Friday, 16 December 2016

சொல் வித்தை அனகன்

நான் சிட்னி வந்த போது
அக்டோபர் மாதம் நடந்த
ஆஸ்திரேலிய கம்பன் கழக
பத்தாம் ஆண்டு விழாவில்
கலந்து கொண்டேன்.
அங்கு இவரைக்கண்டு
அறிமுகமானேன்.

அடுத்து நவம்பர் மாதம்
ஆஸ்திரேலிய
தமிழ் கலை மற்றும்
பண்பாட்டுக்கழகத்தால்
ஏற்பாடு செய்யப்பட்ட
திரு நெல்லைக்கண்ணன் அவர்கள்
பேசிய இலக்கிய கூட்டத்தில்
கலந்துகொண்டபோது
விரிவாக உரையாடினேன்.

முகநூலில் இவரது நண்பராக
இணைந்து கொண்டேன்.

அடுத்து வந்த நாட்களில்
முருகன் கோவில் வளாகத்தில்
ஏற்பாடு செய்யப்பட்ட
திரு நெல்லைக்கண்ணன் அவர்களின்
ஆன்மீகக் கூட்டத்தில் 
கலந்து கொண்டபோது
மீண்டும் நெருக்கமாகி
நண்பரை சகோதரராக
மாற்றிக் கொண்டேன்.

தமிழகத்தின் மறைந்த
முன்னாள் முதலமைச்சர்
நினைவைப்போற்றி 7-12ல்
இந்திய தூதரக அலுவலகத்தில்
ஏற்பாடு செய்யப்பட்ட
இரங்கல் கூட்டத்தில்
கலந்து கொண்டு
கவி பாடியபோது
அந்நிகழ்ச்சியை
நல்ல முறையில்
ஏற்பாடு செய்த
பாங்கைக் கண்டு
மனதாரப்பாராட்டி
உளமாற மகிழ்ந்தேன்.

ஒரு சில நாட்களில்
நண்பர் ரங்கராஜன்
இல்லத்தில் நடைபெற்ற
ஐயப்பன் வழிபாட்டில்
கலந்து கொண்டபோது
பல்வேறு செய்திகளை
பாசத்துடன்
பகிர்ந்து கொண்டோம்.

அன்று மாலை
துர்க்கை அம்மன் கோவில்
வளாகத்தில் நடைபெற்ற
விருந்துக்கும் அழைத்தார்.
இயலாமையை தெரிவித்து
வருந்தினேன்.

இவர் ஒரு மதுரைக்காரர்.
மயக்கும் பேச்சாளர்.
எழுச்சி எழுத்தாளர்.
கவர்ந்திழுக்கும்  கவி பாடி
அரங்கத்தை அதிரவைக்கும்
சிந்தனைக் கவிஞர்.

தலைமைப்பண்புகளை
தாராளமாய் கொண்டுள்ள
தன்னிகரில்லாத் தலைவர்.

எந்த நிகழ்ச்சியில்
எப்போது கலந்து கொண்டாலும்
அப்போதே அவை தொடர்பான
காட்சிப்படங்களை
தனது முகநூலில்
பதிவேற்றும் வேகம் கண்டு
வியந்திருக்கிறேன்.

இவர் சிட்னி மாநகரில்
கட்ந்த ஐந்து ஆண்டுகளில்
நடைபெற்ற பல்வேறு
பட்டிமன்றங்களிலும்,
கவி அரங்கங்களிலும்
பங்கெடுத்து பைந்தமிழை
சிறப்பித்திருக்கிறார்.

சிட்னியில் நடக்கும்
தமிழ் நிகழ்ச்சிகள்,
தமிழர் விழாக்கள்,
பள்ளிக்கூட நிகழ்ச்சிகள்,
பெற்றோர் விழாக்கள்,
ஆட்சியாளர்களுடன்
கலந்துரையாடல்,
என பலதரப்பட்ட
நிகழ்ச்சிகளிலும்
முன்னால் நிற்பவர்.

