அனைத்திலும் சுத்தம்
என்னுடைய நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை கேரளத்தில் இருந்த போது 1990 ல் திருவல்லா RTO அலுவலகத்தில் பெற்றேன். அரசு அறிவித்துள்ள உரிய கட்டணத்தைத் தவிர கூடுதலாக பத்து காசு கூட யாரும் அன்பளிப்பு கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. அங்கு வாழும் மக்களிடம் இருக்கும் விழிப்புணர்வு தான் இதற்கு அடிப்படைக் காரணம்.
திருவல்லாவிலிருந்து பலமுறை நெல்லைக்கு என்னுடைய காரில் வந்து போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் தமிழ் நாட்டு எல்லையைக் கடக்கும் போதும் சோதனைச் சாவடியில் இருப்பவர்கள் கை நீட்டுவார்கள். மறுப்பு தெரிவித்தால் 20 ரூபாய்க்கு கொடி யாவது வாங்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். கேரளத்து சாவடிகளில் ஒரு போதும் இப்படி நடந்ததில்லை.
1992 ல் எனக்கு திருவல்லாவிலிருந்து திருச்செந்தூருக்கு பதவி உயர்வில் இட மாற்றம் வந்தது . திருவல்லா வீட்டைக் காலி செய்து, வீட்டுப் பொருட்களை ஒரு லாரியில் ஏற்றி தமிழ் நாட்டிற்கு அனுப்பினேன். பொருட்களை ஏற்றி வந்த அதே வண்டியில் நானும் உடன் வந்தேன்.
கேரள சோதனைச் சாவடியில் ஆவணங்கள் கேட்டார்கள். அலுவலகத்திலிருந்து வந்திருந்த இட மாறுதல் உத்தரவு, வீட்டுச் சாமான்களின் விவரப் பட்டியல் போன்றவற்றை காண்பித்தேன்.
தமிழ் நாட்டில் நடைமுறையிலிருந்த வழக்கப்படி, ஆவணங்களோடு சேர்த்து ஒரு 20 ரூபாய் தாளையும் சேர்த்துக் கொடுத்தேன். அங்கிருந்த அலுவலர், ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு, பணத்தை எடுக்காமல், புறங்கையை ஆட்டி, ஒரு "ச்சு ச்சு" என்ற ஒலி எழுப்பி என்னைத் திருப்பி அனுப்பினார்.
அந்த சுகமான அனுபவம், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. இன்றைக்கும் இது போன்ற நிலைமை அங்கு தொடர்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் சரி இது தான் அங்குள்ள நிலைமை.
எங்கள் வாகனம் கேரள எல்லையைத் தாண்டி தமிழ் நாட்டின் புளியரையில் உள்ள சோதனைச் சாவடியில் நின்றது. ஓட்டுநருடன் நானும் கீழே இறங்கி, ஆவணங்களை அங்கிருந்த அலுவலரிடம் காண்பித்தேன். அத்துடன் சேர்த்து 100 ரூ தாளையும் சேர்த்தே கொடுத்தேன். அவற்றை சரி பார்த்த அலுவலர், அனைத்தும் சரியாக இருந்தாலும் 100 ரூபாய் குறைச்சல் என்று நினைத்திருக்கிறார்.
ஆவணங்களைத் திருப்பித் தராமல், என்னிடம் கூடுதலாக பணம் பறிக்க என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தார். பிறகு நாங்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநர் சீருடை அணியாமல் இருக்கிறார். அதற்கு ரூ 500 அபராதம். அதை நீதி மன்றத்தில் தான் செலுத்த வேண்டும் என்று பயமுறுத்தினார். நான் அதிர்ச்சியுடன் ஓட்டுநரைப் பார்த்தேன்.
ஓட்டுநர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கையை விரித்து விட்டார். அன்பளிப்பாக கூடுதல் பணத்தைக் கொடுக்கா விட்டால், வண்டியை அனுப்ப தாமதிப்பார்கள் என்றும் கவலைப்பட்டார்.
இந்த தாமதத்திற்காக நான் வண்டி வாடகையை உயர்த்திக் கொடுக்க வேண்டி வரும் என்றும் கூறினார். இந்த சிக்கலைத் தீர்க்க அந்த அலுவலருக்கு ஒரு 300 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து விடும்படியும் ஆலோசனை கூறினார்.
நானும் வேறு வழி இல்லாமல் இன்னொரு 200 ரூபாயை அவரிடம் தண்டம் கொடுத்து அழுதேன். அதற்குப் பின்னர் தான் எங்களால் வண்டியை எடுக்க முடிந்தது.
இந்த நிலைமை தமிழ் நாட்டுச் சோதனைச் சாவடிகளில் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கேரள மக்களிடம் இயற்கையிலேயே நிறைந்துள்ள விழிப்புணர்வும், போராட்ட குணமும் தமிழ் நாட்டு மக்களிடம் இல்லாதது மிகப் பெரிய குறை. இந்த நற் குணங்கள் நம் மக்களிடம் ஏற்படும் வரை லஞ்ச மலத்தோடு தான் நாம் இணைந்து வாழ வேண்டும். வேறு வழி யில்லை.
ரோம் நகரில் வாழும்போது ஒரு ரோமானியனாகத்தான் வாழ வேண்டும். இது தானே நடைமுறை.
அகச் சுத்தம், மனச் சுத்தம், வாய்ச்சுத்தம், கைச் சுத்தம் என்று அனைத்துச் சுத்தங்களும் வெகு விரைவில் நம் தமிழ் நாடு முழுதும் ஏற்படட்டும்.
-பாளை ப.இசக்கிராஜன்.
No comments:
Post a Comment