Saturday, 30 September 2017

நிழல்கள் ரவி

யோவ்..சொடல..

நம்ம எல்ஐசி
அம்பாசமுத்திரம் கெளையில
1980-90 லல்லாம்
டைப்பிஸ்டாவும்
பொறவு ஹெச்.ஜி.யே வா
இருந்தாவொள்ளா
உ சங்கரசுப்பையன்..னு
ஒருத்தரு.

அவொ  இப்பம் மெட்ராசுல
ஒரு ப்ராஞ்ச்ல அட்மின்
மேனேஜரா இருக்காவொ.

அந்த ஆபீசுக்கு
ரெண்டுநாளைக்கி முந்தி
சினிமா நடிகர் நெழல்கள்
ரவி வந்தாவொளாம்.

அவொளோட பாலிசி ஒண்ணு
மெச்சூரிட்டி ஆகுதாம்.

அதுக்கான டிஸ்சார்ஜ்
பாரத்தை நேர்லயே வந்து
கொடுத்தாவொளாம்.

அப்ப நம்ம தம்பியாபுள்ள
அவொளோட ஒரு போட்டோ
எடுத்துக்கிட்டாவொளாம்.

அந்த போட்டோவை
வாட்சாப்ல பாத்தமுய்யா.
ஒமக்கு ஒடனே
அனுப்பி வைக்கம்யா.
பாரும்."

"ஏல ..எசக்கி
ஒடனே அனுப்பி வைடே..
நான் தஞ்சாவூர்ல
இருந்தமுல்ல.
அப்போ  அவொ 
தொறையூர்ன்னு
ஒரு ஊர்ல வேலை
பாத்தாவொ.

அவொகிட்ட ஒரு நாளு
ஒங்க அப்பா பேரு
உதிரவாசகமா ன்னு
கேட்டதுதான் கேட்டேன்.
அவொ  அப்பிடியே
அசந்துட்டாவொ.

சார்வாளுக்கு
ஜோசியம் தெரியுமான்னு
ஆச்சரியமா கேட்டாவோ..

'உ' ன்னு
பேரு ஆரம்பத்தில வந்து
அதிகமா பார்த்தது இல்ல.

பாளையாங்கோட்டையில
குமரன் கபே ன்னு ஒரு ஓட்டல்
அந்தக்காலத்துல
வடக்குபஜார்ல பேமசு.

அந்த ஓட்டல் மொதலாளி
பேரு உதிரவாசகம்.

எனக்கு நாலு தாய்மாமா.
கடைக்குட்டி மாமா பேரு
உதிரவாசகம் ரத்தினம்.

ஒரு நாளு 
ஓட்டல் மொதலாளி ஏங்கிட்ட
உதிரவாகம்ங்க பேருல
நானும் ஒன்னோட
மாமாவும்தான்டே
இருக்கோம்னு
சொன்னாரு.

இப்போ ஒரு
மூணாவது ஆளு
இருக்காருன்னு
சந்தோசப்பட்டேன்.

அதுனாலதான்
அவருகிட்ட அப்பா பேரு
உதிரவாசகமான்னு
கேட்டேன்.

அவருக்கு சந்தோசம்
தாங்கல.."

" ஆமவே சொடல..
நானும் இப்பத்தான்
இந்த பேரை
கேள்விப்படுதேன்"

"சரி டே எசக்கி..
இந்த நெழல்கள் ரவி
சினிமா நடிகர்னு தான
ஒனக்குத் தெரியும்.

அவொள ப்பத்தி
வேற எதாவது
தெரியுமாடே"

"தெரியாது.
நீரு கேக்குத பத்தா
ஒம்ம கைல  எதோ
சங்கதி இருக்கமாதிரி
தெரியுது.
நீரே சொல்லும்யா"

"எல்ஐசி யோட
ஆரம்ப காலத்துல
டிவிசனல் மேனாஜரா
திரு சாமண்ணா ன்னு
ஒரு பெரியவரு
இருந்தாவொ.

அவொ  தான்
நெழல்கள் ரவியோட
அப்பா

மதுரை யில
தஞ்சாவூர்ல ல்லாம்
இருந்துருக்காவொ.

தஞ்சாவூர்
டிவிசனுக்கு அவொ  தான்
மொதல்
கோட்ட மேலாளருன்னு
நெனய்க்கேன்.

