Saturday, 17 August 2019

கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு..


கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு..அவை இங்கே தட்டுப்பாடு

என்னுடைய சமீபத்திய ஆஸ்திரேலியப் பயணத்தின்போது , சிட்னி மாநகரில் உள்ள SBS என்ற பெயரில் பல மொழிகளில் அரசு  நடத்திவரும் வானொலி நிலையத்திற்கு என்னுடைய " பாளையங்கோட்டை நினைவலைகள்" என்ற நூல் குறித்த பேட்டி ஒன்று கொடுக்கச்  சென்றிருந்தேன். 

அங்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றும் திரு. றைசெல் (Raymond Selvaraj என்ற பெயரின் சுருக்கம்.) என்ற நண்பரின் நல் அறிமுகம் கிடைத்தது. இவர் நமது நாஞ்சில் நாட்டுக்காரர். நெல்லையில்  இவருக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள்.  ஒலிப்பதிவு முடிந்ததும், அலுவலகம் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான கட்டடத்தின்  ஒரு பகுதிக்கு என்னை அன்புடன் அழைத்துச் சென்றார். 

அந்த பகுதியில் இருந்த குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பால் பாட்டிலை எடுத்து வெளியே வைத்தார். குடுவையில் தண்ணீரைச்  சுட வைத்து, பீங்கான் கிண்ணத்தில் ஊற்றினார்.  அதில் தேயிலை பொட்டலத்தை போட்டு, பிறகு  பால் சேர்த்து எனக்கு பருகத் தந்தார்.  தேநீரை சுவைத்துக் கொண்டே நம்மூர் கதை எல்லாம் பேசினோம். அவரது நெல்லை நண்பர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லை ஹலோ FM மேலாளர் பற்றியெல்லாம் என்னிடம் விசாரித்து அறிந்து கொண்டார். 

அடுத்து என்னிடம் ஆஸ்திரேலியா, குறிப்பாக சிட்னி பற்றிய என்னுடைய அனுபவங்களையும், மதிப்பீடுகளையும், கருத்துக்களையும்  கேட்டார்.  அதற்கு நான்,  " இங்குள்ள கடுமையான சட்டங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.  அவற்றை துல்லியமாக பின்பற்றும் மக்களையும் பிடித்திருக்கிறது. சுத்தத்தோடும், சுகாரத்தோடும் மக்கள் வாழும் வாழ்க்கை பிடித்திருக்கிறது.  அடுத்தவர் உரிமையில் தலையிடாத தன்மை என்னை கவர்ந்திருக்கிறது.  எதிரில் வருபவரைப் பார்க்கும்போது முகத்தில் தவழவிடும் மெல்லிய புன்னகை பிடித்திருக்கிறது.  சாலை விதிகளை சரிவர பின்பற்றும் ஒழுக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது.  மொத்தத்தில் மக்களிடம் காணப்படும் கடமை உணர்வும், அவர்கள் காட்டும் கண்ணியமும், பின்பற்றும் கட்டுப்பாடும் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.  அன்பளிப்போ, கையூட்டோ பெறாமல் கடைப்பிடித்துவரும் வாழ்வின் விழுமியங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.   மக்களோடு மக்களாக நெருக்கமாக இணைந்து  பழகும், மக்கள் பிரதிநிதிகளின் எளிமை எனக்குப் பிடித்திருக்கிறது " என்று அடுக்கிக் கொண்டே இருந்தேன். 

நமது ஊரில் நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம், ஊழல், ஒழுக்கமின்மை, கொலை,கொள்ளை, அடாவடித்தனம் பற்றியும் என்னுடைய கவலைகளைப்  பகிர்ந்தேன். அவர் எனது பதிலை அமைதியாக்க் கேட்டு ரசித்தார்.  சமீபத்தில் தமிழகம்  வந்திருந்த போது தனது வீட்டின்  மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு பற்றியும், அது சரி செய்யப்பட்ட விதம் பற்றியும் விளக்கிக் கூறினார்.  விளக்குக் கம்பத்தில் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்ததாம்.  பலமுறை தொலை பேசியில் அழைத்துக் கூறியும் இரண்டு மூன்று நாட்களாக சரி செய்யப் படவில்லையாம்.  ஒன்றிரண்டு பணத்தாள்களை தள்ளிய பிறகு தான், ஆட்கள் சாவகாசமாக வந்து சரி செய்தார்களாம்.

ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் அனுபவத்தையும் என்னிடம் பகிர்ந்தார்.  ஒரு முறை தனது சிட்னி இல்லத்திற்கருகில், ஒரு மரம் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்திருக்கிறதுஇதனால் அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.  சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கொடுத்ததும், இரண்டு மணி நேரத்திற்குள் வந்து ஒடிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, மின் இணைப்பை சரி செய்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் மின் இணைப்பு இல்லாததால் சிறு சிறு வசதிக் குறைவு தான்  ஏற்பட்டதாம். பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லையாம்.

அவரது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் காப்பீடு செய்யப் பட்டிருக்கின்றனவாம். மின் இணைப்புத் துண்டிப்பு பற்றி தகவல் கிடைத்ததும், காப்பீட்டு நிறுவனத்தார் நண்பரை தொடர்பு கொண்டு, மின் இணைப்பு துண்டிப்பால் குளிர் சாதனப் பெட்டி  வேலை செய்திருக்காதே, அதனால் ஏதாவது பொருட்கள் கெட்டுப் போய் இருக்கின்றவா?   இழப்பினை மதிப்பிட ஆட்களை அனுப்புகிறோம், எப்போது வரலாம்என்று கேட்டு நச்சரித்து விட்டார்களாம். நண்பர் தான், மின் துண்டிப்பால் பெரிய அளவில் இழப்பு எதுவும் இல்லை என்றும் அதனால் நஷ்ட ஈடு தேவை இல்லை என்றும் கூறி அவர்களைச் சமாளித்திருக்கிறார். 

இது போன்ற ஒரு தரமான வாழ்க்கை, ஒழுங்கு நிறைந்த வாழ்க்கை, கிடைப்பதால் தான், அங்கு செல்லும் மக்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர் போலும்.

நமது நாட்டிலும் இது போன்று அனைவரும் எதிர் பார்க்கும் சிறந்த நிலைமை என்றைக்காவது வருமா?  வரும்... கண்டிப்பாக ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையில் எதிர்காலத்தை எதிர் கொள்வோம்.

-பாளை .இசக்கிராஜன்.

No comments:

Post a Comment