இயேசு சபை அருட்தந்தை திரு சேவியர் மாம்ப்ரா அடிகளார்...
1968-69 கல்வியாண்டில் பாளை தூய சவேரியார் உயரநிலைப் பள்ளியில் நாங்கள் பத்தாம் வகுப்பு படித்த வேளையில் அடிகளார் தான் எங்களுக்கு வகுப்பாசிரியர். அப்போது பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரும் அடிகளார்தான்.
நாங்கள் அவரிடம் படித்து மிகச் சரியாக ஐம்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எங்கள் படிப்பு முடிந்ததும் நாங்களும் பல திசைகளில் பயணம் செய்தோம். அடிகளாரும், நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, தேவகோட்டை என்று பல ஊர்களில் இருக்கும் இயேசு சபை நடத்திவழும் கல்வி மனைகளில் பணியாற்றி 1988ல் பணி நிறைவு பெற்று விட்டார்கள்.
திருச்சபையின் வழக்கப்படி அடிகளார் அவர்கள் தற்போது திண்டுக்கல்லில் இருக்கும் "பெஸ்கி" கல்வி மனையில் இருந்து வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாக அடிகளாரைச் சந்திக்க வேண்டும் என்ற எங்களுடைய ஆசை நேற்று வரை நிறைவேறவில்லை. எனது வகுப்புத் தோழன் குமாரின் விடா முயற்சியால் அடிகளார் இருக்கும் மனையின் தொடர்பு எண்ணையும், முகவரியையும் எங்களது கணித ஆசிரியர் திரு பீட்டர் ஃபிடெலிஸ் அய்யா அவர்கள் மூலம் வாங்கி விட்டான்.
இன்று காலை நானும் குமாரும் திண்டுக்கல் பெஸ்கி கல்விமனைக்குச் சென்று அடிகளாரைக் கண்டு உரையாடி அருள் ஆசிகளைப்பெற்று வந்தோம்.
அகவை 90 ஐ தாண்டிவிட்ட அடிகளார், எங்களை வரவேற்று எங்களைப்பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டார். ஐம்பது ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் எங்களை தனித்தனியாக அடிகளாரால் நினைவு கூற இயலவில்லை. இருந்தாலும் பொது தகவல்களை பகிர்ந்துகொண்டோம்.
எங்கள் வகுப்பு மாணவர்களில் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கணக்காயர்களாக, கல்வியாளர்களாக, நிர்வாகிகளாக, தொழிலதிபர்களாக இருப்பவர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
நாங்கள் எங்களுக்கு முகவரி கொடுத்த தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளியை விட்டு 1970 ல் வெளியே வந்தோம். 49 ஆண்டுகள் முடிந்து பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
இதை முன்னிட்டு எதிர் வரும் செப்டம்பர் முதல் நாள், எங்கள் வகுப்பு மாணவர்களின் "குடும்பத்தோடு சங்கமம்" ஒன்றிற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். உயர் நிலைப்பள்ளியிலேயே நடைபெற இருக்கும் அந்த சங்கமத்திற்கு வர இயலுமா என்று கேட்டதற்கு அடிகளார், தன்னால் நீண்ட தூரம் பயணிக்க உடல் ஒத்துழைப்பதில்லை என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
அடிகளாரை இன்றைக்கு சந்தித்து அருளாசிகளை வாங்க முடிந்தது இறை அருளால் தான். இந்த வாய்ப்பை எனக்கும் குமாருக்கும் ஏற்படுத்திக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியை காணிக்கை யாக்குகிறோம். இன்று எங்களுக்கு கிடைத்த அடிகளாரின் அருள் ஆசிகள் எங்களது வருங்கால வாழ்க்கைப் பயணத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும்.
அடிகளாரோடு எடுத்துக்கொண்ட சில படங்களை இணைத்துள்ளேன்.
பத்தாம் வகுப்பு படித்தபோது எடுத்த படமும்..
- பாளை ப.இசக்கிராஜன்
No comments:
Post a Comment