Saturday, 5 May 2018

நம்ம ஆளுங்க மோசம்

என்னுடைய நண்பர் ஒருவர்.

போக்குவரத்துத் துறையில்
உயர் பதவியிலிருப்பவர்.

எனது அமீரகப்பயண
அனுபவங்களைப்பற்றி
என்னிடம் விசாரித்தார்.

சாலை வசதி அருமையாக
அமைக்கப்பட்டிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில்
4+4 , 6+6, 8+8 வழிகளில்
சுங்கவரி இல்லாத
தரமான சாலைகள்.

துபாயில் ஒன்றிரண்டு
இடங்களில் மட்டுமே
சுங்கவரி சாலைகள்.

சாலைவிதிகளை
அனைவருமே சரியாக
பின்பற்றுகிறார்கள்.

கார் ஓட்டுநர் இருக்கை
இடது பக்கம் உள்ளது.

பெல்ட் அணியா விட்டால்
கடுமையான அபராதம்.

நிறுத்தக்கூடாத இடத்தில்
நிறுத்தினால் உடனடி அபராதம்.

அனுமதிக்கப்பட்டுள்ள
வேகத்தைவிடவேகமாக
வண்டி ஓட்டினால்
கண்காணிப்பு கேமராவில்
பதிவாகும் அபராதம்..

வருடத்திற்கு ஒருமுறை
வண்டியை பரிசோதனைக்கு
எடுத்துச்செல்லவேண்டும்.

அந்த நேரத்தில்
அதுவரை விதிக்கப்பட்ட
அபராதம் வசூலிக்கப்படும்.

இது வரை பொறுமையாகவும்
ஆர்வமுடனும் கேட்டுக்கொண்டு
வந்த நண்பர் கடைசியாக
வருடத்திற்கு ஒருமுறை
வாகனப்பரிசோதனை என்று
கூறியதும் ஆர்வத்தில்
துள்ளிக் குதித்து இது பற்றி
விளக்கமாகக்கூறும்படி
கேட்டுக்கொண்டார்.

வருடத்திற்கொருமுறை
அரசால் அங்கீகரிக்கப்பட்ட
பணி மனைக்குவண்டியை
எடுத்துச்சென்று
முழுப்பரிசோதனைக்கு
உட்படுத்த வேண்டும்.

ஏதாவது பழுது இருந்தால்
அதை சரி செய்த பின்னரே
தரச்சான்றிதழ் கிடைக்கும்.

வண்டியின் டயர்களுக்கு
காலாவதி நாள் அதிலேயே
அச்சிடப்பட்டிருக்கும்.
டயரில் காணப்படும் பட்டன்
நன்றாக இருந்தாலும்
காலாவதி ஆகிவிட்டால்
டயர்களை மாற்றியே
ஆகவேண்டும்.

இத்தனைக்கும் பிறகுதான்
சாலை மற்றும் போக்குவரத்து
ஆணையத்தால் அனுமதி
வழங்கப்படும் என்று
விளக்கமாகக்கூறினேன்.

எனது நண்பர் மற்ற
தகவல்களைப்பற்றி
கருத்து எதுவும் கூறவில்லை.

ஆனால் கடைசியாக
கூறிய ஆண்டுக்கொருமுறை
வாகனப்பரிசோதனை
என்பதை வரவேற்றார்.

இங்குள்ள அமைச்சர்களெல்லாம்
வாகனத்தின் தரம்பற்றி
அக்கறை செலுத்துவதில்லை
என்று வருத்தப்பட்டார்.

நண்பர் சமூக அக்கறை
உள்ளவராக இருக்கிறாரே
என நினைத்துக்கொண்டேன்.

என் நண்பர் காட்டிய
அக்கறையை இன்னொரு
நண்பரான காந்தியிடம்
பகிர்ந்து மகிழ்ந்தேன்.

வருடத்திற்கு ஒருமுறை
பரிசோதனை என்றால்
தனக்கும் தனதுதுறையில்
பணியாற்றும் ஊழல்வாதிகளுக்கும்
கிடைக்கும் லஞ்ச வருமானம்
பலமடங்காக பெருகும் என்ற
சுயநலத்தில்தான்
அப்படி பேசியிருக்கிறார்
என்று நண்பர் காந்தி கூறினார்.

இப்படிப்பட்ட கட்டாய விதியை
நம் நாட்டில் கொண்டுவந்தால்
ஊழல் பேர்வழிகள் தான்
கொழுத்துப்போவார்கள்.

ப.இசக்கிராஜன்

No comments:

Post a Comment