Thursday, 17 May 2018

வார்த்தைகள்...அவை காந்தம்

நான் அலுவலக வாழ்க்கையானாலும் சரி தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையானாலும் சரி, என்னை விட வயதில் மூத்தவர்களை பெயர் சொல்லி ஒருபோதும் அழைக்கமாட்டேன். நெருங்கிப்பழகிய தெரு & பள்ளி, நண்பர்கள்  மட்டும்விதிவிலக்கு.

சார் என்று சிலரை அழைப்பேன். அண்ணாச்சி,மாமா,  அத்தா,, காக்கா, என்றும்   கேரளத்திலிருக்கும்போது அச்சாயா, சேட்டா என்றும் கர்னாடகத்திலிருந்தபோது ஹிரிய அண்ணா,  சிக்க அண்ணா என்றும்   அடைமொழி போட்டுத் தான்  அழைப்பேன்.   முகவர்களை,  
வளர்ச்சி அலுவலர்களை அலுவலகப் பெரியவர்களை அழைப்பதும் இப்படித்தான்.

திருப்பூர் முகவர்  திரு CKP என்ற பெரியவரை சித்தப்பு என்றுதான் கூப்பிடுவேன்.. திருச்செந்தூர் 
கணேசன் அண்ணாச்சி, ஆனா மூனா அத்தா, தூத்துக்குடி SAT அண்ணாச்சி, வள்ளியூர் உதுமான் அத்தா,, பாளை கணபதி அண்ணாச்சி, பேச்சியப்பன் அண்ணாச்சி, குழித்துறை முகவர் 
கொச்சப்பன் நாயர் சேட்டா,  இப்படித்தான் அழைப்பேன். இதனாலேயே  எங்களுக்குள் இனம் புரியாத ஒரு நெருக்கம் ஏற்பட்டதுண்டு.

திருச்செந்தூர் கிளை.. 719-755 என்ற  அடையாள எண் கொண்ட  ஒரு முகவர் பெரியவர்  திரு K.S. கணேசன்  அண்ணாச்சி. இவர்தான் 1981 ல் இங்கு  புதிய கிளை அலுவலகம் வர தொடர் முயற்சி செய்து ஏற்பாடு செய்தவர். அலுவலம் இயங்க முதல் கட்டிடம் பார்த்ததும் இவர்தான். இடப் பற்றாக்குறையால் வேறு ஒரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க சென்னை தொழிலதிபர் 
ஒருவரை ஏற்பாடு செய்ததும் இவரே தான்.

இந்த உடன்குடிக்காரர் எளிமையின் சின்னம். எளிமையே ஆனாலும்மிக்க செல்வாக்குடையவர். 
நான் இவரை  நம் அலுவலக  உயர் அலுவலர்களிடம்  அறிமுகப்படுத்தும் பொழுது இவரின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுள் நான் தான் மிகக் குறைந்த  நிலையில் உள்ளவன். வெறும் கிளை மேலாளர் தான் என்று கூறுவேன்.

இவரது நட்பு வட்டத்தில்  உள்ளவர்கள்..... VV மினரல்ஸ் அதிபர் திரு வைகுண்டராஜன் 
அண்ணாச்சி, சரவணபவன் நிறுவனர்  திரு ராஜகோபால்  அண்ணாச்சி, Premier Cooker  திரு சிவநேசன் அண்ணாச்சி, சென்னை தி.நகர்  சுந்தர்  ஸ்டோர்ஸ் அண்ணாச்சி, பந்தல் ஒப்பந்தகாரர்
திரு குமரேசன் அண்ணாச்சி, தேவி, தினகரன், தினத்தந்தி  பத்திரிக்கை அதிபர்கள், முன்னாள் அமைச்சர்கள் திரு கே.பி.கே,  திரு நடேசன்பால்ராஜ், திரு அனிதா ராதாகிருஷ்ணன்  என்று பல கோடீஸ்வரர்கள்.

என்னை இவர்களின் இல்லங்களுக்கு  அழைத்துச் சென்றிருக்கிறார். மேற்குறிப்பிட்ட எல்லோருமே
இவரை "அண்ணாச்சி" என்ற அடைமொழி யோடு  அழைப்பதை கேட்டிருக்கிறேன். இவரும் அவர்களை  அண்ணாச்சி என்றேதான் அழைத்துப்பேசுவது வழக்கம். இவருக்கு அவ்வளவு  மதிப்பும் மரியாதையும் அவர்களிடத்தில்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தசரா நடைபெறும் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலின் அறங்காவலராக இருந்தவர்  இவர்.
திமுக ஆட்சியானாலும் அதிமுக ஆட்சியானாலும் இவரைத் தொடமாட்டார்கள். தொடர்ந்து இவரே இருக்க அனுமதிப்பார்கள்.

இவருக்கு இருக்கும் பெரிய செல்வாக்கை  நாம் தான்  வணிகமாக  மாற்றவேண்டும். 1992-94 ல் நான்தான் இங்கு கிளைமேலாளர். நெல்லைக்கோட்டம்  துவங்கப்பட்ட முதல் ஆண்டில் காப்புத் தொகை அடிப்படையில் கோட்டத்து முகவர்களுள் இவர் முதல்வர்.

இவர் அலுவலகத்துக்கு  வந்தால் என் அறைக்கு வந்துவிட்டுத்தான் போவார். நானும் இவர் பகுதியில் சுற்றுப்பயணம் செல்லும்போது இவரை அழைத்துக்கொண்டு குறைந்தது பத்து
வாய்ப்பாளர்களையாவது பார்க்காமல் இருக்க மாட்டேன். வருடத்திற்கு இரு முறை  இவருடன் சென்னை சென்று நல்ல அளவில் வணிகம் சேர்த்து வருவோம்.

கிளைக்கு வரும்போது எங்கள் கிளையின் உதவிக்கிளை மேலாளரை பார்த்தால் அண்ணாச்சி
பதுங்கி  பதுங்கி வெளியே சென்றுவிடுவார். என்னையும் பார்க்க  எனது அறைக்கு  வரமாட்டார்.
எனக்கு இதற்கு  என்ன காரணம் என்று புரியவில்லை. ஒருநாள்  இவர் வரும்போது உதவிக்கிளை மேலாளர் "என்ன கணேசன். இங்கே வாங்க" என்று  அழைத்த காட்சியை கண்டு  நான் பதபதைத்து விட்டேன்.

கோடீஸ்வரர்களாலேயே "அண்ணாச்சி" என  மிகுந்த மரியதையுடன் அழைக்கப்படும்  ஒரு பெரியவரை  வயதில் குறைந்த உதவிக்கிளை மேலாளர் பெயர் சொல்லி அழைப்பதா என நினைத்து வருந்தினேன். அப்போது தான் அண்ணாச்சி  இவரைத் தவிர்ப்பது இந்த காரணத்திற்காகத்தான்
இருக்கவேண்டும் என்று  எனது மனதில்தோன்றியது.

உதவிக்கிளைமேலாளரை எனது அறைக்கு அழைத்து அண்ணாச்சிக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு பற்றி எடுத்துக்கூறி நாம் அவரை பெயர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொண்டேன். உடனே அந்த அலுவலரும் அண்ணாச்சியின்  பெருமை பற்றி அறிந்து
"சார்..எனக்கு அண்ணாச்சி என்று கூப்பிட்டு பழக்கமில்லை. வேண்டுமானால் சார் என்று 
அழைக்கிறேன்" என்று  என்னிடம் உறுதி தந்தார். தனது பழக்கத்தைமாற்றி  "சார்" என்று 
அழைக்கத் துவங்கியதும் அண்ணாச்சியும் சகஜமாகிவிட்டார்.

நம் முகவர்களில்  திரு கணேசன் அண்ணாச்சி  போன்ற செல்வாக்கு மிகுந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை பெயரை மட்டும் சொல்லி அழைக்காமல்  ஓர் அடைமொழி சேர்த்து
அவர்களை அன்புடன்  அழைத்துப்பாருங்கள். வயதில் குறைந்தவர்களை தம்பி என அழைத்துப் பாருங்கள். உறவில் நல்லதொரு மாற்றம் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.

முகவர்களும் தங்களது வாடிக்கையாளர்களை இப்படி உரிமையுடன் உறவுசொல்லி அழைத்துப் பழகவேண்டும். நெருக்கம்..... பெருக்கமாகும். இது உறுதி...

வார்த்தைகள் காந்தசக்தி  கொண்டவை.

வசியப் படுத்துவோம்..வசப்படுத்துவோம்

1996-98 ல் நான் எல்ஐசி திருப்பூர்  கிளையின் கிளை மேலாளர்.

திருப்பூர் வளம் கொழிக்கும் ஒரு தொழில் நகரம். கோவைக்கோட்டத்தின் 26 கிளைகளுள்  திருப்பூர் ஒன்று.  ஆனால் மற்ற 25 கிளைகளுக்குமே வணிகத்தை  வாரிக்கொடுப்பது திருப்பூர்.


திருச்செந்தூர் , திருநெல்வேலி போன்ற சின்னக்கிளைகளில் இருந்து ஒரு பெரிய கிளைக்கு வந்தது நல்ல அனுபவம் தந்தது.


முகவர்களுடன் எப்போதும் போல் நல்ல நெருக்கம். முகவர்களின் பிறந்த நாளன்று அலுவலகத்தின்
தகவல் பலகையில் அவர்களது பிறந்தநாளில் வாழ்த்துகளை எழுதிப்போடுவது நல்ல வரவேற்பையும்
நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.


வளர்ச்சி அலுவலர்களின் பிறந்த நாளன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர்கள் இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் அவர்கள் இல்லத்தில் தான் சிற்றுண்டி.


ஒருகோடிரூபாய்க்கும் கூடுதலான காப்புத்தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களின் பட்டியல் தயாரித்து அவர்களின் பிறந்த நாளன்று பூங்கொத்துடன் நேரில் சென்று வாழ்த்த எண்ணினேன். ஒரு மாதத்தில் குறைந்தது பத்து பூங்கொத்துக்களாவது வாங்க வேண்டியிருந்தது. 


இதற்காக கூடுதலாக செலவுத்தொகை ஒதுக்க முதுநிலைக்கோட்ட மேலாளர் திரு ஸ்ரீதர் சார் அவர்களை அணுகி வேண்டுகோள் வைத்தேன். முதுநிலைக்கோட்ட மேலாளர் ஏன் ஒரு கோடி காப்புத்தொகை என்று வைக்க வேண்டும்.. ஐம்பது லட்சம் காப்புத்தொகை முதலே பூங்கொத்து வழங்குங்கள் என்று அனுமதி அளித்து என்னை உற்சாகப்படுத்தினார்.


அதன்படியே, பெருமைமிகு வாடிக்கையாளர்களை அவர்களின் பிறந்தநாளன்று முகவர் வி.ஏ.பாலு விற்கு தெரிந்த ஒரு இடத்தில் வாங்கப்படும் பெரிய மலர்க் கொத்துடன் அவர்களது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வதை வழக்கமாக்கினேன்.


அந்த வாடிக்கையாளர் ஒரே முகவர் மூலம் பாலிசி எடுத்திருந்தால் அந்த முகவரையும் உடன் அழைத்து செல்வேன். ஒன்றுக்கு மேற்பட்ட முகவர்களின் வாடிக்கையாளர் என்றால் எனது வலது கரமான உதவிக்கிளைமேலாளர் திரு B.ராஜகுமாரனை மட்டும் உடன் அழைத்துச் செல்வேன்.


நிறுவனத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தை மட்டும் தெரிவிப்போம். புது வணிகம் பற்றி பேசவும் மாட்டோம்.. கேட்கவும் மாட்டோம்.


பூங்கொத்துவின் பலனை தக்க நேரத்தில் அறுவடை செய்து கொள்ள வேண்டிய பொறுப்பை முகவரிடம் விட்டுவிட்டோம்.


இப்படிப்பட்ட நல்லுறவு நடவடிக்கைகளால் வசதி மிகுந்த வாடிக்கையாளர்களை வசியப் படுத்தினோம்.  வசப்படுத்தினோம். 


Opinion Makers களை நாம் வசப்படுத்துவதுமிகவும் தேவையான ஒன்றல்லவா.. அதுவும் சின்ன சின்ன நடவடிக்கைகள் மூலம்.


இது பழமையான முறை என்று நண்பர்கள் சிலர் ஒதுக்கித்தள்ளலாம். அந்த ஒரு சிலரும் கால மாற்றத்திற்கேற்ப புதிய வழிகளில் இதுபோன்று முயற்சிக்கலாம்.


மொத்தத்தில் வாடிக்கையாளர்களின் மனத்தைக் கவரவேண்டும். அவருடனான உறவை பலப்படுத்த வேண்டும்.

யாருக்கு யார் முகவரி...?

நான் 1992-94 ல்
புண்ணிய நகரமான
திருச்செந்தூர் கிளையில்
கிளை மேலாளர்.

எனது பதவிக்காலத்தில்
கிளை இரண்டாகப்பிரிந்தது.

அக்டோபர் மாதம்
ஒரு நல்லநாளில்
ஸ்ரீவைகுண்டத்தில்
புதிய கிளை
துவக்கிவைக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தை
தனிக்குடித்தனம்
வைத்தபிறகு திருச்செந்தூர்
சிறிய கிளையாகிவிட்டது.

123 முகவர்கள் மட்டுமே
எங்களிடம்.

1994ல்
நான் மாற்றலாகிச்
செல்லும்போது
225 முகவர்கள்.

அனைத்து
முகவர்களின்
இல்லங்களும்
எனக்குத் தெரியும்.

அவர்கள் பற்றிய
எல்லா விவரங்களும்
எப்போதும் என்
விரல் நுனிகளில்.

அவர்களோடு எப்போதும்
நல்ல நெருக்கமான
உறவு.

சிற்றூர்களில் இருக்கும்
முகவர்கள் அனைவரும்
நம் மீது பாசத்தை
பொழிவார்கள்.

திருச்செந்தூருக்கு அருகே
நடுநாலு மூலைக்கிணறு
என்ற ஒரு சிற்றூர்.

அங்கு பாலசுப்பிரமணியன்
என்ற கிராமிய தொழிற்முறை
முகவர் ஒருவர்.

அவரது முகவர்
அடையாள எண்..7005-74B.

இன்றைய வடக்கு மண்டல மேலாளர்
திரு குமார் சார் அவர்கள்
கிளைமேலாளராக இருந்தபோது
முகவராக நியமனமானவர்.

இவரை முகவர் பணியில்
அமர்த்திய வளர்ச்சி அலுவலர்
திரு ஆனா.கூனா என்பவர்.

அவர் மதுரைக்கு
மாற்றலாகிச்சென்றதும்
நேரடி முகவராக
தொடர்ந்தார்.

திரு அண்ணாத்துரை என்ற
(அடையாள எண்..777-75)
புதிய வளர்ச்சி அலுவலரோடு
இவரை இணைத்துவிட்டேன்.

அவருக்கு சைக்கிள் ஒன்று
இருந்தால் வணிகத்திற்கு
நல்ல வாய்ப்பாக இருக்கும்
என்று நினைத்தேன்.

அவர் புதிய சைக்கிள்
வாங்கி வணிகத்திற்கு
பயன்படுத்த
வட்டியில்லாத
முன் பணம் கொடுக்க
அனுமதி அளித்தேன்.

சைக்கிளும் வாங்கினார்.

வாங்கிய சைக்கிளை
அவர் அப்படியே
பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அவரோ
அந்த சைக்கிளின்
செயின் கவரில்
" எல்ஐசியின்
நிதியுதவியால்
வாங்கியது "
என்று பெயிண்டால்
எழுதிவைத்தார்.

கடன் வாங்கி
வாங்கிய வண்டி என்பதை
மரியாதைக்குறைவாக
நினைக்காமல்
"எல்ஐசியின் பிரதிநிதி"
என்று பெருமையுடன் ஒரு
அங்கீகாரம் தேடி தனது
வணிக வளர்ச்சிக்கு
பயன்படுத்தினார்.

சனிக்கிழமை தோறும்
வளர்ச்சி அலுவலர்
திரு அண்ணாத்துரையுடன்
வணிக சுற்றுப்பயணம்
மேற்கொள்வேன்.

ஒருநாள் இந்த
பாலசுப்பிரமணியன்
என்னிடம் வந்து
" மேலாளர் ஐயா..
என் வீடு சிறிய வீடு.

உங்களை என்
வீட்டிற்கு உள்ளே
வரவழைத்து உபசரிக்க
வசதிகள் இல்லை.

ஆனாலும்....
உங்களது ஒவ்வொரு
பயணத்தின் போதும்
எனது சிற்றூருக்கு
கண்டிப்பாக வாருங்கள்.

உங்கள் அம்பாசிட்டரை
அருகிலுள்ள
பொது மைதானத்து
மரநிழலில்  நிறுத்துங்கள்.
பிறகு எனது வீ்டு
வரைவாருங்கள்.

உங்கள் வருகையை
எனக்குத்
தெரியப்படுத்துங்கள்.

உங்களோடு நானும்
கார் நிறுத்தப்பட்டிருக்கும்
மைதானம் வரை
நடந்து வருகிறேன்.

என்னுடன் ஒரு
ஐந்து நிமிடம் மட்டும்
நன்றாகப்பேசி விட்டு
திரும்பிப்போங்க.

எனக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.

எனது சிற்றூரில்
நான் பெரிய
எல்ஐசி முகவர்
என்ற நன்மதிப்பு
எனக்குக் கிடைக்கும்.

மக்கள் என்னை
உறுதியாக நம்புவார்கள்.

நானும் எனது வணிகத்தை
பெருக்கிக்கொள்வேன்.

ஏற்கனவே எல்ஐசி
முத்திரை பதித்த
சைக்கிள் என்மீது
நல்ல நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது."
என்று கூறினார்.

முகவர் விருப்பப்படியே
சனிக்கிழமை தோறும்
அவர் இல்லம் செல்வோம்.

அப்போதே  அவருக்கு
அடுத்தடுத்து நான்கு
குழந்தைச்செல்வங்கள்.

முகவர்களுக்கு
"உங்களால் முடியும்"
"உங்களாலும் முடியும்"
"உங்களால் மட்டுமே முடியும்"
என்பன போன்று பல
உற்சாகந்தரும்
வரிகளை
15 பைசா செலவில்
அஞ்சலட்டையில்
நான் வாரந்தோறும்
எழுதி அனுப்புவது
வழக்கம்.

முகவரின் மூத்தபையன்
இந்த அஞ்சலட்டைகளை
கவனமாக படித்திருக்கிறான்.

நான் முகவரின் வீட்டை
நெருங்கியதுமே
"உங்களால் முடியும்" சார்
வந்திருக்காங்க என்று
உரக்க ஒலித்துக்கொண்டே
உள்ளே ஓடுவான்.

முகவர் மகிழ்ச்சியுடன்
வெளியே வருவார்.

மரத்தடிக்கு திரும்பி
வருவோம்..

மரத்தடியில் நின்று
சிறிது நேரம்
பேசி விட்டுச்செல்வது
வாடிக்கையாகிப்போனது.

எங்களின் இந்த செயல்
முகவருக்கு செல்வாக்கை
உயர்த்த உதவியது.

முகவரும் வணிகத்தில்
கொடிகட்டிப் பறந்தார்.

நான்கு ஆண்குழந்தைகள்.
இரண்டு பெண்குந்தைகள்.

இவர்களை வளர்த்து
ஆளாக்கி உயர்த்த
உதவியது எல்ஐசி தான்
என்று நம்பி மகிழ்கிறார்.

சைக்கிள் வாங்கியது
வணிக வளர்ச்சியில்
தனக்கு ஒரு திருப்புமுனை
என்று நினைக்கிறார்.

வாடிக்கையாளருக்கு
முகவரைத்தான்
நன்றாகத்தெரியும்.

அவர் சொல்வதைத்தான்
வாடிக்கையாளர்
கேட்கப்போகிறார்.

இது முகவருக்கு
நன்றாகத்தெரியும்.

இருந்தாலும் தனக்கு
ஒரு ஆங்கீகாரம் வேண்டும்,
தன்மீது நம்பகத்தன்மை
ஏற்படவேண்டும்,
என்பதற்காகவே
எல்ஐசி அலுவலர்கள்
அருகிலிருக்கவேண்டும்
என்று முகவர்
நினைக்கிறார்.

இது முற்றிலும்
உண்மைதானே.

எங்கெல்லாம்
கிளை அலுவலர்கள்
முகவர்களுக்கு
அங்கீகாரத்தையும்,
பெருமையையும்
பெற்றுத்தருகிறார்களே
அங்கெல்லாம் வணிகம்
மழையாய் கொட்டும்.

கிளையின் வளர்ச்சி
எப்போதும் உச்சத்திலேயே
இருக்கும்.

எல்லோருமே வளர்ந்து
உயரலாம்.

எல்ஐசிக்கு
முகவரே முகவரி.
முகவருக்கும்
எல்ஐசியே முகவரி

கடைசிவரை இருந்தால்தான்

நான் நெல்லையில் வணிகமேலாளராக இருந்த காலம். எனக்குத் தெரிந்த ஒரு புதிய முகவர். 

அவர் எல்ஐசி நிறுவனம் ஆண்டு தோறும் வழங்கிவரும்  ரிவர்ஷனரி போனஸ் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார். கியாரண்டீட் அடிஷன் பற்றி தெளிவாக தெரிந்து  வைத்திருந்தார். 

லாயல்டி அடிஷன் பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கவில்லை. இந்த தகவலை  நான் உணர்ந்து கொண்டதும் இவரைப்போல் நிறைய முகவர்கள் இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தேன்.

மறுநாள் ஏற்கனவே முகவர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகவர் கூட்டத்தில்  என் உறவினர் ஒருவர் வீட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி விளக்கிப் பேசினேன்.

உறவினரின் தந்தை ஒரு ஓய்வுபெற்ற சிறந்த வங்கி அலுவலர். எதையும் சரியாகவும்  நேர்த்தியாகவும்  செய்யவேண்டும் என்று நினைப்பவர். அந்த கொள்கையை அப்படியே பின்பற்றுபவர்.

அவரது துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்துவிட்டார். தனது வாழ் நாளுக்குப்பிறகு இரு புதல்வர்களும் சொத்துக்களை மையப்படுத்தி எந்தவித மனவருத்தமும் 
கொள்ளக் கூடாது என்று நினைத்தார்.

தன் வாழ்நாளிலேயே தன் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்திலும் சரிபாதியை  இரு புதல்வர்களுக்கும் பிரித்துக்கொடுத்து விட்டார். அவர் ஓய்வூதியத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே ஓய்விற்குப் பின்னர் ஓய்வூதியம் வரவில்லை.

இரு புதல்வர்களும் அடுத்தடுத்த தெருக்களில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். 
தந்தையை ஆளுக்கு ஒருமாதம் அவரவர்  வீட்டில் வைத்து  கவனித்துக் கொள்ளவேண்டும் என்பது 
அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம்.

தந்தையை முன்வைத்து சகோதரர்களுக்குள் பேச்சுவார்த்தை  நின்று போயிற்று. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் தந்தையை மற்ற சகோதரர் வீட்டுக்கு தனியாகவே  அனுப்பி வைப்பார்கள். துணைக்குக் கூட அவர்கள் உடன் செல்லமாட்டார்கள். பணம் சம்பாதித்து படிக்கவைத்து, ஆளாக்கி, அனைத்து சொத்துக்களையும், மனமுவந்து அளித்த  பாசமிகு தந்தையின்  பரிதாப நிலை இது.

தனது சொத்துக்களை முன்கூட்டியே அவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்யாமல் தனது பெயரிலேயே வைத்திருந்தால் இவரது நிலைமை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். யார் தன்னை நன்றாக  கவனிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் தனது சொத்தை எழுதி வைப்பேன் என  வார்த்தைகளை பரவ விட்டிருந்தால் அவரது  இரு புதல்வர்களும் எப்படி போட்டி போட்டு
கவனித்திருப்பார்கள்.

இந்த சம்பவத்தைப்பற்றி கேட்டதும் முகவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

இதற்குப்பிறகு எல்ஐசி பற்றி பேச துவங்கினேன். ரிவர்ஷனரி போனஸ் ஆண்டுக்கொரு முறை  நிறுவனத்தின் லாபக்கணக்குப்படி அறிவிக்கப்படும். வருடா வருடம் அதன்  அளவு மாறுபட  வாய்ப்புள்ளது.

கியாரண்டீட் அடிஷன் தொகை உறுதியளிக்கபட்ட கூடுதல் தொகை. நிறுவனத்தின் லாபக்கணக்கு
எந்த வகையிலும் இதன் அளவில் மாற்றம் ஏற்படுத்தாது. பாலிசி முதிர்வின்போது அல்லது இறப்பு ஏற்பட்டால் இது வழங்கப்படும். பாலிசிதாரர் முன்கூட்டியே கணக்கை முடித்தால் பாலிசி முதிர்வில் வழங்கப்படவேண்டிய போனஸ் அல்லது  உறுதியளிக்கப்பட்ட  தொகையின் அன்றைய மதிப்பு கணக்கிடக்கப்பட்டு குறைந்த தொகையே போனசாக வழக்கப்படும்.

இப்படி முன்னதாகவே கணக்கை முடித்தால் பாலிசிதார்ருக்கும் இழப்பு. எல்ஐசி நிறுவனத்திற்கும்
இழப்பு. முகவருக்கும் இழப்பு. ஆனால் லாயல்டி அடிஷன் எல்ஐசியின் முதலீட்டு  வருவாயைப்  பொறுத்து  கடைசி தவணை வரை பணம்செலுத்தப்படும் பாலிசிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.

இடையில் கணக்கை  முடித்துக்கொள்ளும் பாலிசிகளுக்கு லாயல்டி அடிஷன் கிடையாது. லாயல்டி அடிஷனைப்பெற பாலிசிதாரர் அனைத்து தவணைகளையும் தவறாது செலுத்தவேண்டும்.

இந்த ஏற்பாடு  முகவர் நலனுக்கு உகந்த நல்ல தொரு  ஏற்பாடு. பாலிசிதார ரிடம்  இதைக்கூறியே பாலிசியை கடைசித் தவணைவரை அமுலிலிருக்க வைக்கலாம்.

முகவர்களைப்பார்த்து  இப்போது லாயல்டி அடிஷன் என்னவென்று புரிகிறதா என்று கேட்டேன். 
புரிந்த மாதிரி அவர்கள் தலையாட்டியதை வைத்து  அவர்கள் சரியாக  புரிந்து கொள்ளவில்லை
என்ற முடிவிற்கு வந்தேன்.

இப்போது அவர்களை நண்பர் வீட்டில் நடைபெற்ற சம்பவத்திற்கு அழைத்துச்சென்றேன்.  
அவர்களது  தந்தை நமது போனஸ் போன்றும் கியாரண்டீட் அடிஷன்  போன்றும் சொத்துக்களை 
தனது மகன்களுக்கு முன்கூட்டியே கொடுத்துவிட்டார். அவர்கள் அதனை பாலிசியை சரண்டர் செய்வதுபோல் எடுத்துக்கொண்டனர். 

தந்தையை மதிக்காமலும், கவனிக்காமலும் அங்கும் இங்கும்  அலைக் கழித்தனர். பணத்தைச் செலவழித்து, பாசத்தைக்கொட்டி, மகன்களை வளர்த்து ஆளாக்கிய பெரியவர்.. பாவம் ......... 
ஒரு உயிராகப் பார்க்கப்படாமல் உடம்பாகமட்டுமே  பார்க்கப்பட்டார்.

பாசத்தோடு  பார்க்கப்படவில்லை. பாரமாகவே  பார்க்கப்பட்டார். கடைசிவரையில்  தன்னை நன்றாக கவனித்தால்தான் சொத்து என்ற  "லாயல்டி அடிஷன்" கிடைக்கும் என்று அவர் முன்பே அறிவித்திருந்தால் அவருக்கு ராஜமரியாதை கிடைத்திருக்கும் என்று நான்அழுத்திச் சொன்னதும்
"லாயல்டி அடிஷன்" என்றால் என்னவென்று நன்றாகப்புரிந்துவிட்டது என்ற குரல்கள்  ஓங்கி ஒலித்தன.

பாலிசி எடுத்ததன் நோக்கம்  நிறைவேறிட பாலிசிதாரர்கள் தங்களது பாலிசியை கடைசி வரை அமுலில் வைத்திருக்கவேண்டியது மிகவும் கட்டாயம்.

இந்த முயற்சியில் பாலிசிதாரருக்கும்  முகவருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரம் தான் லாயல்டி அடிஷன்.

சரிதானா ... நண்பர்களே...

பழையது வேண்டுமா?

பாளையங்கோட்டையில்
எனது உறவினர் ஒருவர்.

ஏறத்தாழ எனது வயதுதான்.

எனக்கு நல்ல நண்பரும்கூட.

அவரது குடும்பம் பாரம்பரியம்
மிக்க குடும்பம்.

பழம் பெருமை பேசிக்கொண்டே
இருப்பார்கள்.

நண்பர் ரம்மி விளையாட்டில்
வல்லவர்.

ஞாயிறுதோறும் தவறாமல்
யார் வீட்டிலாவது வைத்து
ரம்மி ஆட்டம் உண்டு.

ஒரே வீட்டில் வைத்து
விளையாடினால் வீட்டம்மா
திட்டுவார்கள் என்று
ஒவ்வொரு ஞாயிறும்
வெவ்வேறு நண்பர்கள்
வீட்டில் வைத்து நாள்முழுதும்
நடைபெறும்.

யார் வீட்டில் வைத்து
ரம்மியாட்டம்
நடைபெறுகிறதோ அவர்
வீட்டில் மதிய விருந்து
அவரது முழுச்செலவில்.

என் நண்பர் தனது
வீட்டம்மாவிற்கு பயந்தவர்.

அதனால் ரொம்ப காலம்
அவர்வீட்டில் வைத்து சீட்டாட
அவர் தட்டிக்கழித்து வந்தார்.

நண்பர்கள் எல்லோரும்
ஒன்றாகச்சேர்ந்து  நண்பரிடம்
"இந்த முறை கண்டிப்பாக
உங்கள் வீட்டில் வைத்துத்தான்
சீட்டு விளையாட்டு"
என்று அடித்துக்கூறிவிட்டனர்.

நண்பருக்கு தர்ம சங்கடம்.

நண்பர்களையும்
சமாளிக்கவேண்டும்.

வீட்டில் மனைவியையும்
சமாளித்து சம்மதம்
பெறவேண்டும்.

நண்பர் வீட்டம்மாவிடம் சென்று
"ஞாயிற்றுக்கிழைமை காலையில்
நண்பர்கள் பொழுதுபோக்க
நமது வீட்டிற்கு வருகிறார்கள்"
என்று பணிவாகக் கூறுகிறார்.

மனைவியும் மறுப்பேதும்
கூறவில்லை.

இதுவே நண்பருக்கு
மகிழ்ச்சியைத்தந்தது.

"மதிய உணவு நம் வீட்டில்"
என்று சொன்னதும் மனைவி அதற்கும்
"சரி ....நல்லது...
பழையதுதான் போடுவேன்
பரவாயில்லையா" என்கிறார்.

நண்பர் தனது மனைவி
விளையாட்டாகப்பேசுவதாக
நினைத்துக்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

ஒருநாளும் காய்கறி வாங்க
சந்தைக்கு செல்லாத நண்பர்
அன்று காலையிலேயே
சந்தைக்குச்சென்று
நிறைய காய்கறிகள் வாங்கி
மனைவியிடம் தருகிறார்.

பத்துமணிவாக்கில்
நண்பர்கள் கூட்டம் வருகிறது.

மனைவி அவர்களை
மகிழ்ச்சியுடன் வரவேற்பதை
நண்பர் பார்க்கிறார்.

உடனே மனைவியை
அடுக்களையில் சந்தித்து
"நிறைய கறிவகை களுடன்
சாப்பாடு தயாரித்து வைம்மா"
என்று கேட்டுக்கொள்கிறார்.

அவரது வீட்டம்மாவும் அவரிடம்
"நீங்க கவலைப்படாம போங்க
நல்லபடி பழையது கிடைக்கும்"
என்று சொல்கிறார்.

நண்பர் மனைவியைப்பார்த்து
"விளையாடாதே  அம்மா..
நான் அவர்கள் வீட்டிற்கு
சென்றபோதெல்லாம்
அந்த வீட்டு அக்காமாரெல்லாம்
வகை வகையாக செய்து
போட்டிருக்கிறார்கள்.

நம்ம வீட்டில் உணவு சரியில்லை
என்றால்  என் மானத்தை
வாங்கிவிடுவார்கள். காப்பாத்து"
என்று கெஞ்சுகிறார்.

"நீங்க போய் நிம்மதியா
சீட்டு விளயாடுங்க" என்று கூறி
அனுப்பிவைக்கிறார்.

நண்பர் சீட்டு விளையாடும்போது
ஒரு வித பதட்டத்துடனேயே
காணப்படுகிறார்.

மதியம் ஒரு மணியானதும்
சாப்பாட்டு இடைவேளை
அறிவிக்கப்படுகிறது.

சாப்பாடு பரிமாறுவதற்கு முன்
அடுக்களைக்குச்சென்று
"எல்லாம் நல்லபடி முடிந்ததா"
என்று மனைவியிடம் கேட்கிறார்.

மனைவியும்
"எல்லாம் அருமையாக முடிந்தது"
என்று கூறிவிட்டு
"பழையதை பரிமாறவா"
என்றும் கேட்கிறார்.

நண்பருக்கு
அடிவயிற்றைக் கலக்குகிறது.

நடப்பது நடக்கட்டும் என்று
நண்பர்களுடன் சாப்பாட்டிற்கு
அமர்கிறார்.

சாப்பாடு பரிமாறப்படுகிறது.

சொதி, இஞ்சிப்பச்சடி,
உருளைக்கிழங்கு பொறியல்,
வடை, பருப்பு பாயசம்
என தடபுடல் விருந்து.

நண்பர்கள் சாப்பாட்டு
ருசியை பாராட்டி பாராட்டுமழை
பொழிகிறார்கள்.

விருந்து முடிந்ததும் நண்பர்களை
மாடிக்கு அனுப்பிவிட்டு நண்பர்
மனைவியிடம் செல்கிறார்.

"நல்ல ருசியான சமையலை
செய்து வைத்துவிட்டு பின்
ஏனம்மா என்னிடம் பலமுறை
பழையது பழையது
என்று சொல்லி பயமுறுத்தினாய்"
என்று கேட்கிறார்.

இப்போதும் மனைவி
"நான் சமைத்த்தும்  பரிமாறியதும்
உண்மையிலேயே பழையது தான்"
என்று அடித்துச் சொல்கிறார்.

நண்பர் "எப்படி ம்மா"
என்றுகேட்கிறார்.

"உங்க தாத்தா
குப்பாம்பிள்ளைக்கு
பத்து ஏக்கர் விவசாய நிலமும்
பத்துகிலோதங்க நகைகளும்
இருந்தன,

அவர் இறந்துபோகும் போது
ஐந்து ஏக்கர் விவசாய நிலமும்
ஐந்து கிலோ தங்கநகைகளும் தான்
உங்க அப்பா சுப்பையா பிள்ளை
கைக்கு வரும்போது இருந்தன.

அவங்க காலத்துக்குப்பிறகு
ஒங்க கைக்கு வரும்போது
விவசாய நிலம் ஒரு ஏக்கராகவும்
தங்க நகைள் 50 பவுனாகவும்
கொறைஞ்சு போச்சு.

சொடலையாபிள்ளையான
உங்களிடமிருந்து
என்  மகன் எசக்கிக்கு எதாவது
கிடைக்குமான்னும் தெரியல.

அவன் படிச்சு எல்ஐசியில
வேலைபார்ப்பதால்
எனக்கு பெரிய நிம்மதி.

சும்மா ஒக்காந்தே தின்றால்
இப்படித்தானே ஆகும்.

நீங்களோ உங்க அப்பாவோ
ஒங்க சம்பாத்தியத்திலிருந்து
குடும்ப சொத்தோடு
ஒரு பைசாவாவது சேர்த்து
வைத்திருக்கிறீர்களா?

உங்க தாத்தா சம்பாத்திச்ச
பழைய சொத்திலிருந்துதான்
இப்போது சோத்தை
நாம் சாப்பிடுகிறோம்.

அதனால்தான்
உங்கள் நண்பர்களுக்கு
பரிமாறியது பழையது என்று
மீண்டும் மீண்டும் கூறினேன்."

மனைவி சொன்னதைக்கேட்ட
நண்பருக்கு செருப்பால
அடிச்சமாதிரி இருந்தது.

65 வயதுக்குமேல்
அவரால் இனி என்ன
பண்ண முடியும்.

மனைவி சொன்னதை
பொறுமையாகக்
கேட்டுக்கொண்டார்.

உள்ளுக்குள் அழுது
தனது ஆற்றாமையைத்
தீர்த்துக் கொண்டார்.

இயலாமையை நினைத்து
நொந்து கொண்டார்.

நம்ம முகவர்கள் சம்பாதிக்கும்
புது வணிக வருமானமும்
முன்பு செய்த வணிகத்திற்காக
கிடைக்கும் தொடர் வருவாயும்
பழையதும் புதிய உணவும் கலந்த
ஒரு கலவை தான்.

முகவர்கள் முன்பு செய்த
வணிகத்தில் தொடர்ந்து
கிடைப்பது தான்
ரின்யூவல் கமிஷன் என்ற
பழையது.

ஏனென்றால் முகவருக்குப்பின்
இது குடும்பத்திற்குத்தானே
தவறாமல் போகிறது.

என்னுடைய கருத்துப்படி
முகவருக்குப் போகும்
•ரின்யூவல் கமிஷன்•
முகவரது குடும்பத்தின் சொத்து.

இது அவர்களின் பழையது.

இதில் கை வைக்க
முகவருக்கு  எந்த
உரிமையும் கிடையாது.

குடும்பச்செலவிற்கு அவர்
புது வணிகம் மூலம் வருகின்ற
முதல் வருட கமிஷனை மட்டுமே
பயன்படுத்தவேண்டும்.

அதற்காக அவர் தொடர்ந்து
உழைக்கவேண்டும்.

உழைத்துக்கொண்டே
இருக்கவேண்டும்.

அவருக்கு ஓய்வே
கிடையாது.

பழையதைத்தொடாமல்
புதிய உணவையே
அருந்தவேண்டும்.

சரிதானா
நண்பர்களே.

Sunday, 6 May 2018

இங்கேயும் கொண்டாடுகிறோமே?

UAE யில் இன்றைய
நாளிதழ்களின்
தலைப்புச்செய்தி யே
இதுதான்..

UAE  கூட்டு அரசாங்கத்திலும்
ஏழு தனித்தனி அமீரகங்களிலும்
பணிபுரியும் ஊழியர்களுக்கு
ஒரு மாத அடிப்படைச்சம்பளம்
சிறப்பு போனசாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களிலும்
இராணுவத்திலும்
பணியாற்றும்
ஊழியர்கள். மற்றும்
ஓய்வூதியர்கள் பயனடைவர்.

சமூகப்பாதுகாப்பு திடங்களில்
உதவி பெற்றுவரும்
பயனாளிகளுக்கும்
இத்தொகை கிடைக்கும்.

இந்த தொகை ரம்சான்
பண்டிகைக்கு முன்னரே
வழங்கப்பட வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது.

மைய அரசாங்கம் கொடுக்க
போனஸ் தொகை
மட்டும் இந்திய மதிப்பில்
ரூ.1900 கோடியாகும்.

தனித்தனி யாக அமீரகங்கள்
அவரது ஊழியர்களுக்கு
வழங்கும் போனஸ் மதிப்பு
இதில் சேர்க்கப்படவில்லை.

ஆங்கில ஏகாபத்தியத்திலிருந்து
விடுபட்டு தன்னாட்சி அமைப்பாக
2-12-1971 ல் UAE யாக
செயல்படத்துவங்கியபோது
முன்னின்று வழிநடத்தியவர்
மன்னர் ஷேக் சயீது அவர்கள்.

ஐக்கிய அமீரகத்தை
உலகின் முன்னணி இடத்திற்கு
கொண்டுவர திட்டங்கள் தீட்டி
அவற்றை வெற்றிகரமாக
செயல்படுத்திக்காட்டிய
சிற்பி அவர்.

அவர் பிறந்த
நூறாவது ஆண்டினை
மக்களின் ஈடுபாட்டுடன்
நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள்.

வழங்கியே பழக்கப்பட்ட
வள்ளலின் அடையாளம்
அந்த மன்னர் ஷேக் சயீது.

அவரது
மறைவிற்குப்பின்னரும்
அனைவரையும்
உற்சாகப்படுத்திக்கொண்டு
அவர்களின் உள்ளங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இவரது நூற்றாண்டு
விழாக்கொண்டாட்டத்தின்
ஒரு அம்சமாகத்தான்
அரசாங்கம் தனது
தங்க நிகர் அங்கங்களுக்கு
இந்த போனஸ் அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.

சரி..சரி..
நூற்றாண்டு விழாக்
கொண்டாட்டத்தை முன்னிட்டு
அந்த நாட்டில்
நாட்டின் முன்னேற்றத்திற்கு
பங்களிக்கும் ஊழியர்களுக்கு
போனஸ் வழங்குகிறார்கள்.

நம்மூர்ல நூற்றாண்டு விழாக்
கொண்டாடும்போது
கொலை,  கொள்ளை யில்
ஈடுபட்டு சிறைகளில்
தண்டனை பெற்றுவருபவர்களை
விடுதலை செய்கிறார்கள்.

முன்னேறிவிடும்
நம்ம நாடு..