திருநெவேலில
அந்த காலத்துல
வெங்கடாச்சலம் பிள்ளைன்னு
ஒரு டெவலப்மெண்ட்
ஆபீசரு.

அவரோட மகன்ல
ஒருத்தரு பேரு
சுந்தரலிங்கம்.

அவரை
எல்ஐசில சேக்கதுக்கு
சாமண்ணா ஐயா
ஒதவியிருக்காவொ.

அதுக்காக
சுந்தரலிங்கத்துக்கு
மவன் பொறந்ததும்
அந்தக் கொளந்தைக்கு
சாமாண்ணா ன்னு
பேருவச்சுருக்காவொ.

சாமாண்ணா ஐயா மேல
அவ்வொளவு பக்தி அந்த
குடும்பத் தாளுவொளுக்கு."

"யாரு...நம்ம
அக்கவுண்ட்ஸ்
டிபார்ட்மெண்ட்ல
வேலைபாத்து
ஒரு பத்து வருசத்துக்கு
முன்னால 
ரிட்டயர் ஆனோவொள
அந்த சுந்தரலிங்கமா சொடல"

",ஆம டே.
அதே சுத்தரலிங்கந்தான்டே..

அவரோட  மவன்
சாமண்ணாவோட
பெஞ்சாதியும் இப்போ
எல்ஐசிலதான்
வேலை பாக்காவொ."

" ஏ ..சொடல..
நம்ம எல்ஐசி காரவொளுக்கு
நெழல்கள் ரவியோட அப்பா எல்ஐசியில ஒரு
டிவிஷனல் மேனேஜரா இருந்தாருங்கிற
ஒரு நல்ல தகவலை
சொல்லியிருக்கேரு.

இந்த உதிரவாசகம்,
சாமண்ணா ன்னு
தகவல்களயெல்லாம்
எப்படித் தான்
தெரெட்னேரோ.
அதிசயம் தாம்யா."

Thursday, 28 September 2017

தனியார்மயம்

என்னய்யா..
சொடல...

"BSNL நம்பரை
ஆதார்கார்டோட எணய்க்க
புது ஆதார்கார்டுக்கு
அலையா அலைஞ்சேர..
என்ன ஆச்சு.."

"புதுசா போட்டோ எடுத்தாச்சு.
விரல் ரேகை பதிஞ்சாச்சு..
கருவிழி பிம்பத்தை ஸ்கேன்
பண்ணியாச்சு.

இருவது நாளுகரகுள்ள
ஆதார் சர்வர்ல
ஏத்திருவாவொ..

இதுக்குப் பொறவு தான்
BSNL க்கு போவணும்."

" யோவ். சொடலை ..
இந்த தனியார் மயமாக்கல் னா
என்னன்னு கொஞ்சம்
எனக்கும் வெளங்குத மாதிரி
சொல்லுதேரா?"

"இதுல்லாம் புரியிறது
ஒண்ணும் கஷ்டம் இல்லடே"

"அப்பிடியா...
அப்பஞ்சொல்லுதேரா"

"அரசாங்கத்துலயோ
பெரிய கம்பனியிலயோ
நிரந்தரமா வேலைக்கு
ஆள் போட்டாவொன்னா
அவொளுக்கு மாசாமாசம்
சம்மபளம் கொடுக்கணும்.
வருசாவருசம்
இன்கிரிமண்ட் கொடுக்கணும்.
பென்சன் ஆகும்பொது
அவொளுக்கு
கிராச்சுட்சடி, PF பணம்,
இப்படி பலதுக்கும் நெறைய
பணம் கொடுக்கணும்.

இது போவொ
மாசாமாசம்
அவொ ஆயுசுக்கும்
பென்சன் கொடுக்கணும்.

அவொளோட
காலத்துக்குப்  பொறவு
அவொ  வீட்டம்மாவுக்கு
குடும்ப பென்சன்
மாசாமாசம் கொடுக்கணும்.

இதை ஓய்க்கணும்னுட்டு
நெரந்தரமா வேலய்க்கி
ஆளெடுக்காம
எதாவது தனியார்
கம்பேனி மூலமா
ஆளெடுப்பாவொ.

இதுல  தனியார்
கம்பெனிக்காரன்
ஒரு ஆளுக்கு
ஏழாயிரம் எட்டாயிரம்னு
கவர்மெண்டுல வேங்கிட்டு
ஆயிரமோ ரெண்டாயிரமோ
அவன் எடுத்துட்டு
மீதியை த்தான்
தொழிலாளிக்கு
கொடுப்பான்.

இப்பிடி வர ஆளை
எப்படி வேணாலும்
எப்படி வேணாலும்
வேலைக்கு
வச்சுக்கலாம்.

வேலையிருந்து
வெலக்கலாம்.

வேலைய்க்கு எந்த
உத்திரவாதமும்
கெடையாது.

வேலையில 
இருக்கும்போது
மண்டையப்போட்டுட்டா
பைசாக்காசு கூட
கெடைய்க்காது.

யாரும் யாருகிட்டயும்
எதுவும் கேக்கமுடியாது.

தனியார் ஏஜெண்டுக்கு
மாசாமாசம் பணம்
நெறையவே கெடய்க்கும்.

முந்தியில்லாம்
ஆஸ்பத்திரிக்கு போனா
நெரந்தர ஊழியர்கள்
நெறையபேரு
இருப்பாவொ.

இப்போ
யூனிபாரம் போட்டுக்கிட்டு
இந்த மாதிரி ஆளுவொ
நெறையபேரு
வேல பாத்துக்கிட்டு
இருக்காவொ.

கோயிலுக்கு போனாலும்
இப்பிடித்தான் 
நெறையபேரை கோயில்ல
பாக்கலாம்.

இதமாதிரிதான்
எல்லா எடத்துலயும்.

இதுக்கு  ஆளனுப்ப
பெரிய பெரிய கம்பெனி
பெரிய அளவுல
நடந்துகிட்டு இருக்கு.

அதை நடத்துததுல்லாம் 
பெரிய பெரிய அதிகாரிக்கும்
அரசியல் வாதிக்கும்
மந்திரிமாருக்கு ல்லாம்
வேண்டப்பட்டொவளா
இருப்பாவொ.

ஆச்சிமாறும் போது
கச்சி மாறும்.
ஆனாலும்
நடக்குற
காச்சி மட்டும்
மாறவே மாறாது.

இந்த நடத்துத
தனியாருங்கபாடு
கொண்டாட்டந்தான்.

மொதலுன்னு எதுவும்
போடாத தொழிலு..

கப்பம் மட்டும்
ஒளுங்கா கெட்டணும்.

இப்ப புரிஞ்சுதால
எசக்கி..
தனியார்மயம்னா
என்ன ன்னு"

"ஓரளவு புரிச்சுட்டுவே
சொடலை.
அப்பப்பம் இதமாதிரி
எதயாவது சொல்லும்யா.
மரமண்டய்ங்க நாங்க
எதோ கொஞ்சம்
தெரிஞ்சுக்கிறோம்"

"இன்னய்க்குப்பாத்து
ஏம்ல இந்த கேள்விய்க்கு
வெளக்கம் கேக்க"

"நான்
தற்செயலாத்தாம்வே
இந்த கேள்விய கேட்டேன்.
இன்னைய்க்கு எதும்
விசேஷமா?"

"இல்லை..
இன்னய்க்கு தான்
அந்த பெரிய ஆளு
ரிட்டயர் ஆவுதாராம்.
அதுக்காகத்தான்
குசும்புக்காவ
இந்த கேள்வியை
கேட்டியோன்னு
நெனைச்சுட்டேன்."

Wednesday, 27 September 2017

அழுக்குக்கண்ணாடியும் ஆதாரும்

வீட்டுல  ஒரே எடத்துல
அசையாம ஒக்காந்துகிட்டு மொபைலயே நோண்டிட்டு இருக்கதுக்கு பதிலா
வெளியே கொஞ்சநேரம் காத்தாட போயி இன்னைய்க்கு எப்படியாவது
ஆதார் வேலையை
முடிச்சிட்டுவாங்கன்னு
வீட்டம்மா உத்தரவு.

அதுனால ஒரு பதினோரு
மணிவாக்குல ஸ்ரீரங்கம்
பொது மருத்துவமனைக்கு
எதுருல உள்ள பழைய
கட்டுடத்துல இருக்க ஆதார்
மையத்துக்கு போனேன்.

வெளிய  ஒக்காந்துக்கிட்டு
நெறையவேருக்கு மனு
எழுதிக்கொடுத்துக்கிட்டு
ஒரு மனுசன் இருந்தாரு..
அவர்ட்டபோயி இப்பிடி
BSNL நம்பரோட ஆதாரை
இணய்க்கமுடியல.
ரேகை ஒத்துப்போவலைன்னு
சொல்லுதாவொ. இதுனால
இங்க ரேகையை யும்., கருவிழி
பிம்பத்தையும் திரும்ப எடுப்பாங்களான்னு கேட்டேன்.

அவரு  அண்ணாச்சிக்கு
திருநெவேலியா ன்னு கேட்டுட்டு
இங்க எடுப்பாவொ.
அதுக்குப்பதுலா நீங்க ஆன்லைன்ல
போயி மொபைல் நம்பரை
மாத்திக்குடுத்து பாருங்க
சிக்கல் சரியாப்போயிரும் னு
சொன்னாரு. நான் கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கன்னு
கேட்டதுக்கு, ஒங்களுக்கு வெளங்கலயா?
நீங்க உள்ளயே போயி புதுசாவே எடுத்துக்குங்கன்னு எரிச்சலோட
சொல்லிட்டாரு.

நானும் சரிதாம் போறும்வேன்னு
மனசுக்குள்ள சொல்லிட்டு உள்ள
போனேன்.

ஐஞ்சாறுபேரு
நின்னாவொ.

ஒருத்தரும் வரிசையா நிய்க்கல.

அங்க ரெண்டு பேரு
படம் எடுக்கதுக்காக இருந்தாவொ.

எல்லாரையும் எரிச்சலோட
வெரட்டிக்கிட்டே பேசுனாவொ.

நேத்து BSNL ல் கெடச்ச
அன்பான வரவேற்பையும்
இங்கு நாயை  வெரட்டுத மாதிரியான
வரவேற்பையும்
ஒப்பிட்டு பார்த்தேன்.

ஒரு 90 வயது உள்ள ஒரு
மூதாட்டியை தூக்கிட்டு வந்து
ஒக்காரமுடியாதவொள
கஷ்டப்பட்டு ஒக்காரவச்சு
அவொள பாடாப்படுத்தி
போட்டோ எடுத்தாவொ.

ரேகையும் பதிஞ்சாவொ.

பாவமா இருந்துச்சு.

அரசாங்கத்து மேல
கோவம்கோவமா வந்துச்சு.

நான் போயி என்னொட
பிரச்சினைய சொன்னேன்.

சேர்ல  ஒக்காருங்கன்னு
ஒரு அதட்டல்.

கண்ணாடியை
களத்திவைங்கன்னு ஒரு கத்தல்.

ஒருபடியா போட்டோ எடுத்து
முடிச்சாச்சு.

அப்பறம் கருவிழியை
பதிஞ்சாவொ.

அடுத்தாப்ல எந்திரிச்சு
இங்க வாங்கன்னு
எரிச்சலோட சொன்னாவொ.

இடது கையோட நாலு
வெரல ஒரு கண்ணாடி மேல
வைக்கச்சொன்னாவொ.

ரேகை சரியா வரல.
வெரலை தொடச்சிட்டு
திரும்ப வைக்கச்சொன்னாவொ.

ஒரு வழியா பதிஞ்சுது.

அடுத்தாப்ல வலது கையி்ல உள்ள
நாலு வெரலை
வைக்கச்சொன்னாவொ.

சரியா ரேகை தெரியல.
அந்த கண்ணாடிய அவொ 
வச்சிருந்த கைக்குட்டையால
தொடச்சுட்டு திரும்ப
வெரலை வைக்க சொன்னாவொ.

அப்பவும் ரேகை சரியா தெரியல.

வெரல்களை
மொகத்துல நல்ல தடவிட்டு திரும்ப
வைக்கச்சொன்னாவொ.

இந்த தடவை ஓரளவு தெரிஞ்சுது.

அடுத்தாப்புல இரண்டு கைகளோட
பெருவிரல்களை சேந்தமாதிரி
கண்ணாடி மேல வைய்க்கச் சொன்னாவொ.

ரெண்டு தடவை வச்சுப்பாத்தும்
சரியா வரல.

மூணாவது தடவை
சரியா வந்துட்டுன்னு சொன்னாவொ.

ஒடனே ஒரு ஒயரை
களத்திப்போட்டுட்டு
இன்னோரு ஒயரை
லேப்டாப்புல மாத்துனாவொ.

ஒடனே ஒரு பேப்பரை
வச்சு அச்சடிக்க ஒரு
பட்டனை தட்டுனாவொ.

ஒரு காயிதத்துல என்னோட
வெவரம் அச்சாயி வந்துச்சு.

இப்பந்தான் தெரிஞ்சுச்சு
அவொள்லாம் ஏன் எரிஞ்சுவிளுதாவொன்னு.

பின்ன இவ்வளவு பாடு படுத்துனா
அவொளும் கோபப்படாம என்ன
பண்ணுவாவொ.

அடுத்தாப்ல ஒரு முப்பது ரூபாய்
கேட்டாவொ.

கொடுத்தேன்.

என்னைமாதிரியே எல்லாரும்
முப்பது ரூபாய் கொடுத்தாவொ.

ஆனா ஆதார்கார்டு எடுக்கிறது
இலவசம்னு அரசாங்கம்
சொல்லுது.

ஆனா நடைமுறையில
அப்பிடி இல்லை.

நான் மட்டுமா
கொடுத்தேன்
எல்லாரும் தான்
கொடுத்தாவொங்கிறதுல
எனக்கு சந்தோஷந்தான்.

ஆதார் பிரச்சினையில
நான் புரிஞ்சிக்கிட்டது...

விரல்களை வைக்கும்
கண்ணாடி அட்டை
அழுக்குப்படிஞ்சும்
தூசி படிஞ்சும் இருப்பதும்
அதை மீண்டும் ஒரு அழுக்கு
துணியை வச்சே தொடய்க்கிறதும்
தான் ரேகையை சரியா
பதிவு பண்ணாம போறதுக்கு
காரணம்.

ஏன் முப்பது ரூபாய்
வாங்குனாவொங்கிறதும்
தெரியல.
அரசாங்கத்துக்குத்தான் போய்ச்சேருதுன்னா
சந்தோஷம் தான்..

ரசீது இல்லங்கிறதால
யாரோ ஒரு மகானுக்குதான்
போவுதுன்னு நெனய்க்கேன்.

நீங்க எப்படி நெனைய்க்கேளோ?

Tuesday, 26 September 2017

LIC 61

இசக்கி: அண்ணாச்சி எல்ஐசி தொடங்கி 61 வருடங்கள் முடிந்துவிட்டன. எல்ஐசி  தொடங்கியது பற்றி கொஞ்சம் விபரமாக சொல்லுங்க அண்ணாச்சி.

ஆறுமுகம்: சொன்னால் போச்சு.1956 ம்வருடம் செப்டம்பர் முதல்நாள். மும்பையில் உள்ள
ஓரியண்டல் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள
கூட்ட அரங்கில் ஐ.சி.எஸ் அதிகாரியான திரு எச்.எம்.பட்டேல் அவர்கள்
தலைமையில் 15 நபர்களால்
எல்ஐசி ஆப் இந்தியா என்ற மாபெரும் நிறுவனத்தின்  துவக்க விழா வைபவம் எளிமையாக நடத்தப்பட்டது.

இசக்கி: ஆரவாரம்எல்லாம் இல்லாமல் எளிமையாகவா விழா நடத்தப்பட்டது?

ஆறுமுகம்: ஆம். எளிமையாகத்தான் நடைபெற்றது.

மைய அலுவலகம்
மும்பையில் என
தீர்மானிக்கப்பட்டது.

முதலில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட
வரைவில் நான்கு மண்டலங்கள் என கூறப்பட்டிருந்தது.

ஆனால்  இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு  குழுவினர் நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்கள் என திருத்தியமைத்தார்கள்.

இதன்படி தில்லியை தலைமையிடமாகக்கொண்டு
வடக்கு மண்டலம்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மேற்குமண்டலம்.

சென்னையை தலைமையகமாகக்கொண்டு தென் மண்டலம்.

கொல்கத்தாவை தலைமையிடமாகக்கொண்டு கிழக்கு மண்டலம்.

கான்பூரை தலைமையிடமாகக்கொண்டு
மத்திய மண்டலம்.

இப்படியாக ஐந்து மண்டலங்கள் அமைக்கப்பட்டன.

இசக்கி: அண்ணாச்சி கோட்ட அலுவலகம் கிளை அலுவலகம் எப்படி அமைக்கப்பட்டன?

