UAE ஃபுஜைரா நகரில்
என் நண்பருடன் அவரது
காரில் பயணம்
செய்து கொண்டிருந்தேன்.
இங்கு நகருக்குள்
(2+2) நான்குவழிச்சாலையை
(3+3) ஆறுவழிச்சாலையாக
விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
வட்டவடிவு சந்திப்புக்களில்
போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக
ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன.
எங்களுக்குப்பின்னால் வந்த
கார் ஒன்று எங்களது காரின்
பின்பகுதியை இடித்துவிட்டது.
நாங்களும் வண்டியை
ஓரங்கட்டி இறங்கினோம்.
பின்னால் வந்த வண்டியை
ஓட்டி வந்தவரும்
வண்டியை ஒரங்கட்டி
இறங்கினார்.
காரின் அடிபட்ட பகுதியை
பார்வையிட்டார்.
உடனே தனது கைபேசியில்
காவல்துறையை அழைத்தார்.
ஐந்து நிமிட வேளையில்
காவல்துறை வண்டியும்
வந்துசேர்ந்தது.
வந்த காவல் துறை அலுவலர்
காரிலிருந்து இறங்கி
இருவருக்கும் கைகொடுத்து
சலாம் அலேக்கும் என்று கூறி
வணங்கினார்.
எனது நண்பரின்
ஓட்டுநர் உரிமத்தையும்
வாகனக்காப்பீட்டு குறித்த
சான்றிதழ் அட்டையையும்
வாங்கினார்.
இடித்த காரின் வாகனக்காப்பீடு
சான்றிதழ் அட்டையோடு
ஓட்டுநர் உரிமத்தையும்
வாங்கினார்.
தன்னிடமிருந்த ஐ பேடில்
விவரங்களை சரிபார்த்தார்.
காரின் சேதமடைந்த பகுதியை
படம் பிடித்துக்கொண்டார்.
இருவரையும் கார்களோடு
100 மீட்டர் அருகிலிருந்த
காவல் நிலையத்திற்கு
வரச்சொன்னார்.
கார்களோடு சென்றோம்.
எங்களை அலுவலகத்தின்
வரவேற்பு அறையில்
அமரச்சொல்லிவிட்டு
வாங்கிவைத்த ஆவணங்களை
மீண்டுமொருமுறை
சரிபார்த்தார்.
எனது நண்பரது ஆவணங்கள்
மிகச்சரியாக இருந்தன.
எங்கள் வண்டியை
இடித்த வண்டியின் காப்பீடு
காலாவதியாகி இருந்ததை
தெரிந்து கொண்டார்.
அவரது ஓட்டுநர் உரிமத்தில்
சிக்கலேதும் இல்லை.
வண்டியை இடித்தவர்
உள்ளூர்க்காரர்.
எனது நண்பரோ
அந்த அமீரகத்தில் பணிபுரியும்
ஒரு இந்தியர்.
ஆனாலும் காவல்துறையினர்
கட்டைப்பஞ்சாயத்து செய்யாமல்
சட்டப்பஞ்சாயத்து நடத்தினர்.
இங்குள்ள சட்டத்தின்படி
ஒவ்வொரு அரபியும் ஒருவருடம்
கண்டிப்பாக இராணுவத்தில்
பணிபுரியவேண்டும்.
இந்த விதியின்படி அவர்
அப்போது இராணுவத்தில்
பணிபுரிந்து வருகிறார்.
அவரைக்குற்றஞ்சாட்டி
வாகனக்காப்பீடு இல்லாமல்
வண்டி ஒட்டியது குறித்து
கண்டித்து பேசுகின்றனர்.
காப்பீடு இல்லாததால்
காப்பீட்டு நிறுவனம்
பொறுப்பாகாது.
எனவே பழுது நீக்கும் செலவை
இடித்தவண்டிக்காரர் தான்
ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று கூறுகிறார்கள்.
எவ்வளவு செலவாகும்
என்பது குறித்த குறிப்பு ஒன்றை
மூன்று பட்டறைகளில்
இருந்து வாங்கி வரும்படி
அவரையும் நண்பரையும்
கேட்டுக்கொள்கின்றனர்.
அன்று பார்த்து பட்டறைகள்
ஒன்று கூட அந்த நேரத்தில்
திறந்துருக்கவில்லை.
அதனால் மறுநாள் காலை
அவற்றை வாங்கிக்கொண்டு
எட்டுமணியளவில்
காவல்நிலையம் வரவேண்டும்
என்று கூறுகிறார்கள்.
அதுவரை எங்களை
இடித்த காரின் சாவியும்
ஓட்டுநர் உரிமமும் காவல்துறை
அலுவலகத்தில்தான் இருக்கும்
என்று கூறி அவற்றை
வாங்கிவைத்துக்கொள்கின்றனர்.
இடித்த வண்டிக்காரர்
பக்கத்து ஊருக்கு
அவசர வேலை ஒன்றிற்காக
செல்லவேண்டியிருப்பதாகவும்
அதனால் தனக்கு பதிலாக
தனது சகோதரரை
அனுப்பிவைக்கலாமா
என்றும் அனுமதி கேட்டார்.
காவல்துறை அலுவலர்கள்
ஒத்துக்கொள்ளவில்லை.
மறுநாள் காலையில்
பழுதுநீக்க ஆகும்
செலவு குறித்த குறிப்பை
மூன்று பட்டறைகளிடம்
வாங்கிக்கொடுத்தனர்.
அதன்படி எதிர்பார்க்கும்
செலவுத்தொகையான
இந்திய மதிப்பில் ரூ.45000ஐ
இடித்த வண்டிக்காரர்
எனது நண்பரிடம் கொடுத்தார்.
எனது நண்பரிடம்
பணம் பெற்றுக்கொண்டது
பற்றி எழுதிவாங்கிக்கொண்டு
விபத்து குறித்த காவல்துறை
கடிதத்தையும் கொடுத்தனர்.
காப்பீடு இல்லாத வாகனத்தை
பயன்படுத்தியதற்கு
விதிக்கப்பட்ட
அபராதம் எவ்வளவு என்று
தெரிந்துகொள்வதற்குள்
நண்பர் வந்துவிட்டார்.
அனைவரும் சட்டத்தை
பின்பற்றவேண்டும் என்பதும்,
சட்டத்தின் முன் அனைவரும்
சமம் என்பதும்
முழுமையாக மதிக்கப்படுகிறது
என்பதை உணரும்போது
மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சட்டத்தை மிதிக்காமல்
சட்டத்தை மதிக்கின்ற,
சட்டத்தை அமுல்படுத்துகின்ற,
பாரபட்சமற்ற ஒரு நிலைமை
இந்தியாவில் எப்போது வரும்
என்று ஏக்கத்துடன்
காத்திருக்கிறேன்.
இல்லை இல்லை.....
நாம் அனைவருமே
அந்த விடியலுக்காக
காத்திருப்போம்...
No comments:
Post a Comment