளுக்கு ஒரு இதழ் வாங்கி
அநேகமாக எல்லா
இதழ்களையும் படிப்போம்.

அப்போது குமுதம் இதழில்
திருச்செந்தூர் ஊரில்
நடைபெற்ற ஒரு திருட்டை கண்டுபிடித்த வினோதம்
பற்றிய கட்டுரை வந்தது.

நாங்களும் அந்த
கட்டுரையைப்படித்து
ரசித்தோம்.

எனக்கே தெரியாது
பின்னொருநாளில் நானும்
அந்த ஊருக்கு பணி
மாறுதல் பெற்று
செல்வேன் என்று.

சித்தூரிலிருந்து
காரைக்குடிக்கு
மாற்றலாகிச்சென்று
பின்னர் செப்டம்பர்  1981ல்
திருச்செந்தூருக்கு
மாறுதல் பெற்று
சென்றேன்.

குமுதம் வார இதழில்
பல ஆண்டுகளுக்கு முன்
படித்த கட்டுரை யை
நினைவில் வைத்து
அதைப் பற்றி  நண்பர்களிடம் விசாரித்தேன்.

திரு யக்ஞ சுப்பிரமணியன்
என்று எங்கள் கிளையில்
ஒரு வளர்ச்சி அலுவலர்.

1970 களில் அந்த ஊரில்
அம்பாசிட்டர் கார்
வைத்திருந்த
இரண்டு மூன்று நபர்களில்
அவரும் ஒருவர்.

அவரது வீட்டில் தான் திருட்டு நடைபெற்றிருக்கிறது.

அவரே நடந்த வற்றை
எனக்கு விளக்கமாக
விவரித்தார்.

பாளையங்கோட்டை
எல்ஐசி அலுவலகத்தில்
பணி புரிந்த ஊழியர்கள்
பலர் திரு அப்புசாமி ஐயர்
அவர்களின் முன் முயற்சியால்
இப்போதைய தியாகராயநகர்
பகுதியின் மையத்தில்
மொத்தமாக இடம் வாங்கி
வீட்டுமனைகளாக பிரித்து
தனித்தனியாக வீடுகள்
கட்டத் தொடங்குகின்றனர்.

இந்த இடத்தில்
திருச்செந்தூர் கிளை
வளர்ச்சி அலுவலர்
திரு யக்ஞசுப்பிரமணியன்
அவர்களும்
மனை வாங்கி வீடு கட்டி
புதுமனை புகுவிழாவிற்கு
ஏற்பாடு செய்கிறார்.

அந்த விழாவில்
விருந்தினர்களுக்கு
வழங்குவதற்காக
இனிப்பு பதார்த்தங்களை
கடையில் வாங்காமல்
வீட்டிலேயே தயாரிக்க
முடிவெடுக்கின்றனர்.

அதன்படி
மைசூர்பா வும் மிக்சரும்
திருச்செந்தூர் வீட்டிலேயே
தயாராகிறது.

இவற்றை
பாளையங்கோட்டையில் உள்ள
எல்ஐசி காலனி புது வீட்டிற்கு
எடுத்துச்  செல்கின்றனர்.

வீட்டிலேயே ஆறு நபர்கள்
இருந்த காரணத்தால்
கார் பயணத்திற்கு
ஓட்டுனரை வேண்டாம் என
சொல்லியிருக்கிறார்கள்.

புதுமனை புகு விழாவை
சிறப்பாக நடத்திவிட்டு
மறுநாள் திருச்செந்தூர்
திரும்பி வருகிறார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு
பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

வீடு தாளிடப்படாமல்
இருந்திருக்கிறது.

நாம் தாள் தாளிடாமல்
சென்று விட்டோமோ என்ற
ஐயத்துடன் சென்றவர்களுக்கு
மேலும் அதிர்ச்சி.

வீட்டில் திருடு  போயிருந்ததை
உணர்ந்தார்கள்.

அணிந்தது போக
வீட்டில் விட்டுச்சென்ற
தங்க நகைகளும்
எல்லா வெள்ளி சாமான்களும் திருட்டு போயிருந்தன.

காவல் நிலையத்தில்
புகார் செய்கிறார்கள்.

காவலர்கள் இவர்களை
விசாரிக்கிறார்கள்.

எதிரிகள் யார்,
சந்தேகப்படுவது யாரை,
என பல கோணங்களிலும்
கேள்வி கேட்கிறார்கள்.

