Wednesday, 14 February 2018

நம்பிக்கை வெல்லட்டும்

கர்நாடகாவில்
பேரும் புகழும் பெற்றது
தெற்குகனரா பகுதி.

இதன் அங்கமான
உடுப்பி, மங்களூர் மாவட்டங்களும்,
கேரளத்தின் காசர்கோடு மாவட்டமும்
சேர்ந்த பகுதி துளுநாடாகும்.

எந்தக்காலத்திலும்
இந்த பகுதி ஒரு அரசாங்க
பகுதியாக இல்லாது
போயிருந்தாலும்
திராவிட மொழியான
துளு வைத் தாய் மொழி
ஆகக்கொண்டு பேசும்மக்கள்
இந்த பகுதியில்
நிறைய பேர் வசிக்கின்றனர்.

கேரளத்துக்காளர்கள்
இப்பவும் மங்களூரை
மங்களாபுரம் என்றே
அழைக்கிறார்கள்.

மங்களாபுரம் விரைவு வண்டி
என்று தெற்குரயில்வேயும்
ஒரு தொடர்வண்டிக்கு
பெயரிட்டுள்ளனர்.

மங்களாதேவிக்கு
இங்கு ஒரு கோவில்உண்டு.

இந்தக்கோவிலுக்கும்
கொல்லூரில் இருக்கும்
மூகாம்பிகை அம்மன்
கோவிலுக்கும்
கர்நாடக மாநில
பக்தர்களைவிட
கூடுதலாக மலையாளிகள்
நாள்தோறும் வந்து
வழிபட்டுச் செல்கிறார்கள்.

இப்போதும் கூட
எல்ஐசியின்
காசர்கோடு கிளையில்
வாடிக்கையாளர்களுக்கு
பிரிமியத் தகவல் கடிதம்
மலையாளம்  கன்னடம் என
இரு மொழிகளில்
அச்சடிக்கப்பட்டு
அனுப்ப ப்படுகின்றன.

இந்த பகுதியில்
புகழ்பெற்ற ஆலயங்கள்
நிறைய அமைந்துள்ளன.

அவற்றுள் சில.....

மங்களூர் மங்களாதேவி அம்மன்,
உடுப்பி கிருஷ்ணர்,
கொல்லூர் மூகாம்பிகை,
கட்டீல் துர்காபரமேசுவரி,
தர்மஸ்தலா மஞ்சுநாதசாமி,
ஹொரநாடு அன்னபூரணேசுவரி,
குக்கே சுப்பிரமணியா,
பக்கத்து மாவட்ட எல்கையில் உள்ள
சிருங்கேரி  சாரதாதேவி
என பல கோவில்கள்.

இங்கு பல இன மக்கள்
வாழ்ந்து வருகின்றனர்.

இறை நம்பிக்கை நிறைய
உடையவர்கள்.

தர்மஸ்தலாவிலுள்ள
அருள்மிகு மஞ்சுநாதசாமி
கோவிலின் தர்மாதிகாரி
வணக்கத்திற்குரிய
திரு வீரேந்திர ஹெக்டே என்ற
ஒரு பெரியவர்.

இவரை இறைவனின்
ஒரு பிரதிநிதியாகவே
மக்கள் நம்புகின்றனர்.

தீர்க்க முடியாத பல
குடும்ப வழக்குகள் எல்லாம்
தீர்விற்காக மனுக்களாக
இவரிடம் சமர்ப்பிக்கப்படும்.

தர்பார் நடக்கும் நாட்களில்
இவர் மனுக்களை
அலசி ஆராய்ந்து
தீர்ப்பு வழங்குவார்.

வாதியும் பிரதிவாதியும்
இவரது தீர்ப்புக்கு
கட்டுப்படுவார்கள்.

கால விரயமின்றி,
பண விரயமின்றி,
மன விரோதமின்றி
இவரால் வழக்குகள்
தீர்க்கப்பட்டும் மக்களால்
ஏற்கப்பட்டும் வருகின்றன.

ஒருமுறை எனக்கு
தார்வார்டு என்ற நகரில்
ஓர் அலுவலகப் பணி.

உடுப்பியிலிருந்து
பேருந்தில் பயணித்தேன்.

ஒரு பயணி
நடத்துனரிடம்
அனுமதிச்சீட்டினை
வாங்கியபிறகு
தான் கொடுத்த
ஐநூறு ரூபாய்க்கு
கட்டணம் போக
மீதிப்பணத்தை
கேட்கிறார்.

பயணி தன்னிடம்
பணம் ஏதும்
தரவில்லை எனவும்,
அனுமதிச்சீட்டிற்கான
கட்டணத்தை தரும்படியும்
நடத்துனர் பயணியிடம
பணம் கேட்கிறார்.

பயணியோ தான்
ஐநூறு ரூபாயை
ஒரே நோட்டாக
நடத்துனரிடம்
கொடுத்தாக
சாதிக்கிறார்.

நடத்துடனர் எல்லோரிடமும்
தனது பணப்பையை
திறந்துகாட்டி
அதில் ஐநூறுரூபாய் நோட்டு
ஒன்று கூட இல்லை என்று
உறுதிப்படுத்துகிறார்.

பார்வையாளர்களுக்கு
பயணி சொல்வது
உண்மையாக இருக்குமோ
என்று தோன்றுகிறது.

பணப்பையை பார்த்ததால்
நடத்துனர் பணம்
வாங்கவில்லை என்பதும்
உண்மையாகயிருக்குமோ
என்றும் தோன்றுகிறது.

பயணி இடையில் நின்ற
வேறு யாரிடமாவது பணத்தை
கொடுத்திருக்கலாம்
என்ற எண்ணமும் வருகிறது.

வழக்கு முடிவுக்கு
வரவில்லை.

பேருந்தின் ஓட்டம்
நிறுத்தப்படுகிறது.

பயணியோ
மற்றவர்களைப்பார்த்து
நடத்துனர் மஞ்சுநாதர்மீது
சத்தியம் செய்து
பணம் வாங்கவில்லை
என்று சொன்னால்
அனுமதிச்சீட்டுக்கான
பணத்தைத்தருவதாகக்
கூறுகிறார்.

நடத்துனர்
பணம் வாங்கவில்லை என்று
மஞ்சுநாதர் மீது
சத்தியம் செய்கிறார்.

பயணி கட்டணத்திற்கான
பயணத்தைத்தருகிறார்.

பயணம் மீண்டும்
தொடர்கிறது.

அங்குள்ள மக்கள்
மஞ்சுநாதரை அவ்வளவு
நம்புகிறார்கள்.

தவறு செய்பவனை
மஞ்சுநாதர் தண்டிப்பார்
என்று நம்புகிறார்கள்.

நம்பிக்கை வெல்லட்டும்.
நல்லவை பெருகட்டும்.

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

நம்மூர்ல நடந்த
ஆர்கேநகர் இடைத்தேர்தலில்
பணத்தையும் பொருளையும்
வாரி வாரிக் கொடுத்த
கட்சிக்காரனுவொள்லாம்
ஒண்ணுமே கொடுக்கலண்ணு
எல்லாச்சாமி மேலயுமுல்லா
சத்தியம் பண்ணுதானுவொ.

இங்க இருக்க
ஒரு சாமியுங் கேக்கலய..

கேக்க மாதிரியுந்
தெரியலய.

இதை மஞ்சுநாத சாமிதான்
கவனிக்கணும்.

கவனிப்பாரா?

இல்லை தமிழ்நாடு
என் பொறுப்பில் இல்லை
என்று சொல்லப்போறாரா?
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

No comments:

Post a Comment