Friday, 23 August 2019

கடன் அட்டையா?


கடன் அட்டையா?

நான் 2011 வரை கடன் அட்டைகளை வாங்காமலே இருந்தேன். கடன் அட்டைகள் மீது அவ்வளவு வெறுப்பு. இப்படியான வெறுப்பு வரக் காரணம் சில கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் கெடுபிடி காட்டி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கொடுத்த நெருக்கடிகள் பற்றி நாளிதழ்களில் படித்த செய்திகள் தான். கடன் அட்டை வாங்கியிருந்த  உறவினர்களை கூட கண்டித்திருக்கிறேன். 

LIC நிறுவனம், LIC CARDS என்ற துணை அமைப்பின் மூலம், கார்ப்பொரேஷன் வங்கியுடன் இணைந்து கடன் அட்டை வணிகத்தில் இறங்கியதும், நானும் 2011 இறுதியில், கடன் அட்டை வாங்கினேன். குறிப்பிட்ட தவணை நாளில், தவறாமல் தொகையை கட்டிவிட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து, இன்று வரை அப்படியே நடந்து வருகிறேன். ஒன்றிரண்டு ஆண்டுகளில், கார்பொரேஷன் வங்கியுடனான இணைப்பை துண்டித்தவிட்டு,  LIC CARDS  அமைப்பு ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து, கடன் அட்டை வணிகத்தை தொடர்ந்தது.

முதலில் கடன் அட்டைக்கு எதிர்ப்பு காட்டிய நான், அட்டையை பயன்படுத்த பயன்படுத்த, அதன் சிறப்பு அம்சங்களை நன்றாக உணர்ந்து கொண்டேன். எந்த செலவை என்றைக்கு செய்தோம், எந்த பொருளை என்றைக்கு வாங்கினோம், பெட்ரோல் எரிவாயு போன்றவற்றை என்றைக்கு வாங்கினோம் என்ற அனைத்து தகவல்களையும் பட்டியல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது பேருதவியாக இருக்கிறது. குறிப்பிட்ட தவணை நாட்களில் எனது கணக்கில் வங்கியிலிருந்தே எடுத்துக்கொள்ளும் வசதிக்கு விருப்பம் தெரிவித்திருந்ததால், பணம் செலுத்துவதும் எளிதாக இருந்தது.

ATM அட்டை மூலம் பணம் எடுப்பதற்கும், ஆன்லைன் மூலம் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் வங்கி சில வெகுமதி புள்ளி அளித்து வருகின்றத. அந்த வெகுமதிப் புள்ளிகளுக்கும்,  அவ்வப்போது விரும்பும் பொருட்களை தெரியப்படுத்தி, அவற்றை அஞ்சல் மூலம் பெற்று வருகிறேன்.   

LIC CARDS கடன் அட்டையிலும் வெகுமதி புள்ளிகள் சேர்ந்து வருகின்றன. அந்த 14000 புள்ளி களுக்கு  நான் விரும்பும் பொருட்களை எப்படி வாங்குவது என்பது குறித்து சரியான வழிகாட்டு குறிப்புகள் எதுவும் கிடைக்க வில்லை. LIC CARDS இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 1800 233 1100 என்ற எண்ணிற்கு பலமுறை  தொடர்பு கொண்டேன். யாரும் தொலை பேசி இணைப்பிற்கு வரவே இல்லை. நொந்து போய் எனது முயற்சியை கைவிட்டு விட்டேன்

சென்ற வாரத்தில் ஒருநாள், AXIS வங்கியின் வாடிக்கையாளர் மையத்தை 1860 5005 555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு எனது சிக்கலை தெரிவித்தேன். அவர்கள் பொறுமையாக எனது சிக்கலை அலசி ஆராய்ந்து, எனக்கு நல்லதொரு  தீர்வு கொடுத்தனர். 

LIC CARDS தளத்தைப் பார்த்து அதில் காணப்படும் விருப்ப பொருட்களின் பட்டியலை பார்வையிட்டு, விருப்பப் படும் பொருட்களின் அடையாள எண்ணை தெரிவிக்கச் சொன்னார்கள். ரூ 10,000 மதிப்பில் பொருட்கள் வாங்கக்கூடிய பட்டியலில்  இருந்து, சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளும் கருவி, இரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ள பயன்படுத்தும் கருவி, ரூ 5000  மதிப்பிற்கு AXIS வங்கியின் வெகுமதி அட்டை என்று  மூன்று பொருட்களுக்கு விருப்பம் தெரிவித்தேன். இந்த மூன்று பொருட்களும் அஞ்சலில் வந்து கொண்டிருக்கின்றன. 

இப்படி ஒரு பொன்னான வெகுமதியும் கடன் அட்டையில் கிடைக்கிறது. இதைப் படிக்கும் நிறைய நபர்களுக்கு இது பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். இருந்தாலும் அறிந்திராத சில நண்பர்களுக்கு இந்த தகவல் பயன்படட்டும்.  


- பாளை .இசக்கிராஜன்.







No comments:

Post a Comment