எந்த வொரு பிடியும்
கிடைக்காமல் தவித்தனர்.

மறுநாள்
கூடுதல்  விசாரணைக்காக
காவல் நிலைய ஆய்வாளர்
இவர்களது இல்லத்திற்கு
வருகிறார்.

வீட்டின் இல்லத்தரசி
வந்தவரை வரவேற்று
வீட்டில் தயாரித்த
நெய்மணக்கும் மைசூர் பா,

தேங்காய் எண்ணையில்
தயாரித்த மிக்சரோடு
சுவையான ஃபில்டர் காபியும் வழங்கு கிறார்.

ஆய்வாளர் அவற்றை
ருசித்து சாப்பிடுகிறார்.

பல கேள்விகள் கேட்கிறார்.

யார் மீதும் சந்தேகம்
இல்லை என்கிறார்கள்.

அவரும்  துருவித்துருவி
விசாரிக்கிறார்.

அவர்கள் வீட்டில்
கார் ஓட்டுனராக
பணியாற்றுபவரைப்பற்றி
விவரம் கேட்கிறார்.

கடைசியாக பார்த்தது
எப்போது என்றும் 
கேட்கிறார்.

பாளையங்கோட்டை
சென்ற நாளில் மதியம்
பார்த்ததாக கூறுகிறார்கள்.

அடுத்து  பார்த்தது
எப்போது என்ற கேள்விக்கு
புதுமனை புகுவிழா முடிந்து
திரும்பி வரும்போது
S.K. பெட்ரோல் பங்க்
அருகில் பார்த்த தாகவும்
ஆனால் அவர்
இவர்களது காரை பார்த்தும்
பார்க்காதது போல்
விரைந்து போனதையும்
கூறுகின்றனர்.

காவல் நிலைய ஆய்வாளர்
விசாரணைக்காக
கார் ஓட்டுனர்
வீட்டிற்கு செல்கிறார்.

வீட்டில் ஓட்டுனர் இல்லை.
அவரின் மனைவி மட்டும்
இருந்திருக்கிறார்.

வீட்டிற்கு விசாரிக்க வந்த  ஆய்வாளருக்கு
மைசூர்பா வும் மிக்சரும்
காபியும் கொடுக்கிறார்.

இனிப்பும் காரமும்
திருடு போன வீட்டில்
தரப்பட்ட பண்டத்தின்
தரத்தில் இருப்பதை
ஆய்வாளர் உணர்கிறார்.

ருசியை வைத்து
இவை கண்டிப்பாக
கடையில் வாங்கியதாக
இருக்கமுடியாது என்று
நினைத்து பண்டம்
உங்கள் வீட்டில்
நீங்களே தயாரித்ததா
என்று கேட்கிறார்.

கார் ஓட்டுனரின் மனைவி
அவை எதுவும்
வீட்டில் தயாரித்ததல்ல
என்றும் கணவர்
ஒரு கடையில் 
வாங்கி வந்தது எனவும்
கூறுகிறார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே
ஓட்டுனர் வீட்டிற்கு
வருகிறார்.

ஆய்வாளர்
இப்படி ருசியான
மைசூர் பாவும் மிக்சரும்
எந்த கடையில் வாங்கியது
என நட்பாக விசாரிக்கிறார்.

ஓட்டுனர் ஒரு கடையின்
பெயரைச் சொல்கிறார்.

தனது வீட்டிற்கும் இவற்றை
வாங்க வேண்டும்
எனக்கூறி அந்த கடைக்கு
கூட்டிச்செல்லும்படி
கேட்டுக்கொள்கிறார்.

ஒரு மிட்டாய்கடைக்கு 
இருவரும் செல்கிறார்கள்.

அங்கு வைக்கப்பட்டிருந்த
மைசூர் பாவையும்
மிக்சரையும் வாங்கி
சாப்பிட்டுப்பார்க்கிறார்.

தரமும் ருசியும்
ஓட்டுனர் வீட்டில் சாப்பிட்ட
பண்டத்தை விட குறைச்சல்
என்பதை உணர்கிறார்.

கடைக்காரரிடம்
ஓட்டுனருக்கு
கொடுத்த பண்டத்தின்
ருசியில் உள்ளவற்றை
கொடுக்கும்படி கேட்கிறார்.

கடைக்காரர் தனது
கடையில் எப்போதுமே
ஒரே தரத்தில் தான் உண்டு
எனவும் வேறு கிடையாது
என்றும் கூறுகிறார்.