ஆறுமுகம்: சொல்கிறேன்..
24 கிளைகளுடன் 4 கோட்டங்கள் வடக்கு மண்டலத்தில்.

37 கிளைகளுடன் 8 கோட்டங்கள்
மேற்கு மண்டலத்தில்.

43 கிளைகளுடன் 8 கோட்டங்கள்
தெற்கு மண்டலத்தில்.

47 கிளைகளுடன் 8 கோட்டங்கள்
கிழக்கு மண்டலத்தில்.

29 கிளைகளுடன் 5 கோட்டங்கள்
மத்திய மண்டலத்தில்.

ஆக மொத்தம் 5 மண்டலங்களில்
33 கோட்டங்களுக்குக்கீழ் 180 கிளை அலுவலங்கள்.

அதற்குப்பிறகு நிர்வாக மேம்பாட்டிற்காக தென் மண்டலம் இரண்டாக  பிரிக்கப்பட்டு ஆந்திராவிற்கும் கர்நாடகாவிற்கு மென ஹைதராபாத்தில் தென்மத்திய மண்டலம் என்ற பெயரில் ஆறாவதாக ஒரு மண்டலம் ஜூன் 1990ல் உதயமானது.

1992ல் மத்திய மண்டலம் இரண்டாகப்பிரிக்கப்பட்டு
மத்திய மண்டலத்திற்கு போபாலை
தலமையிடமாக வைத்துக்கொண்டு புதிதாக வடக்கு மத்திய மண்டலம் என்ற
ஏழாவது மண்டலம் கான்பூரை தலைமையிடமாகக்கொண்டு
துவங்கப்பட்டது.

2007 செப்டம்பரில் கிழக்கு
மண்டலம் இரண்டாகப்பிரிக்கப்பட்டு
கிழக்கு மத்திய மண்டலம்
பாட்னாவை
தலைமையிடமாகக்கொண்டு
எட்டாவது மண்டலமாக
செயல்படத் தொடங்கியது.

இப்போது தென்மண்டலம்
தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.

இசக்கி: அண்ணாச்சி ..நம்ம தெற்கு மண்டலம் பற்றி கூடுதல் விளக்கத்தோடு சொல்லுங்க.

2.
இசக்கி: அண்ணாச்சி போன வேலை நல்லபடியாக முடிந்ததா?

ஆறுமுகம்.: முடிந்தது தம்பி.

இசக்கி: தென்மண்டலத்தை பற்றி
நல்ல விளக்கமாக சொல்லுங்க அண்ணாச்சி.

ஆறுமுகம்: சொல்கிறேன் தம்பி.
1956 செப்டம்பர் முதல் நாள் துவங்கிய தென்மண்டத்திற்கு
சென்னை தான் தலைமையிடம்.

அப்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும்  கர்னாடகா மாநிலங்களின் பகுதி முழுமைக்கும் தென்மண்டலந்தான்.

ஆந்திராவில் ஹைதராபாத், மசூலிபட்டணம் என இரண்டு கோட்டங்கள்.

கர்னாடகாவில் பெங்களூர், உடுப்பி என இரண்டு
கோட்டங்கள்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை,மதுரை என மூன்று கோட்டங்கள்.

கேரளத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு கோட்டம்.
ஆக மொத்தம் 8 கோட்டங்கள்.

இசக்கி: கேரளா முழுவதற்கும்
திருவனந்த புரம் மட்டும் தானா?

ஆறுமுகம்: அப்படி இல்லை.. கேரளத்தின் தென்பகுதி திருவனந்தபுரம் கோட்டமாக இருந்தது.
வடபகுதி கோவைக்கோட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தது..

இசக்கி: மாநிலங்களை பொறுத்து கோட்டங்கள் அப்போது இல்லையா?

ஆறுமுகம்: இல்லை. ஆந்திராவின்
நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டப்பகுதிகள் சென்னைக்கோட்டத்துடன் இருந்தன.

கர்னாடகத்தின் ரெய்ச்சூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்கள் ஹைதராபாத் கோட்டத்துடன் இருந்தன.

இசக்கி: துவக்க காலத்தில்
அப்போதைய மண்டல எல்கைக்குள்
எங்கெல்லாம் கிளைகள் இருந்தன.