இங்குள்ளவர்கள்
சந்திக்கும் சவால்களை
சாதுர்யமாக எடுத்துரைத்து
சிக்கல்களை அவிழ்க்க
சிரமம் பார்க்காமல்
பணியாற்றும் பண்பாளர்.

தமிழால்.....
எல்லோருடனும் இணைபவர்.
எல்லோரையும் இணைப்பவர்.

இந்த மதுரைத்தங்கம்
பணிபுரிவது இங்குள்ள
"காமன் வெல்த்" வங்கியின்
தகவல் தொழில் நுட்பத்துறையில்.

செம்மையாகச்
செயல்பட்டுவரும்
ஆஸ்திரேலிய
கலை மற்றும்
பண்பாட்டுக் கழகத்தின்
கட்டுப்பாடு நிறைந்த
தலைவர் இவர்.

இந்த சகோதரர் மூலம்
எனக்குக்கிடைத்த
நண்பர்கள் பலர்.

இத்தனை பெருமைக்கும்
பாராட்டிற்கும் உரிய
அன்புச்சகோதரர் தான்
திரு அனகன் பாபு.

அவரிடம் பேசும்போது
"அனகன்" என்பது
அர்ச்சுனனின் பெயர் என
அறிந்து கொண்டேன்.

காவியத்தலைவன்
அர்ச்சுனன்
வில்வித்தையில் சிறந்தவர்.
இந்த  நமது அனகன்
சொல் வித்தையில் சிறந்தவர்.

Tuesday, 13 December 2016

இலவசமா?

நான் எல்ஐசி திருச்செந்தூர் கிளையில் 
கிளை மேலாளராக இருந்த நேரம்.

ஆறுமுகநேரி சாகுபுரத்தில் உள்ள
DCW நிறுவனத்தில் 
அலுவலகப் பணியாற்றிய
திரு பரமசிவன் என்ற நண்பர்
எங்கள் முகவராகவும் சிறப்பாக 
பணியாற்றி வந்தார்.

அந்த காலகட்டத்தில் 
DCW போன்ற நிறுவனங்களில்
சம்பள சேமிப்புத்திட்டத்தில் 
பாலிசி வழங்குவது பிரபலம்.

சம்பளத்திலேயே தவணைத்தொகை
பிடித்தம் செய்யப்படுவதால் பாலிசிகள்
பாலிசி காலம் முழுமையும்
அமுலில் இருக்கும்.

இது வாடிக்கையாளருக்கும்
எல்ஐசி நிறுவனத்திற்கும்
முகவருக்கும் பலன்தரக்கூடியது.

எனவே இந்த்த்திட்டத்தில்
பாலிசி வழங்க முகவர்கள்
ஆர்வம் காட்டுவார்கள்.

அதற்காக அலுவலத்தில்
முதல்தவணையாக இரண்டு
மாதத் தவணைகள் செலுத்தவேண்டும்.

போட்டி காரணமாக முகவர்களே
இந்த இரண்டு தவணைகளை

செலுத்திவிடுவார்கள்..

மேலும் சிலர் 
இன்னொரு தவணையை
வாடிக்கையாளரிடம் 
வழங்கி விடுவார்கள்.

மேற்குறிப்பிட்ட திரு.பரமசிவன்
இந்த திட்டத்தில் இந்தமுறையில்
சிற்பாக வணிகம் 
புரிந்துகொண்டிருந்தார்.

எல.ஐ.சி.நிறுவனத்தில்
வேறு எந்த நிறுவனத்திலும் 
இல்லாத சிறப்பு ஒன்று உண்டு.

புத்தாண்டிற்காக முகவர்கள்
வாடிக்கையாளர்களுக்கு 
பரிசளிக்க மானியவிலையில்
நாட்குறிப்பும் நாட்காட்டியும்
தயாரித்து வழங்கும்.

