Sunday, 8 September 2019

அந்த நாள் ஞாபகம்.....


அந்த நாள் ஞாபகம்.....

பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில், 1964 முதல் 1970 வரை "A" பிரிவில் SSLC முடிய என்னுடன் படித்த மாணவர்களுக்கு 2019-20ம் ஆண்டு பொன்விழா ஆண்டு ஆகும். அந்த பிரிவின் மாணவர்கள் நாங்கள் எங்கள் நினைவுகளை போற்றும் வண்ணம் இன்று நாங்கள் படித்த பள்ளியிலேயே ஒன்று கூடினோம்.  பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் தந்தை அகஸ்டின் ஜான் பீட்டர் அடிகளார் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்கள். இந்த கூட்டத்திற்கு எங்களுக்கு ஆசிரியர்களாக இருந்து வழியும் ஒளியும் காட்டிய திரு பீட்டர் ஃபிடெலிஸ் அவர்களும், திரு தனம் அவர்களும் வந்திருந்து எங்களை வாழ்த்தியும் ஆசி வழங்கியும் பேசினார்கள்.
வந்திருந்தோரை எங்களில் ஒருவரும், நெல்லை ம. தி .தா. இந்துக்கல்லூரியின் மேனாள் முதல்வருமான முனைவர் நமச்சிவாயம் அவர்கள் வரவேற்றுப் பேசினார்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி எங்களுக்கு ஆறுமுதல் எட்டாம் வகுப்புவரை வகுப்பு ஆசிரியராக இருந்து வழி நடத்திய திரு சுப்ரமணிய ஐயர் அவர்களின் நினைவாக ஏழை மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம். ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேருக்கு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேருக்கு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேருக்கு, என்று கல்வி உதவித் தொகை கடந்த வாரம் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் வழங்கப்பட்டன.
பயன் பெற்ற மாணவர்களும் வந்திருந்து, தங்களின் நன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள்.
பள்ளியின் பழைய மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் திரு பரமசிவனும், திரு பால் கதிரவன் அவர்களும், எங்களது இந்த முயற்சிகளைப் பாராட்டி, வாழ்த்திப் பேசினார்கள்.
ஆசிரியர் திரு சுப்ரமணிய ஐயர் அவர்களின் புதல்வர் திரு கல்யாணி அவர்களும், பேரன்மாரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கலந்துகொண்ட நாங்கள் ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்தை ஆழமாக எடுத்துரைத்தோம்.
விஜயன் அருள் ஜெபராஜ் என்ற ஒய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர், தனது நேர்மைக்கும், உண்மையான உழைப்பிற்கும், மொழி ஆளுமைக்கும், தூய சவேரியார் பள்ளியும் ஆசிரியர்களும் தான் முழு முதற் காரணம் என்று தெரிவித்தார்.
எங்களின் அனைத்து கூட்டங்களையும் திறம்பட நடத்தி வரும் திரு குமாரை அனைவரும் பாராட்டிப் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எங்களில் மூவர்களின் இல்லத்தரசிகளான திருமதி கோமதி நமச்சிவாயம், திருமதி பாக்கியலட்சுமி இசக்கிராஜன், திருமதி மஹாலக்ஷ்மி நாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நான், குமார், நமசிவாயம், ரூபன், பால்ராஜ், விஜயன் அருள், வேணுகோபால்,ரங்கன், ராமசுப்ரமணியன், ஜாண், திருமூலநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தோம்.
மாணவர்கள் நாங்கள்,  கடந்து வந்த பாதை பற்றியும், பெற்ற அனுபவங்கள் பற்றியும்  விரிவாகப் பேசினேன்.
திரு குமார் அவர்கள் நன்றி கூறினார்.

-பாளை ப.இசக்கிராஜன் 

இனிய உளவாக



இனிய உளவாக 

1950, 60 களில் நம் நாட்டில் படிப்பதற்கு வசதி மிகக் குறைவு. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கல்வி நிலையங்கள் இருந்தன. கிடைத்த வாய்ப்புக்களை வசதி படைத்தோர் முழுமையாக பயன் படுத்திக் கொண்டனர். கற்றறிந்து வாழ்க்கையில் ஒளிர் விட்டார்கள். ஆங்கில மொழி மீது அவர்களுக்கு பெரிய மோகம் இருந்தது.
திரை அரங்குகள் புதிதாக முளைக்கத் தொடங்கின. போக்குவரத்துக்கான வழித் தடங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு பேருந்துகள் இறக்கி விடப்பட்டன. படித்த பெரிய இடத்து நபர்கள் இவ்வகைத் தொழிலில் இறங்கி புதிது புதிதாக பல நிறுவனங்களைத் தொடங்கினார்கள்.
அந்த நிறுவனங்களுக்கு நமது வழக்கப்படி பெயர் வைப்பதற்கு முன்னுதாரம் இல்லை. எனவே மேலை நாடுகளில் பெயர் வைக்கும் முறையின் அடிப்படையில் பெயர்களை வைக்கத் தொடங்கினார்கள். அப்போது இருந்த பேருந்து நிறுவனங்களின் சில ஆங்கிலப் பெயர்கள் ரசிக்கும்படி இருந்தன.
பஸ் போக்குவரத்தை முதலில் தொடங்கிய முன்னோடிகள் நாங்கள் தான், என்பதைக் குறிக்கும்படி நாகர்கோவிலில் "Pioneer Bus Service" என்று தொடங்கினார்கள். இது போல் நெல்லையில் Southern Roadways என்ற பெயரிலும், Lion Bus Services என்ற பெயரிலும், Whales என்ற பெயரிலும், தொடங்கினார்கள்.
சிலர் உள்ளூர் பெயரையும் ஆங்கில வார்த்தைகளுடன் சேர்த்து வைத்தார்கள். இப்படித்தான் Sri Ram Popular Service என்ற பெயரில் , ஒரு நிறுவனம் தோன்றியது.
திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சேலத்தில் தொடங்கப்பட்டபோது, அதற்கு Modern Theatres என்ற ஆங்கிலப் பெயரைத் தான் சூட்டினார்கள். National Pictures, Jupiter Films, என்பது தயாரிப்பு நிறுவனங்கள்.
திரை அரங்குகளுக்குக் கூட ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டன. நெல்லை நகரத்தில், Palace-de-wales, Royal, Popular, Central, என்று சில அரங்குகள். பிற நகரங்களில் Coronation , Thai cinies, Pioneer, Regal , Rainbow, Gaiety, Crown,Wellington, Broadway, Plaza, National, Odeon, Woodlands, என்றும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டி திரை அரங்குகளைக் கட்டினார்கள்.
காலப்போக்கில் தமிழ்ப் பெயர்களுக்கு மாறி வந்தாலும், காலச்சுழற்சியில் திரையரங்குகளுக்கு இப்போது  மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறை வந்து கொண்டு இருக்கின்றன.
அப்போதெல்லாம் அடுக்ககங்கள் என்பது கிடையாது. எல்லாம் தனித் தனி வீடுகள் அல்லது வளவு வீடுகள் தான். வளவு வீடுகள் உரிமையாளர்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. அரண்மனை போன்ற பெரிய பெரிய வீடுகளும் கட்டினார்கள்.
என் வகுப்புத் தோழன் எட்டயபுரத்து வாரிசு திரு விஜயன் அவர்களின் அரண்மனை நெல்லை வீரராகவ புரத்தில் இருக்கிறது. அந்த மாளிகைக்கு Castle Wood என்று பெயர். படிக்கின்ற காலத்தில் அந்தப் பெயர்களுக்குண்டான காரணங்களும், பொருளும் தெரிய வில்லை. சிறிது வளர்ந்த பிறகு தான் அதன் உட் பொருளை எல்லாம் உணர முடிந்தது.
இப்போதும் கூட ஆங்கிலம் மீதுள்ள மோகத்தினால் மக்கள் அடுக்ககங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். சிலர் ஆங்கிலத்தில் இருந்தால் தான்  பெருமை என்று நினைத்து பொருத்தமில்லாத பெயர்களைக் கூட வைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் Enclave, Plaza , Avenue, Nest என்றெல்லாம் பெயரிடுகிறார்கள். Cozy Nest என்பதற்கு வசதியான ஒரு உறைவிடம் என்று பொருள். இந்த பெயர் பொருத்தமானதாக தோன்றுகிறது. பக்கத்தில் சுற்றி இருப்பவர்களைக் காட்டிலும் மாறு பட்டவர்கள் இருக்கும் ஒரு இடம் தான் Enclave எனப்படும். எந்த வகையில் அந்த அடுக்ககத்தில் வசிப்பவர்கள்  மாறுபட்டவர்கள் என்று தான் சொல்லத் தெரியவில்லை.
Plaza என்பதற்கு அங்காடி, அல்லது சந்தை நடக்கக்கூடிய நகரத்தின் திறந்த வெளிப் பகுதி என்று பொருள் கூறுகிறார்கள்.. அடுக்ககத்துக்கு இந்தப் பெயர் எப்படி பொருந்துகிறது என்று தெரியவில்லை. இப்படிப் பல பொருந்தாப் பெயர்களை அடுக்ககத்திற்கு சூட்டியுள்ளனர். நிழற் சாலை என பொருள்படும் Avenue என்ற ஆங்கிலச்சொல், ஓர் அடுக்ககத்திறகு எப்படி பொருந்துகிறது என்று தான் தெரிய வில்லை.
சிறு குழந்தைகளுக்கு இப்போது சூட்டப்படும் பெயர்களில் கூட வடமொழி கலக்கப்பட்டு , ஒரு முறைக்கு பலமுறை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு தான் அந்த குழந்தைச் செல்வங்களின் பெயரை உச்சரிக்கவே முடிகிறது.
இனிய உளவாக இன்னாத கூறல் என்ற குறள் தான் மனதில் வந்து போகிறது.
- பாளை ப.இசக்கிராஜன்.

