Friday, 24 March 2017

ஆபீசு வேற குடும்பம் வேற

ஏல எசக்கி..
சொடல வாறான்.
ஓடிப்போயிருன்னு
பக்கத்துல நின்ன
சுப்பையா கத்துனான்.

நான் ஒளிய பாத்தேன்.
அதுக்குள்ள சேக்காளி
சொடலை என்ன
பாத்துட்டான்.

சரி..விதிச்சவிதின்னு
நெனச்சுட்டு அவன்ட்ட
போனன்.

ஏல எசக்கி நேத்து
நம்ம பேராச்சி ரிட்டயர்மெண்டு
கூட்டத்துக்கு போனியாம.
என்னல பேசுனன்னு
கேட்டான்.

நாஞ்  சொன்னேன்.
பேராச்சி நல்லவன்.
நல்ல ஞாபக சக்தி உண்டு.
எல்லாப்பயலுவ பேரையும்
மறக்காம ஞாபகம் வச்சிருப்பான்.
ஆஃபீசு சட்ட திட்டங்கள்லாம்
அத்துபடி.
எந்த சட்டம், எந்த மாத்தம்
எப்போ வந்துச்சு யாரு
கையெழுத்து
போட்டிருந்தாவொ ங்கதெல்லாம்
சரியா சொல்லுவாம்.
யாரு யாரு எங்கெங்க
எப்போ இருந்தாவொங்கது
அவனுக்கு தெரியும்.
இப்படில்லாம் பேசினே ன்னு
சொன்னதுதான் ...
சொடலைக்கு
கோவம் வந்துட்டு.

ஏல நீ தான் மெச்சணும்
அந்த பேராச்சிய.
நான் இப்பத்தான்
அவனோட பெஞ்சாதிய
பாத்துட்டு வறேன்.

அவளோட  பொலம்பல் இருக்கே
நியாயமா இருக்குல.

வீட்டுல  மூக்கு கண்ணாடய
கழத்தி எங்கியாவது வச்சுட்டு
வச்ச இடத்த மறந்துட்டு
அத தேடச்சொல்லி பெஞ்சாதியை
படுத்தி எடுத்துருவானாம்.

இதமாதிரி சீப்பு, வண்டிச்சாவி
மணிபாஸ் எல்லாத்தியும்
எங்கயாவது வச்சிட்டு
வச்ச எடத்தை மறந்திருவானாம்.

இவனைப்போயி
ஞாபகசக்தி உள்ளவன்னு
ஒளரியிருக்கிய ன்னு
சத்தம் போட்டான்.

வேற என்னல்லாம்
அளந்துவிட்டன்னு கேட்டன்.

மனுசங்கள கையாள்றதில
வல்லாளகண்டன் னும் 
பேசுனமுன்னு சொன்னன்..

அதுக்கு சொடலை
சொன்னாம்பாருங்க
ஒரு பதிலு..
அசந்துபோயிட்டன்.

பேராச்சிக்கு பேரன் பொறந்து
ஆறுமாசம் ஆச்சாம்.

பேரன் அழுதானன்னு
இவன்ட்ட பாத்துக்கச்சொல்லி
பெஞ்சாதி கொடுப்பாளாம்.

அழுகைய நிப்பாட்ட
வெளாட்டு காட்டாம
ஆபீஸ்ல அதட்டுதமாரியே
புள்ளய அதட்டுவானாம்.
புள்ள அழுகய நிப்பாட்டாம
கூடக்கொஞ்சம்
அழுது தொலய்க்காம்.

கொழந்தய பாத்துக்கக்கூட
துப்புல்லாத கூமுட்டைன்னு
அவன் பெஞ்சாதி
இப்பொ தான்
ஏங்கிட்ட சொல்லி
கேவிக்கேவி அழுதா..

இவனப்போயி நீ ஞாபகசக்தில
பெரிய ஆளு...வல்லாளகண்டன்னு
பொய்நெல்லாம் பேசிட்டு
வந்துருக்க..ஒனக்கும் அறிவில்ல
பேராச்சிக்கும் அறிவில்லன்னு
பெருசா சத்தம் போட்டான்

ஆபீசு அறிவு வேற
வீடு குடும்ப கொழந்த
நிர்வாகம் வேறன்னு
சொன்ன சொடல
உண்மையாவே 
வெவரமானவந்தான்.

நீங்க என்ன
சொல்லுதியொ.

Saturday, 18 March 2017

சிட்னிக்கு தலைகீழ

சேக்காளி சொடலையை
பாத்ததும் நான் ஒளிய பாத்தேன்.
அந்த சண்டாளப்பய என்ன
பாத்து தொலச்சிட்டான்.

ஏல எசக்கி .....
எப்பொல சிட்னியில
இருந்து வந்தே ன்னு கேட்டான்.

சரி எடக்கு மடக்கா கேக்காம
சாதாரணமா கேக்கானேன்னு
ஆச்சரியப்பட்டேன்.

நாலுநாளாச்சுவே ன்னு
சொன்னேன்.

நம்மூருக்கும் ஓம் மவன் இருக்க
சிட்னிக்கும் எத்தனை மணிநேரம்
வித்தியாசம்னு கேட்டான்.

எழவு இழுக்காம நம்ம
விடமாட்டாம்பொலுக்கே ன்னு
மனசுக்குள்ளயே  ஏசிக்கிட்டு

நம் மூரு நேரத்தோட அஞ்சரை யை கூட்டிக்கணும்னு சொன்னேன்.

அப்படியாலன்னு கேட்டுட்டு
ஏல ஒவ்வோரு தடவையும்
அஞ்சரையைக்கூட்டுன்னு
சொன்னா கஷ்டமுல்லாலன்னு 
கேட்டுட்டு  ஏல நீ
பொஸ்தகத்தை படிச்சுட்டு
பட்டம் வாங்கின பயா..
ஒனக்கு அனுபவப்பாடத்துல
கோழி முட்டைதாம்ல ன்னு
சொல்லிட்டு
ஏல ஒன்னோட  வாச்சுல
இப்ப நேரத்த  பாரு..
தெரியுத நேரம் தான்
நம்மூரு நேரம்.

வாச்சை அப்படியே சுத்தி
தலைகீழ வச்சுபாரு ...
அப்ப தெரியுதுல்லால
அதுதாம்ல சிட்னி நேரம் ன்னு
ஒரு போடு போட்டான்
அந்த சொடல.

இதப்போல ஒன் மவன்
சிட்னி நேரத்தைபாத்துட்டு
வாச்சை தலகீழா வச்சுபாத்தா
அவனுக்கு நம்மூரு
நேரம் சரியாத்தெரியும்ன்னு
சொல்லிட்டு என்ன கேவலமா
ஒரு பார்வை பாத்தான்.

அவஞ்சொன்னபடி பாத்தா
சரியாத்தாங்க  வருது.

இதெல்லாம்  எப்பவே
படிச்சேருன்னுகேட்டதுக்கு
போல போக்கத்த பயல..
நீ என்னவோ புளுக் புளுக்குன்னு
வெளிநாட்டுக்கு போற
பயலுவளுக்கு தான்
இதெல்லாம் தெரியும்னு
நெனைக்கேரு.

உள்ளூர்ல இருக்க
எங்களுக்கும் வெவரம் தெரியும்னு
தெரிஞ்சுக்கலன்னான்.

சொடல எப்பவுமே
சரியாத்தான் சொல்லுதான்.

நீங்க ஏஞ்சேக்காளி
சொடல ய பத்தி
என்ன நெனக்கீய..

Monday, 6 March 2017

தனி அல்ல அணி


என் நண்பர் ஒருவர்.
என்னுடன் எல்ஐசியில்
பணியில் சேர்ந்தார்.
ஒரே கிளையில்
பணியாற்றிய அனுபவம்
உண்டு.

ஆங்கிலத்தில்
நல்ல புலமை.

மிகநன்றாக
குறிப்புகள் எழுதுவார்.

கடிதங்களையும் சிறப்பாக
எழுதுவார்.

வாடிக்கையாளர் சேவை
அவர்கள் மகிழும்படி
வழங்குவார்.

பல பதவி உயர்வுகளை
அவர் பெற்றிருந்தாலும்
ஒவ்வொன்றிலும் சிறிது
தாமதம் ஏற்பட்டது.

உடன் பணிபுரிவோரிடம்
கடிந்து பேசமாட்டார்.

பணியை முடிக்கவேண்டி
சிலநேரங்களில் அவரே
அவரே அந்த பணியை
முடித்துக்கொடுப்பார்.

வாடிக்கையாளருக்கு
பாலிசி மீதான
கடன்களை  அவரே
கணக்கிட்டிருக்கிறார்.

இந்த தகவல் அறிந்த நான்
தனியாகப் பணி செய்யாமல்
அணியாகப் பணியாற்ற
வேண்டும் என்று பலமுறை
ஆலோசனை
கூறியிருக்கிறேன்.

ஒரு சமயம் இவரது
கிளைக்கு ஒரு
துணைக்கிளை
அனுமதிக்கப்பட்டது.

அந்த துணைக்கிளைக்கு
ஒரு கிளை மேலாளர் கூட
நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இவரது இளகிய குணத்தை
நன்கு அறிந்திருந்த
துணைக்கிளை மேலாளர்
தனது வேலையை
குறைக்கும் பொருட்டு
புதிதாகப் பார்த்துள்ள
கட்டிடத்தின்
உரிமையாளருடன்
சண்டைபோட்டுவிட்டார்.

கட்டிடத்தின் உரிமையாளர்
இனி துணைக்கிளை
மேலாளருடன் பேசமாட்டேன்
என்ற நிலை எடுத்துவிட்டார்.

உரிமையாளருடன்
விவாதிக்கும் வேலையையும்
என் நண்பர் எடுக்க வேண்டிய
கட்டாயத்துக்கு உள்ளானார்.

நல்லதொரு பணியாளராக
வாடிக்கையாளர்
நலம் பேணும்
நல்ல மனதுக்காரராக
இருந்த போதிலும்
நல்ல நிர்வாகியாக தன்னை
மாற்றிக்கொள்ளாததினால்
உயர்நிலை உயர்வு ஒன்று
நீண்ட வருடங்களாக
தட்டிப்போய்க்
கொண்டிருத்தது.
மிகத்தாமதமாகவே
அந்த உயர்வு அவருக்கு
கிடைத்தது.

Saturday, 4 March 2017

தானா வரும்.

எல்ஐசி
நெல்லைக்கோட்டத்தில்
உள்ள ஒரு கிளை.

அப்போது அந்தக்கிளை
மதுரைக்கோட்டத்தின்
வரம்பிற்குள் இருந்தது.

எனது நண்பர் ஒருவர்.
கணக்கு வழக்குப்
பிரிவுத் தலைவர்.

அனைத்து வேலைகளையும்
தானே பார்த்ததாக தம்பட்டம்
அடித்து மேலிடத்தில் நல்ல
பெயர் வாங்க முயற்சிப்பார்.

உண்மையிலேயே
உழைக்கும் உதவியாளருக்கு
பாராட்டுக்கிடைக்காமல்
பார்த்துக்கொள்வார்.

ஆனால் மேலிடத்தில் உள்ள
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்றமுடியாது.
சிலர் உண்மை நிலவரத்தை
உள்ளபடியே உணர்ந்து
வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு வாரமும்
பற்று, வரவு,
வருவாய் செலவு என
ஒவ்வொன்றையும்
வகைப்படுத்தி மாதம்
முடிவடைந்ததும் பட்டியலை
கோட்ட அலுவலகத்திற்கு
அனுப்பவேண்டும்.

ஒரு மாதம் சிறிது
காலதாமதமாகியிருக்கிறது.

எனவே கோட்ட
அலுவலகத்திலிருந்து
கிளை மேலாளருக்கு
தொலைபேசி அழைப்பு வத்தது.
அழைப்பு வரும்போது
குறிப்பிட்ட பிரிவுத்தலைவர்
கிளை மேலாளர் அருகிலேயே
இருந்திருக்கிறார்.

கிளை மேலாளர் கோட்டத்தின்
நிதித்துறை மேலாளரிடம்
பிரிவுத் தலைவர் அருகில்
இருப்பதாகக்கூறி அவரிடம்
இணைப்பைக் கொடுக்கவா என
கேட்டிருக்கிறார்.

உடனே நிதித்துறை மேலாளர்
"அவரிடம் கொடுக்க வேண்டாம்
கணக்குத்துறையில்
நாசர் என்ற உதவியாளர்
இருப்பார். அவரிடம் நான் கேட்டுக்கொண்டதாக கூறி
விரைந்து அனுப்பிவைக்கும்படு சொல்லுங்கள்" எனக் கூறிவிட்டு
தொடர்பை துண்டித்துவிட்டார்.

அந்த ஆர்ப்பாட்டமில்லாத
நாசர் திருநெல்வேலி நகரக்கிளை
இரண்டின் மேலாளர்

இன்று அவருக்கு
பிறந்தநாளுக்கு வாழ்த்து
தெரிவிக்கும்போது இந்த
நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி
நமது கடமையை ஒழுங்காக
செய்துவந்தால் அங்கீகாரம்
தேடிவரும் என்பதை
புரிந்துகொள்ளலாம்.