கலைஞர்.. பன்முகக் கலைஞர்.
பிறந்த போது இவர் புவர். இவரைத்தேடி வந்தது பவர்.
எதிரியையும் வளைத்துப்போடும் வலை வாணர்.
தட்டிக்கொடுப்பதில் கெட்டிக்காரர். தட்டிக்கேட்பதில் தன்மையானவர்.
உறவுக்குக் கைகொடுப்பதில் தயங்காதவர். உரிமைக்குக் குரல் கொடுப்பதில் உறுதியானவர்.
எழுச்சி மிகு உரை யாற்றுவதில் ஒப்பற்றவர். சமூக அவலங்ளை சாடுவதில் சளைக்காதவர்.
ஏழைகளைத் தாங்க தயங்காதவர். நலத்திட்டங்களைத் தீட்டிட தூங்காதவர்.
துரோகிகளையும் இழுத்துப் பிடித்து அணைத்துக் கொள்பவர்.
உயரத்திலும் "வை" ப்பவர். தன்னை உதைக்கும்போது "கோ" என்றும் சொல்லுபவர்.
பக்கத்திலும் "வை" ப்பவர். "கோ" பப்படாமல் ஆதரிக்கவும் செய்பவர்.
சமய இலக்கியங்களை சமயம் பார்த்து சாடுபவர். இமயத்திற்கு உயர்த்தி இமை மூடாமல் ரசிப்பவர்.
கூகுள் சர்வரைவிட கூடுதல் நினைவாற்றல் கொண்டவர்.
ராட்சச கணிணியின் வேகத்தை விட கூடுதல் வேகம் உள்ளவர்.
கைபேசி காமிராவிற்கு முன்னும் பின்னும் இரண்டே கண்கள் தான்.
இந்த மாமனிதருக்கோ தலையைச்சுற்றி ஆயிரம் கண்கள்.
கொள்கையில் உறுதியானவர். இடர் அனைத்தையும் தாண்டிவந்த தன்னம்பிக்கைக்காரர்.
பத்திரிகை உலகில் முத்திரை பதித்தவர். கவிதையுலகில் இதயங்களை கொள்ளை கொண்டவர்.
எழுத்துலகில் எண்ணற்ற ஓவியம் தீட்டியவர். தன்னைப் பிடிக்காதவர்களையும் தனது பதிப்புக்களை
விரும்பிப் படிக்கவைத்தவர்.
திரை உலகில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். எழுதியது அனைத்தும் கூர்மை நிறைந்த வைர
வசனங்கள்.
கட்சி அரசியலில் கரை கண்டவர். சட்டமன்ற வரலாறில் சரித்திரம் படைத்தவர்.
இவரை மாற்றவும் முடியாது. ஏமாற்றவும் முடியாது.
எந்தத் தேர்தலிலும் தோல்வி என்ற மூதேவி இவரைத் தழுவியதே கிடையாது.
பதின்மூன்று முறையும் வெற்றித் தேவதைதான் இவர் கரத்தை கெட்டியாகப் பிடித்தாள்.
"என் உயிரினும் மேலான" என்ற இவரது துவக்கப்பேச்சே தளர்ந்து போயிருக்கும் தொண்டனை தலை நிமிரச் செய்யும். உற்சாகமாக உழைக்கச் செய்யும். வெற்றிக்கனியை பறிக்கச்செய்யும்.
இந்த வித்தகரின் சொல் வித்தையில் சொக்கிப்போகாதவர் யாரும் இல்லை.
1971 தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் முற்போக்குக் கூட்டணி. பாராளுமன்றத்துக்கு
காங்கிரசிற்கு வெறும் பத்தே இடம். சட்டமன்றத்திற்கு ஒன்று கூட கிடையாது .
பத்தே இடம் கொடுத்து காங்கிரசைப் பதறவிட்டவர்.
இந்த சூத்திரத்தை தனக்கு ஏதுவாக பயன்படுத்திய சாமர்த்தியம் வேறு எந்த தலைவனுக்கும்
இன்றுவரை இருந்ததில்லை.
ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவரை ஆண்டவராகவே நம்புகிறான் இவரது தொண்டன்.
இறைவனை நம்பாதவர் இவர். தொண்டர்கள் இவரை இறைவனாக நம்பும்படி நடந்தவர்.
அவசரகாலத்தில் அவசரப்படாமல் அசாத்தியமாக நடந்தவர்.
அனைத்துத்திசை தலைவர்களையும் ஆச்சரியப்படவைத்தவர்.
கொண்ட கொள்கையில் வளைந்து கொடுக்காமல் நிமிரந்து நின்றவர்.
தாக்குதல் கண்டு துயரப்படாமல் துணிந்து நின்றவர்.
முதல்வராக இருந்து சாதனைகளில் முதல்வனாக இருந்தவர்.
தனது மரணத்தை இறுதிவரை எதிர்த்தவர்.
எவனிடமும் தோற்றுப்போகாதவர். எமனிடம் மட்டும் தோற்றுப்போனவர்.
இவர் பெயர் இவரைப்பிடிக்காதவர்களின் உதடுகளால் கூட உச்சரிக்கப்பட்டுக்கொண்டே
இருக்கும்.
இவர் உடல் மண்ணில் புதைக்கப்பட்டாலும் தமிழ் மண்ணில் விதைக்கத்தான் படுகின்றார்.
நினைவு நாளில் நினைவு கூர்கிறேன்.
பாளை ப.இசக்கிராஜன்.
No comments:
Post a Comment