1996-98 ல் நான் எல்ஐசி திருப்பூர் கிளையின் கிளை மேலாளர்.
திருப்பூர் வளம் கொழிக்கும் ஒரு தொழில் நகரம். கோவைக்கோட்டத்தின் 26 கிளைகளுள் திருப்பூர் ஒன்று. ஆனால் மற்ற 25 கிளைகளுக்குமே வணிகத்தை வாரிக்கொடுப்பது திருப்பூர்.
திருச்செந்தூர் , திருநெல்வேலி போன்ற சின்னக்கிளைகளில் இருந்து ஒரு பெரிய கிளைக்கு வந்தது நல்ல அனுபவம் தந்தது.
முகவர்களுடன் எப்போதும் போல் நல்ல நெருக்கம். முகவர்களின் பிறந்த நாளன்று அலுவலகத்தின்
தகவல் பலகையில் அவர்களது பிறந்தநாளில் வாழ்த்துகளை எழுதிப்போடுவது நல்ல வரவேற்பையும்
நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.
வளர்ச்சி அலுவலர்களின் பிறந்த நாளன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர்கள் இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் அவர்கள் இல்லத்தில் தான் சிற்றுண்டி.
ஒருகோடிரூபாய்க்கும் கூடுதலான காப்புத்தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களின் பட்டியல் தயாரித்து அவர்களின் பிறந்த நாளன்று பூங்கொத்துடன் நேரில் சென்று வாழ்த்த எண்ணினேன். ஒரு மாதத்தில் குறைந்தது பத்து பூங்கொத்துக்களாவது வாங்க வேண்டியிருந்தது.
இதற்காக கூடுதலாக செலவுத்தொகை ஒதுக்க முதுநிலைக்கோட்ட மேலாளர் திரு ஸ்ரீதர் சார் அவர்களை அணுகி வேண்டுகோள் வைத்தேன். முதுநிலைக்கோட்ட மேலாளர் ஏன் ஒரு கோடி காப்புத்தொகை என்று வைக்க வேண்டும்.. ஐம்பது லட்சம் காப்புத்தொகை முதலே பூங்கொத்து வழங்குங்கள் என்று அனுமதி அளித்து என்னை உற்சாகப்படுத்தினார்.
அதன்படியே, பெருமைமிகு வாடிக்கையாளர்களை அவர்களின் பிறந்தநாளன்று முகவர் வி.ஏ.பாலு விற்கு தெரிந்த ஒரு இடத்தில் வாங்கப்படும் பெரிய மலர்க் கொத்துடன் அவர்களது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வதை வழக்கமாக்கினேன்.
அந்த வாடிக்கையாளர் ஒரே முகவர் மூலம் பாலிசி எடுத்திருந்தால் அந்த முகவரையும் உடன் அழைத்து செல்வேன். ஒன்றுக்கு மேற்பட்ட முகவர்களின் வாடிக்கையாளர் என்றால் எனது வலது கரமான உதவிக்கிளைமேலாளர் திரு B.ராஜகுமாரனை மட்டும் உடன் அழைத்துச் செல்வேன்.
நிறுவனத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தை மட்டும் தெரிவிப்போம். புது வணிகம் பற்றி பேசவும் மாட்டோம்.. கேட்கவும் மாட்டோம்.
பூங்கொத்துவின் பலனை தக்க நேரத்தில் அறுவடை செய்து கொள்ள வேண்டிய பொறுப்பை முகவரிடம் விட்டுவிட்டோம்.
இப்படிப்பட்ட நல்லுறவு நடவடிக்கைகளால் வசதி மிகுந்த வாடிக்கையாளர்களை வசியப் படுத்தினோம். வசப்படுத்தினோம்.
Opinion Makers களை நாம் வசப்படுத்துவதுமிகவும் தேவையான ஒன்றல்லவா.. அதுவும் சின்ன சின்ன நடவடிக்கைகள் மூலம்.
இது பழமையான முறை என்று நண்பர்கள் சிலர் ஒதுக்கித்தள்ளலாம். அந்த ஒரு சிலரும் கால மாற்றத்திற்கேற்ப புதிய வழிகளில் இதுபோன்று முயற்சிக்கலாம்.
மொத்தத்தில் வாடிக்கையாளர்களின் மனத்தைக் கவரவேண்டும். அவருடனான உறவை பலப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment