Tuesday, 20 August 2019

அன்றும் இன்றும்




அன்றும் இன்றும் 

நான் சிறுவனாக இருந்த காலத்தில் சில வாலிபர்களிடமும், பல பெரியவர்களிடமும் புகை பிடிக்கும் பழக்கம் நிறையவே இருந்தது.
வசதி குறைந்தவர்கள் யானை மார்க் , பாசிங் ஷோ என்று பயன்படுத்தினார்கள். கொஞ்சம் வசதியானவர்கள், பெர்க்லி, சிசர்ஸ் என்று பயன் படுத்தினார்கள். மேல் தட்டில் இருந்தவர்கள் 555 என்பதை பயன்படுத்துவதை பெருமையாகக் கருதினார்கள்.
ஒரு சிலர் பாதி புகை இழுத்த பிறகு, சிகரெட்டை அணைத்து வைத்துக்கொண்டு மீதி பாதியை பிறகு தேவைப்படும்போது பயன்படுத்துவார்கள்.
புகை பிடித்தால் மட்டுமே, தன்னை ஒரு நாயகன் என்று பிறர் கருதுவார்கள் என்று நினைத்தவர்கள் நிறைய உண்டு.
புகையை உள்ளிழுத்து, மூச்சடக்கி சிறு சிறு வளையங்களாக, அலை அலையாக வெளியே வரும் வகையில் புகையை வெளியே விட்டு சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டுபவர்களும் இருந்தார்கள். எனது நண்பர்களில் பாளையங்கோட்டை ரைஸ் மில் வளவு, மந்திரவாதி சந்திரன் இந்த கலையில் வல்லவன்.
தொழிலாளர்கள் பீடியைக் குடிப்பதைத்தான் வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் வருமானத்திற்கு அது தான் ஒத்து வந்ததோ என்னவோ தெரியவில்லை. அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
வருமானம் இல்லாதவர்களில் புகை பிடிக்க விரும்பியவர்கள், பிறர் குடித்துவிட்டு தூர எறியம் பீடித் துண்டுகளை பொறுக்கி எடுத்து, அதைப் பற்றவைத்து அனுபவிப்பார்கள்.
இந்த மாதிரி நபர்களை, கட்டை பீடி என்று கிண்டல் பண்ணுவார்கள். ஓசி சோறு, எச்சி சோறு, என்று கிண்டல் செய்வது மாதிரி இப்படி அழைத்து இது போன்றவர்களை மட்டம் தட்டி மானத்தை வாங்குவார்கள்.
தானா பீனா சொக்கலால் ராம் சேட் பீடி, அஞ்சு பூ பீடி, செய்யது பீடி, மங்களூர் கணேஷ் பீடி போன்றவை நெல்லையில் பிரபலம்.
வயது முதிர்ந்தவர்கள் சுருட்டு பிடித்து வந்தார்கள். அவர்கள் அருகில் சென்றாலே சுருட்டு நாத்தம் நமது குடலைப் புரட்டும். ஆனாலும் அவர்களுக்கு சுருட்டு இல்லாமல் ஒரு நாளும் பொழுது விடியாது.
வெற்றிலை போடும் நபர்களும் நிறைய இருந்தார்கள். இளம் வெற்றிலையை எடுத்து, கால் தொடையில் துடைத்துவிட்டு, காம்பை கிள்ளிய பிறகு, வெற்றிலையின் முதுகுப் பக்கத்தில் ரோஸ் கலர் சுண்ணாம்பை தடவி, களிப் பாக்கோடு சேர்த்து அசைபோடுவார்கள்.
கொஞ்சம் சாறை விழுங்கி, பின்னர் திரவ வடிவத்தில் இருக்கும் சக்கையை துப்புவார்கள். வாயை மூடி இரண்டு விரல்களை வாயில் வைத்து அவற்றுக்கு இடையில் அந்த திரவத்தை பீச்சி அடிப்பார்களே.. அது பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு தனிக் கலை.
சிலர் புகையிலையையும் சேர்த்து சுவைப்பார்கள். ஆத்தூர் வெற்றிலை, அங்கு விலாஸ் பன்னீர் புகையிலை என்று ரசித்துப் போடுவார்கள்.
சிறு வயது பையன்கள் திருமண வீடுகளில், வெற்றிலை போட்டால், மாடு முட்டும் என்று பயங்காட்டியே அந்த பழக்கத்தைத் தொடராமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.