என் நண்பர் திரு.பரமசிவன்
எங்கள் அலுவலகத்தில் 
பணம் செலுத்தி வாங்கி
அவற்றை ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு
மட்டும் புத்தாண்டுப்பரிசாக
வழங்கி மகிழ்வார்.

நாட்காட்டியோ, நாட்குறிப்போ
பரிசாக கிடைக்கப்பெறாத 
வாடிக்கையாளர்கள்
திரு.பரமசிவனிடம் கேட்பார்கள்.

அவற்றிற்கு திரு பரமசிவன் அளிக்கும்
பதில் இருக்கிறதே..
அது பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட வேண்டிய 
ஒரு வாழ்க்கை நெறி..

திரு பரமசிவன் கூறிய பதில்
அவரது வார்தைகளிலேயே தருகிறேன்.

" ஏல...
நீ என்னைக்கி ஏங்கிட்ட 
ரெண்டு பிரிமியத்துக்கு ஓன் பாலிசியை 
வித்தியோ அப்பவே ஒனக்கும் எனக்கும்
உள்ள டீல் முடிஞ்சிட்டு..

டைரி காலண்டர் கேக்க ஒனக்கு
தார்மீக உரிமை கெடயாது.

நீ மட்டும் ரெண்டு பிரிமியம் வாங்காம
பாலிசி எடுத்திருந்தா நான் ஒனக்கு
காலண்டரும் டைரியும் ஆயுசுகாலத்துக்கும் தருவேன்.

போல..ஓஞ்சோலிய பாத்துட்டு"

படிக்கின்ற பலருக்கும் பரமசிவன்
சுயநலவாதி என நினைக்கத் தோன்றும்.

ஆனால் அவர் கூறியது எவ்வளவு பொருள்
பொதிந்த வார்த்தை தெறியுமா?.

இன்றைய அரசியல் நிலையை 
நினைத்துப்பாருங்கள்.

வாக்குக்கு விலை பேசி நோட்டோ
இலவசமோ வாங்கினபிறகு
பிரச்சினைகளுக்காக அணுகினால்
மக்கள் பிரதிநிதிகள் பரமசிவன் 
மாதிரிதானே பதில் அளிப்பார்கள்.

ப.இசக்கிராஜன்

தமிழ் மணம்.

நிறைய நண்பர்கள் வாட்சாப்பில்
வழங்கப்படும் அனைத்து 
பயன்பாடுகளையும் அறிந்து
சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

செட்டிங்சில் கொடுக்கப்பட்டிருக்கும் 
Status and Phone என்ற இடத்தில்
அவர்களே வழங்கியுள்ள வார்த்தைகளில்
பிடித்ததை தெரிவு செய்து அவற்றை 
இடம் பெறச்செய்யலாம்.

நமக்குப்பிடித்த வார்த்தைகளை
வடிவமைத்து அவற்றையும்  
பதிவு செய்யலாம்.

நம் நண்பர்கள் பலர் அருமையான 
வார்த்தைகளை வடிவமைத்துள்ளது
கண்டு பொறாமைப்பட்டிருக்கிறேன்.
பெருமைப்பட்டிருக்கிறேன்.

சிலர் ஆங்கில வாரத்தைகளை 
வைத்திருக்கிறார்கள்.
பல தமிழ்ப்பற்றாளர்கள் தமிழ்
வார்த்தைகளை வாசகமாக்கி
தங்களது அடையாளத்தை
வாசமாக்கியிருக்கிறார்கள்.

என் தொடர்புப்பட்டியலில்
உள்ள நண்பர்கள்
பயன்படுத்தும்
வாசமுள்ள தமிழ்
வார்த்தைகளை 
இங்கு பகிர்கிறேன்.

எழுத்தாளர் திரு சோம.வள்ளியப்பன்..
எல்லோரும் வல்லவரே..

திருச்சி முகவர் முத்துராமன்...
நல்லதே நினப்போம்..நல்லதே நடக்கும்.

