Saturday, 10 August 2019

ஊர்ல எத்தனை காக்கா

திருச்செந்தூர் கிளையில் மேலாளராக இருந்த காலம். திரு மாரிமுத்து என்று ஒரு முன்னணி முகவர். அவர் சாகுபுரத்தில் உள்ள தாரங்கதாரா கெமிக்கல் ஆலையில் மேற்பார்வை பணியிலிருந்தவர்.

தன்னுடனும் தனக்குக்கீழும் பணியாற்றுபவர்களிடம் நான் எல்ஐசில் முன்னணி முகவர் என்பார். தனக்குப் பரிசாகக்கிடைத்த பொருட்களை அவர்களிடம் காண்பித்து பெருமை கொள்வார். தனக்கு எல்ஐசியிலிருந்து கிடைக்கும்  கமிஷன் தொகை அலுவலகத்தில் கிடைக்கும் ஊதியத்தை விட கூடுதல் எனக்கூறி குதூகலிப்பார். 

இதைக் கேட்பவர்கள் மகிழ்ச்சி யடையமாட்டார்கள். மாறாக மிகவும் பொறாமை கொள்வார்கள். சிலர் நிர்வாகத்தில்  அவரைப்பற்றி ஒன்றிற்கு இரண்டாக போட்டுக் கொடுத்து விட்டார்கள். மேற்பார்வைப் பணி நேரத்தில்  தனது பணியைச் சரியாக செய்யாமல், எல்ஐசி பாலிசிகளை சேர்த்து தனது வருமானத்தைத்தான் பெருக்குகிறார் என்பது தான் புகார். 

இதைப்பரிசீலித்த நிர்வாகம் இனி மாரிமுத்து அவர்கள் தொழிற்சாலையில் பணி யில் இருக்கும் போது எல்ஐசி பாலிசி சேர்க்கக்கூடாது என்று கட்டளை போட்டது. இதனால் இவரது வணிகத்தில் பெரிய தொய்வு ஏற்பட்டது.

வெளியில் வேற்றுநபர்களிடம் தான் பாலிசி சேர்க்க வேண்டும்  என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். வெளியே அலைந்து திரிந்து வணிகம் சேர்க்க வண்டி ஒன்று அவருக்கு தேவைப்பட்டது. என்னை அணுகி னார்.

இரண்டு சக்கர வாகனம் வாங்க அலுவலகத்திலிருந்து வட்டியில்லாக்கடன் வழங்கி உதவும்படி வேண்டினார். நான் கொஞ்சம் பிகு பண்ணி பிறகு கொடுக்கலாம் என நினைத்தேன். “அண்ணாச்சி, நீங்கள் நடப்பு ஆண்டில் வணிகம் இதுவரை வழங்கவில்லை. இருபது லட்சம் ரூபாய் காப்புத் தொகைக்கான வணிகம் கொண்டு வந்தால் நான் நீங்கள் வண்டி வாங்கிக்கொள்ள வட்டியில்லாத கடன்  அனுமதிக்கிறேன்” என்று கூறினேன்.

“மேனேஜர் சார்க்கு  என்னுடைய நிலவரம் நன்றாகவே தெரியும். நான் அலுவலகத்திற்கு லீவு போடப்போகிறேன். வெளி நபர்கள் மூலம் தான் வணிகம் சேர்க்கவேண்டும். அதற்கு இரு சக்கர வாகனம் எனக்கு கட்டாயம் தேவை. நீங்கள் வண்டிக்கு கடன் அனுமதித்த பிறகு   கண்டிப்பாக  நிறைய வணிகம் தருகிறேன். இருபது லட்சத்திற்குப் பதில் பத்து லட்சம் உறுதியாகத் தந்து விடுகிறேன்” என்றார்.

“அண்ணாச்சி... நான் வாகனம் வாங்கிக்கொள்ள  கடன் அனுமதிக்கிறேன். வண்டி வாங்கிய பிறகு நீங்கள் உங்களது வட்டி வசூலுக்குத்தான் வண்டியை பயன்படுத்துவீர்கள். எல்ஐசியை மறந்து விடுவீர்கள். அதனால் இந்தக்கையில் வணிகம் கொடுங்கள். உடனே அந்தக் கையில்  வண்டிக் கடனுக்கான காசோலையை வாங்கிக்கொள்ளுங்கள். வணிகம் தருவதற்கு முன் வண்டிக்கு ஏற்பாடு செய்தால் ஏமாந்து விடுவேனோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது.” என்று அவரிடம் கூறினேன்.

உடனே அவர் “மேனேஜர் சார்.. நான் உங்களை ஏமாற்றுவேனா? உங்களை ஏமாற்றத்தான்  முடியுமா” என்று கூறிவிட்டு ஒரு கதை சொன்னார்.

“ சார்.. அந்தக்காலத்துல வெள்ளைக்காரன் ஆட்சி. ஒவ்வொரு ஊர்லயும் வரி வசூலிக்க ஆள் போடணும். வெள்ளைக்கார தொரை ஒரு ஊருக்கு வாராரு. ஆள் எடுக்கப்போகிறோம். 
எல்லோரும் வாங்கன்னு ஊர்க்காரர்களை கூப்பிடுகிறார். 

வாய்மொழித்தேர்வு  ஒன்றினை நடத்துகிறார். கூட்டத்தினரைப்பார்த்து அந்த ஊரில் மொத்தம் எத்தனை காக்கைகள்  இருக்கின்றன என்று கேட்கிறார். அனைவரும் முழிக்கின்றனர். 