வேறு சிலருக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. மடித்து வைக்கப் பட்டிருக்கும் வாழை மட்டையில் இருந்து வலது கை பெருவிரலையும் ஆள் காட்டி விரலையும் சேர்த்து பொடியை கொஞ்சமாக எடுப்பார்கள். இடது கை பெரு விரலால் மூக்கின் இடது ஓட்டையை அடைத்துக்கொண்டு அந்தப் பொடியை மூக்கின் வலது ஓட்டையில் திணித்து உறிஞ்சுவார்கள். பிறகு வலது பக்க ஓட்டையை பொத்திக் கொண்டு இடது ஓட்டையில் திணித்து உறிஞ்சுவார்கள்.
காரம் மணம் குணம் நிறைந்த அந்த பொடி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். மறைந்த தமிழக முதல்வர் திரு அண்ணா அவர்களுக்கு பொடி போடும் பழக்கம் இருந்தது.
NVS பட்டணம் பொடி, TAS ரத்தினம் போடி, அம்பிகை விலாஸ் பட்டணம் பொடி, செபத்தையாபுரம் பொடி என்பவை நெல்லை, பாளையில் பிரபலம்.
TAS ரத்தினம் பொடி தயாரிப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர் இன்றைக்கு எல்ஐசி கோவை கோட்டத்திலுள்ள பல்லடம் கிளை யின் மேலாளர் தம்பி ரவிசங்கர்.
இப்போது பீடி, சிகரெட், சுருட்டு பிடிக்கும் நபர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டனர். புகையிலை போடுபவர்களும், மூக்குப்பொடி பயன்படுத்துபவ ர்களும் உண்மையிலேயே சிறுபான்மையினர் ஆகிவிட்டார்கள்.
1970 களில் மது விலக்கு நீக்கப்பட்டபிறகு, சாராயம், இஞ்சி, பழரசம் போன்ற போதை தரும் திரவங்கள் விற்பனைக்கு வந்தன. அரசியல் வாதிகள் பலர் இது போன்ற கடைகளை நடத்தத் தொடங்கினர்.
என் நண்பர் ஜெய்சிங்கின் குடும்ப ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்த ஒரு தொழிலாளி எப்போதும் பழரசமும் இஞ்சியும் அருந்தி அது தரும் போதையில் தான் நாள் முழுதும் இருப்பார்.
என் வகுப்புத் தோழன் ஒருவனின் தந்தை ஒரு பெரிய இஞ்சி வியாபாரி. பாளை நகர்மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
முன்பு சிறிய அளவில் இருந்த குடிப்பழக்கம் இப்போது பல மடங்காகப் பெருகி விட்டது.
சிகரெட்டுக்குப் பதிலாக போதை ஏற்றிவிடும் பொருட்களும், மருந்துகளும், போதை தரும் ஊசிகளும் நுழைந்து இளம் சமுதாயத்தை முழுக்கவும் சீரழித்து விட்டன.
குடிப் பழக்கம் கேடு விளைவிக்கும் என்று விளம்பரம் செய்யும் அரசாங்கமே, மது பானங்களை விற்பனை செய்து அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கி வருகிறது.
நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த மது பான விற்பனைக் கூடங்கள் அரசாங்கத்திற்கு ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகவே மாறிவிட்டது.
வறுமையில் வாடும் வசதிக் குறைவான ஏழைகள், சாராயத்திற்காக செலவழிக்கும் பணம் தான், வசதியானவர்களின் வீடுகளில், தொலைக்காட்சிப் பெட்டிகளாகவும், மின் விசிறிகளாகவும், மிக்ஸிகளாகவும், மகளிருக்கான ஸ்கூட்டிக்களாகவும், நிறைந்து இருக்கின்றன.
இப்போது மதுவைத் தொட்டுப் பார்க்காமலிருப்பவர்கள் ஒரு MINISCULE MINORITY ஆக குறைந்து விட்டார்கள்.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது தான் யாருக்கும் தெரிய வில்லை.
அன்றைய பெரும்பான்மை இன்றைக்கு சிறுபான்மையாகிவிட்டது. அன்றைய சிறுபான்மை இன்றைய பெரும்பான்மையாக பெருகிவிட்டது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போதில்லை. .... நாறத்தான் போகின்றன.
- பாளை ப.இசக்கிராஜன

No comments:

Post a Comment