பள்ளியில் சீருடை



பள்ளியில் சீருடை 

நான் 1964ல் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தான் சீருடை அணிவது பற்றி தெரிந்து கொண்டேன். அப்போது அனைத்துப் பள்ளிகளிலும் மேல் சட்டை வெள்ளை நிறத்தில் மட்டும் தான் இருக்கும். அரைக்கால் டவுசர் நிறம் மட்டும் பள்ளிக்கு பள்ளி மாறுபடும்.
எங்களது தூய சவேரியார் பள்ளியில் அரைக்கால் டவுசர் "நேவி ப்ளூ" நிறம். பக்கத்தில் இருந்த தூய யோவான் பள்ளியில் "காக்கி" நிறத்தில் டவுசர். கதீட்ரல் பள்ளியில் செங்கல் நிறம் போன்ற ஒரு "சிகப்பு" நிறம்.
எங்கள் வகுப்பில் எட்டயபுரத்து ஜமீன் குடும்பத்து இளவரசு வெங்கட விஜயன் ஒரு மாணவன். பெரு நிலக்கிழார் திரு அம்மையப்ப முதலியார் அவர்களின் புதல்வன் நமச்சிவாயம் ஒரு மாணவன். வண்ணாரப் பேட்டை பண்ணையார் குடும்பத்து கிருஷ்ண சீனிவாசன் ஒரு மாணவன்.
ACA சிட் பண்டு நிறுவன உரிமையாளர் திரு ராமசாமி அவர்களின் புதல்வன் சீனிவாசன் ஒரு மாணவன். அஞ்சல் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஊழியர் திரு குமார் அவர்களின் புதல்வன் திரு பால்ராஜ் ஒரு மாணவன். காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் புதல்வன் திரு குமார் என்ற மாணவன். கோவில் பட்டி மீனாட்சி மேட்ச் பேக்டரி குடும்பத்து ராஜசேகர் ஒரு மாணவன். 
விருதுநகர் திரு ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவர் அவர்களின் புதல்வன் ரவீந்திரன் ஒரு மாணவன். லயோலா கான்வெண்ட் ஆசிரியை திருமதி பாமா டீச்சரின் புதல்வன் சங்கரலிங்கம் ஒரு மாணவன். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு G.R.எட்மண்ட் அவர்களின் மைத்துனர் ரூபன் ஒரு மாணவன்.நெல்லை மாவட்டத்து ஆட்சித் தலைவர் திரு MAK தயாப் அவர்களின் தம்பி ஒரு மாணவன்.
மாவட்ட நீதியரசரின் புதல்வன் சீனிவாசன் ஒரு மாணவன். இவர்களோடு பாளை காந்தி மார்க்கெட் ஏழை கணக்கப் பிள்ளை பலவேசம் பிள்ளையின் புதல்வன் இசக்கிராஜன் என்ற நானும் ஒரு மாணவன்.
இப்படி பல்வேறுதரப்பட்ட பொருளாதார நிலைகளில் இருந்தவர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். பள்ளிக்கூடத்தில் எட்டய புரத்து வாரிசு விஜயன் விலை உயர்ந்த ஆடை அணிந்தும் , இசக்கிராஜன் விலை குறைந்த ஆடை அணிந்தும் உலா வந்திருந்தால், எங்களுக்கிடையே இருந்த பொருளாதார வேறுபாடு பார்ப்பவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். எங்களின் மனங்கள் ஒரு போதும் நெருங்கியிருக்காது.
சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தவர்கள் என்று அனைவரும் ஒரே மாதிரி சீருடை அணிந்து பள்ளிக்கு வந்ததால் தான் எங்களுக்குள் உள்ளே இருந்த வேறுபாடுகள் வெளியே தெரியவில்லை.
அனைவரும் ஒன்றாக இணைந்து, சமமாக உறவாடியும் விளையாடியும் மகிழ்ந்தோம். இப்படி ஒருவொருக் கொருவர் வேறுபாடு தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பள்ளிப் பருவ காலத்தில் ஒரு நிலைமை இருந்து. அதற்கு பள்ளிக்கூடங்கள் பின் பற்றிய சீருடைக் கொள்கை தான் முழு முதற் காரணம்.
இப்போது பள்ளிக்கூடங்கள் பின்பற்றும் சீருடை அமைப்பு, ஏற்றத் தாழ்வுகளை இன்னும் வெளிச்சப் படுத்துகின்றன. அணிந்திருக்கும் சீருடையை வைத்து ஒரு மாணவன் அரசுப் பள்ளி மாணவனாக அடையாளம் காணப்படுகிரறான். எனவே அவன் சரியாக நடத்தப் படுவதில்லை.
வசதி உள்ளோருக்காக என்று தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகி விட்டன. வசதி உள்ளவர்கள் தங்கள் குழந்தைச் செல்வங்களை இது போன்ற பள்ளிகளில் சேர்ப்பதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள். மாணவ மாணவியர் அணியும் சீருடையை வைத்து அவர்கள் படிக்கும் தனியார் பள்ளிக்கூடம் எது என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். இந்த சமூகம் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை வைத்து வெவ்வேறு நிலைகளில் உயர்வாகவும் தாழ்வாகவும் பார்க்கிறது.
ஏற்றத் தாழ்வுகளை அகற்ற அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைகள் இன்று மிக எளிதாக மாணவ மாணவியரை தரம் பிரித்து காட்டிக் கொடுத்து விடுகின்றன.
எங்கள் L.I.C அலுவலகத்தில், சார் நிலை பணியாளர்களுக்கு வெள்ளை நிறத்தில் சீருடை வழங்குகிறார்கள். அந்த சீருடையை வைத்து அவர்களின் அலுவலக நிலையை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதனால், அவர்களுக்குள் அவர்கள் அறியாமலேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.
1970, 80 களில் AIIEA என்ற ஊழியர் சங்கத்தில் சென்னையில் தோழர் ராஜப்பா, தோழர் நடராஜன் , தோழர் V.D சோமசுந்தரம் போன்றோர் தலைவர்களாக இருந்தார்கள். ஊழியர்களின் மனங்களில் ஒருபோதும் தாழ்வு மனப் பான்மை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவர்களும் வெள்ளை நிறத்தில் மேல் சட்டை, குழாய் அணிந்து சார் நிலை ஊழியர்களை உற்சாகப் படுத்தியதை நான் நன்கறிவேன். அவர்கள் பணி ஓய்விற்குப் பிறகு இன்றைக்கும் இதே வெள்ளை நிற உடையைத் தான் அணிந்து வருகிறார்கள்.
சீருடைகள், ஏற்றத் தாழ்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால் இப்போது எந்தப் பள்ளிக்கூடம் என்பதை அறிந்து கொள்வதற்கான அடயாளாமாக மாறியுள்ளன.
சீருடைகள் ஏற்றத் தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கருவிகளாக இப்போது மாறிவிட்டன.

- பாளை ப. இசக்கிராஜன்