Wednesday, 28 August 2019

பரிவு…பாசம்..எளிமை…



பரிவுபாசம்..எளிமை

2012 வாக்கில் ஒரு முறை நான் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணித்தேன். 72 இருக்கைகள் உள்ள ATR - 72 வகை சிறிய விமானம். ஒவ்வொரு வரிசையிலும், வலப்பக்கம் இரண்டு , இடப் பக்கம் இரண்டு , என்று வரிசைக்கு  நான்கு இருக்கைகள் மட்டும் தான். 

எனது பக்கத்தில்,  ஜன்னல் ஓரம் இருந்த இருக்கையில், முன்னாள் தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மைய அரசின் முன்னாள் அமைச்சரும், இப்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு திருநாவுக்கரசர் அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். 

பயணிகள் அனைவரும் உள்ளே ஏறி வந்து விட்டாலும், ஏதோ சில காரணஙகளுக்காக விமானம் புறப்பட நீண்ட தாமதமாகியது. விமானத்தின் உள்ளேயே முக்கால் மணி நேரமாவது இருக்க வேண்டியிருந்தது. அருகிலிருந்த அரசியல் தலைவரிடம் நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசத் துவங்கினேன். 

அவர் PUC படித்த பாளை தூய சவேரியார் கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்றும், மாணவர் மன்றத்தில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன் என்றும் கூறினேன். இதைக் கேட்டதும்  மகிழ்ச்சி அடைந்தார். எங்கள் கல்லூரியில் அவருடன் படித்த அவருக்கு நெருக்கமான  வழக்கறிஞர் திரு V.T. திருமலையப்பன் அவர்கள் எனக்கும் நல்லதொரு நண்பர் என்று கூறினேன். 

அறந்தாங்கி தொகுதியில் அவர் முதன் முறை தேர்தல் களம் காணும் போது, அவருக்கு நம்பிக்கையாக உடன் நின்றவர் திரு V.T. திருமலையப்பன் அவர்கள் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த தகவலை அவரிடம் தெரிவித்தபோது மனிதர் அதிசயப்பட்டார். 

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு தனுஷ்கோடி ஆதித்தன் அவர்களும், மாநிலங்களவை உறுப்பினராக பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதிமுக வின் திரு சௌந்தர் ராஜனும் எனக்கு நல்ல அறிமுகம் என்றேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர்.பி.ஆதித்தன் என் வகுப்புத் தோழன் என்றேன். ஆர்வமுடன் அனைத்தையும் கேட்டுவந்தார். 

அவர் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த காலம். அப்போது சிமெண்ட் மிகவும் தட்டுப்பாடாய் இருந்தது. 1983 வாக்கில், அவரது முன் முயற்சியால், தட்டுப்பாட்டை சமாளிக்க, கொரிய நாட்டிலிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்ய ஏற்பாடாகி இருந்ததுதேவைப்படுவோர் முன் கூட்டியே DD வாங்கி விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்கவேண்டும். விண்ணப்பதோடு கட்டுமானம் நடப்பது  குறித்து  சில ஆவணங்களை யும் இணைக்க வேண்டும். 

ஒரு லாரி லோடு சிமண்ட் வாங்க,  நானும் ரூ  10000க்கு DD வாங்கி கொண்டு சென்னை சென்றேன். அண்ணா சாலை தேவநேயப்பாவாணர் கட்டடத்தில் செயல் பட்டு வந்த தமிழ் நாடு தொழிற் கழக அலுவலகத்தில் கொடுத்து சிமெண்ட் வாங்கிக்கொள்வதற்கான உத்தரவு வாங்கினேன். தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வரும் சிமெண்டை அங்கேயிருந்து நேரடியாக இறக்கி லாரிகளில் கொண்டு செல்லலாம். இந்த உத்தரவைக் காண்பித்து, ஒரு லாரியில் சிமெண்ட் மூட்டைகளை அங்கிருந்து ஏற்றி பாளைக்கு கொண்டு வந்தேன். அந்த தரமான சிமெண்டினால் தான் புதிய வீட்டின்  கட்டிட வேலைகளை முடித்தேன். இந்த தகவலையும் அவரிடம் பகிர்ந்தேன்.

மக்களுடன் அவருக்கிருந்த நேரடித் தொடர்பு குறித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். அந்த உறவு தான் அவரை பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற வைத்தது என்ற உண்மையை நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறினேன். கேட்டு மகிழ்ந்தார்.  அறந்தாங்கி சட்ட மன்ற எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுக துக்கங்களில் அவர் பங்கு பெற்று வந்தது குறித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். மிக்க மகிழ்ச்சியடைந்தார். 

