Saturday, 5 May 2018

அதைமட்டும் கேக்காதிய


சிதம்பர ரகசியம்
தெரியும்...
சிதம்பரத்தைப்பற்றிய
ரகசியங்களும் தெரியும்...

ஆனால்
இந்த ரகசியம் மட்டும்
இன்றுவரை எனக்கு
புரியாத பெரும் புதிர்.

நாங்கள் ஒரு நண்பரிடம்
பதிவாக பால் வாங்குகிறோம்.

எங்கள் அடுக்ககத்திற்குள்
நுழையும் போது
அவர் கொண்டுவரும்
மூன்று தூக்குப் பாத்திரங்களை
கீழே  இறக்கிவைப்பார்.

முதல் தூக்கிலிருந்து
இரண்டாவது தூக்கில்
கொஞ்சம் பாலை ஊத்துவார்.

பின்னர் இரண்டாவதிலிருந்து
மூன்றாவது தூக்கிற்கு
கொஞ்சம்பாலை மாற்றுவார்.

பிறகு இரண்டு  தூக்குகளை
தூக்கிக்கொண்டு
வீடுகளுக்குச்சென்று பால்
ஊத்துவார்.

பின்னர் நுழைவு வாயிலுக்கு
திரும்பி வருவார்.
அங்கு வைத்திருக்கும்
மூன்றாவது தூக்கை எடுத்து
முன்பு  செய்தது போலவே
ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு
மற்றொன்றிலிருந்து இன்னொன்றுக்கு
என மாற்றி மாற்றி ஊத்துவார்.

அதற்குப் பிறகு தான்
கிளம்பிச் செல்வார்.

நேற்று காலை அவரிடம்
நட்புமுறையில்
இந்த செய்முறைக்கான
விளக்கம் கேட்டேன்.

புன்னகையை பதிலாக தந்து
வேறு தலைப்புக்களில்
தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

அவரிடமுள்ள மாடுகள்
ஒவ்வொரு நாளும்
எவ்வளவு பால் கறக்கும்,
எந்தவகை மாடுகளில் மடு
மென்மையாக இருக்கும்,
எந்தவகை மாடுகளில் பால்
அடர்த்தியாக இருக்கும்
என்றெல்லாம்
தெரியாத தகவல்களை
தாராளமாய் தந்து உதவினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு
எங்கள் வீட்டில் நாங்கள்
மாடு வளர்த்த அனுபவத்தை
அடிப்படையாக வைத்து
வைக்கோல்,
கடலைப்புண்ணாக்கு,
எள்ளுப்புண்ணாக்கு,
நவதானியத்தை ஊறவைத்து 
அரைத்து கிடைக்கும் மாவுக்கரைசல்
என்று பல வகைத் தீவனங்களை
அவர் அவரது மாடுகளுக்கு
கொடுக்கிறாரா எனக் கேட்டேன்.

அதற்கு அவர் இவற்றையெல்லாம்
இப்போது கொடுப்பதில்லை எனவும்
கோத்ரெஜ் கம்பெனியின் தயாரிப்பான
மாட்டுத்தீவனத்தை மொத்தமாக வாங்கி
அதனை கொடுப்பதாகவும் கூறினார்.

ரேஷன் அரிசியை வாங்கி பொங்கி
அதை கூழாக்கி கொடுப்பதாகவும்
கூறினார்.

இந்த ரேஷன் அரிசி கூழை
அவரது மாடுகள் மிகவும்
விரும்பிச்சாப்பிடுகின்றன என்ற
இதுவரை அறிந்திராத தகவலை
பகிர்ந்து  என்னை
ஆச்சரியப்பட வைத்தார்.

ரேஷன் அரிசியின் பயனை
என்னால் இப்போது
நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

பிறகு மாறாத புன்னகையுடன்
விடை பெற்றுச்சென்றார்.

ஆனால் கடைசிவரை
தூக்குப் பாத்திர செய்முறை
ரகசியத்தை மட்டும்
போட்டு உடைக்கவேயில்லை.

No comments:

Post a Comment