ஆறுமுகம்: தமிழ்நாட்டில் சென்னையில் ஆறு நகரக்கிளைகள் , வேலூர்,
திருச்சி, தஞ்சாவூர்,நாகப்பட்டினம், காரைக்குடி,மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி,கோயம்புத்தூர்,ஈரோடு மற்றும் சேலம்.

கேரளத்தில்
திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் மற்றும்  கோழிக்கோடு என

மண்டலத்தில் 21 இடங்களில் கிளை அலுவலகங்கள் இருந்தன.

கரூர், திண்டுக்கல், நாகர்கோவில்,ஊட்டி,
தர்மபுரி,
கண்ணூர்,திருச்சூர் என 7 இடங்களில் சப்ஆஃபீஸ்கள்
இருந்தன.

முதலில் தமிழ்நாட்டில் இருந்த மூன்று கோட்டங்களில் மதுரையிலிருந்து பிரித்து தஞ்சாவூர் கோட்டம் துவங்கப்பட்டது.

அதன் பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து  பிரிக்கப்பட்டு எர்ணாகுளம் கோட்டமும்,

கோவையிலிருந்து பிரிக்கப்பட்டு கோழிக்கோடு கோட்டமும்

சென்னையிலிருந்து பிரிக்கப்பட்டு
வேலூர் கோட்டமும்,

சென்னை இரண்டு கோட்டமும்,

கோவையிலிருந்து பிரிக்கப்பட்டு
சேலம் கோட்டமும்,

மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு
திருநெல்வேலி கோட்டமும்,
திருவனந்தபுரத்திலிருந்து கொஞ்சமும் எர்ணாகுளத்திலிருந்து கொஞ்சமும் பிரிக்கப்பட்டு கோட்டயம் கோட்டமும்,
எர்ணாகுளத்திலிருந்து பிரிக்கப்பட்டு திருச்சூர் கோட்டமும்
உருவாக்கப்பட்டன.

இசக்கி: இப்போது தென்மண்டலத்தில் எத்தனை கோட்டங்கள், கிளை அலுவலகங்கள் உள்ளன அண்ணாச்சி.

ஆறுமுகம்: இப்போது தமிழ்நாட்டில் எட்டு கோட்டங்கள்
கேரளத்தில் ஐந்துகோட்டங்கள் என ஆக மொத்தம் 13 கோட்டங்கள், 261 கிளைகள் , 260 துணைக்கிளைகள், 198 மினி அலுவலங்கள் என்று வளர்ந்திருக்கிறது.

261 கிளைகளில் 137 கிளைகள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன.

தேசியமயமாக்கத்தின் போது
யுனைட்டட் இந்தியா நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க பதினான்கு மாடிக்கட்டடம் எல்ஐசியின் சொத்தாகமாறியது.

சென்னை, கோவை, திருச்சியில் யுனைட்டட் இந்தியா நிறுவனங்களிடமிருந்து வந்த கட்டி டங்கள் , சென்னை பாம்பே மியூச்சுவல் கட்டிடம், அண்ணாசாலை இந்தியன் மியூச்சுவல் கட்டிடம்,
பாரத் இன்ஷ்யூரன்ஸ் கட்டிடம்,
மதுரை ஓரியண்டல்
எல்லாம் நமது நிறுவனத்திற்கு கிடைத்தவை.

தூத்துக்குடியிலும் நெல்லையிலும் இப்போது கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடம்
பாரதமாதா நிறுவனத்திடமிருந்தும்
திருநெல்வேலி டயோசிசன் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்தும்
கிடைத்தவை.

இசக்கி: ஆறுமுகம் அண்ணாச்சி நிறைய தகவல் சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி.

சாயம் வெளுத்திரும்.

சும்மா போனவன
வம்புக்கு கூப்புட்டு
இந்த  எசக்கி பயா ஏங்கிட்ட
"யோவ்..சொடல..

இன்னக்கி பேப்பர
பாத்தேராவே...

நம்ம மொதலமைச்சரு
சேக்காளி மந்திரிமாரோட
மயிலாடுதுறையில
காவிரியில குளிச்சாவொளாமே
படிச்சேராவே" ன்னு
கேட்டான்.

"படிக்காம இருப்பேனால...
எல்லா பேப்பர்காரனுவனும்
அந்த படத்தைத்தான
போட்டுருக்கானுவொ" ன்னு
பதிலு சொன்னேன்.

