Thursday, 12 May 2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..

தேர்தல் ஆணையம்
நடவடிக்கை எடுக்கத்தான்
செய்கிறது.

அவர்கள் அரசாங்க அலுவலர்களைத்தான்
நம்பி யிருக்கவேண்டியுள்ளது.

அவர்கள்
ஆளுங்கட்சிக்கு
ஆமாம் போட
வேண்டியிருக்கிறது.

ஒரு சில நேர்மையான அலுவலர்கள்
சிறுபான்மையாக
இருக்கிறார்கள்.

பெரும்பான்மை ஆட்டம்
போடுகிறது.

தில்லுமுல்லோ
அதிக தில்லுமுல்லோ
நமக்கு
அனுபவிக்கவேண்டிய
நிலமைதான்.

யார் வந்தாலும்
கையூட்டு விகிதம்
கூடத்தான் போகுது.

கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையாய்
விரலிருந்தும் வீக்காய் தான்
காலந்தள்ளவேண்டும்.

காந்தி நாட்டு
விடுதலைக்காக
போராடினார்.
இன்றைய தலைகள்
காந்திக்காக
போறாடுகிறார்கள்.

நல்லது நடக்கும்
என்ற நம்பிக்கை
எனக்கில்லை.

நடப்பது நடக்கட்டும்.

Tuesday, 10 May 2016

ஓட்டுக்கு முன்னும் பின்னும்

ஓட்டு..

முதலில் ...
அவர் கை கூப்புவார்.
பிறகு காலில் விழுவார்.
நாம் வாக்களிப்போம்.
அவர் வெற்றிபெறுவார்.

பிறகு...
நாம்
அவருக்கு கை கூப்புவோம்.
அவர் காலில் வீழ்வோம்
நாம் தோற்போம்.

வைரஸ் அட்டை

1980 களில் நடந்த
உண்மைச் சம்பவம்.

எல்ஐசியில் ....
அப்போது கணினி
வசதி கிடையாது.

மதுரைக்கோட்டத்தில்
ஒவ்வொரு கிளையும்
அன்று வசூலித்த
புதுவணிகத்திற்கான
முன்வைப்புத்
தொகை எவ்வளவு,
எண்ணிக்கை
எத்தனை  என்பதை
கோட்ட மேலாளருக்கு
அவரது பெயரில்
அவரது முகவரி
அச்சிடப்பட்ட
அஞ்சலட்டையில்
எழுதி ஸ்டாம்ப் ஒட்டி
நாள் தோறும் அஞ்சலில்
அனுப்பவேண்டும்.

மறுநாள் அவர் கைக்கு
கிடைக்கும்.
அவை பட்டியல் இடப்பட்டு
கோட்ட மேலாளர்
பார்வைக்கு
வைக்கப்படும்.

எண்ணிக்கையின்
அளவைப்பொறுத்து
தட்டிக்கொடுப்பதும்
திட்டி விரட்டுவதும்
நடக்கும்.

ஒரு கிளையில்
ஒரு ஊழியருக்கு
கோட்ட மேலாளர் மேல்
காட்டம்..

அவரை கடுப்பேற்ற
ஆசைப்பட்டார்.

கிளை அலுவலகத்தில்
ஏற்கனவே அச்சிட்டு
வைக்கப்பட்டிருந்த
நாள்தோறும்
அனுப்பவேண்டிய
அட்டைகளை கொத்தாக
எடுத்து ஒருநாள்
அப்படியே
அஞ்சல் தலை ஒட்டாமல்
அஞ்சல் பெட்டியில்
போட்டுவிட்டார்.

மறுநாள்
அவை அனைத்தும்
"DUE" முத்திரையுடன்
கோட்ட அலுவலகத்தில்
பட்டுவாடா செய்யப்பட்டன.

அந்த அபராதமும்
அஞ்சல் துறையால் வசூலிக்கப்பட்டதாக
கூறுவார்கள்.

இப்போது "வைரஸ்"
உள்ள மெயில்,
"Spam" மெயில் என்று
சொல்கிறோமே,
இதைப்போல் அன்றே
வைரஸ் அஞ்சல்
அனுப்பப்பட்டுள்ளது.

அனுப்பியது யாரென்று
அனைவருக்கும் தெரியும்.
ஆனால் நடவடிக்கை
எடுக்க முடியவில்லை.
எடுக்கப்படவும் இல்லை.

தாய்...

அன்னை....
அருமையான
தமிழ் வார்த்தை...

ஆனாலும்
யார்யாரையோ
நினைவிற்குக்
கொண்டுவரும்
வார்த்தை.

அம்மா...
அழகான
தமிழ்ச்சொல்..

ஆனாலும் யாரோ
நினைவில்வந்து
மிரட்டும்
வார்த்தை.

தாய்...
இனிமையான
தமிழ்ச்சொல்.
பெற்றதாயைமட்டுமே
நினைவிற்கு
கொண்டுவரும்
வசிய வார்த்தை.

இன்று...
உலக அளவில்
தாயை
நினைத்து
மகிழ்ந்து
போற்றிப்
புகழ்ந்து
வணங்கிடும்
வரலாற்றுச்
சிறப்புநாள்.

என் தாய்..
அவள் மெய்..

அவளின்
உதிரம் நான்.

உயரத்தில் அவள்
குள்ளம்.

உள்ளத்தில் இல்லை
கள்ளம்.

அவளின்றி
நான் இல்லை.

என்னை...
பெற்றவள்.
வளரத்தவள்.
பேணியவள்.
நெறிப்படுத்தியவள்.

மகளாக நினைத்து
மஞ்சள்தேய்த்து
குளிப்பாட்டியவள்.

பாவாடை அணிவித்து
பார்த்து ரசித்தவள்.

எதைவைத்தாலும்
சாப்பிடுவான் என்று
சொல்லிச்சொல்லி
அனுசரனை குணத்தை
அள்ளிக் கொடுத்தவள்.

வீட்டு வேலைகளில்
உதவுபவன் என்று
பிறரிடம் உரக்கக்கூறி
உதவிடும்
மனப்பான்மையை
உயர்த்த உதவியவள்.

காபியில் ...
நஞ்சு இருக்கிறது
என்று சொல்லி சொல்லி
அந்த பழக்கத்தை
அண்டவிடமல் அடித்து
விரட்டியவள்.

என் "துரை"
நன்றாகப்படிப்பவன்
என்று பிரகடனம் செய்தே
என்னை படிப்பில்
முந்தியிருக்கச்செய்தவள்.

என் சிரிப்பை பாரத்து
மகிழ்ந்தவள்.

ஆரம்பகால
வளர்ச்சியை பார்த்து
ஆனந்தமடைந்தவள்.

பேரக்குழந்தைகளின்
குறும்பை ரசித்த
குதூகலத்தோடு
கண்ணை
மூடியவள்.

விண்ணிலிருந்தபடியே
முழுவளர்ச்சியையும்
கண்டு களிக்கிறாள்.
காத்தருளுகிறாள்..

"தாயார்" நாளில்
இந்த......
ராஜனைப்பெற்ற
ராஜம்மாவை
நினைத்துத்
துதிக்கிறேன்.

வாழ்க அவள் நினைவு.
வளரட்டும் அவளருள்..

பெற்றெடுத்தால்தான்
தாயா?...
பெற்றெடுக்காத
மற்ற தாய்மாரையும்
இத்திருநாளில்
வணங்குகிறேன்