Tuesday, 13 August 2019

தாயின் மணிக்கொடி


இந்தியத் தாயின் மணிக்கொடி

நமது நாட்டின் மணிக்கொடியை மூவண்ணக் கொடி என்று அழைத்து மகிழ்கிறோம். நீண்ட சதுர வடிவில் உள்ள கொடியில் சம அளவில் இணையாக இருக்கும் மூன்று பட்டைகள் காணப்படும். அதன் நடுவில் 24 குறுக்கு கோடுகளை கொண்ட ஒரு வட்டம் இருக்கும். இந்த கொடியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய உள்ளன.

வரலாற்றுச் சிறப்பு.

நாட்டு விடுதலைப் போராட்டத்தின் போது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு கொடிகள் பயன்படுத்தப் பட்டன. 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் தேசியக் கோடி ஒன்று அறிமுகப் படுத்தப் பட்டது. இப்போதைய வடிவத்தில் உள்ள கொடி 1947 ம் ஆண்டு ஜூலை 22 ம் நாள் தேசியக்கொடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

கொடியை வடிவமைத்த வல்லாளன்.

விடுதலைப் போராட்ட வீரரும் ஒரு  சாமான்ய விவசாயியுமான திரு பிங்காலி வெங்கையா என்பவர் தான் நம் மூவண்ண கொடியை வடிவமைத்தார். காங்கிரஸ் கட்சியின் சிறு மெருகூட்டலுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

குறிப்பிட்ட துணியில் தான் கொடி.

விடுதலைப் போராட்டத்தில் நாட்டுத் தந்தை காந்தி அவர்களால் பிரபலமாக்கப் பட்டது காதி என்று அறியப்படுகிற கதர் துணி. கையால் நூற்ற நூலினால் நெய்யப்பட்ட கதர்த் துணியைப் பயன்படுத்தித்தான் கொடியைத் தயாரிக்க வேண்டும். வேறு துணிகளை வைத்து தயாரித்த கொடியைப் பயன்படுத்தினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் வகை உள்ளது. 

கொடியைத் தயாரிக்கும் ஏகபோக உரிமை.

இந்த கொடியை தயாரிக்கும் அனுமதி  கர்நாடக மாநிலம் தார்வார்ட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி என்ற சிற்றூரில் இருக்கும் கர்நாடகா காதி கிராமோத்யா சம்யுக்த சங்கத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள் தெரிவிக்கும் எண்ணங்கள்.

கொடியில் காணப்படும் மூவண்ணங்களும் வெவ்வேறு விளக்கங்கள் தருகின்றன. மேலே காணப்படும் காவி நிறம்  நம் வீரத்தையும் தியாகத்தையும் விளக்குகிறது.. நடுவில் உள்ள வெள்ளை நிறம் உண்மையையும் பரிசுத்தத்தையும் பறைசாற்றுகிறது. அடியில் காணப்படும் பச்சை நிறம் நம்பிக்கையையும், வளமையையும், வளர்ச்சியையும் குறிப்பிடுகிறது.

கொடியின் தத்துவம்.

கொடியின் நடுவே வெள்ளை நிறப் பகுதியில் காணப்படும் 24 நீல நிறக் குறுக்குக் கோடுகள் கொண்ட வட்டம்தர்ம சக்கரத்தையும்,” வளர்ச்சிக்கான சுழற்சியையும் குறிக்கின்றது. அசோகரின் எண்ணற்ற பிரகடனங்களில் இந்த சின்னம் இடம்பெற்றிருக்கிறது. இது இந்தியாவின் சட்டச் சக்கரம் என்று அறியப்படுகிறது.

கொடியின் அமைப்பு பற்றிய வழிகாட்டுதல் .

இந்தியக் கொடி பற்றிய வழிகாட்டு முறையின் படி கொடியின் நீளமானது அகலத்தைப்போல் ஒன்றரை மடங்கு இருத்தல் வேண்டும். அதாவது இரண்டுக்கு மூன்று என்ற விகிதம்.  அதில் இருக்க வேண்டிய மூன்று பட்டைகளும் சமமான நீல அகலத்தில் இருக்கவேண்டும். 

கொடியை பறக்க விட அனுமதி. 

2002க்கு  முன்பு வரை தனி நபர்கள் கொடியை பறக்கவிட சில கட்டுப் பாடுகள் இருந்தன. அதன் படி விடுதலை நாள், குடியரசு நாட்களில் மட்டும் தான்  பறக்க விட அனுமதி இருந்தது. 2002 ல் கொடி வழிபாட்டு முறைகள் அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு கொடிக்கு உரிய கண்ணியத்தோடும், பெருமையோடும் பயன்படுத்தினால் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. 

உலக சாதனை.

2014 ம்  ஆண்டு டிசம்பர் 7 ம் நாள் சென்னையில் இருக்கும் நந்தனம் YMCA திடலில் 50,000 க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து ஒரு மிகப் பெரிய இந்திய தேசியக்கொடி வடிவில் நின்றார்கள். இது மிகப் பெரிய மனிதக் கொடி என்று கின்னஸ் உலக சாதனையாக பதிவாகியது.

சந்திரனில் இந்திய தேசியக் கொடி.

2008 ம் ஆண்டு நவம்பர் 14 ம் நாள் சந்திரனில் பறக்கவிடப்பட்ட நான்காவது நாட்டுக்கொடி என்ற பெருமையை இந்தியக் கொடி பெற்றது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா தான் தங்கள் தேசியக்கொடி கொடிகளை பறக்க விட்ட மற்ற மூன்று நாடுகள். சந்திராயன் -1 என்ற தானியங்கி விண் கலன்  மூலம் இந்த சாதனை நடத்தப் பட்டது. 

உலகின் உச்சியில் 

1953ம் ஆண்டு மே 29ம் நாள், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இந்தியக் கொடியானது, UK தேசியக் கொடியுடனும் நேபாள தேசியக் கொடியுடனும் சேர்த்து ஏற்றி வைக்கப் பட்டது.  

அந்நிய மண்ணில் நம் நாட்டு கொடி.

1907 ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் Bhikaji Rustom Cama என்பவரால் முதன் முதலில்  அந்நிய மண்ணில் இந்தியக் கொடி யேற்றப் பட்டது. அந்தப் பெண்மணி Stuttgart இல் நடைபெற்ற  இரண்டாவது  International Socialist Congress ன் போது இந்தியக் கொடியைப் பறக்க விட்டார். 

இந்தியக்கொடிக்கு முதலில் வடிவம் கொடுத்தவர்.

சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றி நடந்தவர்களுள் ஒருவர் பாகினி நிவேதிதா. சகோதரி நிவேதிதா என்று அழைக்கப் பட்ட அவர் தான் முதன் முதலில் இந்தியக் கொடியை வடிவமைத்தார். வங்காள பிரிவினையை எதிர்த்து 1906 ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் நாள் நடை பெற்ற  ஒரு கண்டனப் பேரணியில் நிவேதிதாவின் கொடி  முதன் முதலாகப் பயன்படுத்தப் பட்டது.

மற்ற கொடிகளோடுள்ள ஒற்றுமை.

இந்தியக் கொடியிலுள்ள மூன்று வண்ணங்களும் வேறு பல நாடுகளின் கொடிகளின் வண்ணங்களோடு ஒத்திருந்தாலும், மிக நெருக்கமாக ஒத்துப் போவது நைஜர் நாட்டு கொடியுடன் தான். 

பாளை .இசக்கிராஜன்

No comments:

Post a Comment