செப்டம்பர் 1981 முதல் டிசம்பர் 1983 முடிய LIC திருச்செந்தூர் கிளை யில் நான் ஓர் உதவியாளன். கிளை துவங்கிய காலத்திலிருந்தே அங்கு என்னுடன் பணியாற்றி வந்த ஒரு ஊழியர் திரு சண்முகவேல்.
அந்தக் காலத்தில் வங்கியில் ஊழியர்களின் கணக்கில் நேரடியாக சம்பளத்தை செலுத்தும் முறை யெல்லாம் கிடையாது. கையில் கிடைக்கும் சம்பளம் ஐநூறுக்கு மேல் வந்தால் காசோலை மூலம் தான். சம்பளம் வாங்கியதும் அந்த காசோலையை வங்கியில் செலுத்திவிட்டு பிறகு தேவைப்படும் பணத்தை அவ்வப்போது எடுப்பது வழக்கம்.
திரு சண்முகவேல் அவர்களுக்கு நாள் தோறும் கிளையின் முந்தையநாள் வசூலை வங்கிக்கு எடுத்துச் சென்று செலுத்த வேண்டிய பணி. சம்பளப் பணத்திலிருந்து தேவைப்படும் பணத்தை வங்கியிலிருந்து எடுத்துவர கிளை ஊழியர்கள் அனைவரும் காசோலை எழுதிக்கொடுப்போம். அவரும் மொத்தமாக எடுத்து வந்து தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் கொடுப்பார்.
ஒரு மாதம் எல்லோரிடமும் கொடுத்துவிட்ட பிறகு மீதி பணத்தை அவர் எடுத்துக்கொண்டார். அவரது பணத்தில் ஐம்பது ரூபாய் குறைந்திருப்பதை வீட்டிற்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டிருக்கிறார்.
அவர் பணம் கொடுத்த நபர்கள் ஒவ்வொருவருமே எண்ணிப் பார்த்துத்தான் வாங்கியிருக்கிறார்கள்.
நான் ஒருவன்தான் எண்ணிப்பார்க்காமல் அப்படியே வாங்கி சட்டைப்பையில் வைத்தவன்.
நான் படிக்கிறகாலத்தில் பாளையங்கோட்டை வடக்கு பஜாரில் ஒரு பெரிய ஷாப்கடை உண்டு. அந்த கடையின் முதலாளி ஒரு முன்கோபி.. அனைவரிடமும் எரிந்து விழுவார். சில வேளைகளில் வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் கொடுத்து சில்லறை கேட்டு வாங்குவார்களாம்.
அவர் கல்லாவில் இருக்கும்போது சில்லறை வாங்குபவர்கள் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினால் உடனே அந்த ரூபாய் நோட்டுக்களை பிடுங்கி விட்டு நூறு ரூபாயைத்
திருப்பிக் கொடுத்து விடுவாராம்.
என் மீது நம்பிக்கையில்லாத உனக்கு என் கடையில் சில்லறை கிடையாது என்று கூறி திருப்பி அனுப்பி விடுவாராம். இந்தக் கடை முதலாளி ஒரு முறை சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று தோற்றுப் போனார் என்பது வரலாறு.
இந்த சம்பவங்கள் என் மனதில் ஆழமாகப்பதிந்திருந்தன. எனவே என்னிடம் கொடுக்கப்படும் பணத்தை கொடுப்பவர் முன்னிலையில் எண்ணிப்பார்ப்பது அவரை அவமதிப்பது போலாகும் என்று நானும் கருதிவந்தேன். இதனால்தான் திரு சண்முகவேல் என்னிடம் பணத்தைத் தந்த போது எண்ணிப் பார்க்கவில்லை.
திரு சண்முகவேல் தான் பணம் எடுத்துக்கொடுத்த மற்றவர்களிடம் அவர்களுக்கு கொடுத்த பணத்தில் ஐம்பது ரூபாய் நோட்டு கூடுதலாக வந்துள்ளதா என்று கேட்டிருக்கிறார். அவர்கள் இல்லை என்று கூறிவிட்டதால் அந்தப் பணம் என்னிடம் தான் சேர்ந்து வந்திருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறார். அதனால் மறுநாள் காலையில் என் வீட்டிற்கு வந்து தயங்கித்தயங்கி என்னிடம் கொடுத்த பணத்தில் கூடுதலாக ஒரு ஐம்பது ரூபாய் இருந்ததா என்று கேட்டார்.
நல்ல வேளை. நான் செலவேதும் பண்ணவில்லை. அந்த மொத்த பணத்தையும் அப்படியே வைத்திருந்தேன். அதை எடுத்து வந்து அவர் முன்னால் எண்ணிப்பார்த்தபோது ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு கூடுதலாக இருப்பதைப் பார்த்து வருத்தம் தெரிவித்து பணத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.
அந்த காலை கட்டத்தில் ஐம்பது ரூபாய் என்பது மதிப்பு மிகுந்தது. ஒரு மாத மளிகைச்செலவிற்கு போதுமானது. பணம் திருப்பிக் கிடைத்தது குறித்து நண்பர் சண்முகவேலுவிற்கு மிக்க மகிழ்ச்சி.
ஒருவர் கொடுத்த பணத்தை அவர் முன்னால் வைத்தே எண்ணி சரி பார்த்து விடுவது இருவருக்குமே நல்லது. இதில் மரியாதைக்குறைவு என்று ஒன்று கிடையவே கிடையாது.
அன்றிலிருந்து இன்று வரை யாரிடம் பணம் வாங்கினாலும் எண்ணிப்பார்த்தே வாங்குகிறேன். கொடுக்கும் போதும் எண்ணிப் பார்த்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறேன்.
No comments:
Post a Comment