அந்த நேரத்தில்  உங்க சொந்தக்காரர் ஒருவர் இந்த ஊரில் 999 காக்கைகள் உள்ளன என்று சொல்கிறார். வெள்ளைக் காரர் அப்படியா என்கிறார். கூட்டத்தில் இருந்த எனது  சொந்தக்காரர் ஒருவர் இதனை கவனமாக கவனிக்கிறார்.

இந்த ஆளு பொய் சொல்லி வேலையை அமுக்கப்பார்க்கிறார். இந்த ஆளை இப்படியே  விட்டுவிடக் கூடாது என்று நினைத்து வெள்ளைக்காரரைப் பார்த்து ஐயா வெள்ளக்காரத் தொரையே எனக்கு எத்தனை காக்கைகள் எங்கள் ஊரில் உள்ளன என்ற தகவல் சரியாகத் தெரியாது. ஆனால் இவர் கூறும் 999 காக்கைகள்  என்பது தப்பு என்கிறார்.

வெள்ளைக்காரர்  முதலாமவரைப் பார்த்து 999 காக்கைகள் எனபதை  எப்படி நம்புவது என்று கேட்கிறார்.

அதற்கு முதலாமவர் இன்று காலை நீங்கள் காக்கைகளை எண்ணிப்பார்த்தால் ஒருவேளை ஒன்றிரண்டு குறைவாக இருக்கலாம். குறைவாக இருந்தால் நேற்று பக்கத்து ஊருக்குச் சென்ற இந்த ஊர் காக்கைகளில் சில திரும்பி வரவில்லை என்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். கூடுதலாக இருந்தால் பக்கத்து ஊரில் உள்ள சில காக்கைகள் நமது ஊருக்கு வந்துள்ளதாக  எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் என்னுடைய கணக்கின்படி  999 காக்கைகள் என்பது  மிகவும் சரி  என்று கூறினார்.

வெள்ளைக்காரர் இவர்  அளந்து விடுகிறார் என்பதை புரிந்து கொள்கிறார். இருந்தாலும் இப்படி வாய் பேசுபவர்தான் வரி வசூலிக்க ஏற்றவர் என்று முடிவுசெய்கிறார். இவரை கட்டுப்பாடின்றி விட்டால் நம்மையே கவிழ்த்துவிடுவார். எனவே இவரை கட்டுக்குள் வைத்து கண்காணிப்பில் வைத்துக் கொள்ள இவரது கணக்கு தவறு என அடித்துச் சொன்னவரை உதவியாளராக வைத்துக் கொள்ள முடிவு செய்கிறார்.

அதன்படி முதலாமவரை வரி வசூலித்து கணக்கு எழுதுவதற்கும்,  இரண்டாமவரை முதலாமவரின் பாதுகாப்பிற்காகவும், அவரைக் கண்காணிப்பதற்கும் நியமிக்கிறார்.

இப்படித்தான் வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்தான். நீங்க ஒரு நிர்வாகி..  நான் எப்போதும் உங்களுக்குத் தக்க  பாதுகாப்பாகத்தான் இருப்பேன். அப்படிப்பட்ட என்னைப் பார்த்து ஏமாற்றிவிடுவேன் என்று சொல்லிவிட்டீர்களே “ என்று கூறினார்.

இந்த கதையைக்கேட்டு, அவரது பேச்சுத்திறனில் மயங்கி, உடனே வண்டிக்கடன்  ரெடி என்று கூறினேன்.

ஒரு வெறியில் வண்டி இன்றியே களத்தில் இறங்கி ஓடியாடி உழைத்தார். இருபத்தைந்து  லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் கொடுத்து என்னை மகிழ்வித்தார். நான் அவரைத் தேடிக் கண்டுபிடித்து  “ அண்ணாச்சி...வண்டி வாங்கிக்கொள்ளுங்கள். நான் பணி மாறுதலில்  நெல்லை செல்கிறேன். அதற்கு முன்பு வாருங்கள் “ என்று கூறினேன்.

அலுவலகப் பணிப் பளுவால்  அவரால் நான் கேட்டுக் கொண்டபடி வர இயலவில்லை. நெல்லைக்கு நான் மாறுதலாகிச் சென்ற பிறகும் கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டி எனக்கு அடுத்து கிளைமேலாளராக வந்த  திரு விஜயராகவனிடம்  திரு மாரிமுத்து அவர்களுக்கு வாகனக்கடன் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் வழங்கி உதவினார்.

இதைப்படிக்கும் முகவநண்பர்கள் மற்றவர்களிடம் உங்களது மன்ற உறுப்பினர் நிலை பற்றி பேசுங்கள். MDRT க்கு தகுதியானது பற்றி  பேசுங்கள். தலைவர் மன்ற உறுப்பினர் என்றால் ஒரு கோடி ரூபாய் காப்புத்தொகை வரை பரிந்துரைக்க அனுமதி  வழங்கப்பட்டுள்ள முகவர் என்று  பெருமையாகக் கூறுங்கள்.

இவை மற்றவர்களிடம் பொறாமையை  ஏற்படுத்தாது. பிறரிடம் உங்களது வருமானம்  எவ்வளவு என்பது பற்றி ஒருபோதும் பேசிட வேண்டாம். அது உங்கள் மீதான பொறாமையைத்தான் நிறைய வளர்க்கும். சரிதானா.. நண்பர்களே!

No comments:

Post a Comment