திருநெல்வேலி நண்பன் சுடலையாண்டி..
உழைப்பே உயர்வு தரும்.

திருச்சி எல்ஐசி உதயசூரியன்...
முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்.

திருப்பூர் முகவர் வெள்ளைசாமி..
வாழ்க வளமுடன்.

எல்ஐசி முன்னாள் அலுவலர் ஸ்ரீவத்சன்..
உள்ளொளிர் பெருஞ்சுடர்.

சென்னைவாழ் எல்ஐசி நெல்லை சேகர்..
வாழ்க்கை வாழ்வதற்கே.

பேராசிரியர் சங்கர்ராம பாரதி...
வெற்றியின் முகவரி.

ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பத்...
இல்லை எனக்கெதிர்.

சென்னைவாழ் மன்னை ஏ.ஆர்.கே...
சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.

தஞ்சை "புரோ" ரவி..
துணிவே துணை.

தாய்கோ ரவி கணேஷ்..
இதுவும் கடந்து போகும்.

பாளை சாலமோன் ராஜா..
விரல் பிடித்து தொடர்கிறது உன் நினைவுகள்.

சென்னைவாழ் உறவினர்
நெல்லை ராதாகிருஷ்ணன்..
அடுத்தவர் நலத்தை நினைப்பவர்களுக்கு
ஆண்டு முழுவதும் சுபதினம்.

சகோதரி சென்னைவாழ்
திருமதி பத்மா சுந்தரேசன்..
இன்பம் துன்பம் எது வந்தாலும் மன
அமைதியை இழந்து விடாதே.

நெல்லை கல்லூரித்தோழர் பரிமேலழகன்..
நண்பரகளே வணக்கம்.

நண்பர் "வைசாக்" எல்ஐசி முரளி..
முதல்வனாயிரு.அல்லது முதல்வனோடு இரு.

சகோதரி மீனாட்சி முரளி..
நட்பால் இணைவோம்.

நெல்லை உறவினர்
எல்ஐசி ஆறுமுகராஜசெல்வி..
தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

கரூர் எல்ஐசி மேலாளர் குமரன்...
முயன்றால் சத்தியமாவது சத்தியமே.

"பச்சைத்துண்டு"  காயல் மஹபூப்...
பிறவிப் போராளி.

என் பால்ய நண்பன் காந்திமதிநாதன்..
மண் மரம் காற்று மழை என்
காதல் தேவதைகள்.

என் உயிர் நண்பன் ரைஸ்மில் ஜெய்சிங்...
தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்..

சென்னை எல்ஐசி ஜெயா ஜாண்..
பாடிப்பரவசமாய் நிற்கவே தவம் 
பண்ணியதில்லையடி.

நெல்லை G.S.விசுவநாதன்...
நண்பர்களை தெரிவு செய்வதில்
கவனமாய் இருத்தல் வேண்டும்.

எல்ஐசி திருக்கோவிலூர்
முதுநிலை மேலாளர் தம்பி கோகலே..
யாதும் ஊரே யாவரும் கேளிர்..

திருச்சி எல்ஐசி FSE பாலா...
கெடுவான் கேடு நினைப்பான்.

துறையூர் கவிஞர் கோதண்டராமன்...
விழு- எழுவது அறிவாய்.

தூத்துக்குடி எல்ஐசி தம்பி சுகுமார்...
செய்யமுடிந்தவன் சாதிக்கிறான்;
செய்யமுடியாதவன் போதிக்கிறான்.

ஸ்ரீவைகுண்டம் வளர்ச்சி அலுவலர் செந்தில்..
கடின உழைப்பு மட்டுமே
கனவினை நனவாக்கிடும்.

சங்கரன்கோவில் சந்திரசேகர்..
நலமே நிறைக வளமே விளைக..

திருவரங்கம் தினமலர் முருகேசன்...
தீதும்  நன்றும் பிறர் தர வாரா..

தஞ்சை தரும சரவணன்...
அன்பை வெல்லது அன்பு மட்டுமே.

நெல்லை எல்ஐசி ஹேமலதாரமேஷ்...
சந்திக்காத கண்களில் இன்பம்
செய்யப்போகிறேன்.

நெல்லை இந்துக்கல்லூரி
ஓய்வுபெற்றமுதல்வர் நமச்சிவாயம்..
செய்வன திருந்தச்செய்.

கோவில்பட்டி எல்ஐசி செல்லம்..
தூக்கத்தில் காண்பதல்ல கனவு
தூங்கவிடாமல் செய்வதே கனவு.

சென்னை வாழ் உறவினர்
தூத்துக்குடி உமா..
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்.

கோபி கிளை மேலாளர் ரவியுத்தீன்..
இறையருள் நிறைக.

பெருந்துறை கிளை மேலாளர் நரசிம்மன்...
எறும்புகள் பேசுவதில்லை.

சென்னை முதுநிலை கிளை மேலாளர் ஈஸ்வரன்..
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரட்டும்.

சங்கரன்கோவில் அய்யலு..
மகிழ்ச்சி.

ஆக்சிஸ் வங்கி மேலாளர் பாலகுருமூர்த்தி..
போராடி தோற்றுப்பார்..
வெற்றியின் பாதை தெரியும்.

திருப்பூர் முகவர் கார்த்திகேயன்.
நான் ஆளப்பிறந்தவன்.

இசக்கிராஜனாகிய நான்...
எப்போதும் சுறுசுறுப்பு

எவ்வளவு பொருள்பொருந்திய
வார்த்தைகள்..

நண்பர்களில் இன்னும் எத்தனை பேர் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தப் போகிறார்கள்
எப்படியான வார்த்தைகளை வடிவமைக்கப்போகிறார்கள் 
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ப.இசக்கிராஜன்

Sunday, 11 December 2016

மூத்த தமிழர் சங்கம்

ஆஸ்திரேலியா முழுவதிலும்
உள்ள முதிய தமிழர்களை உறுப்பினர்களாக கொண்டது
ஆஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கம். உறுப்பினராக வேண்டுமென்றால்
இந்தியா, இலங்கை,சிங்கப்பூர், மலேசியா, ஃபிஜி, மொரீஷியஸ் போன்று எந்த நாட்டுக்காரராகவும் இருக்கலாம். எந்த மதநம்பிக்கை உடையவராகவும் இருக்கலாம் ஆனால் தமிழராக இருத்தல்வேண்டும்.
ஏறக்குறைய 725 உறுப்பினர்கள் உள்ளனர்.
சிட்னி, கான்பெரா, மெல்போர்ன், பிரிஸ்பேன் போன்ற இடங்களில் வாழும் மூத்தவர்கள் இதன் அங்கம்.
ஆண்டு சந்தா பதினைந்து ஆஸ்திரேலியா டாலர்கள்.

இதுவும் அல்லாமல் உறுப்பினர்கள்
"குடும்ப நல நிதி" என்ற ஒரு திட்டத்தில் விருப்பப்பட்டால்
சேரலாம். தற்போது இந்த குழுவில் 650 உறுப்பினர்கள்.
இந்த குழுவில் சேர
முதல்முறை  10 டாலர் செலுத்தவேண்டும்.  உறுப்பினர்கள் யாராவது மரணமடைந்தால் ஒவ்வொருவரும் பத்து டாலர்
செலுத்த வேண்டும்.
அந்த பணம் மறைந்த உறுப்பினர்
குடும்பத்திற்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு புதன்கிழமை யும்
தவறாது ஒரு கூட்டம் நடைபெற்றுவருகிறது..

உடல் நலம் பேண ஆலோசனை,
உற்சாகப்படுத்த உரைகள் என
நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன.

