Boulevard & Avenue
திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள இரண்டு இணை சாலைகள் West Boulevard சாலையும் East Boulevard சாலையும். திருச்சி நகருக்கு வந்த புதிதில் இந்த பெயரை உச்சரிக்கவே திணறி இருக்கிறேன்.
West Boulevard சாலை மெயின் கார்டு கேட் டில் துவங்கி காந்தி மார்க்கெட் சாலை வரை நீண்டிருக்கும். East Boulevard சாலை என்பது ரயில்வே கேட் தொடங்கி காந்தி மார்க்கெட் சாலை வரை நீண்டிருக்கும். அதனை EB ரோடு என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். நான் கூட அந்த சாலையில் மின் வாரிய அலுவலகம் ஏதாவது இருக்கும். அதனால் தான் EB ரோடு என்று அழைக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் தான் East Boulevard ரோடு என்பதன் சுருக்கம் தான் EB ரோடு என்று புரிந்து கொண்டேன்.
Boulevard என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பொருள் புரியாமலேயே நீண்ட காலம் இருந்து வந்தேன். மாநகராட்சி அதனை மேல அரண் சாலை என்றும், கிழக்கு அரண் சாலை என்றும் மொழி மாற்றம் செய்திருந்தனர். நான் அரண் என்பது ஏதோ மதில் சுவர் மாதிரி என்று நினைத்துக்கொண்டேன்.
இதைப் போலவே சென்னையில் 1970களில் முளைத்த அண்ணா நகரில் ஒவ்வொரு சாலைக்கும், இத்தனாவது அவெனியூ, அத்தனாவது அவெனியூ என்று வரிசையாக பெயர் வைத்திருக்கின்றனர். அவெனியூ என்பது எதைக் குறிக்கும் என்று பல வருடங்களாக எனக்குள் ஒரு கேள்வி வந்து போய்க் கொண்டே இருந்தது. மாநகராட்சி அதனை நிழற் சாலை என்று தமிழ்ப் படுத்தியிருந்தார்கள். தமிழ்ச் சொல் புரிந்திருந்தாலும் அதன் சரியான பொருள் புரியவில்லை. என் அறியாமையை வெளிக்காட்டாமல காலத்தை ஓட்டி வந்தேன்.
மனசு பொறுக்கவில்லை. நமக்கு பல வகைகளில் வழிகாட்டவும், நமக்குள் இருக்கும் அறியாமை என்ற இருளை அகற்றி ஒளிகாட்டவும், உருவமில்லாத Google Aandavar ஒருவர் இருக்கிறாரே.. அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று முடிவு செய்தேன். அந்த கூகிள் ஆண்டவரைக் கலந்து ஆலோசிக்க முடிவெடுத்து என் மடிக்கணினியின் வில்லைகளை விரைவாகத் தட்டி விட்டேன். விளக்கங்கள் மடியில் வந்து விழுந்து குவிந்தன.
Boulevard என்பதற்கும், Avenue என்பதற்கும் சற்றேறக்குறைய ஒரே பொருளைத் தான் தெரிவித்தார். இரண்டு பக்கங்களிலும் வரிசையாக மரங்கள் நிறைந்திருக்கும் அகலமான, அழகான ஒரு சாலை என்பதைத்தான் அந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் குறிப்பிடுகின்றன.
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் பொருத்தமாக, ஆங்கிலத்தில் திருச்சி நகரில் Boulevard என்று பெயர் வைத்ததை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசால் சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்ட அண்ணா நகருக்கு அழகு தமிழில் ஆயிரம் சொற்கள் இருக்கும்போது ஏன் Avenue என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்தினார்கள் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடிய வில்லை.
அரண் சாலை என்றும் நிழற் சாலை என்றும் பெயர் சூட்டியதற்குப் பதில் இதே பொருள் தரும் வேறு சில அழகு சொற்களை எளிய தமிழில் பயன் படுத்தி இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
- பாளை ப.இசக்கிராஜன்.
No comments:
Post a Comment