பொதுவாக நம் இல்லங்களில்
வயதில் மூத்தவர்கள்
சிறுவர் சிறுமியர்களுடன்
சேர்ந்து விளையாடும்போது
அவர்களுக்கு விட்டுக்கொடுத்து
மகிழ்விப்பது வழக்கம்.
கேரம் போர்டு விளையாட்டானாலும்,
செஸ் விளையாட்டானாலும்,
சீட்டு விளையாட்டானாலும்
பெரியவர்கள் குழந்தைகளோடு
குழந்தைகளாகவே மாறிவிடுவார்கள்.
சிறுவர் சிறுமியர்களுக்கு
விட்டுக்கொடுத்து
வெற்றிபெறவைப்பார்கள்.
விட்டுக்கொடுப்பதை சிறுவர்கள்
அறிந்துகொள்ளமுடியாதபடி
விளையாடுவார்கள்.
சிறுவர்களும் தாங்கள்
உண்மையிலேயே சிறப்பாக
விளையாடி வெற்றிபெற்றதாகவே
நினைப்பார்கள்.
உற்சாகத்தில் திளைப்பார்கள்.
அவர்கள் முகத்தில் தெரியும்
பூரிப்பையும் மகிழ்ச்சியையும்
விவரிக்க சொற்கள் கிடைக்காது.
அதைப்போல் வீட்டிலும்
தொலைக்காட்சி களில்
சிறுவர் சிறுமியர்களுக்குப்பிடித்தமான
தொலைக்காட்சி யை
பார்த்துக்கொண்டிருக்கும்போது
விட்டுக்கொடுப்பார்கள்.
தோற்றுப்போவதுபோல்
தோற்றமளித்தாலும் அவர்களது
இதயத்தை வெல்லுகிறார்கள்.
நம்மில் ஒரு சிலர்
சிறுவர்சிறுமியர்களுடன்
விளையாடும்போது தங்களை
நாயகர்களாகக் காட்டிக்கொள்ள
அவர்களைத் தோற்கடித்து
அந்த பிஞ்சு மனங்களை
நோகடித்து மகிழ்வார்கள்.
அவர்களது ஊக்கம் தளர்ந்து
ஏமாற்றங்கள் தான்
அவர்களது மனதில் தோன்றும்.
வீட்டிலும் அவர்கள் விரும்பும்
தொலைக்காட்சியை
பார்க்க விடாமல்
தங்களது சுயநலத்தை
வெளிப்படுத்தி தங்களுக்கு
பிடித்ததைத்தான் பார்ப்பார்கள்.
பிஞ்சு மனங்களில்
அவர்கள் அறியாமல்
நஞ்சை நன்றாக
விதைக்கிறார்கள்.
நான் 1988-90ல்
கொல்லம் கிளையில்
உதவி நிர்வாக அலுவலர்.
திரு அலிகுட்டிசார் அவர்கள்
உதவிக்கிளைமேலாளர்.
வணிகச்சுற்றுப்பயணத்தை
முடித்த பின்னர் அவர்
தனது அனுபவங்களை
என்னிடம் பகிர்வதுண்டு.
அப்படிப்பகிர்ந்ததில்
ஒன்று இதோ..
கொல்லத்தில்
ஒரு முன்னணி
பெண்முகவர்.
நன்கு படித்தவர்.
அவரது கணவர்
வேலை ஒன்றும் இல்லாமல்
வீட்டில் சும்மாதான்
பொழுதைக் கழிந்து வந்தார்.
எல்ஐசி மூலம் மனைவி
சம்பாதிப்பதை அவர் நன்றாக
செலவழித்து வந்தார்.
ஒரு நாள் இத்தம்பதியர்
வசதியான NRI வாய்ப்பாளர்
ஒருவரைக் கண்டு பேச
திரு அலிக்குட்டி சாரை
உடன் அழைத்துக்கொண்டு
சென்றார்கள்.
பெரிய தொகைக்கான
வணிகத்திற்கு பேசி
ஒப்புதல் பெற்றார்கள்.
முகவருக்கு மகிழ்ச்சி.
வாய்ப்பாளர், அவரது மனைவி,
அவர்களது மகள் என்று அந்த
குடும்பமே பாசத்துடன்
பழகியிருக்கின்றனர்.
செக் வாங்கும் நிலைக்கு
வந்துவிட்டனர்.
அதற்குள்ளாக சிற்றுண்டி
விநியோகத்திற்கு வந்தது.
அந்த வேளையில்
நமது முகவரின்
கணவர் வாய்ப்பாளரிடம்
பொதுவான சில தகவல்களை
பரிமாறிக்கொண்டிருந்தார்.
அப்போது முகவரின் கணவர்
தனது கையின் முட்டியினை
மேஜையில் வைத்துக்கொண்டு
கையை உயர்த்தி வைத்தார்.
வாயப்பாளரையும் இவர்மாதிரியே
வைத்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டார்.
பிறகு இருவரும் கையின்
பாதங்களை
பின்னிப்பிடித்துக்கொண்டு
பலத்தை பயன்படுத்தி மற்றவர்
கையைத்தணித்து
தரையில் பட வைக்கவேண்டும்
என்று ஒரு போட்டியை
அறிவிக்கிறார்.
விளையாட்டு வினையாக மாறும்
என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
போட்டி துவங்கியது.
முகவரின் கணவர் வாய்ப்பாளருக்கு
விட்டுக்கொடுத்திருக்கலாம்.
ஆனால் அவரோ தனது பலத்தை
பயன்படுத்தி வாய்ப்பாளரின் கையை
தரையில் சாய்த்துவிட்டார்.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியையும்
உரத்த குரலிலான சிரிப்பு மூலம் வெளிப்படுத்தினார்.
அந்த வாய்ப்பாளர்
தான் தோற்றதை எளிதாக
எடுத்துக்கொள்ளவில்லை.
மனைவி, மகள், மற்றும்
வெளியார் முன்னிலையில்
தோற்றுப்போவதை யார்தான்
விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.
பிறகென்ன..
சிற்றுண்டி முடிந்ததும்
இப்போது நிதிவசதி
போதுமான அளவு இல்லை என்றும்
பிறகு பார்த்துக்கொள்ளலாம்என்றும்
நயமாக பேசி அனைவரையும்
திருப்பி அனுப்பிவிட்டார்.
அலிக்குட்டிசார் அவர்கள்
முகவரது கணவரின் நடவடிக்கை
பற்றி என்னிடம் கூறி வருந்தினார்.
ஆமாம் ..
முட்டையிடும் கோழிக்குத்தானே
வலி புரியும்.
உட்கார்ந்து சாப்பிட்டே
அழிப்பவர்களுக்கு என்ன புரியும்?
நமது முகவர்கள்
வாய்ப்பாளர்களைப்பார்க்கும் போது
ஒருபோதும் அவர்களை விட
நாம் மேலானவர்கள்
என்று நிரூபிக்க
முயற்சிக்கக்கூடாது.
நாம் போயிருப்பது வணிகம்
வாங்கத்தானேயன்றி நமது
புஜ பல பராக்கிரமங்களை
பறைசாற்ற அல்ல என்பதை
புரிந்து கொள்ளவேண்டும்.
தேவையற்ற பேச்சுக்களை
தேவையற்ற கருத்துக்களை
தேவையற்ற விவாதங்களையும்
கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அப்படியே விவாதங்கள் வந்தாலும்
தோற்றுப்போவதுபோல் நடித்து
அவர்களது இதயங்களைத்தொட்டு
வெற்றி வாகை சூடவேண்டும்.
நான் சொல்வது சரிதானா
முகவர் நண்பர்களே!!