இந்த கடையில்
சமீபத்தில் ஓட்டுனர்
பண்டம் ஏதும்
வாங்கவில்லை
என்ற தகவலையும்
பகிரங்கமாக கூறுகிறார்.

உடனே ஆய்வாளர்
ஓட்டுனரை ஓங்கி ஒரு
அறை அறைந்து
காவல் நிலையம்
அழைத்துச்செல்கிறார்.

விசாரிக்கும் முறையில் விசாரித்ததும்
ஓட்டுனர் உடனே
திருடிய உண்மையை  போட்டுடைக்கிறார்.

வீட்டின் அமைப்பு பற்றி
நன்கு அறிந்த ஓட்டுனர்
புதுவீட்டின் பால்காய்ச்சு
விழாவிற்கு
வீட்டுக்காரர்கள்
குடும்பத்தோடு
பாளையங்கோட்டைக்கு
சென்ற அன்றைக்கு இரவு
சுவரேறிக்குதித்து வீட்டிற்குள்
நுழைந்திருக்கிறார்.

ஒவ்வொரு இடத்திலும்
பொறுமையாக
பூட்டை உடைத்து
தங்க நகைகளையும்
வெள்ளி பாத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு வெளியேற
முயற்சித்திருக்கிறார்.

அந்த வீடு இருந்த தெரு
எப்போதும் ஆள் நடமாட்டம்
இருக்கக்கூடிய
பள்ளத்தெரு.

முருகன் கோவிலுக்கு
செல்லும்  அர்ச்சகர்களின்
நடமாட்டம் அன்று 
அதிகாலையிலே
தொடங்கிவிட்டதாம்.

எனவே அவனால்
வெளியே வர இயலாமல் போயிருக்கிறது.

பகல்முழுதும்
வீட்டின் உள்ளேயே உட்கார்ந்திருக்கவேண்டிய
கட்டாயம்.

சாப்பிட ஒன்றும்
இல்லையாம்.
பசியைப்போக்க
பாத்திரங்களை உருட்டி
பார்த்திருக்கிறான்.

வீட்டில் தயாரித்த
மைசூர்பாவையும்
மிக்சரையும்
உள்ளூர் விநியோகத்திற்காக
வீட்டுக்காரர்கள் கொஞ்சம் விட்டுச்சென்றதால்
அவற்றை பார்த்திருக்கிறான்

மைசூர் பா வையும்
மிக்சரையும் தின்றே
பகல் முழுதும் பசியை
தணித்திருக்கிறான்.

திருடிய பொருட்களோடு
ஆள் நடமாட்டமில்லாத
நள்ளிரவில்
வீட்டை விட்டு 
வெளியேறும்போது
குழந்தைகள் சாப்பிட என்று
கொஞ்சம்  மைசூர்பாவையும்
கொஞ்சம் மிக்சரையும்
பொட்டலம் போட்டு
எடுத்துச்சென்றிருக்கிறான்.

தனது மனைவியிடம்
திருடியதை மறைத்து
கடையில் வாங்கிய
இனிப்பும்  காரமும் என்று
கூறியிருக்கிறான்.

இந்த உண்மை தெரியாத
மனைவி தான் அவற்றை
ஆய்வாளருக்கு கொடுத்து
திருட்டு கணவனை
மாட்டிவிட்டிருக்கிறார்.

தங்க நகைகளும்
வெள்ளி பாத்திரங்களும்
கைப்பற்றப்பட்டு
திரு யக்ஞசுப்பிரமணியன்
அவர்களுக்கு திருப்பி
கிடைத்துவிட்டனவாம்.

நெய்மணக்கும் மைசூர்பா

திருட்டைக்கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.

Thursday, 12 October 2017

ATM ஐ ஏமாத்தணும்.


எசக்கி யும் சொடலையும்
தோள் மேல கையை போட்டு
பேசிட்டே
ஒண்ணா வராவோ.

என்ன நொறநாட்டியம் பண்ணப்போறாவொளோ
தெரியலயே.

அவொ  பேசுதத
ஒளிஞ்சிருந்து
ஒட்டுக்கேப்பொம்.

"ஏல எசக்கி.....
ஒரு அவசரவேலையா
நேத்து காலைல
மதுரைக்கு போனன்டே.

நான் வீட்லயிருந்து
பைக்ல வரும்போது
ATM ல  ஒரு 
பத்தாயிரம் ரூவா 
பணம் எடுத்தேன்.