அவரது தொகுதியில் வசித்த எனது LIC நண்பர் ஒருவரின் பெயரைக் கூறி அவர் அங்கு கட்டாத வீடு ஒன்றிற்கு புதுமனை புகு விழா அழைப்பிதழ் அட்டை அடித்து அவரிடம் கொடுத்ததையும், அதற்கு அவர் 500 ரூபாயை ஒரு கவரில் வைத்து அன்பளிப்பாக கொடுத்ததையும் கூறினேன். அப்போது அவர் மெலிதாக புன்னகைத்தார்.

அரசியலில் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் LIC யில் உயர் அலுவலராக எப்படி என்றெல்லாம் கேட்டார். வேறு பல நாட்டு நடப்புகள்  பற்றியும் விவாதித்தார்.   நானும் அவரது அரசியல் அனுபவங்கள், வெற்றி தோல்விகள், அவர் பெற்ற ஏற்றங்கள், ஏமாற்றங்கள், குறித்து விசாரித்தேன். அவருக்கு சங்கடம் தரும் கேள்விகளை கேட்கவில்லை. பல கேள்விகளுக்கு முழுமையாக பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு புன் முறுவலை மற்றும் பதிலாகத் தந்தார். இப்படி பல செய்திகளையும்  அலசி ஆராய்ந்தோம். 

மதுரை வரும் வரை, ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பொழுது போவதே தெரியாமல் பேசி மகிழ்ந்தோம். பயணம் முடியக் கூடிய நேரம் நெருங்கியதும், சென்னை ஷெனாய் நகரில் தான் வீடு உள்ளது என்றார். அவரது இல்லத்திற்கு ஒருமுறை கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும் என்று மிகுந்த பாசத்துடன் அழைத்தார். நான் 2013 ஜனவரி இறுதியில், பணி நிறைவு பெற்றதும், சென்னையை விட்டு உடனே திருச்சிக்கு வந்து விட்டதால், அவரது அன்பு அழப்பை நிறைவேற்ற இயலவில்லை.  நான் தான் அந்த அரிய பொன்னான வாய்ப்பை பயன் படுத்தத் தவறி விட்டேன்.  

இவரது பரிவு, பாசம், மற்றவர்களை மதிக்கும் பண்பு, அனைத்திற்கும் மேலாக இவரது எளிமைஇவை தான் இவரது வெற்றிக்கு அடித்தளம் என்பதை உணர்வு பூர்மாக உணர்ந்து கொண்டேன்.   இந்த பயண அனுபவத்தைப் பற்றியும், திரு திருநாவுக்கரசர் அவர்களின் எளிமை பற்றியம்  என்னுடைய சக அலுவலர் ஒருவரிடம் பகிர்ந்து , வியந்து மகிழ்ந்தேன். நண்பரும் அவருடைய பயண அனுபவம் ஒன்றை என்னிடம் கூறினார். 

ஒரு தடவை, அப்போது மைய அரசில் மிக முக்கிய துறையில் அமைச்சராக இருந்த தமிழ் நாட்டுக் காரர் ஒருவர் விமான பயணத்தின் போது நண்பருக்கு முன் இருக்கையில் அமர்ந்து வந்தாராம். யாருடனும் எதுவும் பேச வில்லையாம். தலை நிமிர்ந்து கூட யாருடைய முகத்தையும் பார்க்க வில்லையாம். இறுகிய முகத்துடன் தான் இருந்தாராம். இறங்கிப் போகும் போது கூட குனிந்த தலை நிமிராமல் தான் சென்றாரம். அவர் நடந்து கொண்ட முறை, தன்னடக்கத்தினால் அல்ல என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.

அவரும் என்னைப்போலவே இந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தாராம். அமைச்சரைப் பார்த்ததில் மகிழ்ச்சியாம்.. மீண்டும் எண்ணிப் பார்த்தாராம். முடிவை மாற்றிக் கொண்டாராம். அவரது அணுகு முறை பற்றி மிகவும் வருந்தினாராம். 

மீண்டும் எண்ணிப் பார்த்தால் முடிவு மாறுமோ?

