என் இனிய நண்பர்கள் . ...சீனு என்ற சீனிவாசனும் CR சுந்தரமும்.
நான் , சீனு, சுந்தரம் என்ற மூன்று பேரும் 1974 செப்டம்பர் முதல் வாரத்தில் , ஒரே நாளில், ஒரே கிளையில், LIC யில் ஒன்றாக இணைந்தோம். முதல் பணியிடம் இப்போதைய ஆந்திர மாநிலம் சித்தூர் கிளை. அந்த கால கட்டத்தில் ஆந்திர மாநிலத்து சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டப் பகுதிகள் சென்னைக் கோட்டத்துடன் இணைக்கப் பட்டிருந்தன. பின்னர் கடப்பா கோட்டத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்குப் பின்னர் நெல்லூர் கோட்டத்தின் அங்கமாக ஆக்கப்பட்டது.
நாங்கள் மூவரும் ஆளுக்குப் பத்து ரூபாய் வீதம் மொத்தம் 30 ரூபாய் வாடகையில் அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டின் மாடி அறையில் ஒன்றாய் தங்கினோம். அடுக்களைப் பணிகளை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டு நாங்களே சமைத்து வயிற்றை நிரப்பினோம். சாம்பார் பொடி, ஊறுகாய், வடாம் போன்ற பொருட்களை மூவருமே அவரவர்கள் இல்லத்திலிருந்து கொண்டு வந்து விடுவோம்.
வீட்டின் உரிமையாளர் சித்தூர் தமிழ் ஆசிரியர் திரு பாலசுப்பிரமணிய தேசிகர் ஐயா அவர்கள். அவர்களும், அவரது குடும்பத்தாரும் எங்களை வாடகைக்கு இருப்பவர்கள் என்று நினைக்காமல், தங்கள் பிள்ளைகள் போலவே நினைத்து, அனைத்து உதவிகளையும் செய்து எங்களை நல்லபடி காத்தருளினர். அவர்களது அன்பான அரவணைப்புத் தான் சிறுவர்கள் எங்களின் சிந்தனையை சிதறவிடாமல் நல்லபடி காத்தது. அலுவலகம் விட்டால் வீடு, வீட்டில் சமையல், நிறுவனம் தொடர்புடைய பட்டயப் படிப்பு, என எங்களை மாற்றுக்குறையாமல் ஆற்றுப்படுத்த உதவியது.
நண்பன் சீனு எனக்கு படிப்பில் பலத்த போட்டியாளர். சுந்தரம் ஒரு சாதாரண போட்டியாளர். இந்த போட்டி மனப்பான்மைதான் எங்களை நாங்களே நன்கு உயர்த்திக் கொள்ள உதவியது. அப்போதிருந்த போட்டி மனப்பான்மை பற்றி இப்போது கூட நாங்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் பேசி பொழுதைப் போக்குவோம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே சீனு திருவள்ளூர் கிளைக்கு மாறுதல் பெற்று சென்றுவிட்டார். ஆனாலும் நாங்கள் மூவரும் ஒருவரை யொருவர் மறக்கவேயில்லை. நட்பு இன்னும் கூடுதலாக பலப்பட்டது. சீனுவின் குடும்பத்திலும் சரி, சுந்தரத்தின் குடும்பத்திலும் சரி அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே நான் நடத்தப்பட்டேன்.
சீனுவின் தந்தை திரு ராஜகோபால் ஐயா அவர்கள் சீனுவை விட எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக நிலைத்துவிட்டார். நான் மாறுதல் பெற்றுச் சென்ற, காரைக்குடி, திருச்செந்தூர், குழித்துறை, திருநெல்வேலி, கொல்லம் போன்ற ஊர்களுக்கெல்லாம் அவரது தந்தை அவரது அலுவலகப் பணிக்காக வரும்போது எங்கள் வீட்டிலும் எழுந்தருளி என்னைப் பெருமைப் படுத்தியிருக்கிறார். அவரது தாயார் திருமதி மஞ்சுளா அம்மையாரும், சகோதரிகள் மீனா, சித்ரா, சகோதரர் பிரபாகர் என்று அனைவரும் என்னை மிகவும் அன்புடன் நடத்தியிருக்கிறார்கள்.
LIC பத்தாவது அணி நேரடி அலுவலர் நியமனத்தின்போது நேர்முகத் தேர்வு வரை முன்னேறியவர் சீனு. பிறகு 1988 ல் இருவரும் அலுவலராக ஒன்றாகவே உயர்வு பெற்றோம். அவர் துறையூருக்கும், நான் கொல்லத்திற்கும் சென்றோம் தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களிலும் பணியாற்றிய பெருமை எங்கள் இருவருக்கும் உண்டு.