அருகில் வசிப்பவர்கள் தவறாது
கலந்து கொள்கிறார்கள்.
தொலைவில் வசிப்பவர்கள்
எப்போதாவது கலந்து கொள்கிறார்கள்.

வேறு பல மையங்களில்
மாதாமாதம் கூட்டம் நடைபெறுகிறது.

இவை தவிர
ஆண்டுக்கொருமுறை
பொதுக்கழுக்கூட்டமும்
நடைபெறுகிறது.

நல்லபடியாக நிர்வகிக்கப்பட்டு
வருகிறது..
தற்போதைய செயலாளர்
திரு லிங்கரத்தினம். செலவினங்களை குறைப்பதற்காக
செயலாளரே படங்கள் எடுத்தார்.

இரங்கல் பா...ஜெ.ஜெ..

மறைந்துவிட்ட
முதலமைச்சர்..
தமிழர்களின்
நெஞ்சில் நீங்காது
நிறைந்துவிட்ட
முதலமைச்சர்..

அவரது புகழ்பாடவும்
கண்மூடி ஆதரிக்கவும்
நான் ஒன்றும்
கரை வேட்டி கட்டி
உலாவரும் அவரது
கட்சிக்காரன் இல்லை.

எதைச்சொன்னாலும்
எதைச்செய்தாலும்
எதிர்க்க வேண்டிய
நிலையில் உள்ள
எதிர்க்கட்சிக்காரனுமில்லை.

கைதட்டி பாராட்டி
விசிலடித்து மகிழ்ந்திட
அவரது ரசிகனுமில்லை.

இவர்தான் சிறந்தவர்
என்று குரலை உயர்த்தி
சாதித்துப் பேச இவரது
ஜாதிக்காரனுமில்லை.

கொள்கை முடிவுகளை
வரவேற்று வாழ்த்தியவனுமில்லை.

கோலோச்சிய முறையை
கொண்டாடி
மகிழ்ந்தவனுமில்லை.

" I agree" என்று சொல்லி
அக்ரி கலாச்சாரத்தை
பயிரிட்டு வளர்க்கும்
அரசு அலுவலருமல்ல.

சொல்லப்போனால்
அவரது கட்சிக்கு
வாக்களித்த
வாக்காளனுமில்லை.

நான் ....
கட்சி சார்பற்ற ஒரு
நடுநிலையாளனே..

பல இடங்களில்
பல நேரங்களில்
தான் பெற்ற
அவமானங்களையே
அடித்தளமாக்கி
அரசுக்கட்டிலில் அமர்ந்து
ஆட்சி செய்த
அவரின் ஆளுமை
எனக்குப்பிடிக்கும்.

ஆணாதிக்கம் நிறைந்த
ஆர்ப்பாட்ட அரசியலில்
பின்புலமேதுமின்றி
தனி ஒரு பெண்ணாக
முயன்று முன்னேறிய
துணிச்சல் பிடிக்கும்.


அனைத்தையும் அலசி
ஆராய்ந்து சரியான
முடிவெடுக்கும்
அறிவாற்றலின் ஆழம்
அதிகம் பிடிக்கும்.

அறிஞர்களே வியக்கும்
இவரது ஆங்கிலப்புலமை
நிரம்பப்பிடிக்கும்.

துரோகம் செய்பவர்களை
தூக்கி எறியும் இவரது
துணிச்சல் பிடிக்கும்.

பகுத்தறிவு பேசியவர்களை
பாதங்களில் விழுந்து
வணங்க வைத்த
வைராக்கியம் பிடிக்கும்.

அவர்களையும்
பக்திமான்களாக மாற்றிய
பக்குவம் பிடிக்கும்.

நினைத்ததை முடிக்கும்
நெஞ்சுறுதி
நிறையவே பிடிக்கும்.

அனைவரையும் வீழ்த்தும்
அதிரடி அரசியல்
எப்போதுமே பிடிக்கும்.

கழுத்தில் கை போட்டு
கழுத்தறுக்காமல்

குளிர்ச்சியாய் பேசி
குழி பறிக்காமல்

நல்லவன் வேடம் போட்டு
நயவஞ்சகமாக
ஏமாற்றாமல்

வெட்டொன்று
துண்டு இரண்டாக
வெளிப்படையாக
வார்த்தைகளைக்கொட்டும்
கள்ளம் ஏதுமில்லா
வெள்ளை மனம் பிடிக்கும்.

மறக்கமுடியாத
நாவினால் சுடப்பட்ட
வடுக்களை
நினைத்து நினைத்து
அடுக்கடுக்காய்
பதிலடி கொடுத்து
பழிவாங்கும்
போர்க்குணம் பிடிக்கும்.

வியூகம் அமைத்து
எதிரிகளை வீழ்த்தும்
விவேகம் பிடிக்கும்.

பணிந்து போகாமல்
துணிந்து எதிர்க்கும்
வீரம் பிடிக்கும்.


அணி யே வேண்டாம்
தனி யே நிற்பேன்
என்று ஆர்ப்பரித்த
தன்னம்பிக்கை
அதிகம் பிடிக்கும்.

தோல்விகளைக்கண்டு
சோர்ந்து போகாமல்

துயரங்களைக்கண்டு
துவண்டுபோகாமல்

மீண்டும் மீண்டும்
துளிர் விடும்
விடாமுயற்சி
நிறையவே பிடிக்கும்.

சறுக்கல்களையும்
வழுக்கல்களையும்
அவ்வப்போது சந்தித்து
உலகில் உயர்ந்துகாட்டிய
உற்சாகம் பிடிக்கும்.

உழைப்பவர்களை கண்டு
உயர்த்தி விடும்
உன்னதப் பண்பு பிடிக்கும்.

நடிப்பவர்களை கண்டால்
உருட்டி விடும்
நக்கீரக்குணம் பிடிக்கும்.


எல்லாம் இழந்து
ஆதரவற்று நின்ற
ஈழத் தமிழருக்கு
ஆதரவுக் கரம் நீட்டிய
அன்னைக்குணம்
பிடிக்கும்.

இவரை
நம்பாமல்  வீழ்ந்தவர்கள்
நாட்டில் பலருண்டு..

இவரை நம்பி
நன்றாக வாழ்ந்து
செழித்தவர்கள்
நாடு முழுக்க உண்டு.

இவரது
கடைக்கண் பார்வையால்
உச்சம் தொட்ட
சருகுகளும் உண்டு.

சுட்டெரித்து குப்பையில்
தள்ளிவிடப்பட்ட சில
கலசங்களும் உண்டு.

இந்த இரும்பு மங்கை
பலருக்கு கரும்பு மங்கை.

சிலருக்கோ காதில்
நுழைந்து குடைச்சல்
கொடுக்கும்
எறும்பு மங்கை.



மொத்தத்தில் 
இவரது

திடமான முடிவு..
தளர்வறியா
தன்னம்பிக்கை..
தீர்க்கமான சிந்தனை..
விடாமுயற்சி..
யாருக்கும் அஞ்சாமை..
உறவிற்கு உறுதியாக
கைகொடுத்தல்..
உரிமைக்கு ஓங்கி
குரல் கொடுத்தல்..
அனைவரையும்
அன்பாலும்
கண்டிப்பாலும்
கட்டிப்போடும்
கட்டுப்பாடு...

இவையெல்லாம்
இவரிடம்  பிடித்த
குணநலன்கள்.

மறைந்துவிட்ட இந்த
இரும்பு மங்கையை
போற்றுவோம்.

இவரது மறைவை
கொஞ்சம் கொஞ்சமாக
மறக்க முயற்சிப்போம்.

நினைவை எப்போதும்
நெஞ்சிலிருத்துவோம்.

மீண்டும் சொல்கிறேன்.

நான்...

அவரது புகழ்பாடவும்
கண்மூடி ஆதரிக்கவும்
நான் ஒன்றும்
கரை வேட்டி கட்டி
உலாவரும் அவரது
கட்சிக்காரன் இல்லை.


ப.இசக்கிராஜன்.

உலகம் சுருங்கிவிட்டது

சிட்னி மாநகரத்தில்
Granville என்ற
பகுதியில் வசிக்கும்
திரு ரங்கராஜன்..
திருமதி பாரதி தம்பதியர்.

இருவருமே இங்கு
பணிபுரியும் பொறியியல்
பட்டதாரி வல்லுநர்கள்.

திரு ரங்கராஜன்
ஓர் ஐயப்ப பக்தர்.

வருடாவருடம்
சபரிமலைக்குச்
செல்வது உண்டு.

இங்கு உள்ள ஐயப்பன்
கோவில் நிர்வாகிகளுள்
ஒருவர்.

ஐயப்பன் கோவிலுக்கு
சென்றபோது அறிமுகம்.

அவரது சகோதரி வீடு
திருவரங்கத்தில் உள்ளது.
இதனால் நெருக்கம்
இறுகியது.

நான் எல்ஐசி என்று
அறிமுகப்படுத்தியபோது
திருச்சி முதற்கிளையின்
மறைந்துவிட்ட முகவர்
ராமசாமியின்
வாடிக்கையாளர்
என்று அவர் சொன்னபோது
மகிழ்ச்சியடைந்தேன்.

இப்போது
அவரது மனைவி
முகவர் ஆகியுள்ளார் என
நான் சொன்னபோது அந்த
தகவலும் தெரியும் என்றார்.

அவரும் தைரியம் கூறி
முகவராக வேண்டும் என
எடுத்துரைத்ததாகவும்
ஆதரவு தர 
உறுதியளித்ததாகவும்
கூறி மகிழ்ந்தார்.

இங்கிருந்தே அவரிடம்
தொடர்புகொண்டு நான்
வந்திருக்கும் தகவலையும்
கூறினார்.

அதற்குப்பிறகு மிகவும்
நெருக்கமாகிவிட்டோம்.

இங்கு ரத்த தானத்தின்
அவசியத்தை வலியுறுத்தி
நிறைய நண்பர்களை
ரத்தம் கொடுக்க
உற்சாகப்படுத்தி வருகிறார்.
அவரும் அவ்வப்போது
ரத்தம் வழங்கி வருகிறார்.

இன்று அவரது இல்லத்தில்
ஐயப்பன் வழிபாட்டு
பூஜை நடைபெற்றது.

அவரின் அன்பு அழைப்பின்
காரணமாக நாங்களும்
கலந்து கொண்டோம்.

அங்கு வந்த அவரது
உறவினர்களை கண்டு
உறவாட முடிந்தது.

ஒருவர்
திரு ஷண்முகப்பிரியன்.
இங்கு பணிபுரியும்
சென்னையைச்சேர்ந்த
இவர் என் பள்ளிக்கூட
வகுப்புத்தோழனும்
நெல்லை இந்துக்கல்லூரியின்
ஓய்வு பெற்ற முதல்வருமான
திரு நமச்சிவாயத்திற்கு
தூரத்து உறவு.

இன்னொருவர் திரு சுமன்.
மாயவரத்துக்காரர்.
அங்குள்ள
எங்கள் எல்ஐசி முகவர்
திரு கிருஷ்ணமூர்த்தியின்
நெருங்கிய உறவினர்.

இன்னும் ஒரு மதுரைக்காரர்
திரு குமரன் .திருச்சியில்
BSNL லில் இரண்டுவருடம்
பணியாற்றியவர்.

உலகம் மிகவும்
சுருங்கி விட்டது என்று
உணர்ந்ததால்
இத்தகவலை
மகிழ்ச்சியுடன்
பகிர்கிறேன்.

இங்கு கிடைத்த
வேறு பல
நண்பர்கள் பற்றி
அடுத்தடுத்து ...