அரசியல் சார்பு எதுவுமின்றி சொல்கிறேன். திரு திருநாவுக்கரசர் போல் மக்களோடு மக்களாக பழகுபவர்கள் மட்டுமே எந்த நிலையிலும் மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு நிலையிலும் தாழ்ந்து போக மாட்டார்கள்.  இது தான்  மக்கள் தலைவர்களின் வெற்றி ரகசியம்.


- .இசக்கிராஜன்.

Boulevard & Avenue



Boulevard & Avenue


திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள இரண்டு இணை சாலைகள் West Boulevard சாலையும் East Boulevard சாலையும். திருச்சி நகருக்கு வந்த புதிதில் இந்த பெயரை உச்சரிக்கவே திணறி இருக்கிறேன். 

West Boulevard சாலை மெயின் கார்டு கேட் டில் துவங்கி காந்தி மார்க்கெட் சாலை வரை நீண்டிருக்கும்.  East Boulevard சாலை என்பது ரயில்வே கேட் தொடங்கி காந்தி மார்க்கெட் சாலை வரை நீண்டிருக்கும்.  அதனை EB ரோடு என்று சுருக்கமாகவும்  அழைப்பார்கள். நான் கூட அந்த சாலையில் மின் வாரிய அலுவலகம் ஏதாவது இருக்கும். அதனால் தான் EB ரோடு என்று அழைக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.  சமீபத்தில் தான்  East Boulevard ரோடு என்பதன் சுருக்கம் தான் EB ரோடு என்று புரிந்து கொண்டேன். 

Boulevard என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பொருள் புரியாமலேயே நீண்ட காலம் இருந்து வந்தேன். மாநகராட்சி அதனை மேல அரண் சாலை என்றும், கிழக்கு அரண் சாலை என்றும் மொழி மாற்றம் செய்திருந்தனர். நான் அரண் என்பது ஏதோ மதில் சுவர் மாதிரி என்று நினைத்துக்கொண்டேன்.

இதைப் போலவே சென்னையில் 1970களில் முளைத்த அண்ணா நகரில்  ஒவ்வொரு சாலைக்கும், இத்தனாவது அவெனியூ, அத்தனாவது அவெனியூ என்று வரிசையாக பெயர் வைத்திருக்கின்றனர்.  அவெனியூ என்பது எதைக் குறிக்கும் என்று பல வருடங்களாக எனக்குள் ஒரு கேள்வி வந்து போய்க் கொண்டே இருந்தது.  மாநகராட்சி அதனை நிழற் சாலை என்று தமிழ்ப் படுத்தியிருந்தார்கள். தமிழ்ச்  சொல் புரிந்திருந்தாலும் அதன் சரியான பொருள் புரியவில்லை. என் அறியாமையை வெளிக்காட்டாமல  காலத்தை ஓட்டி வந்தேன். 

மனசு பொறுக்கவில்லை. நமக்கு பல வகைகளில் வழிகாட்டவும், நமக்குள் இருக்கும் அறியாமை என்ற இருளை அகற்றி ஒளிகாட்டவும், உருவமில்லாத Google Aandavar  ஒருவர் இருக்கிறாரே.. அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று முடிவு செய்தேன்.  அந்த கூகிள் ஆண்டவரைக் கலந்து ஆலோசிக்க முடிவெடுத்து என் மடிக்கணினியின் வில்லைகளை விரைவாகத் தட்டி விட்டேன். விளக்கங்கள் மடியில் வந்து விழுந்து குவிந்தன.

Boulevard என்பதற்கும், Avenue என்பதற்கும் சற்றேறக்குறைய ஒரே பொருளைத் தான் தெரிவித்தார்.  இரண்டு பக்கங்களிலும் வரிசையாக மரங்கள் நிறைந்திருக்கும் அகலமான, அழகான  ஒரு சாலை என்பதைத்தான் அந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் குறிப்பிடுகின்றன. 

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் பொருத்தமாக, ஆங்கிலத்தில் திருச்சி நகரில் Boulevard என்று பெயர் வைத்ததை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  தமிழக அரசால் சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்ட அண்ணா நகருக்கு அழகு தமிழில் ஆயிரம் சொற்கள் இருக்கும்போது ஏன் Avenue என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்தினார்கள் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடிய வில்லை. 

அரண் சாலை என்றும் நிழற் சாலை என்றும் பெயர் சூட்டியதற்குப் பதில் இதே பொருள் தரும் வேறு சில அழகு  சொற்களை எளிய தமிழில் பயன் படுத்தி இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.  

