Sunday, 26 February 2017

இங்கு இல்லை..அங்கே இருக்கு

நான் வீட்டைப்பாத்து
வெரசலா போயிட்டிருந்தேன்.

அந்த கட  முக்குல நம்ம
சேக்காளி சொடல நிய்க்காம்.

பாத்துட்டாம்னா
அது எத்தன வகை
இது எத்தன வகன்னு
கழுத்த அறுத்திறுவாம்.

அதனால
இந்தப்பயட்ட மாட்டப்படாதுன்னுட்டு
சட்டுன்னு பக்கத்துலயிருந்த
முடுக்குல நொளஞ்சேன்.

அந்தப்பயா என்ன பாத்துட்டு
ஏல எசக்கி எங்கல போறன்னு
கூப்பாடு போட்டுட்டான்.

எல்லாருந் திரும்பிப்
பாக்காணுவளன்னுட்டு
ஏமுல கத்துத..ஒனக்கு
என்னவதாம்ல  வேணும்னு
கோவமா கேட்டேன்.

அதுக்கு அந்த பயா
நீரு  படிச்சவரு..
சந்தேகம் கேக்கலாம்னு
பாத்தா ரொம்பத்தான்
கிராக்கி பண்ணுதேரன்னு
சொன்னான்.

சரிடா..சொடலை..
அழுவாத..சந்தேகத்தை
கேளுன்னு சொன்னேன்.

"உள்ளூரிலேயே
வெல போகாதமாடு
எப்படி
வெளியூர்ல வெல
போகும்ங்கிற பழமொழிக்கு
என்னவே அர்த்தம்"னான்.

உள்ளூர்ல ஒரு பொருள்
வெல போகலன்னா அதுல
எதோ குத்தம் கொறை இருக்கும்.
அதுனால கண்டிப்பா வெளியூர்ல
வெல போறது கஷ்டம்னு
சொன்னேன்.

அந்தப்பயலுக்கு கோவம்
வந்துதே பாக்கணும்.

என்னவே இப்படி
கிறுக்குத்தனமா
மத்த பயலுவ
சொல்றமாதிரியே
சொல்றேரு..

இத நான்
ஏத்துக்கமாட்டேம்னான்.

ஏம்ல இப்படி சொல்லுதன்னு
கேட்டன்

அதுக்கு அந்தப்பயா
"அப்படின்னா
இந்த ஊர்ல  MP யாகமுடியாத
சு.திருநாவுக்கரசு, ப.சிதம்பரம்,
இல.கணேசன் இவங்கள்ளாம்
வேற ஸ்டேட்ல இருந்து எப்படில
MP ஆனாங்க"ன்னு
கேக்குறாம்யா?.

நான் என்னய்யா சொல்ல..

நாண்டுக்கிட்டு நின்னுதான்
சாவணும்.

யோசிச்சுப்பாத்தா அந்த
சொடல கேட்டது ஞாயந்தான்னு
தோணுது.

ஒங்களுக்கு?

சுருங்கிவிட்ட உலகம்

சிட்னி மாநகரத்தில்
Granville என்ற
பகுதியில் வசிக்கும்
திரு ரங்கராஜன்..
திருமதி பாரதி தம்பதியர்.

இருவருமே இங்கு
பணிபுரியும் பொறியியல்
பட்டதாரி வல்லுநர்கள்.

திரு ரங்கராஜன்
ஓர் ஐயப்ப பக்தர்.

வருடாவருடம்
சபரிமலைக்குச்
செல்வது உண்டு.

இங்கு உள்ள ஐயப்பன்
கோவில் நிர்வாகிகளுள்
ஒருவர்.

ஐயப்பன் கோவிலுக்கு
சென்றபோது அறிமுகம்.

அவரது சகோதரி வீடு
திருவரங்கத்தில் உள்ளது.
இதனால் நெருக்கம்
இறுகியது.

