Tuesday, 30 July 2019


மார்ச் 21...

உலகம் முழுவதும் மார்ச் 21 ம் நாளை இன வேறுபாடுகளை முற்றிலும் ஒழிப்பதற்கான நாளாக கடைபிடித்து வருகிறது. இந்த நாளை  ஆஸ்திரேலிய நாடு தனது பன்முக  கலாச்சாரத்தைக் கொண்டாடும்  நல்லிணக்க நாளாக அனுசரித்து வருகிறது.  “எல்லோரும் எமக்குச் சொந்தமானவர்கள் “  என்ற கருத்தை பிரபலமாக்கி வருகிறது.  

மார்ச் 21… 

மற்றவர்களின் கலாச்சாரத்தை மதித்து போற்றுகின்ற ஒரு நாள்.  மொத்த சமுதாயமும் இணைந்து கலாச்சார வேற்றுமையில் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும்,  மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள். கலாச்சார நல்லிணக்கம் ஏற்றத்திற்கான ஒரு நல்ல மாற்றத்திற்காக  மக்களுடைய , சிந்தனைகளையும், கருத்துகளையும் இணைக்கும் நாள். 

இந்த நல்லிணக்க நாளை,  ஆரஞ்சு வண்ண உடைகளையும், ஆரஞ்சு வண்ண பட்டைகளையும்  அணிந்து கொண்டாடுகின்றனர். பல்வேறு நாட்டவர்களையும், பல்வேறு மொழி பேசுபவர்களையும், எந்த வேறுபாடுகளின்றி மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆஸ்திரேலியாவின் பெருமைகளோடு இணைத்துக் கொள்ளும் நாள்.

நல்லிணக்கத்திற்கான கருத்துக்களை மாணவப் பருவத்தில் இருந்தே விதைக்கிறார்கள். இதைக் கொண்டாடும் நாளில், ஆரஞ்சு வண்ண உடை உடுத்தி மாணவர்கள் வகுப்பிற்கு செல்கிறார்கள். மாணவர்கள் அனைவரும்  தங்கள் இல்லங்களில் தங்களது  கலாச்சாரத்திற்கு ஏற்றபடி பயன்படுத்தும்  உணவு வகைகளை கொண்டு வந்து எல்லோரிடமும் பகிர்ந்து உணவு அருந்துகிறார்கள். தங்களின் பாரம்பரிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தி அனைவரையும் மகிழ்விக்கிறார்கள். 

இந்த நல்லிணக்க நாளில் பன்முக கலாச்சாரத்தை போற்றும் வண்ணம்  பின்பற்ற வேண்டிய ஒரு சில வழிமுறைகளை கூறுகிறார்கள். 

  1. மற்ற மொழி திரைப்படத்தையோ நூலையோ படிக்கலாம்.
  2. வேறு கலாச்சாரத்தின் இசையை கேட்டு மகிழலாம்.
  3. வேறு இன மக்களை அழைத்து தனது கலாச்சரைப் பற்றி விளக்கலாம்.
  4. இதுவரை ருசித்திராத பிற இன உணவு வகைகள் கிடைக்கும் உணவகங்களுக்கு செல்லலாம்.
  5. மற்றவர்களின் கலாச்சாரத்தை விளக்கும் அருங்காட்சியகம் செல்லலாம்.
  6. பக்கத்துக்கு வீடுகளில் வசிக்கும் குடும்பத்தாரை அழைத்து தங்களது உணவு வகைகளை வழங்கி வாழ்க்கை பற்றிய கருத்துக்களை பகிரலாம்.
  7. வேற்று கலாசார அறிஞர்களான கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், போன்றவர்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
  8. வேறு இன மக்களின் வழிபாட்டு இடங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கலாம்.
  9. வெளிநாட்டு கலாச்சாரத்தை பற்றியும், பழக்கவழக்கங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
  10. வெளிநாட்டவர்களை, எந்த நாட்டுக்காரர் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். 
  11. மற்றவர்கள் கொண்டாடும் விழாக்களின் சிறப்புகள் பற்றியும் கொண்டாடும் முறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 
  12. நகைச்சுவை மன்றங்களுக்கு சென்று பிற மொழிகளில் தத்து பித்தென்று பேசி சிரிக்க வைக்கலாம்.
  13. விளையாட்டுப் போட்டிகளுக்கு சென்று உள்நாட்டு வீரர்களை உற்சாகப் படுத்தலாம். 
மார்ச் 21 ம் நாள் தான் நல்லிணக்க நாள் என்றாலும், அலுவலகங்களில், நிறுவனங்களில், கல்விக்கூடங்களில், தங்களுக்கு தோதுவான வேறு ஒரு நாளில் கூட கொண்டாடி வருகிறார்கள். 

எங்களது பேரன் சென்றுவரும் மழலையர் பள்ளியில் நல்லிணக்க நாள் கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. ஆரஞ்சு வண்ண உடையில் நமது வழக்கமான காலை உணவாகிய இட்லியை எடுத்துச்சென்று மற்றவர்களிடம் பகிரந்து கொள்ள இருப்பது சிறப்புச் செய்தி..

No comments:

Post a Comment