- பாளை .இசக்கிராஜன்.

அனைத்திலும் சுத்தம்



அனைத்திலும் சுத்தம் 


என்னுடைய நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை கேரளத்தில் இருந்த போது 1990 ல் திருவல்லா RTO அலுவலகத்தில் பெற்றேன். அரசு அறிவித்துள்ள உரிய கட்டணத்தைத் தவிர கூடுதலாக பத்து காசு கூட யாரும் அன்பளிப்பு கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. அங்கு வாழும் மக்களிடம் இருக்கும் விழிப்புணர்வு தான் இதற்கு அடிப்படைக் காரணம். 

திருவல்லாவிலிருந்து  பலமுறை நெல்லைக்கு என்னுடைய காரில் வந்து போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் தமிழ் நாட்டு எல்லையைக் கடக்கும் போதும் சோதனைச் சாவடியில் இருப்பவர்கள் கை நீட்டுவார்கள். மறுப்பு தெரிவித்தால் 20 ரூபாய்க்கு கொடி யாவது வாங்கச் சொல்லி  வற்புறுத்துவார்கள். கேரளத்து சாவடிகளில் ஒரு போதும் இப்படி நடந்ததில்லை. 

1992 ல் எனக்கு திருவல்லாவிலிருந்து திருச்செந்தூருக்கு பதவி உயர்வில் இட மாற்றம் வந்தது . திருவல்லா வீட்டைக் காலி செய்து, வீட்டுப் பொருட்களை ஒரு லாரியில் ஏற்றி தமிழ் நாட்டிற்கு அனுப்பினேன். பொருட்களை ஏற்றி வந்த அதே வண்டியில் நானும் உடன் வந்தேன். 

கேரள சோதனைச் சாவடியில் ஆவணங்கள் கேட்டார்கள். அலுவலகத்திலிருந்து வந்திருந்த இட மாறுதல் உத்தரவு, வீட்டுச் சாமான்களின் விவரப் பட்டியல் போன்றவற்றை காண்பித்தேன். 

தமிழ் நாட்டில் நடைமுறையிலிருந்த வழக்கப்படி, ஆவணங்களோடு சேர்த்து ஒரு 20 ரூபாய் தாளையும் சேர்த்துக் கொடுத்தேன். அங்கிருந்த அலுவலர், ஆவணங்களைச்  சரி பார்த்து விட்டு, பணத்தை எடுக்காமல், புறங்கையை ஆட்டி, ஒரு "ச்சு ச்சு"  என்ற ஒலி எழுப்பி என்னைத்  திருப்பி அனுப்பினார். 

அந்த சுகமான  அனுபவம், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. இன்றைக்கும் இது போன்ற நிலைமை அங்கு தொடர்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் சரி இது தான் அங்குள்ள  நிலைமை.

எங்கள் வாகனம் கேரள எல்லையைத் தாண்டி தமிழ்  நாட்டின் புளியரையில் உள்ள  சோதனைச் சாவடியில் நின்றது. ஓட்டுநருடன் நானும் கீழே இறங்கி,  ஆவணங்களை அங்கிருந்த அலுவலரிடம் காண்பித்தேன். அத்துடன் சேர்த்து 100 ரூ தாளையும் சேர்த்தே கொடுத்தேன். அவற்றை சரி பார்த்த அலுவலர், அனைத்தும் சரியாக இருந்தாலும் 100 ரூபாய் குறைச்சல் என்று நினைத்திருக்கிறார். 

ஆவணங்களைத்  திருப்பித் தராமல், என்னிடம் கூடுதலாக பணம் பறிக்க என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தார். பிறகு நாங்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநர் சீருடை அணியாமல் இருக்கிறார். அதற்கு ரூ 500 அபராதம். அதை  நீதி மன்றத்தில் தான் செலுத்த வேண்டும் என்று பயமுறுத்தினார். நான் அதிர்ச்சியுடன்  ஓட்டுநரைப் பார்த்தேன். 

ஓட்டுநர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கையை விரித்து விட்டார். அன்பளிப்பாக  கூடுதல் பணத்தைக் கொடுக்கா விட்டால், வண்டியை அனுப்ப தாமதிப்பார்கள் என்றும் கவலைப்பட்டார். 

இந்த தாமதத்திற்காக நான் வண்டி வாடகையை உயர்த்திக் கொடுக்க வேண்டி வரும் என்றும் கூறினார். இந்த சிக்கலைத்  தீர்க்க அந்த அலுவலருக்கு ஒரு 300 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து விடும்படியும்  ஆலோசனை கூறினார். 

