Wednesday, 31 July 2019

பட்டப் பெயர்

பட்டப் பெயர் 

நான் ஒவ்வொரு முறை திருச்சியிலிருந்து நெல்லைக்கு செல்லும் போதும், திருமங்கலத்தை அடுத்து உள்ள ஊர் ஒன்றில் கட்டப்பட்டு இன்னமும் திறக்கப்படாத பொறியியற் கல்லூரி கட்டடத்தை காண நேரிடும்.

அப்போது அந்த கல்லூரியை கட்டிய அரசியல் தலைவர் நினைவிற்கு வருவார்.

அவர் மைய அரசில் வகித்த அமைச்சர் பொறுப்பு நினைவிற்கு வரும்.

உடனே அவர் பாராளுமன்றத்தில் செயலாற்றிய/ செயலாற்றாத முறை நினைவிற்கு வரும்.

அதைத் தொடர்ந்து அவரது புதல்வர் நினைவிற்கு வருவார்.
     
அத்தோடு வேறு ஒரு இயக்கத்தின் தலைவர் ஒருவர், குடும்ப வீட்டிற்குச் சென்ற நம்ம  அரசியல் தலைவரை,  கேவலமாக விருந்தாளி என்று விமர்சித்தது நினைவிற்கு வரும்.

அதற்கு அந்த தலைவரின் புதல்வர், தந்தையை விமர்சித்த  இயக்கத்தலைவரை ஒரு பட்டப் பெயர் கூறி பேட்டி கொடுத்தாரல்லவா ... அந்த பட்டப் பெயர் நினைவிற்கு வந்து தொலையும்.
அந்த பட்டப் பெயரை நினைக்கும்போது, தலைவரின் புதல்வர் எத்தனை பொருத்தமாக அவருக்கு பட்டப்  பெயர் வைத்திருக்கிறார் என்று அவரைப் பாராட்டத் தோன்றும்.

Tuesday, 30 July 2019


மார்ச் 21...

உலகம் முழுவதும் மார்ச் 21 ம் நாளை இன வேறுபாடுகளை முற்றிலும் ஒழிப்பதற்கான நாளாக கடைபிடித்து வருகிறது. இந்த நாளை  ஆஸ்திரேலிய நாடு தனது பன்முக  கலாச்சாரத்தைக் கொண்டாடும்  நல்லிணக்க நாளாக அனுசரித்து வருகிறது.  “எல்லோரும் எமக்குச் சொந்தமானவர்கள் “  என்ற கருத்தை பிரபலமாக்கி வருகிறது.  

மார்ச் 21… 

மற்றவர்களின் கலாச்சாரத்தை மதித்து போற்றுகின்ற ஒரு நாள்.  மொத்த சமுதாயமும் இணைந்து கலாச்சார வேற்றுமையில் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும்,  மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள். கலாச்சார நல்லிணக்கம் ஏற்றத்திற்கான ஒரு நல்ல மாற்றத்திற்காக  மக்களுடைய , சிந்தனைகளையும், கருத்துகளையும் இணைக்கும் நாள். 

இந்த நல்லிணக்க நாளை,  ஆரஞ்சு வண்ண உடைகளையும், ஆரஞ்சு வண்ண பட்டைகளையும்  அணிந்து கொண்டாடுகின்றனர். பல்வேறு நாட்டவர்களையும், பல்வேறு மொழி பேசுபவர்களையும், எந்த வேறுபாடுகளின்றி மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆஸ்திரேலியாவின் பெருமைகளோடு இணைத்துக் கொள்ளும் நாள்.

நல்லிணக்கத்திற்கான கருத்துக்களை மாணவப் பருவத்தில் இருந்தே விதைக்கிறார்கள். இதைக் கொண்டாடும் நாளில், ஆரஞ்சு வண்ண உடை உடுத்தி மாணவர்கள் வகுப்பிற்கு செல்கிறார்கள். மாணவர்கள் அனைவரும்  தங்கள் இல்லங்களில் தங்களது  கலாச்சாரத்திற்கு ஏற்றபடி பயன்படுத்தும்  உணவு வகைகளை கொண்டு வந்து எல்லோரிடமும் பகிர்ந்து உணவு அருந்துகிறார்கள். தங்களின் பாரம்பரிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தி அனைவரையும் மகிழ்விக்கிறார்கள். 

இந்த நல்லிணக்க நாளில் பன்முக கலாச்சாரத்தை போற்றும் வண்ணம்  பின்பற்ற வேண்டிய ஒரு சில வழிமுறைகளை கூறுகிறார்கள். 

