ஒவ்வொருவரிடமிருந்தும் ஒன்றொன்று....
1981 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள். அன்று தான் LIC யின் திருச்செந்தூர் கிளை துவக்கப்பட்டது.
துவக்க விழாக் கூட்டம் அலுவலகத்திற்கு அருகில் இருந்த KSPS அறக்கட்டளைக்குச் சொந்தமான சண்முகவேல் நாடார் அரங்கில் நடைபெற்றது.
அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்க மதுரைக் கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட மேலாளர் திரு உ.வெ.ராமசாமி ஐயா வந்திருந்தார்கள். அவருடன் கோட்டத்தின் ஊழியர்கள் நலத்துறை மேலாளராக இருந்த திரு அருணாச்சலம் ஐயா அவர்களும் வந்திருந்தார்கள்.
விழாவிற்கு முன்னர் அலுவலகத்தில் அனைவரும் கூடினோம். நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அதனைத் தட்டச்சு செய்ய வேண்டும். எனக்கு தட்டச்சு செய்யத் தெரியும் என்பதால் அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.
திரு அருணாச்சலம் ஐயா அவர்கள் கூறக்கூற நான் தட்டச்சு செய்தேன். Presidential Address by Sri U.V.Ramasamy என்று சொன்னார்கள். நான் தட்டச்சு செய்யும்போது Sri என்று அடித்த பிறகு ஒரு புள்ளி வைத்து பிறகு Ramasamy என்று அடித்தேன்.
அப்போது திரு அருணாச்சலம் ஐயா அவர்கள் குறுக்கிட்டு Sri என்பது ஒரு முழுமையான சொல். அதனால் அதற்குப் பிறகு புள்ளி வைக்கக் கூடாது. அதே நேரம் Mr என்று அடித்தால் புள்ளி வைத்த பிறகு தான் Ramasamy என்று அடிக்க வேண்டும். ஏனென்றால் Mister என்ற சொல்லைச் சுருக்கி Mr என்று போடுவதால் Mr என்பதற்கு அடுத்து புள்ளி வைக்கவேண்டும் என்று விளக்கமாக எடுத்துக்கூறினார்.
இன்று வரை அவர்கள் சொன்னபடி சரியாகப் பயன்படுத்தி வருகிறேன். தமிழிலும் திரு என்ற சொல்லுக்குப் பிறகு நாம் புள்ளி வைப்பதில்லை. ஏனென்றால் திரு என்பது ஒரு முழுச் சொல். இந்த நுணுக்கங்களை நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்து தெரிந்து கொள்ளவில்லை. திரு அருணாச்சலம் ஐயா அவர்கள் மூலம் தான் என்னுடைய 27 ஆவது வயதில் தெரிந்து கொண்டேன்.
அப்போது திருச்செந்தூர் கிளையில் எங்களுக்கு திரு ஓம் சுப்பையா ஐயா அவர்கள் கிளை மேலாளராக இருந்தார்கள். ஒரு கூட்டம் நடத்தப் போகிறோம். அது குறித்து அழைப்பிதழ் அச்சடிக்கவேண்டும். அழைப்பிதழில் எந்த வரிசையில் நேரம் நாள் போன்றவை வரவேண்டும் என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன். முதலில், நேரம், பிறகு கிழமை,அடுத்தது நாள் மாதம் ஆண்டு என்று வரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
An Agents' Meeting will be held at 5.00 PM on Friday, the 31st August, 2019 என்ற வரிசையில் வரவேண்டும் என்பார். தமிழில் என்றால் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார். 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 31ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் முகவர் கூட்டம் நடைபெறும் என்று எழுத வேண்டும் என்று கூறியிருக்கிறார் .
இலங்கை வானொலியில் கூட ஒருவரை அறிமுகப்படுத்தும்போது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகர் இரண்டாவது தெரு கதவிலக்கம் நான்கில் வசித்துவரும் இசக்கிராஜன் என்று கூறுவது அப்போது என் நினைவிற்கு வந்தது. திரு ஓம் சுப்பையா ஐயா அவர்களின் இந்த வழிகாட்டுதலை நான் இன்றுவரை சரியாகப் பின்பற்றி வருகிறேன்.
இப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் பலவற்றைக் கற்று இன்றைக்கும் பின்பற்றி வருகிறேன். நன்றி திரு அருணாச்சலம் அய்யா. நன்றி திரு ஓம் சுப்பையா ஐயா...
- பாளை ப.இசக்கிராஜன்.
No comments:
Post a Comment