ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்பு நடந்த நிகழ்ச்சி..
மிகப்பெரிய நகரம்.
அங்குள்ள மிகப்பெரிய கட்டிடம்.
அதில்செயல்பட்ட மிகப்பெரிய
நாடு போற்றும் நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் ஒரு
மிகப்பெரிய அலுவலகம்.
இங்கு ஒருநாள் ஒரு அலுவலர்
ஊழியர் ஒருவரை கடுமையாக
கண்டித்திருக்கிறார்.
மறுநாள் அவரது அறையில்
அவரது பெரியமேஜையின்மேல்
மலஜலம் கழிக்கப்பட்டு இருந்தது.
அனைவருக்கும் அதிர்ச்சி.
இது யார் வேலை என்று
எல்லோருக்கும் தெரித்திருந்தாலும்
பார்த்த சாட்சி இல்லாததால்
யாரையும் தண்டிக்கமுடியவில்லை.
இந்தக்கதை இப்போது எதற்கு
என்று நினைப்பீர்களே!
இப்போது நடந்து வரும்
நாட்டு நடப்புகள்,
தரம் தாழ்ந்த பேச்சுக்கள்,
எதிர்ப்பேச்சுக்கள் என
பலவற்றிற்கும் நாம்
காதுகளைப் பொத்திக்கொண்டு
ஒரு செவிடனாக இருக்கவேண்டிய
அருவருக்கத்தக்க
அவல நிலைமை.
எந்த அரசியல் கட்சியும் இந்த
இழி செயலுக்கு விதிவிலக்கல்ல.
கொள்ளையடிப்பதே கொள்கை
என்று நினைக்கும் தலைவர்கள்
மலிந்துவிட்டார்கள்.
ஊதிவிடும் ஊடகங்கள்.
அனைத்தையும் நம்பிவிடும்
அப்பாவி மக்கள்.
நீதிதேவன் மயக்கமுற்று
முடங்கிக்கிடக்கிறான்.
வேற்றுமையிலும் ஒற்றுமை
என்ற தத்துவத்திற்கு
எடுத்துக்காட்டாய் விளங்கிய
என் நாட்டில் இன்று நடப்பது
ஒற்றுமையில் வேற்றுமை.
தனிநபர் துதிபாடுதல் போய்
தனிநபர் தாக்குதலுக்கு மாறி
தலைவர்கள் தரம் தாழ்ந்து
உளறிக்கொட்டுகின்றனர்.
அந்த பெரிய ஊரின்
பெரிய கட்டிடத்து
பெரிய அலுவலகத்தில்
ஒருவர் உணர்ச்சியின்
உந்துதலால் அறியாமல்
ஒரு தவறு செய்தார்.
இன்று அரசியல் தலைவர்கள்
கூட்டாக பொது இடங்களில்
மலஜலம் கழிப்பது போன்ற
செயல்களை, சொற்களை
வெட்கம் ஏதுமின்றி
வீசிக் கொண்டு
நாட்டையே நாற அடித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
வெட்கப்படுகிறேன்..
வேதனைப்படுகிறேன்..
தலை குனிகிறேன்..
No comments:
Post a Comment