நான் சாவாசமா
ஒக்காந்து இருந்தேன்.
அப்ப பாத்து இந்த எசக்கி பயா
என்ன பாக்காத்து மாதிரி
ஒளிஞ்சு போறத பாத்தேன் ..
"ஏல எசக்கி ...
எங்கல போயிட்டு வார
ஆளை பாத்தா
அசந்துபோய் இருக்க .."
"அதெல்லாம் ஒண்ணும்
இல்லவே சொடல
சும்மா காலாற
நடந்துட்டு வாரம்யா"
"சரிடே ..
இந்த பட்ஜெட்டை பத்தி
ஊருக்குள்ள என்னடே
பேசுதானுவொ .."
"ஆமா சொல்லுதானுவ..
சோத்துக்கு உப்பில்லைன்னு .
நானே அடுத்தவேளை காப்பிக்கு
கையில தம்பிடி இல்லாம
தள்ளாடுதேன்.
ஏங்கிட்ட போயி
பட்ஜெட்டை பத்தி
கேக்கேரு.
ஒமக்கு நல்ல ஏத்தம்வே"
"ஏல எசக்கி ...
என்ன..
விட்டாஒரேயடியா
கொப்புல ஏறுத.
அப்புடி என்ன நான்
கேட்டுட்டமின்னு
இப்படி குதிக்க.."
"யோவ் சொடல...
சரிய்யா..சரிய்யா
கோவப்படாதேரும்.
நம்மமாதிரி
ஆளுவொளுக்கு பட்ஜெட்ல
ஆதாயம் ஒண்ணுமே
இல்லயேங்கிற
ஆதங்கத்தை ஒம்ம கிட்ட
காட்டிட்டம்யா..
மனசுல ஒண்ணும்
வச்சுக்காதேரும்யா.."
"ஏல நம்ம ஜேட்லியும் சரி
சீனா தானாவும் சரி
நெறைய வெஷயம்
தெரிஞ்சவொ.
வருமானத்தை
பெருக்கதுக்கு
எவன ஓய்க்கணும்...
எவனுக்கு
ஒதவி பண்ணனும்...
இதையெல்லாம்
நல்ல தெரிஞ்சவொ.
அதுவும் இந்த ஜேட்லி
இருக்கார அவரு
ரொம்ப ரொம்ப
நல்லவருடே."
"அவொள்ளாம் வெளிநாட்ல
படிச்ச மேதாவிகள்லா..
ஆனா ஊர்ல உள்ள
எல்லாப்பயலுவளும்
இந்த ஜேட்லிய
ஏசிக்கிட்டிருக்கானுவொ..
நீருமட்டும் எப்பிடிவே அவரை
நல்லவருங்கேரு.
அதுவும்
ரொம்ப ரொம்ப
நல்லவருங்கேரு"
"இதை நான்
நேரடியாச் சொன்னம்னா
ஓம் மரமண்டைக்கில்லாம்
நல்ல ஏறாதுல.
அதுனால நடந்த
ஒரு சங்கதியை
பத்திசொல்லிட்டு
பொறவு நம்ம
வெஷயத்துக்கு வாறேன்.
நான் பட்டணத்துல
வேல பாக்கும்போது
ஆபீஸ் சார்பா
ஒரு பெரிய
ஏஜெண்டு கூட்டத்தை
அங்க உள்ள மிகப்பெரிய
ஓட்டல் ஒண்ணுல
நடத்தவேண்டியதாப்போச்சு.
நானும்
சிரில்பாபு ங்குற ஆளும்தான்
அங்க இங்க விசாரிச்சு
கடேசில
வடபழனியில உள்ள
ஓரு பெரிய ஓட்டல்ல
கூட்டத்தை நடத்த
ஏற்பாடு பண்ணுனோம்.
பெரிய ஏ.சி ஹாலு.
அதுல வச்சு தாம்
கூட்டம் நடந்துச்சு.
தமிழ்நாடு கேரளாவில இருந்து
ஒரு 600 பேரு கூட்டமா
கலந்துகிட்டாவொ.
ஹாலுக்கு வாடகை
கெடையாது ன்னுட்டாவொ.
