கடினமான காலமாகிய அறுபதுகளில் திமுக வையும், எழுபதுகளில் அதிமுகவையும் உண்மையாக வளர்த்தவர்கள் டீக்கடைகாரர்களும், முடிதிருத்தும், கடைக்காரர்களும், துணிதேய்க்கும் கடைக்காரர்களும், சைக்கிளில் கழகக்கொடியை பறக்கவிட்டு பயணித்து ஐஸ் விற்ற வியாபாரிகளும் தான்.
இவர்களைப்போன்ற சாமானியர்கள், எதையும் எதிர்பாராது அன்றுஉழைத்தனர். எனது இளமைப் பருவத்தில் இப்படிப்பட்ட எண்ணற்ற ஊழியர்களுடன் பழகி பிரமித்திருக்கிறேன்.
எடுத்துக்காட்டாக நான் பாளையங்கோட்டையில் பார்த்து அதிசயித்த பூமிநாதன் என்ற "பூமி" வடக்கு பஜாரில் அன்று போல் இன்றும் சைக்கிளை தள்ளிக்கொண்டு தான் தனது தொழிலை நடத்தி வருகிறார். அவரது உழைப்பால் வெற்றிபெற்றவர்களெல்லாம் கார்களில் வலம் வருகிறார்கள்.
1971ல் நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் பத்மனாபன் அவர்களின் வீடு நெல்லை நகரத்தின் மூலையில் இன்றும் உதயசூரியன் சின்னத்தைத் தாங்கி நின்றாலும் பொலிவு இழந்தே காணப்படுகிறது.
இன்று இவரைப் போன்ற கழகங்களை வளர்த்த எண்ணற்ற கண்மணிகள் எல்லாம் கைகட்டி வாய் பொத்தி நொந்து போய் ஒதுங்கி நிற்கிறார்கள். இதை யாராலும் மறக்கமுடியாது. மறுக்கவும் முடியாது.
ஏழைகளின் உதிரத்தால் வளர்க்கப்பட்ட இந்த கழகங்கள் இப்போது பண முதலைகளின் பாக்கெட்டுக்குள் பதுங்கி விட்டன.
உடன்பிறப்புக்களும் ரத்தத்தின் ரத்தங்களும் நினைத்துப்பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment