Tuesday, 13 August 2019

சம்பவம் ஒன்று தான்.. பார்வைகள் தான் பலவிதம்.


சம்பவம் ஒன்று தான்.. பார்வைகள் தான் பலவிதம்.


நான் 2006-08 ல் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள  LIC கோட்டத்தின் வணிக மேலாளர்.  2007 வாக்கில் மங்களூர் அருகில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த வாகன விபத்தில் மங்களூர் மாவட்ட காவல் துறை உயர் அலுவலர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் மரணமடைந்தனர். 

அரசுக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனத்தில் அலுவலரின் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த போது தான் எதிர்பாராத முறையில்  இந்த கோர விபத்து நடைபெற்றது.  இந்த விபத்து மிகப் பரபரப்பாக பேசப்பட்டு அனைவரின் அனுதாபங்களையும்  பெற்ற ஒரு செய்தியாக அமைந்தது. 

விபத்து நடந்த வாரத்தில் ஒருநாள், எங்கள் கோட்ட அலுவலகத்திற்கு மண்டல அலுவலகத்திலிருந்து திரு டாடா ராவ் என்ற உயர் அலுவலர் வந்திருந்தார். அவர் இன்ஸ்பெக்சன்  துறையின் பிராந்திய மேலாளர். அவரது அலுவலகப் பணி முடிந்ததும், ஹைதராபாத் நகருக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அவரை விமானத்தில் அனுப்பி வைப்பதற்காக நான் தான் அவரை மங்களூர் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் என் அண்டை வீட்டுக்கார நண்பர் ஒருவர் எங்களுடன்  வந்தார். அவர் உடுப்பி மாவட்ட  காவல் துறை கண் காணிப்பாளரின் நேர்முக உதவியாளர். காரில் பயணிக்கும்போது எங்களுக்குள் இந்த விபத்து குறித்து ஒரு விவாதம் வந்தது. எங்களது மண்டல அலுவலர் அவர் கோணத்தில் இருந்து இந்த விபத்து குறித்து பேசினார். 

"வாகனம் காவல்துறை அலுவலகத்திற்குச் சொந்தமானது. இந்த வாகனத்தில் பயணித்தது காவல்துறை உயர் அலுவலரின் குடும்ப உறுப்பினர்கள். குடும்பத்தார் பயணத்திற்கு அலுவலக வாகனத்தைப் பயன்படுத்தியமைக்காக காவல் துறை மேலிடம் தொடர்புடைய அலுவலரிடம் விளக்கம் எதுவும் கேட்பார்களா? அவருக்கு தண்டனை வழங்குவார்களா?" என்று அவர் ஆர்வமுடன் கேட்டார். 

என் நண்பர் "நிச்சயமாக விளக்கம் கேட்பார்கள். ஆனால் தண்டனை எதுவும் வழங்காமல் எச்சரித்து விட்டு விடுவார்கள்" என்று விளக்கமளித்தார்.

நான் எனது கோணத்தில் இந்த விபத்து குறித்த கேள்விகளை நண்பரிடம்  கேட்டேன்.  "இறந்து போன உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு இருந்திருக்குமா? இருந்தால் எவ்வளவு தொகைக்கு இருந்திருக்கும்? அதற்குண்டான இழப்புப் பணத்தை எவ்வளவு விரைந்து வழங்க முடியுமோ அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று கேட்டேன். நண்பர் விசாரித்து தகவல் தருவதாக உறுதியளித்தார்.

நாங்கள் இருவரும் எங்களது தனித்தனி பார்வையில் இந்த விபத்தை அணுகிய விதம் குறித்து என் நண்பர் வியந்து போனார். 

ஒரு வழக்கறிஞர் இந்த விபத்தை  எப்படி பார்த்திருப்பார்? ஒரு LIC முகவர் எப்படி அணுகியிருப்பார்? ஒரு வாங்கி மேலாளர் என்ன நினைப்பார்? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்த்தேன். 

ஒரு வழக்கறிஞர் இந்த விபத்திற்காக MV Act மூலம் எவ்வளவு பணம் இறந்தவர்கள் குடும்பத்திற்கு வாங்கி கொடுக்கலாம் என்று நினைப்பார்ஒரு LIC முகவர், இந்த விபத்தின் மூலம் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையை வைத்து எவ்வளவு தொகைக்கு புதிய பாலிசிகள் அந்த குடும்பத்தினர்க்கு வழங்கலாம் என்று நினைப்பார்.  ஒரு வங்கி மேலாளர், குடும்பத்திற்கு கிடைக்கும் காப்பீட்டுப் பணத்தில், எவ்வளவு தொகையை நிரந்தர வைப்பு நிதியாகப் பெறலாம் என்று நினைப்பார். 

இப்படித்தான் ஒரு நிகழ்வை ஒவ்வொருவரும் அவரவரின் தொழிலுக்கேற்ப, தன்மைக்கேற்ப , மாறு பட்ட கோணத்தில் பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களது தனித்தனி பார்வையில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

- பாளை .இசக்கிராஜன்

No comments:

Post a Comment