நானும் வேறு வழி இல்லாமல் இன்னொரு 200 ரூபாயை அவரிடம் தண்டம் கொடுத்து அழுதேன். அதற்குப் பின்னர் தான் எங்களால் வண்டியை எடுக்க முடிந்தது. 

இந்த நிலைமை தமிழ் நாட்டுச் சோதனைச் சாவடிகளில் காலங்காலமாகத்  தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

கேரள மக்களிடம் இயற்கையிலேயே நிறைந்துள்ள விழிப்புணர்வும், போராட்ட குணமும் தமிழ் நாட்டு மக்களிடம் இல்லாதது மிகப் பெரிய குறை.  இந்த நற் குணங்கள் நம் மக்களிடம் ஏற்படும் வரை லஞ்ச மலத்தோடு தான் நாம் இணைந்து வாழ வேண்டும். வேறு வழி யில்லை. 

ரோம் நகரில் வாழும்போது ஒரு ரோமானியனாகத்தான் வாழ வேண்டும். இது தானே நடைமுறை. 

அகச் சுத்தம், மனச் சுத்தம், வாய்ச்சுத்தம், கைச் சுத்தம் என்று அனைத்துச் சுத்தங்களும் வெகு விரைவில் நம் தமிழ் நாடு முழுதும் ஏற்படட்டும். 

-பாளை .இசக்கிராஜன்.



Sunday, 25 August 2019

மரியாதையும் கண்ணியமும்...


மரியாதையும் கண்ணியமும்...

என்னுடைய வாகன ஓட்டுநர் அனுமதி அட்டையில் பெயரிலும், முகவரியிலும் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தன. 

விண்ணப்பங்களையும், வேறு சில ஆவணங்களையும் ஆன் லைன் மூலம் பதிவேற்றும் வசதி வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 

இந்த ஆன் லைன்  முறை மிகவும் எளிமையாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டு மாற்றங்களையும் செய்வதற்கு அரசிற்குச் செலுத்த வேண்டிய  கட்டணம் ரூ 700. இதையும் ஆன் லைனில் செலுத்தி விடலாம். 

புகைப்படம் எடுக்க அந்த அலுவலகத்திற்கு நேரில் தான் செல்லவேண்டும். என்றைக்கு நேரில்  வரவேண்டும், எந்த நேரத்தில் வரவேண்டும் என்பதை நாமே நமது வசதிக்கேற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

இந்த ஆன் லைன் முறை  மிகவும் எளிதாக இருக்கிறது . ஸ்கேனர், மடிக்கணினி போன்றவை வீட்டில் இருப்பதால் நானே தனியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். என்றாலும், ஆன் லைன் முறையை  தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு முன் தொடர்புடைய அந்த அலுவலகத்திற்கு ஒரு முறை நேரில் சென்று அங்கு நடப்பதை அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

ஒருநாள் காலை 1030 மணி அளவில் அந்த அலுவலகம் சென்றேன். மஞ்சப் பையை கையில் வைத்துக்கொண்டு சில முகவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. 

ஆன் லைன் மூலம் பதிவேற்றிய படிவங்களின் பிரதியை அச்சு எடுத்து அதில் கையொப்பமிட்டு, ஒரு அலுவலரிடம் கொண்டு கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி தான் அங்கு அலுவலராக இருந்தார். அவர் படிவங்களை சரிபார்த்த பிறகு புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து வந்தார்.

எந்த எந்த படிவங்கள் நேரடியாக வருகின்றன, எந்த எந்த படிவங்கள் முகவர்கள் மூலம் வருகின்றன என்று அந்த அலுவலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மிகவும் பணிவுடன் முகவர்கள்  கொடுக்கும் விண்ணப்பப் படிவங்களை, சிரித்த முகத்துடன் வாங்கி அனைத்தும் சரி யாக இருக்கின்றன என்று சொல்லி புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். 

தாங்களாகவே பிரதி எடுத்து நேரடியாக விண்ணப்பங்களுடன் வருபவர்களிடம் சிடு சிடு என்று சீறிப் பாய்ந்தார். நாயை விரட்டுவது போல் எரிச்சலுடன் சில கேள்விகளைக் கேட்டு கடுப்பேத்தினார். விண்ணப்ப தாரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

இந்த காட்சிகளைப் பார்த்த பிறகு, முகவர் மூலமே விண்ணப்பத்தை கொடுத்து மரியாதையை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்நல்லதொரு நாளில் முகவர் மூலமே ஆன் லைன் பதிவேற்றங்களை செய்து முடித்தேன். பிறகு நகலெடுத்த படிவங்களை எடுத்துக்கொண்டு அந்த முகவருடன் அலுவலகம் சென்று அவர் மூலம் அலுவலகத்தில் கொடுத்தேன். 

அவமானம் எதுவுமின்றி மரியாதையுடன் நடத்தப்பட்டேன். இரண்டே நிமிடங்களில் அனைத்தும் OK என்று சொல்லிவிட்டார்கள். புகைப்படம் எடுக்கும் இடத்திற்குள் எளிதாக நுழைய முடிந்தது. வேலை மிக விரைவாகவும் எளிதாகவும்  முடிந்தது.  அரசுக்குச் செலுத்திய ரூ 700 உடன் கூடுதலாக ரூ 700 முகவரிடம் கொடுக்க வேண்டி வந்தது. அந்த ரூ 700  யார் யாருக்கெல்லாம் போய்ச் சேர்ந்தது என்று தெரியவில்லை.

இதற்கு முன்பு 1990 களில், ஒரு முறை அந்த துறையின் நெல்லை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நெருங்கிய நண்பன் ஒருவன் மூலம் எனது ஓட்டுநர் அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பம் கொடுத்தேன்.  நண்பன் என்பதால் கூடுதலாக காசு எதுவும் நான் கொடுக்க வில்லை. அவனும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மகிழ்ச்சியுடன் புதுப்பித்துக் கொடுத்து உதவினான். அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்க நாம் நேரில் செல்லத் தேவை யில்லாத காலம்.

அந்த அலுவலக நடை முறைப்படி, நாள் முடிவில் அன்றைய அன்பளிப்பு வசூலை பங்கு வைத்திருக்கின்றனர்.  என்னுடைய ஓட்டுநர்  அனுமதி  புதுப்பித்தலுக்குண்டான  அன்பளிப்புப்பணம் ரூ 500 ரொக்கமாக வந்து விட்டது  போல் வரவு வைத்திருக்கிறார்கள். பிறகு அதையும் சேர்த்து அன்றைய மொத்த வசூலை ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் பங்கு பிரித்திருக்கிறார்கள். 

எனது நண்பனுக்கு சேர வேண்டிய பங்குப் பணத்தில், என்னுடைய அனுமதி புதுப்பித்தலுக்கு வரவேண்டிய  அன்பளிப்பு பணமான ரூ 500 குறைத்துக் கொண்டு மீதியை அவனிடம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த தகவல் எனக்கு மிகவும்  தாமதமாகத் தான் தெரிய வந்தது. எனக்கு உதவப் போய் பாவம் என் நண்பனுக்கு ரூ 500 இழப்பு. வருத்தமாக இருந்தது. இந்த தகவல் தெரிந்து கொண்ட பிறகு நான் என் நண்பனை அணுகுவதில்லை.  அதற்குப்பிறகு தேவைப்படும் அந்த அலுவலகத்துப் பணிகளை எங்கள் ஜீப் டிரைவர் ராமசாமி அவர்கள் உதவியுடன் ஒரு முகவர் மூலம் முடித்து வந்தேன்.

அன்பளிப்புப் பணத்தை பங்கு வைத்துக் கொள்வதில் பின்பற்றும் மிகவும் நேர்மையான, கண்ணியமான முறை  எனக்கு இன்றைக்கும் பிடித்திருக்கிறது.

- பாளை .இசக்கிராஜன் 





Saturday, 24 August 2019

ஒவ்வொருவரிடமிருந்தும் ஒன்றொன்று....


ஒவ்வொருவரிடமிருந்தும் ஒன்றொன்று....

1981 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள். அன்று தான் LIC யின் திருச்செந்தூர் கிளை துவக்கப்பட்டது. 

துவக்க  விழாக் கூட்டம் அலுவலகத்திற்கு அருகில் இருந்த KSPS அறக்கட்டளைக்குச் சொந்தமான சண்முகவேல் நாடார் அரங்கில் நடைபெற்றது. 

அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்க மதுரைக் கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட மேலாளர் திரு .வெ.ராமசாமி ஐயா வந்திருந்தார்கள். அவருடன் கோட்டத்தின் ஊழியர்கள் நலத்துறை மேலாளராக இருந்த  திரு அருணாச்சலம் ஐயா அவர்களும் வந்திருந்தார்கள்.