அந்த
ATM பேதில போவான்
ஐந்து ரெண்டாயிரம் 
ரூவாத்தாளு வருதமாதிரி
ப்ரொக்ராம் பண்ணி
வச்சுருக்காம்டே.

அதுனால எனக்கு
ரெண்டாயிரம் ரூவாத்தாளு
அஞ்சு  வந்துச்சு.

என்னால ஒடனே
எங்கியும் போயி அதை
சில்லறையா மாத்தமுடியல.

விடியக்காலம்பர
ஒரு பயலுவொளும் கடையத் தொறக்கல.

நானும்
வர்றது வரட்டும் னுட்டு
பெரிய பஸ் ஸ்டாண்டு வந்து
வெரசலா போயிரலாம்னு
பைபாஸ் ரைடர் 
பஸ்ல ஏறிட்டேன்.

மதுரைக்கு டிக்கட்
95 ரூவாய்னு
சென்னாவொ.

நான்
ரெண்டாயிரம்  ரூவா தாளை
கண்டக்டர்கிட்ட நீட்டுணேன்.

அவொ  அதுக்கு
எரிச்சல்லாம் படாம
சிரிச்சுகிட்ட
என்ன அண்ணாச்சி..

95 ரூவாய்க்கு பணமா
கொடுக்காம
பாங்கு DD யை தாரேள.

DD ல்லாம் வாங்குததுக்கு
எங்க மேலாபீசுலயிருந்து
இதுவரைக்கும் 
உத்தரவு  ஒண்ணும் போடலய
அண்ணாச்சின்னு
சொன்னாவொ.

நான் ATM காரனை
ஏசிக்கிட்டே..

நான் வந்து 
மதுரையில எறங்கும்போது
மீதியை வாங்கிக்கிறம்
தம்பி ன்னு
சொன்னேன்.

அப்பமும் ஒங்ககிட்ட
சில்லறை சேரலண்ணா
நாங் கீள  எறங்குனதும்
எங்கியாவது

சில்லறையா
பொறட்டி தந்துட்டு
ரெண்டாயிரம் ரூவாத்தாளை
திரும்பி வாங்கிக்குறேன்
தம்பின்னு சொன்னேன்.

கண்டக்டர் என்னப்பாத்து

கவலப்படாதீய..

சில்லறை நோட்டு
சீக்கிரம் வந்துரும்.

வந்ததும் நானே தாறேன்.

கவலப்படாதீயன்னு
பொறுமையா சொன்னாவொ.

என்ன மாதிரியே
நாலஞ்சு வேரு
ரெண்டாயிரம் ரூவாத்தாளை
கொடுத்திருக்காவொ.

அந்த பொறுமைசாலி
கண்டக்டரு கோயில்பட்டி தாண்டுனதுமே பாக்கி யை
எல்லாருக்கும் பைசல்
பண்ணிட்டாவொ.."

"சொடலை சொல்லுததை
பாத்தா நம்மகிட்ட
எப்போதும் சில்லறை
தாராளமா இருக்கணும்னு
தோணுது"

"ஆமடே..எசக்கி
இதுக்குத்தான் 
நம்ம கூட காலேஜ்ல ஒண்ணா  படிச்சாவொளே ஒரு தெங்காசிக்காரவொ..

அவொ பேரு நல்ல பேருல்லா..
ஆங்.. பரிமேலழகன்.

அவொ ஒரு  யோசனை சொன்னாவொ."

"என்ன யோசனைன்னு
சட்டுபுட்டுன்னு
சொல்லித்தொலையும் வே"

"அதாவது எசக்கி..

பத்தாயிரத்துக்கு பதுலா
9900 ன்னு ATM ல
பணங்கேட்டா அதுக்கு

2000 த்துல 4 தாளும்,
500 ல 3 தாளும்
100 ல 4 தாளும்ன்னு

நமக்கு வரும்.

நம்ம சிக்கல்
ஒருமாதிரி
தீந்தமாதிரியிருக்கும்னு
தன்னோட
அனுபவத்தை வச்சு
சொன்னாவொ"

"சொடல சொல்லுதமாதிரி

"பரி" யோசனையை
கேட்டு நடந்தா நாம
யாரு முன்னாலயும்
"பரி"தாபப்பட்டு
நிய்க்கவேண்டாம்.
இனி அப்பிடியே
100 ரூவாய் கொறச்சே
ATM ல பணம்
எடுப்போம்வே"

பரி சொன்னது

சரி......
ரொம்ப சரி.

ரொம்ப...
ரொம்ப... சரி.