LIC த் தாய்க்கு நன்றி
நான் என்னுடைய 38 ஆண்டு கால பணிக் காலத்தில், LIC நிறுவனத்தில், பல்வேறு கிளைகளில், பல கோட்டங்களில், பல மாநிலங்களில், பல்வேறு பொறுப்புக்களில் இருந்திருக்கிறேன். அனைத்துப் பொறுப்புக்களிலும் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிருக்கிறேன்.
இருந்தாலும் எனக்கு பிடித்தது 1990-98 காலகட்டத்தில், திரு வல்லா, திருச் செந்தூர், திரு நெல்வேலி, திருப் பூர் என்ற நான்கு "திரு" கிளைகளில் உதவிக் கிளை மேலாளராகவும், கிளை மேலாளராகவும் இருந்த "அந்த எட்டு ஆண்டுகள்" தான்.
அந்த எட்டாண்டு காலத்தில், ஆயிரத்திற்கும் கூடுதலான முகவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தன. ஐம்பதுக்கும் கூடுதலான வளர்ச்சி அலுவலர்களுடன் தொடர்பும் நெருக்கமும் ஏற்பட்டன. அவர்கள் மூலம் நான் சந்தித்த எண்ணற்ற பிரபலங்கள்.
இவை தான் நான் எல்ஐசி நிறுவனத்தின் மூலம் சம்பாதித்த மிகப் பெரிய சொத்து.
கேரளத்தின் திருவல்லா கிளை யில் உதவிக் கிளை மேலாளராக இருந்த போது, நூற்றுக்கணக்கான வெளி நாடு வாழ் இந்தியர்களை கண்டு பேசி மகிழ்ந்து வாங்கிய வணிகம் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றன. அந்த வாடிக்கையாளர்களுடனான அறிமுகம் மூலம் வெளிநாடு பற்றி பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
திருச்செந்தூர் கிளை யில் மேலாளராக இருந்த காலத்தில் உடன்குடி திரு K.S.கணேசன் அண்ணாச்சி யுடன் இணைந்து கணக்கிலடங்கா பிரபலங்களை சந்தித்திருக்கிறேன்.
தேவி இதழ் அதிபர் திரு இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், தினத்தந்தி அதிபர் திரு சிவந்தி ஆதித்தன், அவர்கள் தினகரன் நாளிதழின் அப்போதைய அதிபரும் அறநிலையத்துறை அமைச்சருமான திரு KP கந்தசாமி அவர்கள், அவரது புதல்வர்கள், அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் திரு நடேசன் பால்ராஜ் அவர்கள், பிரீமியர் & கோ அதிபர் திரு சிவநேசன் அண்ணாச்சி அவர்கள், ஹோட்டல் சரவண பவன் நிறுவனர் திரு ராஜகோபால் அண்ணாச்சி அவர்கள், திசையன் விளை V.V மினரல்ஸ் அதிபர் திரு வைகுண்டராஜன் அண்ணாச்சி அவர்கள் என்று அந்த பட்டியல் மிக நீளமாக நீண்டு கொண்டே போகும்.
புகழ்பெற்ற ஆதித்தனார் கல்லூரி யின் முதல்வர் திரு மா.பா.குருசாமி அவர்கள், பேராசியரும் எழுத்தாளரும், பேச்சாளருமான நெல்லை கவிநேசன் என்று அழைக்கப்படும் திரு நாராயண ராஜன் என்று பலரும் நட்பு வளையத்தில் வந்தார்கள்.
எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு 27 ஆண்டுகள் முடிந்து விட்டாலும், இன்றைக்கும், VV மினரல்ஸ் நிறுவனர் திரு வைகுண்ட ராஜன் அண்ணாச்சி அவர்கள், எங்கள் LIC க்காரர்கள் யாரையாவது பார்த்தால் என்னைப்பற்றி எங்கே இருக்கிறேன் எப்படி இருக்கிறேன் என்று பாசமுடன் விசாரிப்பார்களாம்.
திருநெல்வேலி கிளையில் இருந்தகாலத்தில் KTC அலுவலகர்களைச் சந்தித்தது, அவர்களுடன் சரளமாக உரையாடியது, பத்துபைசா செலவில்லாமல் பல லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊழியர்களின் வைப்பு நிதி அறக்கட்டளையிலிருந்து வாங்கியது எல்லாமே ஒரு பெரிய சாதனை.
முன்னாள் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் திரு ஆவுடையப்பன் அவர்கள், அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு தனுஷ்கோடி ஆதித்தன் அவர்கள், அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் திரு D வேலையா அவர்கள், நெல்லையின் இளந் தொழிலதிபராக சாதனைகள் பல படைத்த Rm.K.V திரு விசுவநாதன் அவர்கள் என்று பல பிரபலங்களையும் முகவர்களோடிணைந்து சந்தித்திருக்கிறேன்.
திருப்பூரில் இருந்த இரண்டாண்டு காலமும் மறக்கவே முடியாத பொற்காலம். எண்ணற்ற கணக்காயர்களுடன், நல்ல நெருக்கமான அறிமுகம். புகழ்பெற்ற கணக்காயராக இருந்தபோதும், ரியல் எஸ்டேட் வணிகத்தையும் சிறப்பாக புரிந்து வந்த மில்லதிபர் ஆடிட்டர் திரு ராஜன் அவர்களுடன் நல்ல அறிமுகம். பழக்கம்.
ஏற்றுமதித் தொழில் புரிந்து வந்த பெரிய பெரிய தொழிலதிபர்களான திரு பிரேம் துரை அவர்கள், கோல்ட் கிங் தங்கராஜு அவர்கள், திரு பழனிச்சாமி அவர்கள், DSK நிறுவன சகோதரர்கள், திரு BORNWIN ராமமூர்த்தி அவர்கள் என்று நிறைய பிரபலங்களை சந்தித்து, ஆயுள் காப்பீடு வழங்கியது இன்றைக்கும் என் நினைவலைகளில் பசுமையாக வந்து போகின்றன.
பிற்காலத்தில் பல உயர் பதவிகளில் இருந்த காலத்தில் பல் வேறு பிரபலங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் உதவிக்கிளை மேலாளராகவும், கிளை மேலாளராகவும் இருந்த போது, பலதரப்பட்ட பிரபலங்களை சந்தித்து எல்ஐசி நிறுவனத்தின் பெருமைகளை பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு என் வாழ் நாளில் மறக்க முடியாதவை.
என் வளர்ப்புத் தாய் எல்ஐசி க்கு மிகப் பெரிய நன்றி.
- பாளை ப.இசக்கிராஜன்.
No comments:
Post a Comment