நான் எல்ஐசி என்று
அறிமுகப்படுத்தியபோது
திருச்சி முதற்கிளையின்
மறைந்துவிட்ட முகவர்
ராமசாமியின்
வாடிக்கையாளர்
என்று அவர் சொன்னபோது
மகிழ்ச்சியடைந்தேன்.

இப்போது
அவரது மனைவி
முகவர் ஆகியுள்ளார் என
நான் சொன்னபோது அந்த
தகவலும் தெரியும் என்றார்.

அவரும் தைரியம் கூறி
முகவராக வேண்டும் என
எடுத்துரைத்ததாகவும்
ஆதரவு தர 
உறுதியளித்ததாகவும்
கூறி மகிழ்ந்தார்.

இங்கிருந்தே அவரிடம்
தொடர்புகொண்டு நான்
வந்திருக்கும் தகவலையும்
கூறினார்.

அதற்குப்பிறகு மிகவும்
நெருக்கமாகிவிட்டோம்.

இங்கு ரத்த தானத்தின்
அவசியத்தை வலியுறுத்தி
நிறைய நண்பர்களை
ரத்தம் கொடுக்க
உற்சாகப்படுத்தி வருகிறார்.
அவரும் அவ்வப்போது
ரத்தம் வழங்கி வருகிறார்.

இன்று அவரது இல்லத்தில்
ஐயப்பன் வழிபாட்டு
பூஜை நடைபெற்றது.

அவரின் அன்பு அழைப்பின்
காரணமாக நாங்களும்
கலந்து கொண்டோம்.

அங்கு வந்த அவரது
உறவினர்களை கண்டு
உறவாட முடிந்தது.

ஒருவர்
திரு ஷண்முகப்பிரியன்.
இங்கு பணிபுரியும்
சென்னையைச்சேர்ந்த
இவர் என் பள்ளிக்கூட
வகுப்புத்தோழனும்
நெல்லை இந்துக்கல்லூரியின்
ஓய்வு பெற்ற முதல்வருமான
திரு நமச்சிவாயத்திற்கு
தூரத்து உறவு.

இன்னொருவர் திரு சுமன்.
மாயவரத்துக்காரர்.
அங்குள்ள
எங்கள் எல்ஐசி முகவர்
திரு கிருஷ்ணமூர்த்தியின்
நெருங்கிய உறவினர்.

இன்னும் ஒரு மதுரைக்காரர்
திரு குமரன் .திருச்சியில்
BSNL லில் இரண்டுவருடம்
பணியாற்றியவர்.

உலகம் மிகவும்
சுருங்கி விட்டது என்று
உணர்ந்ததால்
இத்தகவலை
மகிழ்ச்சியுடன்
பகிர்கிறேன்.

எண்ணமே கருத்துக்கள்

நிறைய நண்பரகள் வாட்சாப்பில்
வழங்கப்படும் அனைத்து 
பயன்பாடுகளையும் அறிந்து
சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

செட்டிங்சில் கொடுக்கப்பட்டிருக்கும் 
Status and Phone என்ற இடத்தில்
அவர்களே வழங்கியுள்ள வார்த்தைகளில்
பிடித்ததை தெரிவு செய்து அவற்றை 
இடம் பெறச்செய்யலாம்.

நமக்குப்பிடித்த வார்த்தைகளை
வடிவமைத்து அவற்றையும்  
பதிவு செய்யலாம்.

நம் நண்பர்கள் பலர் அருமையான 
வார்த்தைகளை வடிவமைத்துள்ளது
கண்டு பொறாமைப்பட்டிருக்கிறேன்.
பெருமைப்பட்டிருக்கிறேன்.

சிலர் ஆங்கில வாரத்தைகளை 
வைத்திருக்கிறார்கள்.
பல தமிழ்ப்பற்றாளர்கள் தமிழ்
வார்த்தைகளை வாசகமாக்கி
தங்களது அடையாளத்தை
வாசமாக்கியிருக்கிறார்கள்.

என் தொடர்புப்பட்டியலில்
உள்ள நண்பர்கள்
பயன்படுத்தும்
வாசமுள்ள தமிழ்
வார்த்தைகளை 
இங்கு பகிர்கிறேன்.

