நான் 1992-94 ல்
புண்ணிய நகரமான
திருச்செந்தூர் கிளையில்
கிளை மேலாளர்.
எனது பதவிக்காலத்தில்
கிளை இரண்டாகப்பிரிந்தது.
அக்டோபர் மாதம்
ஒரு நல்லநாளில்
ஸ்ரீவைகுண்டத்தில்
புதிய கிளை
துவக்கிவைக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தை
தனிக்குடித்தனம்
வைத்தபிறகு திருச்செந்தூர்
சிறிய கிளையாகிவிட்டது.
123 முகவர்கள் மட்டுமே
எங்களிடம்.
1994ல்
நான் மாற்றலாகிச்
செல்லும்போது
225 முகவர்கள்.
அனைத்து
முகவர்களின்
இல்லங்களும்
எனக்குத் தெரியும்.
அவர்கள் பற்றிய
எல்லா விவரங்களும்
எப்போதும் என்
விரல் நுனிகளில்.
அவர்களோடு எப்போதும்
நல்ல நெருக்கமான
உறவு.
சிற்றூர்களில் இருக்கும்
முகவர்கள் அனைவரும்
நம் மீது பாசத்தை
பொழிவார்கள்.
திருச்செந்தூருக்கு அருகே
நடுநாலு மூலைக்கிணறு
என்ற ஒரு சிற்றூர்.
அங்கு பாலசுப்பிரமணியன்
என்ற கிராமிய தொழிற்முறை
முகவர் ஒருவர்.
அவரது முகவர்
அடையாள எண்..7005-74B.
இன்றைய வடக்கு மண்டல மேலாளர்
திரு குமார் சார் அவர்கள்
கிளைமேலாளராக இருந்தபோது
முகவராக நியமனமானவர்.
இவரை முகவர் பணியில்
அமர்த்திய வளர்ச்சி அலுவலர்
திரு ஆனா.கூனா என்பவர்.
அவர் மதுரைக்கு
மாற்றலாகிச்சென்றதும்
நேரடி முகவராக
தொடர்ந்தார்.
திரு அண்ணாத்துரை என்ற
(அடையாள எண்..777-75)
புதிய வளர்ச்சி அலுவலரோடு
இவரை இணைத்துவிட்டேன்.
அவருக்கு சைக்கிள் ஒன்று
இருந்தால் வணிகத்திற்கு
நல்ல வாய்ப்பாக இருக்கும்
என்று நினைத்தேன்.
அவர் புதிய சைக்கிள்
வாங்கி வணிகத்திற்கு
பயன்படுத்த
வட்டியில்லாத
முன் பணம் கொடுக்க
அனுமதி அளித்தேன்.
சைக்கிளும் வாங்கினார்.
வாங்கிய சைக்கிளை
அவர் அப்படியே
பயன்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அவரோ
அந்த சைக்கிளின்
செயின் கவரில்
" எல்ஐசியின்
நிதியுதவியால்
வாங்கியது "
என்று பெயிண்டால்
எழுதிவைத்தார்.
கடன் வாங்கி
வாங்கிய வண்டி என்பதை
மரியாதைக்குறைவாக
நினைக்காமல்
"எல்ஐசியின் பிரதிநிதி"
என்று பெருமையுடன் ஒரு
அங்கீகாரம் தேடி தனது
வணிக வளர்ச்சிக்கு
பயன்படுத்தினார்.
சனிக்கிழமை தோறும்
வளர்ச்சி அலுவலர்
திரு அண்ணாத்துரையுடன்
வணிக சுற்றுப்பயணம்
மேற்கொள்வேன்.
ஒருநாள் இந்த
பாலசுப்பிரமணியன்
என்னிடம் வந்து
" மேலாளர் ஐயா..
என் வீடு சிறிய வீடு.
உங்களை என்
வீட்டிற்கு உள்ளே
வரவழைத்து உபசரிக்க
வசதிகள் இல்லை.
ஆனாலும்....
உங்களது ஒவ்வொரு
பயணத்தின் போதும்
எனது சிற்றூருக்கு
கண்டிப்பாக வாருங்கள்.
உங்கள் அம்பாசிட்டரை
அருகிலுள்ள
பொது மைதானத்து
மரநிழலில் நிறுத்துங்கள்.
