இலை விபூதியும் சந்தணமும் திருச்செந்தூரின் பெருமை.
ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடு திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர். கடற்கரையில் ஆலயம் அமைந்துள்ள தனிப் பெருமை பெற்ற ஓர் ஆன்மீக நகரம் இந்த ஊர்.
இந்த ஊர்க் கோவிலில் பக்தர்களுக்கு திருநீறை பன்னீர் இலையில் வைத்துத்தான் தருவார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பு இந்த முறையில் திரு நீறு தருவது.
திருச்செந்தூர், கோவிலுக்குள் வருகின்ற பக்தர்கள் மேலாடை எதுவும் இல்லாமல் வெற்று உடம்புடன் தான் வர வேண்டும்.
உள்ளே வந்ததும், மணியடி மண்டபத்தில் உள்ள கரிய மாணிக்க விநாயகர் முன்பு ஒரு பெரிய பாத்திரத்தில் சந்தணக் கலவையை வைத்திருப்பார்கள். அதில் இருந்து சந்தணக் கலவையை எடுத்து அடியார்களின் உடம்பில், குறிப்பாக முழு மார்பிலும் நன்றாக பூசி விடுவார்கள். அதைப் பூசிக் கொள்ளும் போது அத்தனை சுகம் இருக்கும்.
அந்த நறுமணம் நிறைந்த சந்தணத்தை அரைப்பதற்கென்றே, உள் பிரகாரத்தில் பெரிய அளவில் ஒரு கல் இருக்கும். இரண்டு ஊழியர்கள் கைகளால் பெரிய சந்தணக்கட்டையை பிடித்துக்கொண்டு, கட்டையை கல்லில் வைத்து அரைத்துக்கொண்டே இருப்பார்கள். இதில் கிடைக்கும் சந்தண குழம்பை தான் நீரில் கரைத்து வைத்திருப்பார்கள். கலப்படம் எதுவும் இல்லாத சந்தணம் அல்லவா.. அது நன்றாக மணம் வீசும். ஊழியர்களைக் கொண்டு சந்தணம் அரைப்பதை நிறுத்திவிட்டு, சில காலம் சந்தனக் கட்டைத் துண்டுகளை மின் விசை மூலம் ஆட்டும் கல் உரலில் போட்டு அரைத்து பயன் படுத்தினார்கள். சில வருடங்களில் அதுவும் நின்று போனது.
இத்தனை பெருமைகளையும் சிறப்புக்களையும் கொண்ட இலை விபூதியும், சந்தணக் கலவையும் இப்போது அடியார்களுக்கு வழங்கப்படுவதில்லை.
திருக்கோவிலுக்கு வரும் அடியார்களின் வருகை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. அவர்கள் உண்டியலில் போடும் பணமும், பல்வேறு காணிக்கை களும், பல வகை கட்டணங்களும் பன்மடங்கு கூடுதலாக பெருகி இருக்கின்றன.
இப்படி திருக்கோவிலின் வருவாய் பல மடங்கு உயர்ந்திருந்தாலும், அடியார்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருச்செந்தூர் கோவிலின் தனிப் பெருமையான இலை விபூதியும், சந்தணமும் நிறுத்தப்பட்டு ஆண்டுகள் பலவாகி விட்டன.
மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தும் அடியார்கள், தங்களது மொட்டைத் தலையில் பூசிக் கொள்வதற்காக ஒரு டப்பியில் கொஞ்சம் சந்தணத்தை வைத்து, பத்து ரூபாய்க்கு திருக்கோவில் நிர்வாகமே விற்பனை செய்து வருகிறது.
கட்டணம் எதுவும் தனியாக வசூலிக்காமலேயே, அடியார்களை மொட்டையடிக்கும் இந்த முறை எந்த வகையில் சரி என்று புரியவில்லை. இன்னும் எத்தனை தனிப் பெருமைகளை நாம் இழக்கப் போகிறோமோ தெரிய வில்லை.
பண வசதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அடியார்களின் விருப்பம் நிறைவேற ஆலயங்கள், அருள் புரிகின்றனவோ இல்லையோ, அறநிலையத் துறைக்கு பண வசதி பெருக நன்றாகவே அருள் புரிகின்றன.
பாளை ப.இசக்கிராஜன்.
No comments:
Post a Comment