பரிவு…பாசம்..எளிமை…
2012 வாக்கில் ஒரு முறை நான் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணித்தேன். 72 இருக்கைகள் உள்ள ATR - 72 வகை சிறிய விமானம். ஒவ்வொரு வரிசையிலும், வலப்பக்கம் இரண்டு , இடப் பக்கம் இரண்டு , என்று வரிசைக்கு நான்கு இருக்கைகள் மட்டும் தான்.
எனது பக்கத்தில், ஜன்னல் ஓரம் இருந்த இருக்கையில், முன்னாள் தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மைய அரசின் முன்னாள் அமைச்சரும், இப்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு திருநாவுக்கரசர் அவர்கள் அமர்ந்து இருந்தார்கள்.
பயணிகள் அனைவரும் உள்ளே ஏறி வந்து விட்டாலும், ஏதோ சில காரணஙகளுக்காக விமானம் புறப்பட நீண்ட தாமதமாகியது. விமானத்தின் உள்ளேயே முக்கால் மணி நேரமாவது இருக்க வேண்டியிருந்தது. அருகிலிருந்த அரசியல் தலைவரிடம் நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசத் துவங்கினேன்.
அவர் PUC படித்த பாளை தூய சவேரியார் கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்றும், மாணவர் மன்றத்தில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன் என்றும் கூறினேன். இதைக் கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். எங்கள் கல்லூரியில் அவருடன் படித்த அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர் திரு V.T. திருமலையப்பன் அவர்கள் எனக்கும் நல்லதொரு நண்பர் என்று கூறினேன்.
அறந்தாங்கி தொகுதியில் அவர் முதன் முறை தேர்தல் களம் காணும் போது, அவருக்கு நம்பிக்கையாக உடன் நின்றவர் திரு V.T. திருமலையப்பன் அவர்கள் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த தகவலை அவரிடம் தெரிவித்தபோது மனிதர் அதிசயப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு தனுஷ்கோடி ஆதித்தன் அவர்களும், மாநிலங்களவை உறுப்பினராக பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதிமுக வின் திரு சௌந்தர் ராஜனும் எனக்கு நல்ல அறிமுகம் என்றேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர்.பி.ஆதித்தன் என் வகுப்புத் தோழன் என்றேன். ஆர்வமுடன் அனைத்தையும் கேட்டுவந்தார்.
அவர் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த காலம். அப்போது சிமெண்ட் மிகவும் தட்டுப்பாடாய் இருந்தது. 1983 வாக்கில், அவரது முன் முயற்சியால், தட்டுப்பாட்டை சமாளிக்க, கொரிய நாட்டிலிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்ய ஏற்பாடாகி இருந்தது. தேவைப்படுவோர் முன் கூட்டியே DD வாங்கி விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்கவேண்டும். விண்ணப்பதோடு கட்டுமானம் நடப்பது குறித்து சில ஆவணங்களை யும் இணைக்க வேண்டும்.
ஒரு லாரி லோடு சிமண்ட் வாங்க, நானும் ரூ 10000க்கு DD வாங்கி கொண்டு சென்னை சென்றேன். அண்ணா சாலை தேவநேயப்பாவாணர் கட்டடத்தில் செயல் பட்டு வந்த தமிழ் நாடு தொழிற் கழக அலுவலகத்தில் கொடுத்து சிமெண்ட் வாங்கிக்கொள்வதற்கான உத்தரவு வாங்கினேன். தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வரும் சிமெண்டை அங்கேயிருந்து நேரடியாக இறக்கி லாரிகளில் கொண்டு செல்லலாம். இந்த உத்தரவைக் காண்பித்து, ஒரு லாரியில் சிமெண்ட் மூட்டைகளை அங்கிருந்து ஏற்றி பாளைக்கு கொண்டு வந்தேன். அந்த தரமான சிமெண்டினால் தான் புதிய வீட்டின் கட்டிட வேலைகளை முடித்தேன். இந்த தகவலையும் அவரிடம் பகிர்ந்தேன்.
மக்களுடன் அவருக்கிருந்த நேரடித் தொடர்பு குறித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். அந்த உறவு தான் அவரை பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற வைத்தது என்ற உண்மையை நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறினேன். கேட்டு மகிழ்ந்தார். அறந்தாங்கி சட்ட மன்ற எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுக துக்கங்களில் அவர் பங்கு பெற்று வந்தது குறித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
அவரது தொகுதியில் வசித்த எனது LIC நண்பர் ஒருவரின் பெயரைக் கூறி அவர் அங்கு கட்டாத வீடு ஒன்றிற்கு புதுமனை புகு விழா அழைப்பிதழ் அட்டை அடித்து அவரிடம் கொடுத்ததையும், அதற்கு அவர் 500 ரூபாயை ஒரு கவரில் வைத்து அன்பளிப்பாக கொடுத்ததையும் கூறினேன். அப்போது அவர் மெலிதாக புன்னகைத்தார்.
அரசியலில் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் LIC யில் உயர் அலுவலராக எப்படி என்றெல்லாம் கேட்டார். வேறு பல நாட்டு நடப்புகள் பற்றியும் விவாதித்தார். நானும் அவரது அரசியல் அனுபவங்கள், வெற்றி தோல்விகள், அவர் பெற்ற ஏற்றங்கள், ஏமாற்றங்கள், குறித்து விசாரித்தேன். அவருக்கு சங்கடம் தரும் கேள்விகளை கேட்கவில்லை. பல கேள்விகளுக்கு முழுமையாக பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு புன் முறுவலை மற்றும் பதிலாகத் தந்தார். இப்படி பல செய்திகளையும் அலசி ஆராய்ந்தோம்.
மதுரை வரும் வரை, ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பொழுது போவதே தெரியாமல் பேசி மகிழ்ந்தோம். பயணம் முடியக் கூடிய நேரம் நெருங்கியதும், சென்னை ஷெனாய் நகரில் தான் வீடு உள்ளது என்றார். அவரது இல்லத்திற்கு ஒருமுறை கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும் என்று மிகுந்த பாசத்துடன் அழைத்தார். நான் 2013 ஜனவரி இறுதியில், பணி நிறைவு பெற்றதும், சென்னையை விட்டு உடனே திருச்சிக்கு வந்து விட்டதால், அவரது அன்பு அழப்பை நிறைவேற்ற இயலவில்லை. நான் தான் அந்த அரிய பொன்னான வாய்ப்பை பயன் படுத்தத் தவறி விட்டேன்.
இவரது பரிவு, பாசம், மற்றவர்களை மதிக்கும் பண்பு, அனைத்திற்கும் மேலாக இவரது எளிமை… இவை தான் இவரது வெற்றிக்கு அடித்தளம் என்பதை உணர்வு பூர்மாக உணர்ந்து கொண்டேன். இந்த பயண அனுபவத்தைப் பற்றியும், திரு திருநாவுக்கரசர் அவர்களின் எளிமை பற்றியம் என்னுடைய சக அலுவலர் ஒருவரிடம் பகிர்ந்து , வியந்து மகிழ்ந்தேன். நண்பரும் அவருடைய பயண அனுபவம் ஒன்றை என்னிடம் கூறினார்.
ஒரு தடவை, அப்போது மைய அரசில் மிக முக்கிய துறையில் அமைச்சராக இருந்த தமிழ் நாட்டுக் காரர் ஒருவர் விமான பயணத்தின் போது நண்பருக்கு முன் இருக்கையில் அமர்ந்து வந்தாராம். யாருடனும் எதுவும் பேச வில்லையாம். தலை நிமிர்ந்து கூட யாருடைய முகத்தையும் பார்க்க வில்லையாம். இறுகிய முகத்துடன் தான் இருந்தாராம். இறங்கிப் போகும் போது கூட குனிந்த தலை நிமிராமல் தான் சென்றாரம். அவர் நடந்து கொண்ட முறை, தன்னடக்கத்தினால் அல்ல என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
அவரும் என்னைப்போலவே இந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தாராம். அமைச்சரைப் பார்த்ததில் மகிழ்ச்சியாம்.. மீண்டும் எண்ணிப் பார்த்தாராம். முடிவை மாற்றிக் கொண்டாராம். அவரது அணுகு முறை பற்றி மிகவும் வருந்தினாராம்.
மீண்டும் எண்ணிப் பார்த்தால் முடிவு மாறுமோ?
அரசியல் சார்பு எதுவுமின்றி சொல்கிறேன். திரு திருநாவுக்கரசர் போல் மக்களோடு மக்களாக பழகுபவர்கள் மட்டுமே எந்த நிலையிலும் மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு நிலையிலும் தாழ்ந்து போக மாட்டார்கள். இது தான் மக்கள் தலைவர்களின் வெற்றி ரகசியம்.
- ப.இசக்கிராஜன்.