Monday, 19 March 2018

கள நிலவரம் வேறு

கள நிலவரம் வேறு ....
•••••••••••••••••••••••••••••••
நான் பணியாற்றிய ஒரு கிளையில்
கணபதி என்று ஒரு முகவர்.

தாய்மொழி வேறு என்றாலும்
தமிழ்நாட்டிலேயே பிறந்து
வளர்ந்து படித்து உயர்ந்தவர்.

எல்லோரிடமும் நன்கு பழகுவார்.
அதனால் உள்ளூர் மக்கள் தான்
அவரது வாடிக்கையாளர்கள்.

வாடிக்கையாளர்கள்
அனைவருமே அவரை
தங்களது குடும்பத்தில்
ஒருவராகவே நினைத்து
பழகி ஆதரவளித்து வந்தனர்.

இசக்கி என்ற  உள்ளூர்
முகவர் ஒருவர்.

மூத்த முகவர் அவர்.

கணபதி மீது மிகுந்த
பொறாமை கொண்டார்.

இசக்கி ஒருநாள் 
தன் உறவினர் ஒருவரை
சந்தித்து பாலிசி கேட்டார்.

தனது வகுப்புத்தோழனான
கணபதி என்ற முகவர் மூலம்
நிறைய பாலிசிகளை
எடுத்திருப்பதாகவும்
அவரைத்தவிர யாரிடமும்
எடுக்கப்போவதில்லை என்றும்
வாடிக்கையாளர் கூறினார்.

அதற்கு இசக்கி அவரிடம்
“ஓ அந்த ••••••காரனிடம்
பாலிசி எடுத்து இருக்கியா?

சரி...சரி.. நல்லபையன் தான்
அந்த கணபதி ..
சிறந்த உழைப்பாளி.

நானும் ஒன்னோட அப்பனும்
ஒண்ணா படிச்சவங்க.

பழைய காலத்து ஆளுங்க.
நீ இந்த காலத்து ஆளு..

நான் பலசரக்குக்கடைன்னா
பலவேசம்பிள்ளை கடையிலதான்
பொருட்கள் வாங்குவேன்.

மருந்துக்கடைன்னா
மருதநாயகம்பிள்ளை கடைதான்.

காய்கறிக்கடைன்னா
கந்தபிள்ளை கடைதான்.

ஷாப் சாமான் வாங்குவது
சங்கரன் பிள்ளை கடைதான்.

சாப்பிடணும்னா போவது
சங்கரன் பிள்ளை ஓட்டல்தான்.

சீக்குகீக்கு வந்தால் பார்க்க
சிதம்பரம் பிள்ளை
மருத்துவமனை தான்.

வழக்கு ன்னா வந்தா வக்கீல்
வள்ளிநாயகம்பிள்ளைதான்.

பணம் போடுற பாங்க்கூட
பேங்க் ஆஃப் தமிழ்நாடுதான்.

இது என்னோட பாலிசி..

ஒன்னோட பாலிசி எப்படி
என்று எனக்குத்தெரியாது

பரவாயில்லை..பரவாயில்லை”
என்று சொன்னார்.

உடனே அந்த வாடிக்கையாளர்
மூத்த முகவரைப்பார்த்து
“ மாமா..நீங்க இன்னும்
கற்பனை உலகில் தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள்.
நான் இந்த காலத்தில்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

மத, இன, மொழி மற்றும் சாதி
வேறுபாடு இருக்கக்கூடாது
நல்லிணக்கம் வேண்டும் என்ற
எண்ணத்தில் உள்ளவன் நான்.
அதனால் வந்தோமா,
காபி குடித்தோமா என்று
சட்டுபுட்டுன்னு இடத்தை
காலி பண்ணுங்க மாமா"
என்று கூறினார்.

என்னதான் களத்தில்
சமத்துவம் பேசினாலும்
இன்னும் சில இடங்களில்
இப்படி நடந்து கொண்டு தான்
இருக்கின்றன.

இப்படி மதம், இனம்,
சாதிப்போட்டிகளை
எதிர்கொண்டுதான்
முயற்சியுடைய முகவர்கள்
சாதித்து வருகிறார்கள்.
———————————————-
உண்மையிலேயே நடந்த
சம்பவம் தான்.

ஆனால் முகவர் சொன்ன
சாதிப் பெயர்களைப்போட்டால்
கிளை எது...முகவர் யார் என்று
என் நண்பர்களில் சிலர் சரியாக
கண்டுபிடித்துவிடுவார்கள்.

அதனால் தான் சாதிப்பெயரையும்
முகவர்களின் பெயரையும்
மாற்றிப் போட்டுள்ளேன்.
————————————————

No comments:

Post a Comment