திருச்சி முகவர் முத்துராமன்...
நல்லதே நினப்போம்..நல்லதே நடக்கும்.

திருநெல்வேலி நண்பன் சுடலையாண்டி..
உழைப்பே உயர்வு தரும்.

திருச்சி எல்ஐசி உதயசூரியன்...
முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்.

திருப்பூர் முகவர் வெள்ளைசாமி..
வாழ்க வளமுடன்.

எல்ஐசி முன்னாள் அலுவலர் ஸ்ரீவத்சன்..
உள்ளொளிர் பெருஞ்சுடர்.

சென்னைவாழ் எல்ஐசி நெல்லை சேகர்..
வாழ்க்கை வாழ்வதற்கே.

பேராசிரியர் சங்கர்ராம பாரதி...
வெற்றியின் முகவரி.

ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பத்...
இல்லை எனக்கெதிர்.

சென்னைவாழ்
மன்னை ஏ.ஆர்.கே...
சொந்தம் எப்போதும்
தொடர்கதை தான்.

தஞ்சை "புரோ" ரவி..
துணிவே துணை.

தாய்கோ ரவி கணேஷ்..
இதுவும் கடந்து போகும்.

பாளை சாலமோன் ராஜா..
விரல் பிடித்து தொடர்கிறது உன் நினைவுகள்.

சென்னைவாழ் உறவினர்
நெல்லை ராதாகிருஷ்ணன்..
அடுத்தவர் நலத்தை நினைப்பவர்களுக்கு
ஆண்டு முழுவதும் சுபதினம்.

சகோதரி சென்னைவாழ்
திருமதி பத்மா சுந்தரேசன்..
இன்பம் துன்பம் எது வந்தாலும் மன
அமைதியை இழந்து விடாதே.

நெல்லை கல்லூரித்தோழர் பரிமேலழகன்..
நண்பரகளே வணக்கம்.

நண்பர் "வைசாக்" எல்ஐசி முரளி..
முதல்வனாயிரு.அல்லது முதல்வனோடு இரு.

சகோதரி மீனாட்சி முரளி..
நட்பால் இணைவோம்.

நெல்லை உறவினர்
எல்ஐசி ஆறுமுகராஜசெல்வி..
தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

கரூர் எல்ஐசி மேலாளர் குமரன்...
முயன்றால் சத்தியமாவது சத்தியமே.

"பச்சைத்துண்டு"  காயல் மஹபூப்...
பிறவிப் போராளி.

என் பால்ய நண்பன் காந்திமதிநாதன்..
மண் மரம் காற்று மழை என்
காதல் தேவதைகள்.

என் உயிர் நண்பன் ரைஸ்மில் ஜெய்சிங்...
தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்..

சென்னை எல்ஐசி ஜெயா ஜாண்..
பாடிப்பரவசமாய் நிற்கவே தவம் 
பண்ணியதில்லையடி.

நெல்லை G.S.விசுவநாதன்...
நண்பர்களை தெரிவு செய்வதில்
கவனமாய் இருத்தல் வேண்டும்.

எல்ஐசி திருக்கோவிலூர்
முதுநிலை மேலாளர் தம்பி கோகலே..
யாதும் ஊரே யாவரும் கேளிர்..

திருச்சி எல்ஐசி FSE பாலா...
கெடுவான் கேடு நினைப்பான்.

துறையூர் கவிஞர் கோதண்டராமன்...
விழு- எழுவது அறிவாய்.

தூத்துக்குடி எல்ஐசி தம்பி சுகுமார்...
செய்யமுடிந்தவன் சாதிக்கிறான்;
செய்யமுடியாதவன் போதிக்கிறான்.

ஸ்ரீவைகுண்டம் வளர்ச்சி அலுவலர் செந்தில்..
கடின உழைப்பு மட்டுமே
கனவினை நனவாக்கிடும்.

சங்கரன்கோவில் சந்திரசேகர்..
நலமே நிறைக வளமே விளைக..

திருவரங்கம் தினமலர் முருகேசன்...
தூதும் நன்றும் பிறர் தர வாரா..

தஞ்சை தரும சரவணன்...
அன்பை வெல்லது அன்பு மட்டுமே.

நெல்லை எல்ஐசி ஹேமலதாரமேஷ்...
சந்திக்காத கண்களில் இன்பம்
செய்யப்போகிறேன்.

நெல்லை இந்துக்கல்லூரி
ஓய்வுபெற்றமுதல்வர் நமச்சிவாயம்..
செய்வன திருந்தச்செய்.

கோவில்பட்டி எல்ஐசி செல்லம்..
தூக்கத்தில் காண்பதல்ல கனவு
தூங்கவிடாமல் செய்வதே கனவு.

சென்னை வாழ் உறவினர்
தூத்துக்குடி உமா..
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்.

கோபி கிளை மேலாளர் ரவியுத்தீன்..
இறையருள் நிறைக.

பெருந்துறை கிளை மேலாளர் நரசிம்மன்...
எறும்புகள் பேசுவதில்லை.

சென்னை முதுநிலை கிளை மேலாளர் ஈஸ்வரன்..
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரட்டும்.

சங்கரன்கோவில் அய்யலு..
மகிழ்ச்சி.

ஆக்சிஸ் வங்கி மேலாளர் பாலகுருமூர்த்தி..
போராடி தோற்றுப்பார்..
வெற்றியின் பாதை தெரியும்.

திருப்பூர் முகவர் கார்த்திகேயன்.
நான் ஆளப்பிறந்தவன்.

இசக்கிராஜனாகிய நான்...
எப்போதும் சுறுசுறுப்பு

எவ்வளவு பொருள்பொருந்திய
வார்த்தைகள்..



அரங்கசாமி அண்ணாச்சி

திரு அரங்கசாமி அண்ணாச்சி...

இந்த மீசைக்கார அண்ணாச்சி
ஒரு பாசக்கார அண்ணாச்சி.
நேசம் காட்டும் அண்ணாச்சி.

ஓய்வும் முதுமையும்
எனக்கில்லை என
அடித்துக்கூறும் இந்த
அண்ணாச்சி
திருச்சி நகர
மலைக்கோட்டை கிளையின்
ஓய்வு பெற்ற வளர்ச்சி
அலுவலர்.

உடலாலும்
உள்ளத்தாலும்
சிறிது சோர்ந்திருந்த
வேளை..

அரியலூர் கிளை
திரு மணவாளன்
சோர்வைத்துரத்த
அண்ணாச்சிக்கு
நல்  ஆலோசனை
ஒன்றினை அளித்தார்.

எப்போதும்
சுறுசுறுப்பாக இருந்திட
முகவர் பணியாற்றி
மற்றமுகவர்களுக்கு
ஓர் ஒளிகாட்டியாக
இருக்கலாம் என்று
எடுத்துச்சொல்லி
அண்ணாச்சியை ஒரு
முகவராக்கினார்.

முகவரானதும்
இவரது அடையாள எண்
4567 ஆகும்.
ஏற்றத்தை எடுத்துரைக்கும்
அலங்கார எண்.

முகவர் பணி துவங்கி
முதலாண்டிலேயே
மிக உயரிய பெருமையான
MDRT க்கு தகுதி
பெற்றுள்ளார்.

நெஞ்சம் நிறைகிறது.
மனது மகிழ்ச்சியால்
துள்ளுகிறது.

இந்த பெருசைப்பார்த்து
இளசுகள் உற்சாகம்
கொள்ளவேண்டும்.
உழைக்கவேண்டும்.
ஏற்றம் கொள்ளவேண்டும்.

அண்ணாச்சியை இந்த
சாதனைக்காக வணங்கி
வாழ்த்தி மகிழ்கிறேன்.

சங்கரமூர்த்தி அண்ணாச்சி

திரு சங்கர மூர்த்தி
அண்ணாச்சி..

கரம்பக்குடியைச் சேர்ந்த
இவர் இப்போது
தஞ்சாவூர் வாசி.

எல்ஐசி யிலிருந்து
கோட்ட மேலாளர்
நிலையில் ஓய்வு பெற்ற
ஓர் ஓய்வூதியர்.

தன்னை வளர்த்த
எல்ஐசி நிறுவனத்தை
வளர்த்த தாயாகவே
நினைத்து நித்தமும்
போற்றும் விசுவாசி.

இவர் வீட்டிற்கு
நாம் சென்றால்
நம் கண்களை
கவர்ந்திழுப்பது
பெரிய அளவில்
பதிக்கப்பட்டிருக்கும்
"ஒளிரும் விளக்கை
அணைந்து விடாமல்
காக்கும்கரங்கள்" என்ற
எல்ஐசி யின்
முத்திரைச்சின்னம்தான்.

இவரது மோதிரமும்
இந்த சின்னத்தை
தாங்கி நிற்கும்.

எல்ஐசி ..
தஞ்சைக்கோட்டத்தில்
தஞ்சைக்கிளையில்
வளரச்சி அலுவலராக
பல முத்திரைகளை
முதலில்  பதித்தவர்.

தஞ்சைக்
கோட்டத்திலேயே
இவரது அணிமுகவர்கள்
தான் மிக அதிக
எண்ணிக்கையில்
வளர்ச்சி அலுவலராக
உயர்ந்தார்கள் என்ற
தனிப்பெருமை
இவருக்குண்டு.

தஞ்சைக்கோட்டத்தின்
முதல் கோடியாதிபதி
என்ற முதல் மரியாதை
இவர் பெற்ற பெருமை.

2000ம் ஆண்டு
என்று நினைவு.
அந்த ஆண்டில்
மண்டலத்திலேயே
ஒரே ஒரு
கிளை மேலாளர்தான்
முதுநிலைக்கிளை
மேலாளராக
பதவி உயர்த்தப்பட்டார்.

அந்த ஒரே ஒருவர்
இந்த அண்ணாச்சிதான்.

பணி நிறைவு தம்மை
ஓய்வெடுக்க
வைத்து விடும்
என்ற நினைப்பில்
முடங்கிவிடக்கூடாது என்று
முகவராகி பழைய
சுறுசுறுப்பில்
இப்போதும்
சுழன்று சுழன்று
சுற்றிவருகிறார்.

வணங்கி
மகிழ்கிறேன்

வளமுடனும்
சுறுசுறுப்புடனும்
பல்லாண்டு வாழ
இறைவனை
வேண்டுகிறேன்.

மணவாளன்.

RGM என்று
அன்புடன்
அனைவராலும்
அழைக்கப்படுபவர்
அரியலூர் எல்ஐசி
வளர்ச்சி அலுவலர்
திரு R.G. மணவாளன்.

இந்த
RGM
என்பதை
வலமிருந்து இடமாக
வாசித்தால்
MGR.

அதனால் தான்
எப்போதுமே இவரிடம்
இளமைத்தோற்றம்.
வசீகரத் தோற்றம்.
பொன்மனம்.
வள்ளல்தன்மை.

இந்த ..
சீர்காழிக்காரர்
கணீர்குரலுக்கு
சொந்தக்காரர்.

அன்பால்
அனைவரையும்
வளைத்துப்போடும்
வல்லமை
இவருக்குண்டு.

இவரது
பாசமழையில்
நித்தம் நனையும்
அணி முகவரில்
யாருமே தனிக்கட்சி
துவங்கிட
நினைக்கவேயில்லை.

அந்த அளவு
இவர் மேல் பாசம்
இவரது
அணியினருக்கு.

இந்த....
மணவாளன்
வெற்றியின் ....
மணவாளன்.
சாதனையின்....
மணவாளன்.
நல்லுறவின்.....
மணவாளன்.

R.G. மணவாளன்.
என் பார்வையில்
Really Great
மணவாளன்.

வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்
உயர்க பெரும்புகழுடன்
பல்லாண்டு காலம்
என வாழ்த்தி
மகிழ்கிறேன்.

புத்தாண்டே வருக

புத்தாண்டை வரவேற்க
சிட்னி கடற்கரைப் பாலத்தில்
31/12/2016 இரவு 12 மணிக்கு
நடைபெற்ற வண்ணமிகு
வாணவேடிக்கை.

நகரமே மக்கள்
வெள்ளத்தின்
நடமாட்டத்தால்
களை கட்டியது.

காட்சியை கண்டுகளிக்க
மதியம் இரண்டுமுதலே
மக்கள் பாலத்தைத்சுற்றி
இடம் பிடிக்க துவங்கினர்.

பல இடங்களில் சில
பல மாடி வீடுகளை
வாடகைக்குப்பிடித்து
அமர்ந்து விட்டனர்.

மிக மிக உயரமான
பாலம் என்பதால்
தொலைவிலிருந்து
பாரத்தாலும் பாலத்தின்
அழகை காணமுடியும்.

பாலம் முழுவதும்
வெடிகள் நிரப்பப்பட்டு
ஆயத்த நிலையில்
இருந்தது.

தொடர் வண்டிகள்
இலவசமாகவே
நடத்தப்பட்டன.

மக்கள்
பாய் விரிப்புக்கள்
நொறுக்குத்தீனி
வகைகள் என்று நல்ல
ஆயத்தம் செய்து
குடும்பத்தோடு
குதூகலமாய்
வந்திருந்தனர்.

முகச்சரியாக
நள்ளிரவு12 மணிக்கு
துவங்கிய வண்ணமிகு
ஒலியோடு வந்த
ஒளிச்சிதறல்களின்
காட்சி கண்ணுக்கு
நல் விருந்தாக இருந்தது.
கால்மணி நேரம்
நன்றாக ரசித்தோம்.

பார்த்து பார்த்து
ரசிக்கவேண்டிய நிகழ்ச்சி..

முகவரே முகவரி

LIC க்கு முகவரியே முகவர் தான்.

LIC வேறு முகவர் வேறு இல்லை.
LIC யின் வேரே அவர்தான்.

முகவர்...LIC யின் முகம் அவர்.

LIC ஐயும்
வாடிக்கையாளர்களையும்
இணைக்கின்ற
பலமான பாலம் தான்
முகவர்கள்.

இவையெல்லாம்
நான்  LIC யில் பணியில்
இருந்த காலங்களில்
முகவர் கூட்டங்களிலும்,
பொது நிகழ்ச்சிகளிலும்
மனதார உதிர்த்த
உண்மை வார்த்தைகள்.

என்னுடைய தற்போதைய
ஆஸ்திரேலிய பயணத்தில்
இரண்டுநாட்கள் அதன்
தலைநகரான கேன்பரா
சென்றிருந்தோம்.

ஈரோட்டைச்சேர்ந்த
மருத்துவர் திரு கார்த்திக்
அவர்கள் இங்கு
பணியாற்றுகிறார்.

அவரது இல்லத்தரசியும்
ஒரு பொது மருத்துவர்.

அவர்களின் இல்லத்திற்கு
இரவு விருந்திற்காக
சென்றிருந்தோம்.

குதூகலமான சூழ்நிலையில்
இலக்கியம், சரித்திரக்கதை,
சமூகக்கதை என பல்வேறு
விவாதங்கள் நடத்தி
மகிழ்ந்தோம்.

அந்த இடைவெளியில்
அவர்களது வீட்டுச் சுவரை
பார்க்க நேரிட்டது..

LIC முத்திரை தாங்கி
ஒரு முகவரால் வழங்கப்பட்ட
பெரிய மாதநாட்காட்டி ஒன்று
தொங்கிக்கொண்டிருந்தது.

மந்திரச்சொல்லான
LIC என்ற மூன்றெழுத்தை
பார்த்ததும் மனம்
மகிழ்ச்சிக்கடலில்
மூழ்கியது..

அந்த நாட்காட்டியை
வழங்கிய முகவர்
குமாரபாளையம்வாழ்
திரு S.நல்லையன் அவர்கள்.

கடல் கடந்தும் LIC
புகழ் பரப்பும் முகவர்.

பெருமைப்படுகிறேன்..
இப்படிப்பட்ட  முகவர்
சமுதாயத்தால் தான்
LIC என்ற ஆலமரம்
தழைத்தோங்கி நிற்கிறது.

எத்தனை போட்டி வந்தாலும்
எந்த உருவில் வந்தாலும்
எல்லா நேரத்திலும்
LIC ஐ உயர்த்திப்பிடிக்கும்
இந்த முகவர் படைக்கு
தலைவணங்குகிறேன்.

எனவே தான்
மீண்டும் சொல்கிறேன்
LIC முகவர்
வெறும் முகவர்மட்டுமல்ல..
LIC யின் முகம் அவர்.

காரைக்குடி சீத்தாராமன்

என் அருமை நண்பர்..
இல்லை யில்லை..
அருமைச்சகோதரர்
திரு சீத்தாராமன்.

1980 முதல் 37 வருட
பழக்கம்..நெருக்கம்..

டேபிள் டென்னிஸ்
விளையாடிய நாட்களும்,
சீட்டு விளையாடிய நாட்களும்,
குன்றக்குடிக்கு கார்த்திகை
தோறும் நடந்து சென்று
குமரக்கடவுளை
வழிபட்ட நாட்களும்,
அவர் சொல்லுகின்ற
உவமைக்கதைகளும்,
நகைச்சுவைக் கதைகளும்,
இன்றளவும் நெஞ்சில்
நிலைத்து நிற்கின்றன.

பிறக்கு
வலியச்சென்று
மனமுவந்து
உதவுவதில்
மன்னர்.

இவரது பல
காரைக்குடி
உதவிகளை
(பண உதவி உட்பட)
இன்னும் நான்
மறக்கவில்லை..

இவர் பணியாற்றிய
இடங்களிலெல்லாம்
எல்லோராலும்
நினைக்கப்படுபவர்.

மறக்கமுடியாத
மறக்கக்கூடாத
நண்பர்..இவர்.

இவரை
வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க பல்லாண்டு..
வளமுடன்.நலமுடன்..
புகழுடன்..பலமுடன்..

சிக்கலில்லாமல் சிக்கலை ....

நான் கொல்லம் கிளையில்
உதவி நிர்வாக அலுவலராக
பணியாற்றிய நாட்கள்
பசுமையாக என் நினைவில்
இப்போதும் நிழலாடுகின்றன.

எனது கிளை மேலாளர்
மதிப்பிற்குரிய
திரு கே. வி. மாத்யூ.

ஒரு சமயம் தன்னுடைய
தனியறையைவிட்டு
எனது இருக்கைக்கு வந்து
என்னெதிரில் நீண்ட நேரம்
அமர்ந்திருந்தார்.

தனியறையை விட்டுவிட்டு
நான் இருக்கும் பொது
அறைக்கு வந்து ஏன்
இருக்கவேண்டும் என்று
கேட்டேன்.

அவர் சொன்னவை இதோ..

"இசக்கிராஜன்..
என் அறைக்கு ஒரு
மண்டலமேலாளர் மன்ற
உறுப்பினராகவுள்ள
முகவர் ஒருவர் பல
குற்றச்சாட்டுக்களுடன்
வந்துள்ளார்.
அவர்  வயதில் மூத்தவர்.
எப்போதுமே புகார்
பட்டியலோடுதான் வருவார்.
அவரை சமாளிக்க
என்னால் முடியாது.
அவரை வெளியேறும் படியும்
என்னால் கூற முடியாது.
கூறவும் கூடாது.

அதே நேரம் நான் எனது
அறையில் இருந்து வெளியே
வருவதை எவராலும்
தடுக்க முடியாது..

அதனால் எனது
அறையிலிருந்து
நான் வெளியே
வந்துவிட்டேன்.

என்னைக்காணாமல்
அவரும் சிறிது நேரத்தில்
வெளியே போய்விடுவார் .

பிறகு நான் எனது
தனியறைக்கு
சென்றுவிடுவேன்.

அதுவரை உங்களோடு
இருக்கிறேன்".

இந்த சிக்கலை இப்படித்தான்
சிக்கலில்லாமல் முடிக்கவேண்டும்."

இந்த டெக்னிக் எப்படி?.


சிட்னி சந்தை.

சிட்னியிலும்
சுற்றியுள்ள சில இடங்களிலும்
சிட்னி மார்க்கெட் என்ற
பெயரில் அரசால்
சந்தை அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவிதமான
பொருட்கள்
சந்தைப்படுத்தப்படுகின்றன.

எங்கள் குடியிருப்பிற்கருகில்
Flemington என்ற இடத்தில்
ஒரு சந்தை உள்ளது.

இங்கு சனிக்கிழமை தோறும்
விவசாயப்பொருட்களுக்கான
விற்பனை நடைபெறுகிறது.

இந்த சனிக்கிழமை
காய்கறி வாங்கி வர
நாங்களும் சென்றிருந்தோம்.

கார்களை நிறுத்த
விசாலமான வசதியான
பல அடுக்கு கூடம்.
கட்டணம் கிடையாது.

நிறைய பொருட்கள்
மொத்த விற்பனை தான்.

ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம்
போன்றவற்றை
கூடை கூடையாக
வாங்கிச் செல்கின்றனர்.

அதைப்போலவே
உருளைக்கிழங்கு,
தக்காளி, வெங்காயம்
போன்றவை பத்து கிலோ
பைகளில் விற்கப்படுகின்றன.

பலவகைப்பழங்களும்
பெட்டி பெட்டியாக
கிடைக்கின்றன.

அவற்றை இயந்திரங்கள்
மூலம் கொண்டு வந்து
உரிய இடத்தில் எளிதாக
கடைவிரிக்கிறார்கள்.

விலை குறைவு தான்.
ஆனால்
நம்மைப்போன்றவர்கள்
குறைந்த எடையில்
பொருட்களை வாங்க
ஒரு சில கடைகள் உள்ளன.

அங்கே கூட்டத்தில்
கடைகளில்
தமிழ்க்குரல் நிறையவே
கேட்கிறது.
பேசிப் பார்த்ததில்
தொலை தூரத்தில் இருந்து
சந்தைக்கு சாமான் வாங்க
வந்துள்ளதை அறியமுடிந்தது.

சிலர் மாதத்திற்கு
ஒரு முறை வந்து
ஒரு மாத தேவைகளுக்கு
வாங்கி பாதுகாத்து வைத்து
கொள்வார்களாம்.

எடை மிகுந்த பொருட்களை
ஒவ்வொரு கடைக்கும்
தூக்கிச்செல்வது எளிதல்ல
என்பதால் ஒவ்வொருவருமே
உருட்டிச்செல்லும் வகையில்
ஒரு பை வைத்துள்ளனர்.

கடை கடையாக
எடுத்துச் செல்லவும்
பின்னர் கார் நிறுத்தியுள்ள
இடத்திற்கும்,
வீட்டிற்குச் சென்ற பின்
காரிலிருந்து வீட்டிற்கும்
எடுத்துச்செல்ல
ஏதுவாக உள்ளது.

நாங்களும் அதை வாங்கி
பயன்படுத்தினோம்.

ரயில் நிலையமும்
ஒட்டியே இருக்கிறது.
அது கூடுதல் வசதி.

அன்று மாலையே
கடைகள் அகற்றப்பட்டு
இடத்தை கூட்டிப்பெருக்கி
ஒழுங்கு படுத்திவிடுவார்களாம்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை
வேறு விதமான பொருட்கள்
சந்தைப்படுத்தப்படுமாம்.

இந்த சந்தைக்கு
சென்று வந்தது
நல்லதொரு அனுபவம்.

நாங்கள் வாங்கி
பயன்படுத்திய
உருட்டுப்பை இது தான்.