நான் பணியாற்றிய கிளைகளில்
எனக்குப்பிடித்த கிளை
1996-98ல் பணிபுரிந்த
திருப்பூர் கிளை.
அங்கு ஒரு முகவர்.
முன்னணி முகவர்.
பழுத்த அனுபவம் உள்ளவர்.
திரு C. K. பொன்னுசாமி அவர்கள்.
பெரிய புகழ்பெற்ற
செல்வாக்கான குடும்பம்.
இவரது இளைய சகோதரர்
திரு C. K. குப்புசாமி அவர்கள்
நாடாளுமன்ற மக்களவை
உறுப்பினராக இருந்தவர்.
இவரது புதல்வர்
திரு C. P.இராதாகிருஷ்ணன்
அவர்களும் முன்னாள்
நாடளுமன்ற கோவைத்தொகுதி
மக்களவை உறுப்பினராக
இருந்திருக்கிறார்.
பெரிய புகழ்பெற்ற
வாடிக்கையாளர்கள்
அவருக்கு நிறைய உண்டு.
யாருக்கும் ஒரு பைசா
கழிவு கொடுக்க மாட்டார்.
பாலிசி முழுமையாகும்போது
தவணைப்பணத்தில் பத்து ரூபாய்
மேலும் தேவை என்று வந்தால்
தனது கைப்பணத்திலிருந்து
செலுத்தி விட்டு அவரிடம்
பிறகு வாங்கிக்கொள்ளமாட்டார்.
ஐம்பது ரூபாய் செலவழித்து
காரில் சென்று பத்து ரூபாயை
வாடிக்கையாளரிடம் வாங்கி வந்து
அலுவலகத்தில் செலுத்துவார்.
வாடிக்கையாளர் யாருக்கும்
எல்ஐசி டைரி எதுவுமே
கொடுக்க மாட்டார் .
மாறாக அவருக்குத்தான்
வாடிக்கையாளர்களிடமிருந்து
பரிசுப்பொருட்கள் தேடிவரும்.
அவருடன் சேர்ந்து
வாடிக்கையாளர்களைப்பார்க்க
சென்ற போது பல அனுபவங்கள்.
வாடிக்கையாளரைப்பார்க்கச்
செல்வதற்கு முன்னரே அவர்
இருக்கிறாரா என்று நன்கு
தெரிந்துகொண்டபின்
நாம் செல்லலாமே
என்று கூறுவேன்.
எத்தனை மணிக்கு
வரலாம் என்பதை முன்னரே
கேட்டுத்தெரிந்துகொண்டு பார்க்கச்செல்லலாமே
என்று கூறுவேன்.
அதற்கு அவர் என்னைப்பார்த்து
“ நாம் என்ன அவருக்கு
நிதி உதவி கொடுக்கவா போகிறோம்.
அவரிடம் நாமல்லவா
பணம் வாங்க போகிறோம்.
இந்த நேரத்தில் வருகிறோம்
என்று முன்கூட்டியே நாம்
தகவல் கொடுத்தால் அவர்
சாக்குபோக்கு சொல்லி
தப்பி விடுவார்.
நமது தொழிலுக்கு இதெல்லாம்
சரிப்பட்டு வராது.
சொல்லாமல் கொள்ளாமல்
செல்வது தான் சரிப்பட்டுவரும்”
என்று அடித்துச்சொல்வார்.
அதில் ஓரளவு
உண்மை இருப்பதை
ஒத்துக்கொண்டுதான்
ஆகவேண்டும்.
ஒரு பெரிய இளம் தொழிலதிபர்.
முகவருக்கும் உறவினர்.
எங்களைப் பார்ப்பதையே
தவிர்த்து வந்தார்.
ஒரு நாள் அந்த தொழிலதிபரின்
தொழிற்கூடத்திற்கு முகவர்
என்னை அழைத்துச் சென்றார்.
வாயில்காப்பாளர்
உள்ளேயிருந்து
அனுமதி வந்தால்தான்
கதவை திறந்துவிடுவார்.
தொழிற்கூடத்தின் வாயிலில்
இருந்த இண்டர்காம் மூலம்
உரிமையாளரின்
நேர்முக உதவியாளரை
நம் முகவர் அழைத்தார்.
“உரிமையாளர் இருக்கிறாரா”
என்று கேட்டால் “இல்லை”
என்று தான் பதில் வந்திருக்கும்.
நம் முகவர்தான்
பழுத்த அனுபவசாலியாயிற்றே.
அந்த பெண் உதவியாளரிடம்
“என் பேரனிடம் போனைக்கொடு”
என்று சொன்னது தான் தாமதம்.
அந்த உதவியாளர் பதறியடித்து
Boss உடைய தாத்தாதான்
கூப்பிடுகிறார் என்று நினைத்து
உடனே தொடர்பு ஏற்படுத்திக்
கொடுத்து விட்டார்.
அவரிடம் அவரைக்காண
பெரிய மேனேஜரை அழைத்து
வந்திருப்பதாக கூறினார்.
இப்போது உரிமையாளரால்
சாக்கு போக்கு சொல்லி
தட்டிக் கழிக்க இயலவில்லை.
உள்ளே செல்ல எங்களுக்கு
அனுமதி உடனே கிடைத்து.
சென்றோம்....
பார்த்தோம்.....
பேசினோம்.....
அந்த நகரில் யார் யாருக்கு
அதிக காப்புத்தொகைக்கு
காப்பீடு உள்ளது என்ற
தகவல்களை எடுத்துச்சொல்லி
நம் முகவர் அவரை நன்றாக
உசுப்பேத்திவிட்டார்.
அந்த தகவல் உண்மைதான்
என்பதை உணர்த்த என்னை
பயன்படுத்திக்கொண்டார்.
கடந்த மாதம் ஒருதொழிலதிபர்
1,60,00,000 ரூபாய்
காப்புத்தொகைக்கு பாலிசி
எடுத்த தகவலைக்கூறிவிட்டு
“என் பேரன் இதை விட
கூடுதல் தொகைக்கு பாலிசி
எடுத்துக்கொள்ளவேண்டும்.
அது தான் என் பேரனுக்குப் பெருமை”
என்று பக்குவமாக சொன்னார்.
1,62,00,000 ரூபாய்
காப்புத்தொகைக்கு பாலிசி
எடுத்துக்கொள்ள அவரை
சம்மதிக்கவைத்துவிட்டார்.
அதற்குண்டான
காசோலையையும்
உடனே பெற்றுவந்தோம்.
எப்படி வணிகத்தை முடிப்பது
என்ற கலையை புத்தகம் படித்து
புரிந்துகொள்ள முடியாது.
பட்ட அவமானங்களும்
பெற்ற ஏமாற்றங்களும் தான்
ஒருவரை மாற்று வழிகளில்
யோசிக்க வைத்து
வெற்றியைத்தருகின்றன.
அனுபவமே நல் ஆசான்.
அந்த அனுபவம் தான்
பெரிய வெற்றிக்கு மூலதனம்
என்பதை புரிந்துகொண்டேன்.
No comments:
Post a Comment