விழாவிற்கு முன்னர் அலுவலகத்தில்  அனைவரும் கூடினோம். நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அதனைத் தட்டச்சு செய்ய வேண்டும். எனக்கு தட்டச்சு செய்யத் தெரியும்  என்பதால் அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். 

திரு அருணாச்சலம் ஐயா அவர்கள் கூறக்கூற நான் தட்டச்சு செய்தேன். Presidential Address by Sri U.V.Ramasamy என்று சொன்னார்கள். நான் தட்டச்சு செய்யும்போது Sri என்று அடித்த பிறகு ஒரு புள்ளி வைத்து பிறகு Ramasamy என்று அடித்தேன். 

அப்போது திரு அருணாச்சலம் ஐயா அவர்கள் குறுக்கிட்டு Sri என்பது ஒரு முழுமையான சொல். அதனால் அதற்குப் பிறகு புள்ளி வைக்கக் கூடாது. அதே நேரம் Mr என்று அடித்தால் புள்ளி வைத்த பிறகு தான் Ramasamy என்று அடிக்க வேண்டும். ஏனென்றால் Mister என்ற சொல்லைச் சுருக்கி Mr என்று போடுவதால் Mr என்பதற்கு அடுத்து புள்ளி வைக்கவேண்டும் என்று விளக்கமாக எடுத்துக்கூறினார். 

இன்று வரை அவர்கள் சொன்னபடி சரியாகப் பயன்படுத்தி வருகிறேன். தமிழிலும் திரு என்ற சொல்லுக்குப் பிறகு நாம் புள்ளி வைப்பதில்லை. ஏனென்றால் திரு என்பது ஒரு முழுச் சொல். இந்த நுணுக்கங்களை  நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்து தெரிந்து கொள்ளவில்லை. திரு அருணாச்சலம் ஐயா அவர்கள் மூலம் தான் என்னுடைய 27 ஆவது வயதில்  தெரிந்து கொண்டேன். 

அப்போது திருச்செந்தூர் கிளையில் எங்களுக்கு திரு ஓம் சுப்பையா ஐயா அவர்கள் கிளை மேலாளராக  இருந்தார்கள்.  ஒரு கூட்டம் நடத்தப் போகிறோம். அது குறித்து அழைப்பிதழ் அச்சடிக்கவேண்டும். அழைப்பிதழில் எந்த வரிசையில் நேரம் நாள் போன்றவை வரவேண்டும் என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்.  முதலில், நேரம், பிறகு கிழமை,அடுத்தது நாள் மாதம் ஆண்டு என்று வரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.  

An Agents' Meeting will be held at 5.00 PM on Friday, the 31st August, 2019  என்ற வரிசையில் வரவேண்டும் என்பார். தமிழில் என்றால் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார். 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 31ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் முகவர் கூட்டம் நடைபெறும் என்று எழுத வேண்டும் என்று கூறியிருக்கிறார் .

இலங்கை வானொலியில் கூட ஒருவரை அறிமுகப்படுத்தும்போது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகர் இரண்டாவது தெரு கதவிலக்கம் நான்கில் வசித்துவரும் இசக்கிராஜன் என்று கூறுவது அப்போது என் நினைவிற்கு வந்தது.  திரு ஓம் சுப்பையா ஐயா அவர்களின் இந்த வழிகாட்டுதலை நான் இன்றுவரை சரியாகப் பின்பற்றி வருகிறேன். 

இப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் பலவற்றைக் கற்று இன்றைக்கும்  பின்பற்றி வருகிறேன்.  நன்றி திரு அருணாச்சலம் அய்யா. நன்றி திரு ஓம் சுப்பையா ஐயா...

- பாளை .இசக்கிராஜன்.


Friday, 23 August 2019

கடன் அட்டையா?


கடன் அட்டையா?

நான் 2011 வரை கடன் அட்டைகளை வாங்காமலே இருந்தேன். கடன் அட்டைகள் மீது அவ்வளவு வெறுப்பு. இப்படியான வெறுப்பு வரக் காரணம் சில கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் கெடுபிடி காட்டி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கொடுத்த நெருக்கடிகள் பற்றி நாளிதழ்களில் படித்த செய்திகள் தான். கடன் அட்டை வாங்கியிருந்த  உறவினர்களை கூட கண்டித்திருக்கிறேன். 