பிறகு எனது வீ்டு
வரைவாருங்கள்.
உங்கள் வருகையை
எனக்குத்
தெரியப்படுத்துங்கள்.
உங்களோடு நானும்
கார் நிறுத்தப்பட்டிருக்கும்
மைதானம் வரை
நடந்து வருகிறேன்.
என்னுடன் ஒரு
ஐந்து நிமிடம் மட்டும்
நன்றாகப்பேசி விட்டு
திரும்பிப்போங்க.
எனக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.
எனது சிற்றூரில்
நான் பெரிய
எல்ஐசி முகவர்
என்ற நன்மதிப்பு
எனக்குக் கிடைக்கும்.
மக்கள் என்னை
உறுதியாக நம்புவார்கள்.
நானும் எனது வணிகத்தை
பெருக்கிக்கொள்வேன்.
ஏற்கனவே எல்ஐசி
முத்திரை பதித்த
சைக்கிள் என்மீது
நல்ல நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது."
என்று கூறினார்.
முகவர் விருப்பப்படியே
சனிக்கிழமை தோறும்
அவர் இல்லம் செல்வோம்.
அப்போதே அவருக்கு
அடுத்தடுத்து நான்கு
குழந்தைச்செல்வங்கள்.
முகவர்களுக்கு
"உங்களால் முடியும்"
"உங்களாலும் முடியும்"
"உங்களால் மட்டுமே முடியும்"
என்பன போன்று பல
உற்சாகந்தரும்
வரிகளை
15 பைசா செலவில்
அஞ்சலட்டையில்
நான் வாரந்தோறும்
எழுதி அனுப்புவது
வழக்கம்.
முகவரின் மூத்தபையன்
இந்த அஞ்சலட்டைகளை
கவனமாக படித்திருக்கிறான்.
நான் முகவரின் வீட்டை
நெருங்கியதுமே
"உங்களால் முடியும்" சார்
வந்திருக்காங்க என்று
உரக்க ஒலித்துக்கொண்டே
உள்ளே ஓடுவான்.
முகவர் மகிழ்ச்சியுடன்
வெளியே வருவார்.
மரத்தடிக்கு திரும்பி
வருவோம்..
மரத்தடியில் நின்று
சிறிது நேரம்
பேசி விட்டுச்செல்வது
வாடிக்கையாகிப்போனது.
எங்களின் இந்த செயல்
முகவருக்கு செல்வாக்கை
உயர்த்த உதவியது.
முகவரும் வணிகத்தில்
கொடிகட்டிப் பறந்தார்.
நான்கு ஆண்குழந்தைகள்.
இரண்டு பெண்குந்தைகள்.
இவர்களை வளர்த்து
ஆளாக்கி உயர்த்த
உதவியது எல்ஐசி தான்
என்று நம்பி மகிழ்கிறார்.
சைக்கிள் வாங்கியது
வணிக வளர்ச்சியில்
தனக்கு ஒரு திருப்புமுனை
என்று நினைக்கிறார்.
வாடிக்கையாளருக்கு
முகவரைத்தான்
நன்றாகத்தெரியும்.
அவர் சொல்வதைத்தான்
வாடிக்கையாளர்
கேட்கப்போகிறார்.
இது முகவருக்கு
நன்றாகத்தெரியும்.
இருந்தாலும் தனக்கு
ஒரு ஆங்கீகாரம் வேண்டும்,
தன்மீது நம்பகத்தன்மை
ஏற்படவேண்டும்,
என்பதற்காகவே
எல்ஐசி அலுவலர்கள்
அருகிலிருக்கவேண்டும்
என்று முகவர்
நினைக்கிறார்.
இது முற்றிலும்
உண்மைதானே.
எங்கெல்லாம்
கிளை அலுவலர்கள்
முகவர்களுக்கு
அங்கீகாரத்தையும்,
பெருமையையும்
பெற்றுத்தருகிறார்களே
அங்கெல்லாம் வணிகம்
மழையாய் கொட்டும்.
கிளையின் வளர்ச்சி
எப்போதும் உச்சத்திலேயே
இருக்கும்.
எல்லோருமே வளர்ந்து
உயரலாம்.
எல்ஐசிக்கு
முகவரே முகவரி.
முகவருக்கும்
எல்ஐசியே முகவரி