Monday, 5 March 2018

அழகாக... அளவாக

அழகாக... ஆனால் அளவாக
•••••••••••••••••••••••••••••••••••••••

1992 நவம்பரில்
ஒருங்கிணைந்த
நெல்லை மாவட்டத்தில்
(நெல்லை & தூத்துக்குடி)
மழை, சூறாவளி காற்று,
ஆற்றில் வெள்ளம்.

வாழை மரங்கள் சாய்ந்து
விழுந்துவிட்டன.

வயலில் நெற்பயிர்கள்
நாசமாகிவிட்டன.

ஆத்தூர் பகுதியில்
வீடுகளுக்குள் வெள்ளம்
புகுந்துவிட்டது.

இயல்பு வாழ்க்கை
வெகுவாக பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் கிளைப்பகுதி
நிறைய பாதிக்கப்பட்ட பகுதி.

எந்த முகவரிடமாவது புதுவணிகம்
பற்றி பேசினால்
மனிதாபிமானம் இல்லாத
மேலாளர் என்ற பெயர்
எனக்குக்கிடைக்கும்.

வணிகத்திற்காக முகவருடன்
சென்னை செல்கிறேன்
என்று கோட்ட மேலாளரிடம்
கேட்டால் பயணப்படி
கொடுக்கவேண்டுமே என
தடை போடலாம்.
எனவே ஒரு வாரம்
விடுப்பு எடுத்துக்கொண்டு
கணேசன் அண்ணாச்சி
என்ற முகவரை
அள்ளிப்போட்டுக்கொண்டு
சென்னைக்கு பயணமானேன்.

சென்னைவாழ்
திருச்செந்தூர் பகுதி
தொழிலதிபர்களை சந்தித்து
வணிகம் வாங்கினோம்.

தேவி பத்திரிக்கை அதிபர்
திருமிகு இராமச்சந்திர
ஆதித்தன் அவர்களை
அவரது அண்ணாசாலை
ஆயிரம்விளக்கு பகுதியில்
இருந்த "தேவி" பத்திரிக்கை
அலுவலகத்தில் சந்தித்தோம்.

அன்புடன் வரவேற்று
நன்றாக பேசினார்.

அவரது ஆயுளின் மீது
ஆண்டுத்தவணை
பிரிமியத்தில் நல்ல அளவு
காப்புத்தொகைக்கு
முன் பணமும் வாங்கினோம்.

அதிபருடன் நெருக்கமாக
பேசினேன்.

மலையாள மனோரமா
பத்திரிக்கை
வெளியீட்டாளர்கள்
ஆண்டு தோறும்
தயாரித்து வெளியிடும்
YEAR BOOK என்ற
தகவல் களஞ்சியம் போல்
தமிழிலும் ஒரு புத்தகம்
தேவி குழுமத்திலிருந்து
தயாரித்து வெளியிட்டால்
தமிழ்நாட்டு மாணவர்கள்
பயன் பெறுவார்களே என்று
கேட்டு வைத்தேன்.

பார்க்கலாம் என்று
பாசிட்டிவாக
பதில் கூறினார்.

அருகிலிந்த
கணேசன் அண்ணாச்சி
என் தொடையைத்தட்டி
வாருங்கள் போகலாம்
என்று நச்சரிக்கத்
தொடங்கினார்.

வெளியே வந்ததும்
கணேசன் அண்ணாச்சி
என்னைப்பார்த்து
" அண்ணாச்சி நாம வந்த
வேலையைப்பார்ப்பேளா..

அதை விட்டுட்டு
பொஸ்தகம்
அது இது ன்னு பேசுறேள.

இவ்வளவு பெரிய பத்திரிக்கை
சாம்ராஜ்யத்தை
பேணிக்காக்கும் அவருக்கு
தெரியாத யோசனையா?

நாம் ஆலோசனை கூறி
கேட்கும் நிலையிலா
அவர் இருக்கிறார்.

யோசனை சொல்லும் தகுதி
நமக்கு இருக்கிறதா?

நமக்கு அதெல்லாம் எதுக்கு?
நல்லவேளை அவர் தவறாக
நினைக்கவில்லை"
என்று கூறினார்..

நான் அண்ணாச்சியிடம்
"வணிகம் மட்டும் பேசுனா
நல்லாயிருக்காதுல்லா
அண்ணாச்சி..

அதுனாலதான் நான்
அப்படி பேசினேன்.

ஆனால் நான் அப்படிப்பட்ட
ஆலோசனையெல்லாம்
அந்த அதிபரிடம்
சொல்லி யிருக்கக்கூடாது"
என்று என் தவறை உணர்ந்து
அவரிடம் கூறினேன்..

மீன் பிடிப்பவருக்கு
தூண்டில் மீது மட்டுமே
கண் இருக்கவேண்டும்.

வணிகத்தை விரைந்து
முடிக்கவேண்டும்.

வணிக உரையாடலில்
தேவையில்லாதவற்றை
பேசக்கூடாது.

இவையெல்லாம்
நான் அண்ணாச்சிமூலம்
படித்த நல்லதொரு பாடம்.

ஒரு வார கால
சென்னைப்பயணத்தை
வெற்றிகரமாக முடித்து
நல்ல வணிகத்துடன் வந்து
கிளையின் பெயரை
நிலைநிறுத்தினோம்.

அழகாகப் பேசினால் மட்டும்
போதாது.
அளவாகவும் பேசவேண்டும்.
வளவள ன்னும் பேசக்கூடாது.

இதுவே முகவரிடம்
இருக்கவேண்டிய
முக்கிய குணம்.

சரிதானா நண்பர்களே?

No comments:

Post a Comment