1992-94 களில்
நிறைய முகவர்களின்
வீடுகளில் தொலைபேசி
வசதி இல்லை.
மாத இறுதியில் பத்து பதினைந்து
முகவர்களுக்காவது கூடுதல்
வணிகம் கேட்டு தந்தி மூலம்
அதனை தெரிவிப்பதை
வழக்கமாக கொண்டிருந்தேன்.
தந்தி கிடைத்ததும்
சார் கேட்டிருக்கிறார்.
நாம் இன்னும் நான்கைந்து
நபரை தேடிப்பார்த்து
வணிகம் கொடுக்கவேண்டும்
என்ற பொறுப்புணர்வு
அவர்களுக்கு வரும்.
அதனால் கூடுதல்
வணிகம் வரவும் வாய்ப்பு
நன்றாகவே இருந்தன.
ஒரு நாள் உடன்குடி முகவர்
திரு முத்துப்பாண்டி என்ற
10174B என்ற அடையாள எண்
கொண்ட முகவர் என்னிடம் வந்து
“ ஐயா நீங்கள் எவ்வளவு வணிகம்
கேட்டாலும் நான் அங்கு இங்கு
அலைந்து திரிந்து
அந்த வணிகத்தை
உங்களுக்கு தந்து விடுகிறேன்.
தயவு செய்து எனக்கு
வணிகம் கேட்டு
தந்தி அடிக்க வேண்டாம்.
எனது தாயாருக்கு வயது
இப்போது எழுபது ஆகிறது.
"தந்தி" என்று தந்தி ஆபீசுக்காரர்
என் வீட்டு வாசலுக்கு வந்ததும்
யார் இறந்துவிட்ட செய்தியோ
வந்துள்ளது என்று அவர்கள்
பதட்டமடைகிறார்கள்.
இந்த பதட்டத்தினால்
அவர்களுக்கு ஒன்று கிடக்க
ஒன்று ஆகிவிடக்கூடாது
பாருங்கள். அதனால் தான்
தந்தி வேண்டாம் "என்றார்.
அப்போது தான்
தந்தி கொடுப்பதில் உள்ள
மறுபக்கத்தை என்னால்
நன்கு உணரமுடிந்தது.
அன்று முதல் தந்தி அடித்து
வணிகம் கேட்கும் பழக்கத்தை
அறவே நிறுத்திவிட்டேன்
அந்த காலத்திலெல்லாம்
சாவு சம்மந்தப்பட்ட
அவசரத் தகவல்களை
தெரிவிக்க தந்தி யைத்தான்
பயன்படுத்தி வந்தனர்.
எவ்வளவு மனபலம்
உடையவரானாலும்
தந்தி என்ற சொல்லை
கேட்டதும் ஒரு நொடி
நடுங்கித்தான் போவார்கள்.
திருமண வாழ்த்துக்களையும்
தந்தி மூலம் தெரிவிப்பதுண்டு.
அவை கட்டு கட்டாக பட்டுவாடா
செய்யப்பட்டு வந்தன.
அதனால் யாருக்கும்
பதட்டம் வராது.
சில நேரங்களில்
பணி நியமன உத்தரவுகள் கூட
தந்தி மூலம் வருவதுண்டு.
தந்தியை வழங்க வருபவர்
நல்ல செய்திதான் என்ற
பீடிகையுடன் வருவார்.
இதனால் எந்தவித
பதட்டமும் வருவதில்லை.
ஆனால் வணிகம் கேட்டு
இரண்டு லட்சம் வணிகம் தேவை
என்ற வாசகங்களைப்பார்த்து
தந்தி கொண்டுவருபவர்களால்
நல்லதா கெட்டதா என்று
தரம் பிரித்துப்பார்க்கமுடியாது.
எனவே எந்த ஒரு
பீடிகையுமின்றி வருவார்.
இப்படி வருவது
தந்தி பெறுபவரின்
வீட்டிலுள்ளோரை
பதட்டப்படவைக்கும்.
தொழில் நுட்ப வளர்ச்சியால்
மரணச்செய்திகளைத்தாங்கி வந்த
இந்த தந்தியும் தந்தித்துறையும்
இப்போது மரணித்துவிட்டது.
ஆனாலும் அதன் அனுபவங்கள்
இன்றும் பசுமையாய் உள்ளன.
No comments:
Post a Comment