  1. மற்ற மொழி திரைப்படத்தையோ நூலையோ படிக்கலாம்.
  2. வேறு கலாச்சாரத்தின் இசையை கேட்டு மகிழலாம்.
  3. வேறு இன மக்களை அழைத்து தனது கலாச்சரைப் பற்றி விளக்கலாம்.
  4. இதுவரை ருசித்திராத பிற இன உணவு வகைகள் கிடைக்கும் உணவகங்களுக்கு செல்லலாம்.
  5. மற்றவர்களின் கலாச்சாரத்தை விளக்கும் அருங்காட்சியகம் செல்லலாம்.
  6. பக்கத்துக்கு வீடுகளில் வசிக்கும் குடும்பத்தாரை அழைத்து தங்களது உணவு வகைகளை வழங்கி வாழ்க்கை பற்றிய கருத்துக்களை பகிரலாம்.
  7. வேற்று கலாசார அறிஞர்களான கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், போன்றவர்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
  8. வேறு இன மக்களின் வழிபாட்டு இடங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கலாம்.
  9. வெளிநாட்டு கலாச்சாரத்தை பற்றியும், பழக்கவழக்கங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
  10. வெளிநாட்டவர்களை, எந்த நாட்டுக்காரர் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். 
  11. மற்றவர்கள் கொண்டாடும் விழாக்களின் சிறப்புகள் பற்றியும் கொண்டாடும் முறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 
  12. நகைச்சுவை மன்றங்களுக்கு சென்று பிற மொழிகளில் தத்து பித்தென்று பேசி சிரிக்க வைக்கலாம்.
  13. விளையாட்டுப் போட்டிகளுக்கு சென்று உள்நாட்டு வீரர்களை உற்சாகப் படுத்தலாம். 
மார்ச் 21 ம் நாள் தான் நல்லிணக்க நாள் என்றாலும், அலுவலகங்களில், நிறுவனங்களில், கல்விக்கூடங்களில், தங்களுக்கு தோதுவான வேறு ஒரு நாளில் கூட கொண்டாடி வருகிறார்கள். 

எங்களது பேரன் சென்றுவரும் மழலையர் பள்ளியில் நல்லிணக்க நாள் கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. ஆரஞ்சு வண்ண உடையில் நமது வழக்கமான காலை உணவாகிய இட்லியை எடுத்துச்சென்று மற்றவர்களிடம் பகிரந்து கொள்ள இருப்பது சிறப்புச் செய்தி..

இலை விபூதியும் சந்தணமும் திருச்செந்தூரின் பெருமை.

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடு திருச்சீரலைவாய் என்னும்  திருச்செந்தூர். கடற்கரையில் ஆலயம் அமைந்துள்ள தனிப் பெருமை பெற்ற ஓர் ஆன்மீக நகரம் இந்த ஊர்.
இந்த ஊர்க் கோவிலில் பக்தர்களுக்கு திருநீறை பன்னீர் இலையில் வைத்துத்தான் தருவார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பு இந்த முறையில் திரு நீறு தருவது.
திருச்செந்தூர், கோவிலுக்குள் வருகின்ற பக்தர்கள் மேலாடை எதுவும் இல்லாமல் வெற்று உடம்புடன் தான் வர வேண்டும்.
உள்ளே வந்ததும், மணியடி மண்டபத்தில் உள்ள கரிய மாணிக்க விநாயகர் முன்பு ஒரு பெரிய பாத்திரத்தில் சந்தணக் கலவையை வைத்திருப்பார்கள். அதில் இருந்து சந்தணக் கலவையை எடுத்து அடியார்களின் உடம்பில், குறிப்பாக முழு  மார்பிலும்  நன்றாக பூசி விடுவார்கள். அதைப் பூசிக் கொள்ளும் போது அத்தனை சுகம் இருக்கும்.
அந்த நறுமணம் நிறைந்த சந்தணத்தை அரைப்பதற்கென்றே, உள் பிரகாரத்தில் பெரிய அளவில் ஒரு கல் இருக்கும். இரண்டு ஊழியர்கள் கைகளால் பெரிய சந்தணக்கட்டையை பிடித்துக்கொண்டு, கட்டையை கல்லில் வைத்து அரைத்துக்கொண்டே இருப்பார்கள். இதில் கிடைக்கும் சந்தண குழம்பை தான் நீரில் கரைத்து வைத்திருப்பார்கள். கலப்படம் எதுவும் இல்லாத சந்தணம் அல்லவா.. அது நன்றாக மணம் வீசும். ஊழியர்களைக் கொண்டு சந்தணம் அரைப்பதை நிறுத்திவிட்டு,  சில காலம் சந்தனக் கட்டைத் துண்டுகளை மின் விசை மூலம் ஆட்டும் கல் உரலில்  போட்டு அரைத்து பயன் படுத்தினார்கள். சில வருடங்களில் அதுவும் நின்று போனது.
இத்தனை பெருமைகளையும் சிறப்புக்களையும் கொண்ட இலை விபூதியும், சந்தணக் கலவையும் இப்போது அடியார்களுக்கு வழங்கப்படுவதில்லை.
திருக்கோவிலுக்கு வரும் அடியார்களின் வருகை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே தான்  இருக்கிறது. அவர்கள் உண்டியலில் போடும்  பணமும், பல்வேறு காணிக்கை களும், பல வகை கட்டணங்களும் பன்மடங்கு கூடுதலாக பெருகி இருக்கின்றன.
இப்படி திருக்கோவிலின் வருவாய் பல மடங்கு உயர்ந்திருந்தாலும், அடியார்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருச்செந்தூர் கோவிலின் தனிப் பெருமையான இலை விபூதியும், சந்தணமும் நிறுத்தப்பட்டு ஆண்டுகள் பலவாகி விட்டன.
மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தும் அடியார்கள், தங்களது மொட்டைத் தலையில் பூசிக் கொள்வதற்காக ஒரு டப்பியில் கொஞ்சம் சந்தணத்தை வைத்து, பத்து ரூபாய்க்கு திருக்கோவில் நிர்வாகமே விற்பனை செய்து வருகிறது.
கட்டணம் எதுவும் தனியாக வசூலிக்காமலேயே, அடியார்களை மொட்டையடிக்கும் இந்த முறை எந்த வகையில் சரி என்று புரியவில்லை. இன்னும் எத்தனை தனிப் பெருமைகளை நாம் இழக்கப் போகிறோமோ தெரிய வில்லை.
பண வசதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அடியார்களின் விருப்பம் நிறைவேற ஆலயங்கள், அருள் புரிகின்றனவோ இல்லையோ,  அறநிலையத் துறைக்கு பண வசதி  பெருக நன்றாகவே அருள் புரிகின்றன.


பாளை ப.இசக்கிராஜன்.

Sunday, 7 July 2019

உள்ளங் கவர்ந்த நாயகர்







என் உள்ளங் கவர்ந்த நாயகர்.....

LIC கோவைக் கூட்டத்தின் இப்போதைய வணிக மேலாளர் திரு பன்னீர்செல்வம் முதலியார் அவர்கள்

இந்த புதுச்சேரிக் காரர் LIC யில் வளர்ச்சி அலுவலராக இணைந்து துவக்கத்தில் பணியாற்றியது குஜராத் மாநிலத்தில்  தான்.

உதவிக்கிளை மேலாளர் நிலையில் தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தார்.  பணியாற்றிய அனைத்து இடங்களிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர்

பொறுப்பில் இருந்த அனைத்து இடங்களிலும் அனைத்து ஊழியர்களுடனும், குறிப்பாக களப்பணியார்களிடம் நெருங்கிப் பழகி, அந்த நல்லுறவின் மூலம் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே மதிக்கப்பட்டார்இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர்களை நன்றாக உற்சாகப்படுத்தி உயர வைத்திருக்கிறார்.

இடங்கள் பல மாறினாலும், அனைத்துக்கிளைகளின் களப்பணியார்களும் இன்றும்  இவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இவரும் தொடர்பில் உள்ளார்நல்லுறவு பேணினாலும், தட்டிக்கொடுக்க வேண்டிய வேளைகளில் தட்டிக்கொடுப்பார். குட்டி வைக்க வேண்டிய இடத்தில் குட்டியும் வைப்பார்

இவர் இருக்கும் இடங்களில் எல்லாம் வணிகம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.  இவருக்கு அடுத்து அந்த கிளைகளுக்கு புதிதாக வரும் கிளை மேலாளர்கள் இவர் புரிந்த வணிக நிலையை எட்ட திணறுவார்கள். பெரும்பாடு பட்டுத் தான் அவர்களால்  நல்ல பெயர் வாங்க முடியும்தனக்குக் கீழ் பணிபுரிவர்களுக்கு இவர் நல்லதொரு வழிகாட்டி. உடன் பணியாற்றுபவர்களுக்கு உயிர்த்தோழன். உயர் அலுவலர்களுக்கு உற்ற துணையாய் இருப்பார்.