ஆனா சாப்பாட்டுக்கும்
டீ பிஸ்கட்டுக்கும் சேத்து
தலை ஒண்ணுக்கு
400 ரூவா மட்டும்
கொடுத்தாபோதும்னு
சொல்லிட்டாவொ.
அந்த கூட்டத்துல
கலந்துகிட்டு
பேசுததுக்காகவே
பம்பாயிலிருந்து சேர்மன்
வந்திருந்தாவொ.
காலையில
ஏரோப்ளேன்லவந்துட்டு
சாயங்காலம் ஆறுமணி பிளேன்ல
திரும்பிப் போயிட்டாவொ.
ஓட்டலுக்கு வந்தபொறவு
சேர்மன் ஐயா
மொகம் களுவவும்
மத்தியான
சாப்பாட்டுக்குபொறவு
கொஞ்சநேரம் சாவாசமா
இருக்கதுக்கும்
ஒருரூம் போட
நெனச்சோம்.
இந்த சேதிய சொன்னதும்
ஓட்டல்மேனேஜரு
ஐயா ஒங்க எல்ஐசிசேர்மன்
எங்க ஓட்டலுக்கு வந்து போறது
எங்களுக்கு எவ்வளவு
பெரிய பெருமை.
அதுனால நாங்க
20000 ரூவா வாடகையுள்ள
ஒரு ரூம்ம அவொளுக்கு
வாடகையில்லாமலே
தாறோம்.
ஒங்களுக்கு நாங்க
வாடகை வாங்காம
ரூம்ம தந்தாலும்
அரசாங்கத்துக்கு நாங்க
அதுக்குண்டான
வரியை கட்டியாவணும்.
அதுக்கான வரியை மட்டும்
நீங்க கட்டுனா போதும்.
மத்ததை நாங்க
பாத்துக்கிடுதோம்னு
சொன்னாவொ.
நாங்க ஏம்பேர்லயே
அந்த ரூம்ம போட்டோம்.
என்னை
போட்டோவெல்லாம்
புடிச்சாவொன்னா பாத்துக்கியேன்.
மூவாயிரம்ரூவா மட்டும்
எங்க்கிட்ட வரியா வாங்கிட்டு
20000ரூவா வாடகையுள்ள
ரூமைத்தந்தாவொ."
" ஆமவே சொடல..
இதுக்கும்
பட்ஜெட்டுக்கும்
ஜேட்லிக்கும்
என்னவே சம்மந்தம்"
" முளுசா கேளுல..
முந்திரிக்கொட்டை மாதிரி
முந்தாதல..
நம்மூருல
ஏள பாளகளுக்கு
அரசாங்கத்துலயிருந்து
எலவசமா அரிசியில்லாம் கொடுக்காவொள்ளா..
அரிசிய அவொளுக்கு
எலவசமா கொடுத்துட்டு
வாங்குதவொகிட்ட
வெளியில அரிசி விய்க்க
வெலைக்கு தகுந்தமாறி ஒரு
வெல வச்சு அதுக்கு 18 %
GST கணக்கு பாத்து ரேசனுக்கு
வரி போடாம
இந்த பட்ஜெட்ல
சும்மா விட்டுருக்காவொள்ளா..
அத வச்சுத்தாம்ல
நான் ஜேட்லி
ரொம்ப ரொம்ப
நல்லவருன்னு
சொன்னேன்.
இப்ப புரிஞ்சாதுல
நான் சொன்னதுக்கு
சரியான அர்த்தம்"
"ஆமவே..
நீரு சொல்லுதது
ரொம்ப சரிதாம்வே"
பாத்துகிட்டயிருங்க..
கொஞ்சநாள்லயே
எலவசமாக கொடுக்குற
எல்லாத்துக்கும் கூட
வரி போடப்போறாவொ.
சலுகையில கொடுத்தாலும்
முழு வெலைய்க்கும்
வரி போடப்போறாவொ.
இவொ பொயிட்டு
சீதா தானா வந்தாலும்
இப்பிடித்தாம்யா
நடக்கப்போவுது.
பாத்து நடந்துங்குங்க.
No comments:
Post a Comment