நான் அலுவலக வாழ்க்கையானாலும் சரி தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையானாலும் சரி, என்னை விட வயதில் மூத்தவர்களை பெயர் சொல்லி ஒருபோதும் அழைக்கமாட்டேன். நெருங்கிப்பழகிய தெரு & பள்ளி, நண்பர்கள் மட்டும்விதிவிலக்கு.
சார் என்று சிலரை அழைப்பேன். அண்ணாச்சி,மாமா, அத்தா,, காக்கா, என்றும் கேரளத்திலிருக்கும்போது அச்சாயா, சேட்டா என்றும் கர்னாடகத்திலிருந்தபோது ஹிரிய அண்ணா, சிக்க அண்ணா என்றும் அடைமொழி போட்டுத் தான் அழைப்பேன். முகவர்களை,
வளர்ச்சி அலுவலர்களை அலுவலகப் பெரியவர்களை அழைப்பதும் இப்படித்தான்.
திருப்பூர் முகவர் திரு CKP என்ற பெரியவரை சித்தப்பு என்றுதான் கூப்பிடுவேன்.. திருச்செந்தூர்
கணேசன் அண்ணாச்சி, ஆனா மூனா அத்தா, தூத்துக்குடி SAT அண்ணாச்சி, வள்ளியூர் உதுமான் அத்தா,, பாளை கணபதி அண்ணாச்சி, பேச்சியப்பன் அண்ணாச்சி, குழித்துறை முகவர்
கொச்சப்பன் நாயர் சேட்டா, இப்படித்தான் அழைப்பேன். இதனாலேயே எங்களுக்குள் இனம் புரியாத ஒரு நெருக்கம் ஏற்பட்டதுண்டு.
திருச்செந்தூர் கிளை.. 719-755 என்ற அடையாள எண் கொண்ட ஒரு முகவர் பெரியவர் திரு K.S. கணேசன் அண்ணாச்சி. இவர்தான் 1981 ல் இங்கு புதிய கிளை அலுவலகம் வர தொடர் முயற்சி செய்து ஏற்பாடு செய்தவர். அலுவலம் இயங்க முதல் கட்டிடம் பார்த்ததும் இவர்தான். இடப் பற்றாக்குறையால் வேறு ஒரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க சென்னை தொழிலதிபர்
ஒருவரை ஏற்பாடு செய்ததும் இவரே தான்.
இந்த உடன்குடிக்காரர் எளிமையின் சின்னம். எளிமையே ஆனாலும்மிக்க செல்வாக்குடையவர்.
நான் இவரை நம் அலுவலக உயர் அலுவலர்களிடம் அறிமுகப்படுத்தும் பொழுது இவரின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுள் நான் தான் மிகக் குறைந்த நிலையில் உள்ளவன். வெறும் கிளை மேலாளர் தான் என்று கூறுவேன்.
இவரது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்..... VV மினரல்ஸ் அதிபர் திரு வைகுண்டராஜன்
அண்ணாச்சி, சரவணபவன் நிறுவனர் திரு ராஜகோபால் அண்ணாச்சி, Premier Cooker திரு சிவநேசன் அண்ணாச்சி, சென்னை தி.நகர் சுந்தர் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி, பந்தல் ஒப்பந்தகாரர்
திரு குமரேசன் அண்ணாச்சி, தேவி, தினகரன், தினத்தந்தி பத்திரிக்கை அதிபர்கள், முன்னாள் அமைச்சர்கள் திரு கே.பி.கே, திரு நடேசன்பால்ராஜ், திரு அனிதா ராதாகிருஷ்ணன் என்று பல கோடீஸ்வரர்கள்.
என்னை இவர்களின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேற்குறிப்பிட்ட எல்லோருமே
இவரை "அண்ணாச்சி" என்ற அடைமொழி யோடு அழைப்பதை கேட்டிருக்கிறேன். இவரும் அவர்களை அண்ணாச்சி என்றேதான் அழைத்துப்பேசுவது வழக்கம். இவருக்கு அவ்வளவு மதிப்பும் மரியாதையும் அவர்களிடத்தில்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தசரா நடைபெறும் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலின் அறங்காவலராக இருந்தவர் இவர்.
திமுக ஆட்சியானாலும் அதிமுக ஆட்சியானாலும் இவரைத் தொடமாட்டார்கள். தொடர்ந்து இவரே இருக்க அனுமதிப்பார்கள்.
இவருக்கு இருக்கும் பெரிய செல்வாக்கை நாம் தான் வணிகமாக மாற்றவேண்டும். 1992-94 ல் நான்தான் இங்கு கிளைமேலாளர். நெல்லைக்கோட்டம் துவங்கப்பட்ட முதல் ஆண்டில் காப்புத் தொகை அடிப்படையில் கோட்டத்து முகவர்களுள் இவர் முதல்வர்.
இவர் அலுவலகத்துக்கு வந்தால் என் அறைக்கு வந்துவிட்டுத்தான் போவார். நானும் இவர் பகுதியில் சுற்றுப்பயணம் செல்லும்போது இவரை அழைத்துக்கொண்டு குறைந்தது பத்து
வாய்ப்பாளர்களையாவது பார்க்காமல் இருக்க மாட்டேன். வருடத்திற்கு இரு முறை இவருடன் சென்னை சென்று நல்ல அளவில் வணிகம் சேர்த்து வருவோம்.
கிளைக்கு வரும்போது எங்கள் கிளையின் உதவிக்கிளை மேலாளரை பார்த்தால் அண்ணாச்சி
பதுங்கி பதுங்கி வெளியே சென்றுவிடுவார். என்னையும் பார்க்க எனது அறைக்கு வரமாட்டார்.
எனக்கு இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. ஒருநாள் இவர் வரும்போது உதவிக்கிளை மேலாளர் "என்ன கணேசன். இங்கே வாங்க" என்று அழைத்த காட்சியை கண்டு நான் பதபதைத்து விட்டேன்.
கோடீஸ்வரர்களாலேயே "அண்ணாச்சி" என மிகுந்த மரியதையுடன் அழைக்கப்படும் ஒரு பெரியவரை வயதில் குறைந்த உதவிக்கிளை மேலாளர் பெயர் சொல்லி அழைப்பதா என நினைத்து வருந்தினேன். அப்போது தான் அண்ணாச்சி இவரைத் தவிர்ப்பது இந்த காரணத்திற்காகத்தான்
இருக்கவேண்டும் என்று எனது மனதில்தோன்றியது.
உதவிக்கிளைமேலாளரை எனது அறைக்கு அழைத்து அண்ணாச்சிக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு பற்றி எடுத்துக்கூறி நாம் அவரை பெயர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொண்டேன். உடனே அந்த அலுவலரும் அண்ணாச்சியின் பெருமை பற்றி அறிந்து
"சார்..எனக்கு அண்ணாச்சி என்று கூப்பிட்டு பழக்கமில்லை. வேண்டுமானால் சார் என்று
அழைக்கிறேன்" என்று என்னிடம் உறுதி தந்தார். தனது பழக்கத்தைமாற்றி "சார்" என்று
அழைக்கத் துவங்கியதும் அண்ணாச்சியும் சகஜமாகிவிட்டார்.
நம் முகவர்களில் திரு கணேசன் அண்ணாச்சி போன்ற செல்வாக்கு மிகுந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை பெயரை மட்டும் சொல்லி அழைக்காமல் ஓர் அடைமொழி சேர்த்து
அவர்களை அன்புடன் அழைத்துப்பாருங்கள். வயதில் குறைந்தவர்களை தம்பி என அழைத்துப் பாருங்கள். உறவில் நல்லதொரு மாற்றம் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.
முகவர்களும் தங்களது வாடிக்கையாளர்களை இப்படி உரிமையுடன் உறவுசொல்லி அழைத்துப் பழகவேண்டும். நெருக்கம்..... பெருக்கமாகும். இது உறுதி...
வார்த்தைகள் காந்தசக்தி கொண்டவை.
No comments:
Post a Comment