Monday, 19 March 2018

ஊடகங்கள்...கவனம் தேவை


ஊடகங்கள்
சக்திவாய்ந்தவை.

ஊடகங்களால்
மக்கள் மத்தியில்
நல்லா மாற்றத்தை
ஏற்படுத்தமுடியும்.

அவர்களால்
எத்தனையோ
மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கின்றன.

அலுவலகத்தின்
தலைமைப்பொறுப்பில்
இருக்கும்போது
லாவகமாகக்
கையாளவேண்டும்.

ஒரு முறை
புதிய திட்டம் ஒன்றின்
அறிமுக விழா.

தினசரிப்பத்திரிக்கை
ஒன்றின் ஆசிரியரது
புதல்வி அந்த ஊர் பதிப்பை
நிர்வகித்து வந்தார்.

அவரை சிறப்பு விருந்தினராக
அழைத்து அந்த திட்டத்தை
அறிமுகப்படுத்தினோம்.

அந்த விழாவின் செய்தி
அவர்களது நாளிதழில்
முதல் பக்கத்தில்
பெரிதாக புகைப்படத்துடன்
வெளியிடப்பட்டது.

வேறு சில நாளிதழ்களிலும்
செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்னொரு
பிரபல நாளிதழில்
அந்த நிகழ்ச்சி
பற்றிய செய்தி வரவில்லை.

நாங்கள் அந்த குறிப்பிட்ட
நாளிதழுக்கு ஆதரவாக
செயல்பட்டதாக
ஒரு எண்ணம்
இன்னொரு நாளிதழுக்கு
ஏற்பட்டுவிட்டது.

அதன்பிறகு எங்கள்
அலுவலகத்தின் எந்த
செய்தியும் அந்த நாளிதழில்
வரவில்லை.

அந்த நிலவரத்தை மாற்ற
ஓராண்டுகாலம் ஆனது.

அதற்குப்பிறகு நான்
மிகவும் கவனத்துடன்
நடந்து கொண்டேன்.

வேறு ஊருக்கு புதிய
பொறுப்பில் சென்றதும்
இது பற்றி கூடுதல்
கவனம் செலுத்தினேன்.

உடன் இருப்போரையும்
கவனமாக நடந்து கொள்ள
வைத்தேன்.

அந்த ஊரில் உள்ள
ஒரு பிரபலமான
நாளிதழின் ஆசிரியர்
என் நண்பன் ஒருவரின்
உறவினர்.

அவரிடம் நன்றாக பேசி
நெருக்கமாகிவிட்டேன்.

ஒரு முறை என்னைப்பார்க்க
எனது செயலகத்திற்கு
வந்திருந்தார்.

எனது அறைக்குள் வரும்வரை
வரவேற்பறையில்
அமர்ந்திருக்கிறார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த
பல நாளிதழ்களையும்
நோட்டமிட்டிருக்கிறார்.

அவர் ஆசிரியராக உள்ள
நாளிதழ் அங்கு இல்லை
என்று அறிந்துகொண்டார்.

அறைக்குள் வந்து
சிறிது நேரம் என்னைப்பற்றி
என் நண்பரைப்பற்றியெல்லாம்
விசாரித்துவிட்டு
"அண்ணாச்சி..

உங்களது வரவேற்பறையில்
நிறைய நாளிதழ்கள் இருந்தன.

ஆனால் உங்கள் நிறுவனத்தின்
செய்திகளை மக்களிடம்
கொண்டு சேர்க்கும் பணியை
சிறப்பாகச்செய்யும்
எங்களது நாளிதழ்
அங்கு வைக்கப்படவில்லை"
என்று நாசூக்காக கூறினார்.

அவரது கருத்து
மிகவும் சரியே!

மறுநாள் முதல்
விடுபட்டுப்போன
அந்த நாளிதழையும்
வாங்கிவைக்க
ஏற்பாடு செய்தேன்.

நாம் நடுநிலையாளராக
இருந்தால் மட்டும் போதாது.

பிறரின் மனதிலும் அப்படி
ஓர் எண்ணம் தோன்றும்படி
நடந்து கொள்ளவேண்டும்.

முகவர் பெருமக்களும்
அவர்களுக்கென்று இருக்கும்
அரசியல் மற்றும் சமுதாயக்
கருத்துக்களை ஒதுக்கி
வைத்துவிட்டு மாறுபட்ட
எண்ணம் கொண்ட
வாடிக்கையாளர்களிடம்
பேசாமலும் விவாதிக்காமலும்
இருத்தல் மிகவும் அவசியம்.

சர்ச்சைக்குள்ளாகும்
கருத்துக்களை விவாதித்தால்
வணிகச்சேர்க்கைக்கு
உறுதியாக பங்கம் வரும்.

No comments:

Post a Comment