அப்பவும் எசக்கிப்பயா
என்ன விடல.

"நம்ம பொறுப்பு ராவு
அங்க ஏன் குளிக்கலன்னு
ஒமக்கு தெரியுமாவே" ன்னு
குசும்பா கேட்டான்.

"நான் என்ன
எளவை கண்டேன்.
ஒருவேளை அவொளுக்கு
பம்பாயில வேற வேல
எதாவது இருந்திருக்கலாம்.

நீ என்னடே நெனய்க்கேன்னு
சும்மா சொல்லுடே"ன்னு
கேட்டேன்.

அதுக்கு இந்த எசக்கி
பயா..

"போரும்வே கூ முட்டை...

அவொ  மட்டும்
குளிச்சிருந்தாவொன்னா
மேக்கப்பு, மீசை மை
இதுல்லாம் தண்ணியில கரைஞ்சி போயிருக்கும்..
சாயம் வெளுத்திருக்கும்

அதுக்கு பொறவு
அவொள ஒருத்தனுக்கும்
அடையாளம் தெரியாம
போயிருக்கும்.

நல்ல வேள அவொ
குளிக்க வரலே
இது புரியாம
நீரு என்னத்தவே
கிளிய்க்கேரு" ன்னு
வெளக்கஞ்சொன்னான்.

எம்புட்டு ஆராய்ச்சி
பண்ணியிருக்கான்
இந்த எசக்கி பயா..??
பாத்தேளாய்யா?

ஆதார் ஆதரவு இல்லை

இரண்டு இடங்களில்
முடியாமல் போய்விட்ட
BSNL கைபேசி எண்ணுடன்
ஆதார் இணைப்பிற்காக
இன்று திருச்சி மேல அரண்
சாலையில்
சிங்காரத்தோப்பு
பகுதியில் உள்ள
BSNL அலுவலகத்தின்
வாடிக்கையாளர்
சேவை மையம்
சென்றிருந்தேன்.

அங்கிருந்த ஊழியர் /அலுவலர்
திரு வேல்முருகன்
அன்புடன் வரவேற்று
பணியைத்தொடங்கினார்.

ஆட்காட்டி விரலை
ரேகை பதியும்
பட்டையில் வைத்தேன்.

அது ஒத்துவரவில்லை.
அடுத்து நடுவிரல்.
அதிலும் தோல்வியே.
அடுத்து பெருவிரல்.
அதே முடிவுதான்.

அந்த அலுவலர்
கொஞ்சம் கூட

அசரவில்லை.
சிடுசிடுக்கவில்லை.
கடுகடுப்பாக
பேசவில்லை.

மாறாக புன்முறுவலுடன்
வேறு விரல்களையும்
பார்த்துவிடலாம் என
பொறுமையாக பேசினார்.

மோதிர விரல் ரேகையும்
ஒத்துப்போகவில்லை.
சுண்டு விரலும்
ஏமாற்றியது.

அடுத்தபடியாக
இடது கையின்
விரல்களையும் வைத்து
முயன்று பார்த்தார்.

முடிவு என்னவோ
ஏமாற்றம்தான்..

கருவியையும்
குற்றம் சொல்லமுடியாது.
ஏனென்றால் பிறருக்கு
விரல் களை ஆராய்ந்து
ரேகைகள் ஒத்துப்போகும்
தகவலை  உறுதி செய்தது.

எங்கு குழப்பம்
என்பதை என்னால்
அறிந்துகொள்ள
முடியவில்லை.

இருந்தாலும் அந்த
BSNL அலுவலர்
திரு பாலமுருகன்
அவர்களின்
கனிவான பேச்சும்,
மென்மையான பணியும்
வாடிக்கையாளரிடம்
வெளிப்படுத்திய
கரிசனமும்
போற்றுதற்குரியது.

இந்த ஆதார் சிக்கலை
நான் வரும் நாட்களில்
சரிசெய்தாகவேண்டும்.

நாளை ஆதார்மையம்
சென்று ரேகைகளை
சரியாக்கவேண்டும்.

என்ன
ரேகை
படப்பிடிப்போ?

என்ன
ஒப்பிட்டுப்பார்த்தலோ?

என்னைப்போல்
எத்தனை லட்சம்பேரோ.?

நந்தன் நில்கேனிக்கே
வெளிச்சம்.