வெற்றி பலமுறை இவருக்கு கை நழுவிப்போனாலும், அது பற்றி வீண் கவலை கொள்ளாமல் தனது பணியை சிறப்பாகவே செய்து வந்தார். பணியை நிறைவு செய்யும்போது, துணை மண்டல மேலாளர் நிலைக்கு உயர்ந்தார். இந்த பாசமிகு சீனு இப்போது ஒரு பெங்களூரு வாசி. அன்பான எளிமையான மனைவி. அழகாக ஒரு மகள். ஆதரவாக ஒரு இரட்டையர்-புதல்வர்கள். மக்கள் மூவரும் மணம் முடித்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடர்கின்றனர்.
நண்பர் சீனு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல இன்பச்சுற்றுலாக்களை இனிதே கண்டவர். வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில். அனைத்தையும் அளவோடு பெற்றிருக்கும் இந்த இனிய நண்பருடனான அந்த நாள் நினைவுகளை நினைத்து நினைத்து இன்றும் மகிழ்ந்து வருகிறேன்.
நண்பர் சுந்தரம். இப்போது ஒரு பாலக்காடு வாசி. சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து LIC பணிக்கு வந்தவர். இன்றைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான திரு ஸ்டாலின் அவர்கள் இவருக்கு ஆங்கில வகுப்பில் மட்டும் இணைந்து கொள்ளும் வகுப்புத் தோழர். சுந்தரம் இனிமையானவர். கள்ளம் கபடு ஏதும் அறியாதவர். பிறருக்கு உவந்து உதவுவதில் ஒப்பற்றவர். ஆங்கிலத்தில் இவருக்கு நல்ல புலமை உண்டு. ஊழியர்கள் சங்கத்தில் கடப்பா கோட்ட அளவில் ஒரு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். நாங்கள் பட்டயப் படிப்பை முன்கூட்டியே வெற்றிகரமாக முடித்ததால், விரைந்து பதவி உயர்வு பெற்றோம். இவர் கேரள மாநிலத்தின் காயங்குளம் கிளையில், இப்போதைய மேலாண்மை இயக்குனர் திரு சுசீல் குமார் ஐயா அவர்கள் தான் அங்கு கிளை மேலாளர். சுந்தரம் தான் அவர்களுக்கு உதவிக் கிளை மேலாளராக இருந்தார்.
பாளையங்கோட்டையில் வைத்து நடைபெற்ற எனது திருமணத்தில் சுந்தரம் கலந்து கொண்டிருக்கிறார். பாலக்காடு அருகில் உள்ள கல்பாத்தி என்ற சிற்றூரில் வைத்து நடைபெற்ற இவரது திருமணத்தில் நானும் கலந்து கொண்டேன். இவரது அண்ணன்மார் திரு வைத்யநாதன் அவர்களும், சந்திரன் அவர்களும் எனக்கு நல்ல பழக்கம்.
எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி. இதைப்போல் இவரது மனைவி பெயரும் பாக்கியலட்சுமி. எங்கள் இருவருக்குமே ஒரு புதல்வி, ஒரு புதல்வன். இருவரது புதல்வர்கள் பெயரும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான். என் புதல்வன் சபரி, இவரது புதல்வன் மணிகண்டன். என்னை முதன் முதலில் சபரி மலைக்கு அழைத்துச் சென்ற குருசாமி இந்த நண்பர் சுந்தரம் தான்.
வெற்றி இவரையும் பலமுறை நழுவிச் சென்றிருக்கிறது. ஆனாலும் மனக்குறையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றினார். பணியை நிறைவு செய்யும்போது துணை மண்டல மேலாளர் நிலையில் இருந்தார்.
சித்தூர் கிளயில் 1974ல் ஒன்றாக பணியமர்ந்த நாங்கள் மூன்றுபேர், நாங்கள் அங்கு சேர்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் சேர்ந்த ஸ்ரீராம், ஆறுமாதங்களுக்கு பிறகு எங்களுடன் இணைந்த சந்திரசேகர் என ஐவருமே துணை மண்டல மேலாளர் நிலையில் பணி நிறைவு பெற்றது எங்களுக்குக் கிடைத்த பெருமை.
இந்த இரண்டு நண்பர்களும் 1974 ல் எனக்கு கிடைத்த விலை மதிப்பற்ற ரத்தினக்கற்கள்.
- பாளை ப.இசக்கிராஜன்
No comments:
Post a Comment