பிற மொழி சொற்களை
தமிழ்ப்படுத்தும்போது சிலர்
அப்படியே மொழிமாற்றம்
செய்வார்கள்.
பல நேரங்களில் அவை
கருத்துச்சிதைவை
ஏற்படுத்துகின்றன
இந்தியா முழுமையும்
வணிகம் புரியும் பல
நிறுவனங்கள் முதலில்
விளம்பரத்தை
இந்தியிலோ
ஆங்கிலத்திலோ
உருவாக்கி
பிறகு அதை தமிழில் அப்படியே
மொழிபெயர்க்கின்றனர்.
அவை ரசிக்கும்படியாக
அமைவதில்லை.
நான் சொல்வது
சரிதானா என்பதை
அறிந்துகொள்ள
வங்கிகள் வழங்கும்
ஆங்கில விளம்பரத்தையும்
அதன் தமிழ் வடிவத்தையும்
வாசகங்களையும் நீங்கள்
அலசிப்பார்க்கலாம்.
அபத்தமான
மொழிபெயர்ப்பினால்
சொல்லவந்த கருத்தே
மாறியிருக்கும்.
பெரிய நிறுவனங்கள்
மும்பை போன்ற பெருநகரங்களில்
உள்ள விளம்பர நிறுவனங்களிடம்
பொறுப்பை வழங்கியிருக்கும்.
அவர்கள்
அவர்களது தரத்திற்கேற்றவாறு
மொழிபெயர்த்திருப்பார்கள்.
ஒரு சில நேரங்களில் மட்டும்
சரியாக அசத்தலாக அமையும்.
சென்னை
விமான நிலையத்தில்
நான் பார்த்த பொருந்தாத
மொழிபெயர்ப்பு ஒன்றினை
உங்களுக்கு தருகிறேன்.
மாற்றுத்திறனாளி களுக்கான
கழிப்பறையை
"For Physically Challenged"
என ஆங்கிலத்திலும்
"மெய்ப்புலன் அறைகூவலர்"
களுக்கானது என தமிழிலும்
குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போதும் அதே
வார்த்தைகள் தொடர்கின்றனவா
என்று தெரியவில்லை.
இன்றைய நிலைமை
இப்படி இருக்கும்போது
1980 வாக்கில் நான் பெற்ற
அனுபவத்தினை
இங்கு பகிரவிரும்புகிறேன்.
நான் அப்போது
எல்ஐசி காரைக்குடி கிளையில்
உதவியாளராக பணிபுரிந்தேன்.
திரு குற்றாலிங்கம் என்ற
கிளை மேலாளர்.
நெல்லை மாவட்டத்துக்காரர்.
எளிய தமிழிலேயே
எப்போதும் எழுதும் மேதை.
எங்கள் நிறுவனத்தில்
ஒவ்வொரு முகவருக்கும்
ஒரு Code Number உண்டு.
எல்லா கிளைகளிலும்
"முகவாண்மை எண் " என
குறிப்பிடுவார்கள்.
ஆனால் திரு குற்றாலிங்கம்
ஐயா அவர்கள்
அதனை "அடையாள எண் "
என்று அழகாக குறிப்பிடுவார்கள்.
இதைப்போல
ஒவ்வொரு முகவருக்கும் ஒரு
"Licence Number" உண்டு.
இதனை எல்லோரும்
"உரிமம் எண்" என்று
பதிவிடுவார்கள்.
ஆனால் நான் குறிப்பிடும் ஐயா
அதனை "அனுமதி எண் " என
அழகாகப் பதிவிடுவார்.
இதை விட
எளிமையாகவும்
சரியாகவும்
நேர்த்தியாகவும்
தமிழ்ப்படுத்த முடியாது.
நான் திருப்பூரில் பழகிய
ஒரு பெரியவர் வளர்ச்சி அலுவலர்
திரு சி.சுப்பிரமணியன் ஐயா.
அவர் Mobile Phone என்பதை
கையில் எடுத்துச்சென்று
பயன்படுத்துவதால்
"கைபேசி" என்றும்,
Land line Phone, ஐ இல்லத்தில்
இருந்து பேச பயன்படுத்துவதால்
"இல்பேசி" என்றும்
தமிழ்ப்படுத்தினார்.
இதைப்போலவே
"அங்கப்பிரதட்சணம்".
உடலால் உருண்டு கொண்டே
கோவிலை
வலமிருந்து இடதுபக்கத்திற்கு
சுற்றிவருவதால்
அந்த செயலை
"உருள் வலம்" என்று
பெரியவர் கவனகர்
திரு கனகரத்தினம் ஐயா
அவர்கள் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
இப்படியாக
அயல் மொழி சொற்களை
வார்த்தைக்கு வார்த்தை
மொழிபெயர்க்காமல்
பொருளுக்கேற்றவாறு
தமிழ்ப்படுத்தினால்
எளிமையாகவும்
நயமாகவும் இருக்கும்.
இதைப்படிக்கும் நீங்கள்
அனைத்து வங்கிகளின்
விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ள
ஆங்கில வார்த்தைகளையும்
அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும்
பதிவிடுங்களேன்.
அபத்தங்களை பார்க்கலாம்
ஆக்சிஸ் வங்கியிலிருந்து
துவக்குவோமா...?
அலஹபாத் வங்கியிலிரு்ந்து
துவக்குவோமா..?
No comments:
Post a Comment