Sunday, 25 August 2019

மரியாதையும் கண்ணியமும்...


மரியாதையும் கண்ணியமும்...

என்னுடைய வாகன ஓட்டுநர் அனுமதி அட்டையில் பெயரிலும், முகவரியிலும் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தன. 

விண்ணப்பங்களையும், வேறு சில ஆவணங்களையும் ஆன் லைன் மூலம் பதிவேற்றும் வசதி வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 

இந்த ஆன் லைன்  முறை மிகவும் எளிமையாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டு மாற்றங்களையும் செய்வதற்கு அரசிற்குச் செலுத்த வேண்டிய  கட்டணம் ரூ 700. இதையும் ஆன் லைனில் செலுத்தி விடலாம். 

புகைப்படம் எடுக்க அந்த அலுவலகத்திற்கு நேரில் தான் செல்லவேண்டும். என்றைக்கு நேரில்  வரவேண்டும், எந்த நேரத்தில் வரவேண்டும் என்பதை நாமே நமது வசதிக்கேற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

இந்த ஆன் லைன் முறை  மிகவும் எளிதாக இருக்கிறது . ஸ்கேனர், மடிக்கணினி போன்றவை வீட்டில் இருப்பதால் நானே தனியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். என்றாலும், ஆன் லைன் முறையை  தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு முன் தொடர்புடைய அந்த அலுவலகத்திற்கு ஒரு முறை நேரில் சென்று அங்கு நடப்பதை அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

ஒருநாள் காலை 1030 மணி அளவில் அந்த அலுவலகம் சென்றேன். மஞ்சப் பையை கையில் வைத்துக்கொண்டு சில முகவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. 

ஆன் லைன் மூலம் பதிவேற்றிய படிவங்களின் பிரதியை அச்சு எடுத்து அதில் கையொப்பமிட்டு, ஒரு அலுவலரிடம் கொண்டு கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி தான் அங்கு அலுவலராக இருந்தார். அவர் படிவங்களை சரிபார்த்த பிறகு புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து வந்தார்.

எந்த எந்த படிவங்கள் நேரடியாக வருகின்றன, எந்த எந்த படிவங்கள் முகவர்கள் மூலம் வருகின்றன என்று அந்த அலுவலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மிகவும் பணிவுடன் முகவர்கள்  கொடுக்கும் விண்ணப்பப் படிவங்களை, சிரித்த முகத்துடன் வாங்கி அனைத்தும் சரி யாக இருக்கின்றன என்று சொல்லி புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். 

தாங்களாகவே பிரதி எடுத்து நேரடியாக விண்ணப்பங்களுடன் வருபவர்களிடம் சிடு சிடு என்று சீறிப் பாய்ந்தார். நாயை விரட்டுவது போல் எரிச்சலுடன் சில கேள்விகளைக் கேட்டு கடுப்பேத்தினார். விண்ணப்ப தாரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

இந்த காட்சிகளைப் பார்த்த பிறகு, முகவர் மூலமே விண்ணப்பத்தை கொடுத்து மரியாதையை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்நல்லதொரு நாளில் முகவர் மூலமே ஆன் லைன் பதிவேற்றங்களை செய்து முடித்தேன். பிறகு நகலெடுத்த படிவங்களை எடுத்துக்கொண்டு அந்த முகவருடன் அலுவலகம் சென்று அவர் மூலம் அலுவலகத்தில் கொடுத்தேன். 

அவமானம் எதுவுமின்றி மரியாதையுடன் நடத்தப்பட்டேன். இரண்டே நிமிடங்களில் அனைத்தும் OK என்று சொல்லிவிட்டார்கள். புகைப்படம் எடுக்கும் இடத்திற்குள் எளிதாக நுழைய முடிந்தது. வேலை மிக விரைவாகவும் எளிதாகவும்  முடிந்தது.  அரசுக்குச் செலுத்திய ரூ 700 உடன் கூடுதலாக ரூ 700 முகவரிடம் கொடுக்க வேண்டி வந்தது. அந்த ரூ 700  யார் யாருக்கெல்லாம் போய்ச் சேர்ந்தது என்று தெரியவில்லை.

இதற்கு முன்பு 1990 களில், ஒரு முறை அந்த துறையின் நெல்லை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நெருங்கிய நண்பன் ஒருவன் மூலம் எனது ஓட்டுநர் அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பம் கொடுத்தேன்.  நண்பன் என்பதால் கூடுதலாக காசு எதுவும் நான் கொடுக்க வில்லை. அவனும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மகிழ்ச்சியுடன் புதுப்பித்துக் கொடுத்து உதவினான். அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்க நாம் நேரில் செல்லத் தேவை யில்லாத காலம்.

அந்த அலுவலக நடை முறைப்படி, நாள் முடிவில் அன்றைய அன்பளிப்பு வசூலை பங்கு வைத்திருக்கின்றனர்.  என்னுடைய ஓட்டுநர்  அனுமதி  புதுப்பித்தலுக்குண்டான  அன்பளிப்புப்பணம் ரூ 500 ரொக்கமாக வந்து விட்டது  போல் வரவு வைத்திருக்கிறார்கள். பிறகு அதையும் சேர்த்து அன்றைய மொத்த வசூலை ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் பங்கு பிரித்திருக்கிறார்கள். 

எனது நண்பனுக்கு சேர வேண்டிய பங்குப் பணத்தில், என்னுடைய அனுமதி புதுப்பித்தலுக்கு வரவேண்டிய  அன்பளிப்பு பணமான ரூ 500 குறைத்துக் கொண்டு மீதியை அவனிடம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த தகவல் எனக்கு மிகவும்  தாமதமாகத் தான் தெரிய வந்தது. எனக்கு உதவப் போய் பாவம் என் நண்பனுக்கு ரூ 500 இழப்பு. வருத்தமாக இருந்தது. இந்த தகவல் தெரிந்து கொண்ட பிறகு நான் என் நண்பனை அணுகுவதில்லை.  அதற்குப்பிறகு தேவைப்படும் அந்த அலுவலகத்துப் பணிகளை எங்கள் ஜீப் டிரைவர் ராமசாமி அவர்கள் உதவியுடன் ஒரு முகவர் மூலம் முடித்து வந்தேன்.

அன்பளிப்புப் பணத்தை பங்கு வைத்துக் கொள்வதில் பின்பற்றும் மிகவும் நேர்மையான, கண்ணியமான முறை  எனக்கு இன்றைக்கும் பிடித்திருக்கிறது.

- பாளை .இசக்கிராஜன் 





No comments:

Post a Comment