நான் நெல்லையில் வணிகமேலாளராக இருந்த காலம். எனக்குத் தெரிந்த ஒரு புதிய முகவர்.
அவர் எல்ஐசி நிறுவனம் ஆண்டு தோறும் வழங்கிவரும் ரிவர்ஷனரி போனஸ் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார். கியாரண்டீட் அடிஷன் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்.
லாயல்டி அடிஷன் பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கவில்லை. இந்த தகவலை நான் உணர்ந்து கொண்டதும் இவரைப்போல் நிறைய முகவர்கள் இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தேன்.
மறுநாள் ஏற்கனவே முகவர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகவர் கூட்டத்தில் என் உறவினர் ஒருவர் வீட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி விளக்கிப் பேசினேன்.
உறவினரின் தந்தை ஒரு ஓய்வுபெற்ற சிறந்த வங்கி அலுவலர். எதையும் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்யவேண்டும் என்று நினைப்பவர். அந்த கொள்கையை அப்படியே பின்பற்றுபவர்.
அவரது துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்துவிட்டார். தனது வாழ் நாளுக்குப்பிறகு இரு புதல்வர்களும் சொத்துக்களை மையப்படுத்தி எந்தவித மனவருத்தமும்
கொள்ளக் கூடாது என்று நினைத்தார்.
தன் வாழ்நாளிலேயே தன் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்திலும் சரிபாதியை இரு புதல்வர்களுக்கும் பிரித்துக்கொடுத்து விட்டார். அவர் ஓய்வூதியத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே ஓய்விற்குப் பின்னர் ஓய்வூதியம் வரவில்லை.
இரு புதல்வர்களும் அடுத்தடுத்த தெருக்களில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
தந்தையை ஆளுக்கு ஒருமாதம் அவரவர் வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ளவேண்டும் என்பது
அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம்.
தந்தையை முன்வைத்து சகோதரர்களுக்குள் பேச்சுவார்த்தை நின்று போயிற்று. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் தந்தையை மற்ற சகோதரர் வீட்டுக்கு தனியாகவே அனுப்பி வைப்பார்கள். துணைக்குக் கூட அவர்கள் உடன் செல்லமாட்டார்கள். பணம் சம்பாதித்து படிக்கவைத்து, ஆளாக்கி, அனைத்து சொத்துக்களையும், மனமுவந்து அளித்த பாசமிகு தந்தையின் பரிதாப நிலை இது.
தனது சொத்துக்களை முன்கூட்டியே அவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்யாமல் தனது பெயரிலேயே வைத்திருந்தால் இவரது நிலைமை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். யார் தன்னை நன்றாக கவனிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் தனது சொத்தை எழுதி வைப்பேன் என வார்த்தைகளை பரவ விட்டிருந்தால் அவரது இரு புதல்வர்களும் எப்படி போட்டி போட்டு
கவனித்திருப்பார்கள்.
இந்த சம்பவத்தைப்பற்றி கேட்டதும் முகவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
இதற்குப்பிறகு எல்ஐசி பற்றி பேச துவங்கினேன். ரிவர்ஷனரி போனஸ் ஆண்டுக்கொரு முறை நிறுவனத்தின் லாபக்கணக்குப்படி அறிவிக்கப்படும். வருடா வருடம் அதன் அளவு மாறுபட வாய்ப்புள்ளது.
கியாரண்டீட் அடிஷன் தொகை உறுதியளிக்கபட்ட கூடுதல் தொகை. நிறுவனத்தின் லாபக்கணக்கு
எந்த வகையிலும் இதன் அளவில் மாற்றம் ஏற்படுத்தாது. பாலிசி முதிர்வின்போது அல்லது இறப்பு ஏற்பட்டால் இது வழங்கப்படும். பாலிசிதாரர் முன்கூட்டியே கணக்கை முடித்தால் பாலிசி முதிர்வில் வழங்கப்படவேண்டிய போனஸ் அல்லது உறுதியளிக்கப்பட்ட தொகையின் அன்றைய மதிப்பு கணக்கிடக்கப்பட்டு குறைந்த தொகையே போனசாக வழக்கப்படும்.
இப்படி முன்னதாகவே கணக்கை முடித்தால் பாலிசிதார்ருக்கும் இழப்பு. எல்ஐசி நிறுவனத்திற்கும்
இழப்பு. முகவருக்கும் இழப்பு. ஆனால் லாயல்டி அடிஷன் எல்ஐசியின் முதலீட்டு வருவாயைப் பொறுத்து கடைசி தவணை வரை பணம்செலுத்தப்படும் பாலிசிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.
இடையில் கணக்கை முடித்துக்கொள்ளும் பாலிசிகளுக்கு லாயல்டி அடிஷன் கிடையாது. லாயல்டி அடிஷனைப்பெற பாலிசிதாரர் அனைத்து தவணைகளையும் தவறாது செலுத்தவேண்டும்.
இந்த ஏற்பாடு முகவர் நலனுக்கு உகந்த நல்ல தொரு ஏற்பாடு. பாலிசிதார ரிடம் இதைக்கூறியே பாலிசியை கடைசித் தவணைவரை அமுலிலிருக்க வைக்கலாம்.
முகவர்களைப்பார்த்து இப்போது லாயல்டி அடிஷன் என்னவென்று புரிகிறதா என்று கேட்டேன்.
புரிந்த மாதிரி அவர்கள் தலையாட்டியதை வைத்து அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை
என்ற முடிவிற்கு வந்தேன்.
இப்போது அவர்களை நண்பர் வீட்டில் நடைபெற்ற சம்பவத்திற்கு அழைத்துச்சென்றேன்.
அவர்களது தந்தை நமது போனஸ் போன்றும் கியாரண்டீட் அடிஷன் போன்றும் சொத்துக்களை
தனது மகன்களுக்கு முன்கூட்டியே கொடுத்துவிட்டார். அவர்கள் அதனை பாலிசியை சரண்டர் செய்வதுபோல் எடுத்துக்கொண்டனர்.
தந்தையை மதிக்காமலும், கவனிக்காமலும் அங்கும் இங்கும் அலைக் கழித்தனர். பணத்தைச் செலவழித்து, பாசத்தைக்கொட்டி, மகன்களை வளர்த்து ஆளாக்கிய பெரியவர்.. பாவம் .........
ஒரு உயிராகப் பார்க்கப்படாமல் உடம்பாகமட்டுமே பார்க்கப்பட்டார்.
பாசத்தோடு பார்க்கப்படவில்லை. பாரமாகவே பார்க்கப்பட்டார். கடைசிவரையில் தன்னை நன்றாக கவனித்தால்தான் சொத்து என்ற "லாயல்டி அடிஷன்" கிடைக்கும் என்று அவர் முன்பே அறிவித்திருந்தால் அவருக்கு ராஜமரியாதை கிடைத்திருக்கும் என்று நான்அழுத்திச் சொன்னதும்
"லாயல்டி அடிஷன்" என்றால் என்னவென்று நன்றாகப்புரிந்துவிட்டது என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன.
பாலிசி எடுத்ததன் நோக்கம் நிறைவேறிட பாலிசிதாரர்கள் தங்களது பாலிசியை கடைசி வரை அமுலில் வைத்திருக்கவேண்டியது மிகவும் கட்டாயம்.
இந்த முயற்சியில் பாலிசிதாரருக்கும் முகவருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரம் தான் லாயல்டி அடிஷன்.
சரிதானா ... நண்பர்களே...
No comments:
Post a Comment