Sunday, 7 January 2018

உழைப்பால் உயர்ந்த ஆறுமகம்.

அன்புச்சகோதரர்
ஆறுமுகம்...

1970 களில் எல்ஐசி
காரைக்குடி கிளையில்
அலுவலகத்தை காலையில்
சுத்தப்படுத்தி தண்ணீர்
எடுத்து வைக்க
குறைந்த சம்பளத்தில்
அமர்த்தப்பட்ட ஒரு
பகுதி நேர ஊழியர்.

அந்த வேலையில்
வரும் ஊதியம்
அவரது குடும்பத்தை
பேணுவதற்கு பத்தாது.

கூடுதல் வருவாய்க்காக
பிற ஊழியர்களுக்கு
அவர்களின் வீட்டிலிருந்து
மதிய உணவு எடுத்து வருவது,
வீட்டிற்கு தேவைப்படும்
பொருட்களை
வாங்கிக்கொடுப்பது
என்று பல் வேறு
வகைகளிலும் உதவுவார்

எந்த உதவி என்றாலும்
முகம் கோணாமல்
மனமுவந்து செய்து
வந்தார்.

ஒவ்வொரு ஊழியரும்
அவரை தங்கள்
குடும்ப உறுப்பினர் போல்
நினைத்து நிதி உதவியும்
செய்வார்கள்.

இப்படி காலம்
ஓடிக்கொண்டிருந்தபோது
திரு சுப. வரதராஜன் சார்
அவர்கள் நிர்வாகப்பிரிவிற்கான
உதவிக்கிளை மேலாளர்.

திரு குத்தாலிங்கம் சார்
அவர்கள் கிளை மேலாளர்.

சென்னை கோட்டத்தில்
விற்பனை மேலாளராகவும்
பணியாற்றியிருக்கிறார்.

இருவரும்
கலந்தாலோசிக்கிறார்கள்.

ஆறுமுகத்திற்கு
உதவ முடிவு செய்கிறார்கள்.

அவர் பகுதிநேர ஊழியர்
என்பதால் முகவராவதற்கு
தடையில்லை
என கருதுகிறார்கள்.

உடனே முகவராக 
நியமனம் செய்து
ஒரு நல்ல வழி காட்டி
உதவுகிறார்கள்.

திரு குத்தாலிங்கம் சார்
முதல் நிலை அலுவலகர்கள்
சங்கங்களின் கூட்டமைப்பிற்கு
அகில இந்திய செயலாளராகவும்
இருந்தவர்.

ஒரு நாள் காலை வேளையில்
அவரது இல்லத்திற்கு
ஒரு தொலைபேசி
அழைப்பு வருகிறது.

சாரின் மனைவி போனை
எடுத்து சாரைக்
கூப்பிடுகிறார்கள்.

தொலைபேசி இணைப்பை
கொடுத்த தொலைபேசி  ஊழியர்
மதுரையிலிருந்து வரும்
தொலைதூர அழைப்பு
என்று சொன்னதை
கவனிக்கவில்லை.

சார் போன் கருவியை
வாங்கிக்கொள்கிறார்.

பேசுபவர் நான்
ராமசாமி பேசுகிறேன்
என்று சொல்கிறார்.

இது லோக்கல் கால்
என நினத்துக்கொண்டதாலும்
காரைக்குடி கிளையில்
ராமசாமி என்ற பெயரில்
பல முகவர்கள் உள்ளதாலும்
எந்த ராமசாமி என்று
கேட்கிறார்

அழைத்த கோட்ட மேலாளர்
கோட்ட மேலாளர் என்று
கூறியிருக்கலாம்.

அல்லது பிரபலமான தனது
மூன்றெழுத்து இனிஷியலை
கூறியிருக்கலாம்.

எந்த ராமசாமி என்ற கேள்வி
எதிர்முனையில் ஒலித்ததும்
தன்னை கிளை மேலாளர்
அவமதித்து விட்டார் என
தவறாக நினைக்கிறார்.

தனது ஆதங்கத்தை
கிளை மேலாளரிடம்
ஓங்கி ஒலித்திருக்கிறார்.

இந்த சம்பவம்
முடிந்து விட்டாலும்
கோட்ட மேலாளரின்
மனதிலிருந்து
மறையவில்லை.

கிளை மேலாளரை
மட்டந்தட்டவும்
பழிவாங்கவும்
வாய்ப்புக்காக
காத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் தான்
பகுதி நேர ஊழியர்
முகவராக நியமனம்
செய்யப்பட்ட தகவல்
அவரை சென்றடைகிறது.

பகுதி நேர ஊழியரை
முகவராக நியமனம்
செய்த செயல் தவறு என்றும்
அதற்கான விளக்கம் கேட்டும்
முகவர் பணிக்கு
தடை விதித்தும்
தாக்கீது வருகிறது.

கிளை மேலாளர்
பயப்படவுமில்லை
பதட்டப்படவுமில்லை.

நிரந்தர ஊழியருக்குத்தான்
முகவராக தடை உள்ளது எனவும்
பகுதி நேர ஊழியருக்கு
தடையேதுமில்லை எனவும்
பதில் எழுதி அனுப்பினார்.

இந்த சிக்கல் தீர்வுக்காக
மைய அலுவலகத்திற்கு
எடுத்து செல்லப்படுகிறது.

மைய அலுவலகம்
கிளைமேலாளரின் முடிவில்
தவறேதும் இல்லை என்று
பதில் அனுப்பியது.

இந்த சாதகமான பதிலை
பெற்ற திரு ஆறுமுகம்
நண்பர்கள் உதவியுடன்
நல்ல முறையில் வணிகம்
புரியத் தொடங்குகிறார்.

அப்போது தான் பிறந்த
என் புதல்வியின் பெயரில்
ஒரு குழந்தைகளுக்கான
திட்டத்தில் ரூபாய் 177
காலாண்டுத்தவணையில்
பாலிசி கொடுத்து உதவினேன்.

ஆறுமுகத்தின் முகவர்
அடையாள எண் 2623747.

நண்பர்களின் உதவியால்
நல்ல முறையில் வணிகம் புரிந்து
தலைவர் மன்ற உறுப்பினர்
நிலைக்கு உயர்கிறார்.
தமது குடும்ப நிலையை
வளமிக்கதாக்குகிறார்.

வழிகாட்டிய
திரு குத்தாலிங்கம் சார்
திரு வரதராஜன் சார்
வளர்ச்சி அலுவலர்
திரு சுப்பையா சார்
போன்றோரையும்
வளர்ச்சிப்பாதையில்
ஒளிகாட்டிய அலுவலக
நண்பர்களையும்
நெஞ்சிலிருத்தி
நாளும் போற்றி வருகிறார்.

தற்போது
அலுவலகப்பணியிலிருந்து
ஓய்வு பெற்று விட்டாலும்
அலுவலக நண்பர்களுக்கு
உதவும் பணியை இன்றும்
செய்து கொண்டுதான்
இருக்கிறார்.

உழைப்பால் உயர்ந்த
உன்னதமானவர்களைப்பற்றி
படித்திருக்கிறேன்.

உழைப்பால்
திரு ஆறுமுகம் உயர்ந்ததை
நேரில் பார்த்து
உணர்ந்துள்ளேன்.

இவரைப்போல்
ஆயிரக்கணக்கான
ஆறுமுகம்கள்
எல்ஐசி முகவர்களாக
ஒளிர்ந்தும் மிளிர்ந்தும்
கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment