Sunday, 7 January 2018

உழைப்பால் உயர்ந்த ஆறுமகம்.

அன்புச்சகோதரர்
ஆறுமுகம்...

1970 களில் எல்ஐசி
காரைக்குடி கிளையில்
அலுவலகத்தை காலையில்
சுத்தப்படுத்தி தண்ணீர்
எடுத்து வைக்க
குறைந்த சம்பளத்தில்
அமர்த்தப்பட்ட ஒரு
பகுதி நேர ஊழியர்.

அந்த வேலையில்
வரும் ஊதியம்
அவரது குடும்பத்தை
பேணுவதற்கு பத்தாது.

கூடுதல் வருவாய்க்காக
பிற ஊழியர்களுக்கு
அவர்களின் வீட்டிலிருந்து
மதிய உணவு எடுத்து வருவது,
வீட்டிற்கு தேவைப்படும்
பொருட்களை
வாங்கிக்கொடுப்பது
என்று பல் வேறு
வகைகளிலும் உதவுவார்

எந்த உதவி என்றாலும்
முகம் கோணாமல்
மனமுவந்து செய்து
வந்தார்.

ஒவ்வொரு ஊழியரும்
அவரை தங்கள்
குடும்ப உறுப்பினர் போல்
நினைத்து நிதி உதவியும்
செய்வார்கள்.

இப்படி காலம்
ஓடிக்கொண்டிருந்தபோது
திரு சுப. வரதராஜன் சார்
அவர்கள் நிர்வாகப்பிரிவிற்கான
உதவிக்கிளை மேலாளர்.

திரு குத்தாலிங்கம் சார்
அவர்கள் கிளை மேலாளர்.

சென்னை கோட்டத்தில்
விற்பனை மேலாளராகவும்
பணியாற்றியிருக்கிறார்.

இருவரும்
கலந்தாலோசிக்கிறார்கள்.

ஆறுமுகத்திற்கு
உதவ முடிவு செய்கிறார்கள்.

அவர் பகுதிநேர ஊழியர்
என்பதால் முகவராவதற்கு
தடையில்லை
என கருதுகிறார்கள்.

உடனே முகவராக 
நியமனம் செய்து
ஒரு நல்ல வழி காட்டி
உதவுகிறார்கள்.

திரு குத்தாலிங்கம் சார்
முதல் நிலை அலுவலகர்கள்
சங்கங்களின் கூட்டமைப்பிற்கு
அகில இந்திய செயலாளராகவும்
இருந்தவர்.

ஒரு நாள் காலை வேளையில்
அவரது இல்லத்திற்கு
ஒரு தொலைபேசி
அழைப்பு வருகிறது.

சாரின் மனைவி போனை
எடுத்து சாரைக்
கூப்பிடுகிறார்கள்.

தொலைபேசி இணைப்பை
கொடுத்த தொலைபேசி  ஊழியர்
மதுரையிலிருந்து வரும்
தொலைதூர அழைப்பு
என்று சொன்னதை
கவனிக்கவில்லை.

சார் போன் கருவியை
வாங்கிக்கொள்கிறார்.

பேசுபவர் நான்
ராமசாமி பேசுகிறேன்
என்று சொல்கிறார்.

இது லோக்கல் கால்
என நினத்துக்கொண்டதாலும்
காரைக்குடி கிளையில்
ராமசாமி என்ற பெயரில்
பல முகவர்கள் உள்ளதாலும்
எந்த ராமசாமி என்று
கேட்கிறார்

அழைத்த கோட்ட மேலாளர்
கோட்ட மேலாளர் என்று
கூறியிருக்கலாம்.

அல்லது பிரபலமான தனது
மூன்றெழுத்து இனிஷியலை
கூறியிருக்கலாம்.

எந்த ராமசாமி என்ற கேள்வி
எதிர்முனையில் ஒலித்ததும்
தன்னை கிளை மேலாளர்
அவமதித்து விட்டார் என
தவறாக நினைக்கிறார்.

தனது ஆதங்கத்தை
கிளை மேலாளரிடம்
ஓங்கி ஒலித்திருக்கிறார்.

இந்த சம்பவம்
முடிந்து விட்டாலும்
கோட்ட மேலாளரின்
மனதிலிருந்து
மறையவில்லை.

கிளை மேலாளரை
மட்டந்தட்டவும்
பழிவாங்கவும்
வாய்ப்புக்காக
காத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் தான்
பகுதி நேர ஊழியர்
முகவராக நியமனம்
செய்யப்பட்ட தகவல்
அவரை சென்றடைகிறது.

பகுதி நேர ஊழியரை
முகவராக நியமனம்
செய்த செயல் தவறு என்றும்
அதற்கான விளக்கம் கேட்டும்
முகவர் பணிக்கு
தடை விதித்தும்
தாக்கீது வருகிறது.

கிளை மேலாளர்
பயப்படவுமில்லை
பதட்டப்படவுமில்லை.

நிரந்தர ஊழியருக்குத்தான்
முகவராக தடை உள்ளது எனவும்
பகுதி நேர ஊழியருக்கு
தடையேதுமில்லை எனவும்
பதில் எழுதி அனுப்பினார்.

இந்த சிக்கல் தீர்வுக்காக
மைய அலுவலகத்திற்கு
எடுத்து செல்லப்படுகிறது.

மைய அலுவலகம்
கிளைமேலாளரின் முடிவில்
தவறேதும் இல்லை என்று
பதில் அனுப்பியது.

இந்த சாதகமான பதிலை
பெற்ற திரு ஆறுமுகம்
நண்பர்கள் உதவியுடன்
நல்ல முறையில் வணிகம்
புரியத் தொடங்குகிறார்.

அப்போது தான் பிறந்த
என் புதல்வியின் பெயரில்
ஒரு குழந்தைகளுக்கான
திட்டத்தில் ரூபாய் 177
காலாண்டுத்தவணையில்
பாலிசி கொடுத்து உதவினேன்.

ஆறுமுகத்தின் முகவர்
அடையாள எண் 2623747.

நண்பர்களின் உதவியால்
நல்ல முறையில் வணிகம் புரிந்து
தலைவர் மன்ற உறுப்பினர்
நிலைக்கு உயர்கிறார்.
தமது குடும்ப நிலையை
வளமிக்கதாக்குகிறார்.

வழிகாட்டிய
திரு குத்தாலிங்கம் சார்
திரு வரதராஜன் சார்
வளர்ச்சி அலுவலர்
திரு சுப்பையா சார்
போன்றோரையும்
வளர்ச்சிப்பாதையில்
ஒளிகாட்டிய அலுவலக
நண்பர்களையும்
நெஞ்சிலிருத்தி
நாளும் போற்றி வருகிறார்.

தற்போது
அலுவலகப்பணியிலிருந்து
ஓய்வு பெற்று விட்டாலும்
அலுவலக நண்பர்களுக்கு
உதவும் பணியை இன்றும்
செய்து கொண்டுதான்
இருக்கிறார்.

உழைப்பால் உயர்ந்த
உன்னதமானவர்களைப்பற்றி
படித்திருக்கிறேன்.

உழைப்பால்
திரு ஆறுமுகம் உயர்ந்ததை
நேரில் பார்த்து
உணர்ந்துள்ளேன்.

இவரைப்போல்
ஆயிரக்கணக்கான
ஆறுமுகம்கள்
எல்ஐசி முகவர்களாக
ஒளிர்ந்தும் மிளிர்ந்தும்
கொண்டிருக்கிறார்கள்.

விளக்கமாக தெரிந்துகொள்வோம்

நான் கொஞ்ச நாட்களுக்கு முன்
எனது ஆதார் எண்ணை
BSNL கை பேசி எண்களுடன்
இணைப்பதில் ஏற்பட்ட
சிக்கல்கள் பற்றி விரிவாக
சொல்லியிருந்தேன்.

புதிதாக கைரேகையையும்
கருவிழியையும்
மீண்டுமொருமுறை பதிவு
செய்திவிட்டு வீட்டிற்கு
வந்துவிட்டேன்.

இரண்டு நாட்களுக்கு
ஒருமுறை எனது விவரங்கள்
பதிவேற்றப்பட்டுவிட்டனவா
என்று ஆதார் தளத்தில்
பார்த்துக்கொண்டிருந்தேன்.

சாதகமான தகவல்
வரவில்லை.

ஒருநாள் என்னுடைய
கைபேசி எண்ணிற்கு
ஒரு குறுஞ்செய்தி
வந்தது..

பதிவேற்றுவதில்
நடைமுறைச் சிக்கல்
உள்ளபடியால்
இன்னும் சிலநாட்கள்
பொறுத்திருங்கள் என்று.

அப்போதுதான்  எனக்கு
ஒரு பொறி தட்டியது.

என்னுடைய கைபேசி யில்
mAadhaar என்ற செயலியை
நிறுவி அதன்மூலம்
என்னுடைய ஆதாரையும்
எனது மனைவியின்
ஆதாரையும் சேர்த்திருந்தேன்.

அப்போது ஒரு பாஸ்வேர்ட்
வைத்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டது.

அந்த ரகசியக்குறியீடு
மொபைலில் செயலியை
பயன்படுத்துவதற்காக இருக்கும்
என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அது நம்முடைய
பயோமெட்ரிக் தகவல்களான
கை ரேகைகளையும்
கருவிழி பதிவுகளையும்
வேறு யாரும் பார்க்காதிருக்க
வைக்கப்பட்டுள்ள ஒரு
பாதுகாப்பு ஏற்பாடு.

பொறி தட்டியவுடன்
கைபேசியில் mAadhaar ஐ
தட்டிப்பார்த்தேன்.

Biometric தகவல்களை
பிறர் பார்க்காதிருக்க
போடப்பட்டுள்ள
தடைத்திரையை
விலக்குவதற்கான்
ரகசியக் குறியீட்டை
பதிவு செய்ய
கேட்டுக்கொண்டது.

ரகசியக்குறியீடை
பதிவு செய்ததும் 10 நிமிடத்திற்கு
தடைத்திரை விலகி இருக்கும்
என  ஒரு தகவல் தந்தது.

இந்த 10 நிமிட காலத்தில்
யாரும் நமது தகவல்களை
சரிபார்த்துக்கொள்ளலாம்.

இப்போது தான்
எனது தகவல்களை
BSNL நிறுவனத்தால்
ஏன் ஒப்பிட்டுப்பார்க்க
முடியவில்லை
என்பதை உணர்ந்தேன்.

அதற்குப்பிறகு
ஆதார் தளத்திற்கு சென்று
பார்த்தால் Biometric
Lock/unlock என்ற வசதி
கொடுக்கப்பட்டுள்ளதை
பார்த்து அறிந்துகொண்டேன்.

இதற்கிடையில்
ஆதார் அமைப்பின் உதவிக்குழு
எனது புதிய பயோ மெட்ரிக்
பதிவுகளை பதிவேற்றம் செய்து
முடித்த தகவலை
குறுஞ்செய்தியாக அனுப்பியது.

பிறகு திருச்சி சிங்காரத்தோப்பு
BSNL அலுவலகம் சென்று
நண்பர் திரு வேல்முருகனிடம்
ஆதார் இணப்பிற்காக
இந்த தகவல்களை
பகிர்ந்து கொண்டேன்.

அவர் வைத்திருக்கும்
சோதனைக்கருவியில்
விரல் ரேகையை பதிவதற்கு
முன் என்னுடைய mAadhaar
செயலியில் ரகசியக்குறியீட்டு
எண் மூலம் தடையை நீக்கினேன்.

ரேகையை பதிந்ததும்
உடனே ஏற்றுக்கொண்டது.

நான்கு இணைப்பு எண்களை
இணைக்க வேண்டியிருந்த்து.

நான்காவது எண்ணை இணைக்கமுயலும்போது
பத்து நிமிடம் முடிந்து விட்டதால்
தானாகவே திரை விழுந்துவிட்டது.

மீண்டும் ஒருமுறை
ரகசியக்குறியீட்டு எண்மூலம்
தடைத்திரையை விலக்கியதும்
நான்காது இணைப்பு எண்ணையும்
இணைக்க முடிந்தது.

ஆதார் தளத்தில் இத்தனை
பாதுகாப்பு வளையங்கள்
வைத்திருப்பதை அறிந்து
மகிழ்ந்தேன்.

இப்போது நமது தகவல்களை
யார்யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள்
என்பதையும் அறிந்து கொள்ளும் வசதியையும்  ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விவரங்களை சரியாக
தெரிந்து வைத்திருக்காத்தால்
சிறு வசதிக்குறைவு எனக்கு
ஏற்பட்டது.

இந்த நேரத்தில் BSNL
நிறுவனத்திற்கு ஒரு பயனுள்ள
ஆலோசனை..

BSNL நிறுவனம் பயன்படுத்தும்
மென்பொருளில்
ரேகை பதிவு செய்ய வருபவர்கள்
ரகசியத்தை பாதுகாக்க 
தடைசெய்திருந்தால்
அதை அறிந்து தெரியப்படுத்தினால்
வாடிக்கையாளர் தடைத்திரையை
பத்து நிமிடங்கள்  விலக்கிவைத்து
இணப்பு எண்களை இணக்க
ஏதுவாக இருக்கும்.

எனது இந்த அனுபவத்தை
படித்துப்பார்க்கும் நண்பர்கள்
ஆதாரி்ல் உள்ள தங்களைப்பற்றிய
ரகசியத்தகவல்களுக்கு
பாதுகாப்பு வளைய வசதியை
பயன்படுத்திக்கொள்ளுமாறு
வேண்டிக்கொள்கிறேன்.

கைபேசியில்
mAadhar செயலியை
நிறுவி தங்களின்
ஆதார் அட்டையை
சேர்த்துக்கொள்ளும்படியும்
கேட்டுக்கொள்கிறேன்.

முதலில் இந்த செயலியை
கைபேசியில்  நிறுவும் போது 
அதன் அம்சங்களை நன்கு படித்து
தெரிந்து கொண்டிருந்தால்
இந்த மோசமான அனுபவம்
ஏற்பட்டிருக்காது.

எனக்கு எல்லாம் தெரியும்
என்ற ஆணவத்திற்கு
கிடைத்த சம்மட்டி அடி
இந்த அனுபவம்.

ஆணவத்தை அகற்றுவோம்.
அனைத்தையும்
அறிந்துகொள்வோம்.

புத்தாண்டே வா

2017...
அநியாயங்கள்
ஆட்சி செய்த ஆண்டு.

ஆர்ப்பாட்டங்கள்
நிறைந்த ஆண்டு.

இயற்கை சீற்றத்தில்
தத்தளித்த ஆண்டு.

ஈடு செய்யமுடியாத
இழப்பை தந்த ஆண்டு.

உற்பத்தி
குறைந்திருந்த ஆண்டு.

ஊழல்
பெருகியிருந்த ஆண்டு.

எல்லோரும் பொறுமையாய்
இருந்த ஆண்டு.

ஏமாந்து
சீரழிந்த ஆண்டு.

ஐயமேதுமின்றி
அயோக்கியர்கள்
வலம் வந்த ஆண்டு.

ஒற்றுமை
குலைந்திருந்த ஆண்டு.

ஓயாமல்
ஒருவரையொருவர்
தூற்றிப்பேசிய ஆண்டு..

நல்ல படியாய் போ.போ.
போய்ச்சேர்.

2018 ஏ வா...
வாசத்துடன் வா.

அழகைச்சுமந்து வா..
அன்பைச்சுமந்து வா..

இனிமையை அழைத்துவா.

உண்மையுடன்
கை கோர்த்து வா.

நேர்மையை
நிறைய கொண்டுவா.

முன்னேற்றத்தை
கட்டி இழுத்துவா.

வளர்ச்சிப்பாதையில்
உந்திவிட வா.

தளர்ச்சியை
தள்ளிவிட்டுவிட்டு வா..

வா ..வா..

ஊழலை
உதறித்தள்ளுவோம்.

ஊழல் பெருச்சாளிகளை
உள்ளே தள்ளுவோம்.

சமூக அவலங்களை
சுட்டெரித்திடுவோம்.

உன் விடியலுக்குக்
காத்திருக்கிறோம் வா.

வா 2018 ஏ வா..
வா..வா..வா.
வசந்தத்தை அள்ளித்
தா..தா..தா.

உணர்வுபூர்வ உறவு

இன்று காலை
வாட்சாப்பில்
என் நண்பர்
திரு முரளிதர் அவர்கள்
பதிவு செய்திருந்த
அருமையான வரிகள்...

"Friends are those rare people
who ask how you are and then
wait for the answer."

இந்த வைர வரிகளை
படித்ததும் எனக்கு
பழைய நினவுகள்
வந்து போயின.

நான் முன்பு இருந்த
ஒரு வெளி மாநில
கோட்டத்தில்
Marketing பொறுப்பில்
எங்களுக்கு
முன்பு இருந்தவர்கள்
மிகவும் கெடுபிடியுடன்
இருந்திருக்கிறார்கள்.

அடுத்ததட்டில்
இருந்தவர்கள்
எப்போதும் ஒரு
அழுத்தத்திலும்
விரக்தியிலும்
உற்சாகமின்றியும்
இருந்தார்கள்.

அது வணிகத்திலும்
வெளிப்பட்டது.

வணிகத்தில் ஏற்றம்
காணவில்லை.

எல்லோருக்கும்
ஏமாற்றமே நிறைய
கிடைத்தது.

வணிகச் சறுக்கல்
பற்றிய செய்தி
எங்களுக்கு மேலே
இருந்தவர்களின்
காதுகளுக்குச்சென்றது.

எங்களையும்
எங்களுக்கு
அடுத்த நிலையில்
இருந்தவர்களையும்
உற்சாகப்படுத்தி
மண்டல மேலாளர்
பேசினார்.

Marketing என்றால் என்ன,?
பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை
எப்படி எப்படி
உற்சாகப்படுத்தி 
உசுப்பி விட வேண்டும்,
எப்படி எல்லோரிடமும்
நல்லுறவு வைத்துக்கொள்ளவேண்டும்
என்றெல்லாம் 
சிறிய சிறிய
ஆலோசனைகளை
அள்ளி வழங்கினார்.

அவர் கூறிய
எளிமையான
உண்மையான
வார்த்தைகள்
இதோ இரண்டே வரிகளில்

Marketing is NOTHING But
Emotional Relationship.

இந்த பொருள்பொதிந்த
வார்த்தைகள்
இன்னமும்
என் காதுகளில்
ரீங்காரமிட்டுக்
கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரி
உணர்வுபூர்வ உறவை
பெற்றிருந்த நல்லிதயம்
கொண்டிருந்தவர்கள்
என் நினைவிற்கு வந்து
போனார்கள்..

Marketing பொறுப்பில் நிர்வாகப்பிரிவிலிருந்து
மாற்றம் பெற்று வந்த
பலர் இருந்திருக்கிறோம்..

எங்களைப்போன்றோர்
கிளை மேலாளர்களுடனும்
வளர்ச்சி அலுவலர்களுடனும்
முகவர்களுடனும்,
தொலைபேசியில்
கலந்துரையாடுவோம்.

கருத்தரங்குகளில்
விவாதிப்போம்.

அப்போதெல்லாம்
எடுத்த எடுப்பிலேயே 
வணிகம் எப்படி உள்ளது?

வணிகப்பெருக்கத்திற்கான தடாலடித்திட்டங்கள் என்ன?

எந்த மாதிரியான 
உதவி தேவை?

என்பவை பற்றித்தான்
உரையாடலும்
விவாதங்களும் இருக்கும்.

அதே நேரம்
முன்பு  முகவர்களாக
வெற்றிகரமாக
பணியாற்றிவர்கள்,
வளர்ச்சி அலுவலர்களாக 
வாகை சூடியவர்கள் என்று
பலர் Marketing பொறுப்பில் 
உயர் பதவிகளில்
இருந்துள்ளனர்.

அவர்களது அணுகு முறை
வேறு ரீதியில் இருப்பதை
நேரில் கண்டு
உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு நெருக்கமான
ஒரு கிளை மேலாளர்.

அவர் பெயர்
திரு ஸ்டீபன்..

நாஞ்சில் நாட்டுக்காரர்.

தற்போது ஓய்வூதியர்..

அவர் Marketing கில்
பல நிலைகளில்
பல துறைகளில்
பல இடங்களில்
பொறுப்பில்
இருந்திருக்கிறார்.

வெற்றிகரமாக செயல்பட்டு
அகில இந்திய அளவில் கூட
சாதனை படைத்திருக்கிறார்.

அவர்
அடுக்குமொழியில் பேசும்
பெரிய பேச்சாளர் இல்லை.

ஓங்கிய குரலில் பேசி
கேட்பவர்களை 
வசியப்படுத்தும்
நாஞ்சில் புயல் இல்லை.

ஆனாலும்
எளியநடையில் பேசி
முகவர்களின் நெஞ்சை
கொள்ளை  கொள்ளும்
நாஞ்சில் நாட்டு
நல் நிபுணர்.

அவர் என்னை
கைபேசியில் அழத்தாலும் சரி
நான் அவரை அழைத்தாலும்சரி
முதலில் அவர் தான் 
பேச்சைத் துவக்குவார்.

"சார் .. எப்படி யிருக்கிய..

நல்லாயிருக்கேளா..

போன தடவை பேசும் போது
கால் வலின்னு சொன்னேள..

டாக்டரை பார்த்தேளா..

என்ன சொன்னாரு..

இப்ப பரவாயில்லையா..

ஒடம்ப நல்லா
பார்த்துக்கோங்க..

வீட்டுல எப்படியிருக்காவொ

மவனும் மகளும் எப்படியிருக்காவொ..

மருமகன், மருமகள்,
பேரன்மார் எல்லாம்
எப்படியிருக்காவொ?

ஊருக்கு எப்போ
வாராவொ?

நீங்க அவொள பாக்க
போகலயா.." ன்னு
விசாரித்த பிறகு தான்
அலுவலகம் பற்றியும்
வணிகம் பற்றியும் 
பேசுவார்.

இந்த மாதிரியான
நல்லுறவு பேணும்
ஓர் ஆயுதம் தான்
அவரது பெரும் வெற்றிக்கு
அடிப்படை காரணம்.

களப்பணியிலிருந்து 
பதவி உயர்வில்
உயர்பதவிக்கு வந்துள்ள அனைவரின்
அணுகுமுறையும்
திரு ஸ்டீபன் அவர்களின்
அணுகுமுறை போல்தான்
இருக்கும்.

அவர்களுடைய
விசாரிப்புகளும்
இந்த முறையில் தான்
இருக்கும்.

எடுத்துக்காட்டிற்காக மட்டுமே
என்னுடனான
பேச்சைப்பற்றிக்
குறிப்பிட்டுள்ளேன்.

முகவர்களிடம்
பேசும்போதும்
வளர்ச்சி அலுவலர்களுடன்
பேசும் போதும்,
வாடிக்கையாளர்களுடன்
விவாதிக்கும் போதும்,
சக மற்றும் உயர்
அலுவலர்களிடம்
கலந்துரையாடும் போதும்
அந்த களப்பணி வழி வந்த நண்பர்களின் அணுகுமுறை
இதைப்போன்ற
உணர்வுபூர்வமான 
உறவையே வெளிப்படுத்தும்.

இந்த உணர்வுபூர்வ
நல்லுறவே
மிகப்பெரிய வணிக ஈடுபாட்டை களப்பணியாளர்களிடம் ஏற்படுத்தும்.

இதுவே
மிகச்சிறந்த விளைச்சலை
வணிகத்தில் குவிக்கும்.

எனவே எனது
மண்டல மேலாளர்
அவர்கள் கூறிய
"Marketing is Nothing but
Emotional Relationship."
என்பவை மிகச்சரியானவை
என்பதை அனுபவபூர்மாக
உணர்ந்திருக்கிறேன்.

Marketing பொறுப்பில்
உள்ள அனைவருமே
"Business like"
உறவை உதறித்தள்ளி
"Emotional Relationship" ஐ
வளர்த்துக்கொள்வோம்.

உணர்வு பூர்வ உறவே வணிகத்துறையில்
வெற்றிக்கு அடிப்படை.

Tuesday, 2 January 2018

நோட்டு எம்.எல்.ஏ.

மதுரையில்
எல்ஐசி நிறுவனத்தின்
கோட்ட அலுவலகம்
செல்லூர் பகுதியில் உள்ளது.

ஊழியர்கள் அலுவலர்கள்
பலர் சேர்ந்து மீனாம்பாள்புரம்
என்ற பகுதியில்
எல்ஐசி காலனி என்ற பெயரில்
ஒரு குடியிருப்பு காலனியை
அமைத்திருக்கிறார்கள்.

சில வருடங்கள் கழித்து
வேறு பல ஊழியர்கள்
ஒன்று சேர்ந்து சாந்திநகர்
என்ற பகுதியில்
எல்ஐசி காலனி என்ற பெயரில்
ஒரு  குடியிருப்பு காலனியை
அமைத்திருக்கிறார்கள்.

நான் 1980 ல்
சென்னைக்கோட்டத்திலிருந்து
மதுரைக்கோட்டத்திற்கு
மாறுதல் பெற்று வந்தேன்.

அந்த காலகட்டத்தில்
காரைக்குடி கிளையில்
என்னுடன் பணியாற்றியவர்
மதுரைக்காரரான
திரு MK சிவராமன்.

அவர் என்னிடம் பேசும்போது
அந்த காலனி களைப்
பற்றிக்குறிப்பிடும்போது
மீனாம்பாள்புரம் பகுதி
LIC காலனியை
"AO" காலனி என்றார்.

சாந்தி நகர் பகுதி
LIC காலனியை
"மாவோ" காலனி என்று
கூறினார்.

எனக்கு முதலில்
ஏன் அப்படி பெயர்
என்று புரியவில்லை.

அவரிடம் விளக்கமாகக்
கூறும்படி  கேட்டேன்.

AO நிலை வரையில்
உள்ள அலுவலர்களும்,
ஊழியர்களில் AO போன்ற
அதிகார வர்க்க மனப்பான்மை உள்ளவர்களும்
மீனாம்பாள்புரத்தில் வீடு கட்டி இருந்ததால் அது
"AO" காலனி என்று
அழைக்கப்படுவதாக
ஆர்வமுடன் கூறினார்.

ஒற்றுமையுடனும்
தோழமையுடனும்
செயல்படும் ஊழியர்கள் சேர்ந்து
வீடு கட்டியுள்ள  காலனி
"மாவோ" காலனி என்று
அழைக்கப் படுவதாக
மகிழ்ச்சியுடன் கூறினார்.

அதை அடுத்து ஒரு
விளக்கமும் கூறினார்.

AO காலனியில்
உள்ளவர்களிடம்
ஒருவொருக்கொருவர்
உதவியோ தோழமையோ
அவ்வளவாக இருக்காது
என்றார்.

ஆனால்
மாவோ காலனியில் குழந்தைகளிடையே கூட
ஒற்றுமையும் தோழமையும்
மிகுந்து காணப்படும்
என்றார்.

காலனிகளுக்கு
சரியாகத்தான்
பட்டப் பெயர்கள்
வைத்துள்ளனர்.

இதை எதுக்குய்யா
இப்போ சொல்றேருன்னு
கேட்பது காதுகளில்
நன்றாகவே விழுகிறது..

சொல்கிறேன்..
சொல்லிவிடுகிறேன்..

என்னுடயை கேரள நண்பர்
திரு கி.சந்திரசேகரன்.
என்னிடம் பேசும்போது
அங்கே அவரது தொகுதியின்
எம்.எல்.ஏ ஓர்
"ஓட்டு" எம்.எல்.ஏ
என்று பெருமையுடன்
கூறினார்.

நம்மூரு
எம்.எல்.ஏ க்களெல்லாம் வெறும்
"நோட்டு" எம்.எல்.  க்கள்
என்று எகத்தாளமாக்
கூறினார்.

உண்மை தானே?

இதைக் கேட்டதும் தான்
மதுரை எல்ஐசி
காலனிகளை பற்றிய
பெயர்க்காரணம் எனது
நினைவிற்கு வந்தது.