ஒரு சில கோட்டங்களில் முதன்மை யிடத்தில் இருக்கும் அலுவலருக்கும், இரண்டாம் நிலையில் இருக்கும் வணிக மேலாளருக்கும்  அவ்வளவாக ஒத்துப் போகாதுஇவர்கள் இணக்கமாக இல்லாத சூழ்நிலையில்கீழே இருப்பவர்கள் நன்றாக குளிர் காய்வார்கள். அது கோட்டத்தின் வணிகத்தை சிறிதளவு பாதிக்கும்

ஆனால் இவர் வணிக மேலாளராக இருக்கும் கோவைக் கோட்டத்தில், முந்தைய முதன்மைக் கோட்ட மேலாளர் திரு FAZLUL RAHMAN  அவர்களுக்கு தோள் கொடுக்கும் உற்ற தோழனாய் விளங்கினார்

அவர் தனது வாட்சாப்பில் , அவர் வணிக மேலாளர் திரு பன்னீருடன்  இருக்கும் ஒரு படத்தைத் தான் DP யாக வைத்திருந்தார். அப்படி ஒரு இணக்கத்துடன் இருந்தார்கள்இந்த இணக்கம் கோவை கோட்டத்திற்கு பெரும் வெற்றியைத் தேடிக்கொடுத்தது..

திரு பன்னீர் அவர்கள், முகவர்களுடனும், வளர்ச்சி அலுவலருடனும் ஒரு வாய்ப்பாளரையோ, வாடிக்கையாளரையோ சந்திக்கச் செல்லும்போது, பூங்கொத்து கொடுத்தோ,பொன்னாடை போர்த்தியோ தான் தன்னை அறிமுகம் செய்து கொள்வார்.  

இப்படியான இவரது செயல் வாடிக்கையாளருக்கு LIC மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது. வணிகப்பெருக்கத்திற்கும் பெரும் அளவு  உதவியிருக்கிறது.  அந்த வாடிக்கையாளர் திரு பன்னீர் அவர்களையும், LIC நிறுவனத்தையும்  எப்போதும் நினைவில் வைத்திருப்பார்

வாடிக்கையாளரிடம் வாங்கி வந்த முன்மொழிவுகளின் மீது , அவை முழுமையாகும் வரை தனது நேரடி கவனிப்பை வைத்திருப்பார்

இவரது இந்த குணம் களப்பணியாளர்களை கவர்ந்திழுக்கும்

இவர் பின்பற்றும் எண்ணற்ற வணிக யுக்திகளுக்கு ஈடு இணை கிடையாது. ஒரே யுக்தியை பயன்படுத்தமாட்டார். காலத்திற்கேற்ப, நபர்களுக்கேற்ப யுக்திகளை மாற்றிக்கொண்டே இருப்பார்

ஒரு முறை ராமன் என்ற மேலாளரிடம் பேசியபோது, ஒரு கூட்டம் நடத்த  எப்படி திட்டமிடுவது, அனைவரையும் எப்படி ஒருங்கிணைப்பது, வெற்றிகரமாக எப்படி நடத்துவது, போன்றவற்றை கற்றுக்கொடுத்தவர் திரு பன்னீர் அவர்கள் என்பதை ஒரு குரு பக்தியுடன் என்னிடம் பகிர்ந்தார்.

இவரை கை  பேசியில் யார் எப்போது அழைத்தாலும், "என்ன சார்... எப்படி இருக்கீங்க" என்று ஒரு வித ஏற்ற இறக்கத்துடன் அழைப்பார். அதைக் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்சென்ற மாதம் கூட ஈரோடு வளர்ச்சி அலுவலர் திரு சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்திலிருந்து நான் அவரை அழைத்துப் பேசினேன்அதே குரலில் அதே " என்ன சார்...எப்படி இருக்கீங்க" என்ற சொற்களுடன் என்னிடம் நலம் விசாரித்தார்

அவரிடம் பேசுவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். எனக்கென்ன எல்லோருக்குமே மகிழ்ச்சியைத் தரும்இப்படி எல்லோருடனும் ஒரு நல்  உறவு பேணும் உயர்ந்த குணம் தான் இவரது வெற்றிக்கு அடிப்படை. இவரைப்போல் அனைவருடனும் உறவு பேணுவது மற்றவர்களுக்கு கடினமான ஒன்று

இவரைப் போன்ற பல அலுவலர்களும் , ஊழியர்களும்களப் பணியார்களுடனும் வாடிக்கை யாளர்களுடனும் பேணுகின்ற நல்  உறவு தான் LIC என்ற மாபெரும் நிறுவனம் ஓங்கி உயர்ந்து நிற்க அடிப்படைக் காரணம்

பாளை .இசக்கிராஜன்.