LIC நிறுவனம், LIC CARDS என்ற துணை அமைப்பின் மூலம், கார்ப்பொரேஷன் வங்கியுடன் இணைந்து கடன் அட்டை வணிகத்தில் இறங்கியதும், நானும் 2011 இறுதியில், கடன் அட்டை வாங்கினேன். குறிப்பிட்ட தவணை நாளில், தவறாமல் தொகையை கட்டிவிட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து, இன்று வரை அப்படியே நடந்து வருகிறேன். ஒன்றிரண்டு ஆண்டுகளில், கார்பொரேஷன் வங்கியுடனான இணைப்பை துண்டித்தவிட்டு,  LIC CARDS  அமைப்பு ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து, கடன் அட்டை வணிகத்தை தொடர்ந்தது.

முதலில் கடன் அட்டைக்கு எதிர்ப்பு காட்டிய நான், அட்டையை பயன்படுத்த பயன்படுத்த, அதன் சிறப்பு அம்சங்களை நன்றாக உணர்ந்து கொண்டேன். எந்த செலவை என்றைக்கு செய்தோம், எந்த பொருளை என்றைக்கு வாங்கினோம், பெட்ரோல் எரிவாயு போன்றவற்றை என்றைக்கு வாங்கினோம் என்ற அனைத்து தகவல்களையும் பட்டியல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது பேருதவியாக இருக்கிறது. குறிப்பிட்ட தவணை நாட்களில் எனது கணக்கில் வங்கியிலிருந்தே எடுத்துக்கொள்ளும் வசதிக்கு விருப்பம் தெரிவித்திருந்ததால், பணம் செலுத்துவதும் எளிதாக இருந்தது.

ATM அட்டை மூலம் பணம் எடுப்பதற்கும், ஆன்லைன் மூலம் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் வங்கி சில வெகுமதி புள்ளி அளித்து வருகின்றத. அந்த வெகுமதிப் புள்ளிகளுக்கும்,  அவ்வப்போது விரும்பும் பொருட்களை தெரியப்படுத்தி, அவற்றை அஞ்சல் மூலம் பெற்று வருகிறேன்.   

LIC CARDS கடன் அட்டையிலும் வெகுமதி புள்ளிகள் சேர்ந்து வருகின்றன. அந்த 14000 புள்ளி களுக்கு  நான் விரும்பும் பொருட்களை எப்படி வாங்குவது என்பது குறித்து சரியான வழிகாட்டு குறிப்புகள் எதுவும் கிடைக்க வில்லை. LIC CARDS இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 1800 233 1100 என்ற எண்ணிற்கு பலமுறை  தொடர்பு கொண்டேன். யாரும் தொலை பேசி இணைப்பிற்கு வரவே இல்லை. நொந்து போய் எனது முயற்சியை கைவிட்டு விட்டேன்

சென்ற வாரத்தில் ஒருநாள், AXIS வங்கியின் வாடிக்கையாளர் மையத்தை 1860 5005 555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு எனது சிக்கலை தெரிவித்தேன். அவர்கள் பொறுமையாக எனது சிக்கலை அலசி ஆராய்ந்து, எனக்கு நல்லதொரு  தீர்வு கொடுத்தனர். 

LIC CARDS தளத்தைப் பார்த்து அதில் காணப்படும் விருப்ப பொருட்களின் பட்டியலை பார்வையிட்டு, விருப்பப் படும் பொருட்களின் அடையாள எண்ணை தெரிவிக்கச் சொன்னார்கள். ரூ 10,000 மதிப்பில் பொருட்கள் வாங்கக்கூடிய பட்டியலில்  இருந்து, சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளும் கருவி, இரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ள பயன்படுத்தும் கருவி, ரூ 5000  மதிப்பிற்கு AXIS வங்கியின் வெகுமதி அட்டை என்று  மூன்று பொருட்களுக்கு விருப்பம் தெரிவித்தேன். இந்த மூன்று பொருட்களும் அஞ்சலில் வந்து கொண்டிருக்கின்றன. 

இப்படி ஒரு பொன்னான வெகுமதியும் கடன் அட்டையில் கிடைக்கிறது. இதைப் படிக்கும் நிறைய நபர்களுக்கு இது பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். இருந்தாலும் அறிந்திராத சில நண்பர்களுக்கு இந்த தகவல் பயன்படட்டும்.  


- பாளை .இசக்கிராஜன்.